ஒரு நிலம் வாங்குவது சம்பந்தமாக தங்கமணியிடம் நகைகளில் கால் பகுதி கேட்டேன். நீங்கள் போட்டதுதானே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.அட! தேவலாமே!
அடுத்த நாள், 'நகை எல்லாம் விலையேறிக் கொண்டே இருக்கிறது. எது வாங்கினாலும் பணம் இருப்பதைக் கொண்டு வாங்குங்கள். நகை விற்பதெல்லாம் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். ஹூம்! அதானே!
நான்கைந்து நாட்களுக்கு முன் நகை கிராமுக்கு 147திர்ஹம் என்று பார்த்தேன். இப்போது 157 ஆகி விட்டதாம் . நண்பர் சொன்னார்.
அட. இந்த தங்கமணிங்க எல்லாம் கொஞ்சம் புத்திசாலிங்கதான் போல் இருக்கு. :) நகை விடயத்தில் மட்டுமாவது.. :))
7. அயோத்யா பாப்ரி மஸ்ஜித் நில விவகாரத்தில் அலாபாத் உயர் அநீதி மன்ற தீர்ப்பு மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.
இந்த அநீதி தீர்ப்பினால் என்னில் ஏற்பட்ட அதே வலி, நாடு முழுவதிலுமுள்ள எத்தனையோ இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும், மதமற்ற எத்தனையோ நடுநிலையாளர்களுக்கும் ஏற்பட்டதை கண்ட போதும், கேட்ட போதும், அதை அவர்கள் அதிர்ச்சியெனவும் ஏமாற்றமெனவும் வெளிப்படுத்திய போதும் சிறிது ஆசுவாசம் வந்தது உண்மை. ஆனாலும் உரிய நீதி கிடைக்குமா என்ற அவநம்பிக்கை மனதில் வளர்கிறது.
8. தொலைக்காட்சிப் பெட்டிகள் மிகுந்த பிரபலமாவதற்கு முன், நான் சிறுவனாய் இருந்த போது, திருச்சியில் ஒரு (Radio Repair) கடையில்
'இங்கு வானொலிப் பெட்டிகள் பழுது நீக்கித் தரப் ப(h)டும்'
என்று எழுதி வைத்திருந்ததை மிகவும் இரசித்திருந்தேன். (பிறை அடைப்புக்குள் துணையெழுத்தை மட்டும் எப்படிக் கொண்டு வருவது?)
அதே போல், இப்போது, துபையில ஒரு (Watch Repair) கடையில்
'இது பொழுது பார்க்கும் கருவிகளின் பழுது நீக்கும் இடம்'
என்று எழுதி இருந்தார்கள். மிக அருமை. இனிமைத் தமிழ் மொழி எனது.
9. எங்கள் ஊரில் ஒருவர் விறகு பிளந்தும் மூட்டை சுமந்தும் கடின உழைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வயது 85க்கும் மேல் ஆனாலும் திடகாத்திரமான உடம்பு. வலுவேறிய கைகள்.
உங்கள் உடல் வளத்தின் ரகசியம் என்னங்க என்று கேட்டேன். அவர் தம் வாழ்வின் கதையை சொன்னார்.
நாங்கல்லாம் உங்கள மாதிரில்லாம் கிடையாது. அதிலும் இப்ப இருக்கிற புள்ளைங்க இருக்கே! 'தோலிருக்க சுளை முழுங்கிங்களா' வருது.
எனக்கு கல்யாணமாகி ஆறேழு வருசமாச்சு. என் மாமியார், எம்பொஞ்சாதிய கூப்பிட்டு, 'ஏம்புள்ள! கல்யாணமாகி இம்புட்டு நாளாச்சு. ஒரு புழு பூச்சியும் காணோம். ஒன்னை மருமகன் நல்லா வச்சிருக்கானாடி'ன்னு கேட்டாங்களாம். 'அதெல்லாம் நல்லாத்தான் வச்சுருக்காரு'ன்னாங்களாம்.
சரியான பொச கெட்டவளா இருக்காளேன்னு அவுங்க நன்னிம்மாவ (தாய் வழி பாட்டி) கூப்பிட்டு கேக்க சொன்னாங்களாம்.
'ஏண்டி ராத்திரில என்னடி செய்வே'ன்னு கேட்டாங்களாம்.
