Showing posts with label வரம். Show all posts
Showing posts with label வரம். Show all posts

Wednesday, 19 March 2008

பெண்ணாக மாற எனக்கொரு வரம் கொடு



தான் தினமும் ஆலுவலகம் சென்று பணி செய்வதும், தன் மனைவி தினமும் வீட்டிலேயே இருப்பதையும் பார்த்த ஒரு கணவனுக்கு மிகவும் எரிச்சலாயிருந்தது.

தனக்கு நேர்வதை அவள் பார்க்க வெண்டுமென்பதற்காக
'கடவுளே! நான் தினமும் வேலைக்குச் சென்று எட்டு மணி நேரங்கள் படாத பாடுபடுகிறேன். என் மனைவியோ எப்போதும் வீட்டிலேயே இருக்கிறாள். எனக்கு நேர்வதை அவள் அறிய வேண்டுமாகையால், ஒரே ஒரு நாளைக்கு மட்டும் அவள் நானாகவும், நான் அவளாகவும் மாற வேண்டும்' எனப் பிரார்த்தித்தார்.
கடவுளும் தன் மாறாத கருணையால் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் காலை அவர் ஒரு பெண்ணாக விழித்து எழுந்தார்.

எழுந்தவுடன் தன்னுடைய துணைக்காக காலை உணவு தயார் செய்தார். குழந்தைகளை எழுப்பினார். அவர்களுடைய பள்ளிச்சீருடைகளை சரி செய்தார். பிள்ளைகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு விட்டு, மதிய உணவை பொதிந்து கொடுத்தார். அவர்களை தன் வண்டியில் அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தார்.

திரும்ப வீட்டுக்கு வந்து, உலர் சலவை செய்ய வேண்டிய துணிகளை சலவைக்காரனிடம் கொடுத்து வந்தார். திரும்பும் வழியில் வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றார். திரும்ப வீட்டுக்கு வந்து வாங்கிய மளிகைகளை அதனதன் சாடிகளில் கொட்டி சரியாக அடுக்கி வைத்தார்.

வாங்கிய பொருட்களும் கொடுத்த பணமும், வங்கியில் செலுத்தப்பட்ட தொகை, வங்கி நிலுவை, கையிருப்பு எல்லாம் சரி பார்த்து கணக்குகளை குறித்து வைத்தார்.

பின்னர் வீட்டில் வளரும் பூனை செய்து வைத்திருந்த கழிவுகளை அகற்றி, துடைத்து சுத்தம் செய்து வைத்து விட்டு, வீட்டு நாயை குளிப்பாட்டினார்.

அப்போதே மணி மதியம் ஒன்று ஆகி விட்டிருந்தது. உடனே அவசரம் அவசரமாக படுக்கைகளை புரட்டி, சுத்தம் செய்து, ஒழுங்கு படுத்தி விட்டு, துணிகளை துவைத்து காயப் போட்டார். பெருக்க வேண்டிய இடங்களை பெருக்கி, துடைக்க வேண்டியவைகளை துடைத்து, வேக்குவம் செய்ய வேண்டியவற்றை செய்து, சமையறை தரையை மோப் செய்து விட்டார்.

பிள்ளைகளின் பள்ளிக்கூடம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு, வீடு வரும் வரை அவர்களிடம் விவாதம் செய்து கொண்டு வந்தார். வீட்டில் பிள்ளைகளுக்கு பாலும் பிஸ்கட்டுகளும் கொடுத்து, சீருடையிலிருந்து சாதாரண உடைகளுக்கு மாற்றி, அவர்கள் தங்கள் வீட்டுப் பாடங்களை சிரமமின்றிச் செய்ய வசதி ஏற்படுத்தி வைத்தார்.

பின்னர் பிள்ளைகளுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே காய்ந்த துணிகளை இஸ்திரி செய்தார். அதற்குள் மணி நான்கரை ஆகி விட்டிருந்தது. உடனே உருளைக் கிழங்குகளை தோல் சீவி வைத்து, சலாடுக்கு வேண்டிய காய் கறிகளை நீர் விட்டு அலம்பி, கறித் துண்டுகளை நறுக்கி வைத்து விட்டு, இரவு உணவுக்காக புதிய பீன்ஸை உடைத்து நாரெடுத்து வைத்தார்.

இரவு உணவு தயாரித்து வைத்து, உண்டு முடித்த பின், பாத்திரங்களை கழுவி அடுக்கி விட்டு, சமையலறையை சுத்தம் செய்து விட்டு, இஸ்திரி செய்த துணிகளை அதனதன் இடத்தில் வைத்து விட்டு, பிள்ளைகளுக்கு மேல் கழுவி விட்டு அவர்களை படுக்கையில் உறங்கச் செய்தார். மணி இரவு ஒன்பதைத் தாண்டிய நிலையில் ஒரே அலுப்பாகவும்
உடம்பு அசதியாகவும் இருந்தது.

அன்றாட வேலைகள் முடிந்தும் முடியாத நிலையில் படுக்கைக்குச் சென்று, தன் துணைக்கு மன அமைதி ஏற்படும் வரையில், பள்ளியறைச்சுகம் அளித்துப் பெற்றார்.

அடுத்த நாள் காலை எழுந்து முதல் வேலையாக,
'என் இறைவனே! நான் என்ன மாதிரி நினைத்திருந்தேன்!. என் மனைவி வீட்டில் இருப்பதற்காக இப்படி பொறாமைப் பட்டு விட்டேனே!. தயவு செய்து எங்களை பழைய நிலைமையிலாக்கு!' எனப் பிரார்த்தித்தார்.

கடவுள் தன் அபரிமிதமான அறிவால் கூறினார்.
"மகனே!, நீ சரியான பாடம் படித்து விட்டாய். நான் பழைய மாதிரி உங்களை மாற்ற வேண்டும்தான். ஆனால் அதற்கு நீ இன்னும் ஒன்பது மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். நேற்றிரவு நீ கர்ப்பமடைந்து விட்டாய்."

நன்றி:இரவி சர்மி

Post Comment

Saturday, 24 March 2007

கடவுளின் வரம் - அம்மா

அவனது தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஆறு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் வாழ்க்கையின் துயரங்களை தனியாளாய் எதிர்கொண்ட நெஞ்சுரம் மிகுந்த அவனது தாயார் பற்பல இன்னல்களுக்கிடையே அவர்களை ஆளாக்கினார். அவன் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் பெறும் அதிக பரிசுகளைக் கண்டு மிகுந்த ஆனந்தமடைவார். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சிதான் அவரது வாழ்வின் ஆனந்தமே என்றிருந்தார்.

அப்போது அவன் சிறிய பையன். எட்டாவது தேர்வுக்குப் பின் கோடை விடுமுறையில் வீட்டிலிருந்தான். 'இப்போது கடவுள் உங்கள் முன் தோன்றி ஒரு வரம் மட்டும் கேட்கலாம் என்ற வாய்ப்பளித்தால் என்ன வரம் கேட்பீர்கள்' என்று வானொலி அல்லது ஏதோ கதைப் புத்தகத்தின் தொடர்ச்சியாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்..

அவன் தாய், தமையன், தமக்கை ஆளுக்கொன்று சொன்னார்கள். 'உனக்கென்னடா வேணும்' என்று அம்மா கேட்டார்கள்.

அவன்
'எனது கொள்ளுப்பேரன், தங்கத்தட்டில் தயிர் சாதம் சாப்பிடும் அழகை, நானும் என் தாயாரும், என் வீட்டு பதினைந்தாவது மாடியிலிருந்து, வெறும் கண்ணால் கண்டு இன்புற வேண்டும்' என்றான்.

'என்னடாது பைத்தியம் மாதிரி உளர்றே' அவனது தமையன்
'ஏதாச்சும் இப்படித்தான் சொல்வான்' தமக்கை

1. எனது பேரனுக்கு பேரன் பிறக்கும் வரை நானும் தாயாரும் இருக்க - மிக நீண்ட ஆயுள் வேண்டும்
2. தங்கத்தட்டில் சாப்பிடுமளவுக்கு வசதி நிறைந்திருக்க வேண்டும். (தங்கத் தட்டில் சாப்பிடக்கூடாதென்பதெல்லாம் அவனுக்கு அப்போது தெரியாது)
3. தயிர்சாதம் சாப்பிட பால் வளங்களில் குறைவிருக்கக்கூடாது. (அப்போதெல்லாம் விற்றுத் தீராமல், வீட்டில், தேவையை விட கூடுதலாக பால் இருந்தால்தான் அம்மா தயிர் செய்வார்கள். தயிராகவே கடையில் விற்கும் காலம் வருமென்றெல்லாம் தெரியாது.)
4. என் வீட்டுப் பதினைந்தாவுது மாடியிலிருந்து வெறும் கண்ணால் கண்டு இன்புற -
(அ) 15 மாடிகளுள்ள வீடு சொந்தமாக இருக்குமளவுக்கு செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டும். (பல மாடிக் கட்டிடத்தில் 15வது மாடியில் ஒரு ப்ளாட் மட்டும் விற்கும் காலம் வருமென்றெல்லாம் தெரியாது)
(ஆ) 15வது மாடி வரை ஏறி இறங்குமளவுக்கு எங்களிருவருக்கும் உடல் பலம் இருக்க வேண்டும். (கிராமத்தில் இருந்ததால் லிப்ட் என்ற சாதனத்தைப்பற்றிய அறிவெல்லாம் 1976களில் இல்லை)
(இ) வெறும் கண்ணால் பார்த்தாலே தெரியுமளவுக்கு கண் பார்வை கூர்மையாயிருக்க வேண்டும்.
(ஈ) குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது. இருந்தால் இன்புற முடியாதே

என்று அவன் விளக்கினான்.

அவன் தந்தை மறைவின் நான்கு நீண்ட ஆண்டுகளுக்குப்பின் அன்றுதான் அவன் தாயாரின் முகத்தில் அத்தகையதொரு மகிழ்ச்சிப் பொலிவைப் பார்த்தான். வாழ்வுச் சுமைகளின் அழுத்தத்தில் சோர்ந்து, ஏமாற்றத்தின் வலிகள் மட்டுமே வரிகளாய் ஓடிய அம்மாவின் முகத்தில், நன்னம்பிக்கையின் ஒளிக்கீற்று படர்வதைப் பார்த்து பரவசம் அடைந்தான் அவன்.

அவன் தலையை வருடியவாறே தாய் சொன்னாள் 'உனக்கு ஆசையே இல்லடா தம்பி!'

இப்போது அவன் மகள் அதைச் செய்தியாக கேட்டபோது சொன்னது
'டாடீ! உங்களுக்கு ஆசையே இல்லை டாடீ!'.

Post Comment