'ம்ம். அவுருக்கு சோறு வச்சு தருவேன். சாப்டுவோம். சாப்ட்டவுன்னே வெத்தில பாக்கு மடிச்சு தருவேன். அப்புறம் படுத்துக்குவோம்'
'ம் அப்புறம்'
'ம். அப்றம் என்னா? தூங்குவோம்'
'ம். அப்றம் என்னாடி'
'அப்றம் என்னா? பஜ்ருக்கு (விடியல் தொழுகைக்காக பள்ளிக்கு) போவார். நான் வூட்ல தொழுதிட்டு தண்ணி எடுக்க ஆத்துக்கு போவேன்'
'பஜ்ருக்கு முன்ன என்னாடீ?'
'அதான் தூங்குவேன்னு சொன்னன்ல'
ஒன்னும் விபரமில்லன்னு தெரிஞ்சவுடன்
ஹாஜியார் வீட்டுக்காரம்மா, கருப்பா குள்ளமா இருப்பாங்க, அவுங்கள்ட்ட விவரம் சொல்லித் தர அனுப்புனாங்க
அவுங்க வீட்டுக்கு போய் வந்தவொன்ன, அவுங்கம்மாட்ட "அவள்லாம் பொம்பளையா. அம்மா வயசில இருக்கா. எப்படி தப்பு தப்பா பேசுறா தெரியுமா? என்ன எதுக்கு அவுங்கள்ட்ட அனுப்பினன்னு" ரொம்ப தகராறு பண்ணிட்டு வூட்டுக்கு வந்திட்டா. அதுக்கப்புறம் அவுங்கம்மா வூட்டுக்கும் போறத உட்டுட்டா.
அதுக்கப்புறம் ஒரு அஞ்சாறு மாசம் கழிச்சு, நமக்கும் விபரமில்லன்னு தெரிஞ்சுகிட்டு பாடம் சொல்லித் தர ஹாஜியார்ட்ட (ஊரில் அப்ப அவர் பெரிய மனுஷர்) அனுப்னாங்க.
ஹாஜியார் கச்சா முச்சான்னு சொல்லித் தந்ததுல, அவர் மூஞ்சி மின்னாலயே திட்டி வுட்டுட்டு வந்தேன்.
அப்றம் திரிச்சாப்ல இரண்டு மூணு தரம் கூப்பிட்டு வச்சு அவுரு சொன்ன பின்னதானே விவரம் தெரிஞ்சுச்சு.
என் வூட்டுக்காரி குளிர் ஜூரம் வந்து பத்த நாள் கடந்தா.
கல்யாணமாயி எட்டு வருஷம் கழிச்சுதான் மொத மொதல்ல இரட்ட குழந்த புறந்துச்சு.
அப்டிலாம் வெள்ள வாயா இருந்ததுனாலதான் உடம்புல வலுவிருக்கு. உங்கள மாதிரியா என்றார்.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பற்றி ஒவ்வொரு பார்வை. இது கிராமத்து மனிதர்களின் பார்வை.
10. கடைசியாக, விடுமுறையில் படித்த ஒரு மீன் பிடிப்பவரின் கதை
ஒரு மீன் பிடிப்பவர் விடியற்காலையிலேயே எழுந்து கடலுக்கு வந்திருக்கிறார். சரியாக வெளிச்சம் வராமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் விடிந்தவுடன் கட்டு மரத்தை சரி பண்ணி கடலுக்குள் போகலாமென்று கரையிலேயே அமர்ந்து விட்டார். அருகில் சிறு குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த பொடிக் கற்களை ஏதோ யோசித்தவராக ஒவ்வொன்றாக கடலில் வீசிக் கொண்டிருந்தார். கையில் ஒரு கல் மீதமிருந்த போது நன்றாய் விடிந்து விட்டிருந்தது. கையில் இருந்தது வைரக்கல்.
சே. அவ்வளவு வைரக்கற்களையும் தெரியாமல் கடலில் வீசி விட்டோமே என்று நொந்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.
இதிலிருந்து நாம் பெரும் நீதியென்ன?
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
பையன் சொல்றான்
இனி இயன்றவரை இருட்டிலேயே விழித்து விடக்கூடாது என்பதுதானோ! :))))))))
ஹேய்!. ஒழுங்கா பஜ்ருக்கு போவுல உதை படுவே!.
Post Comment