Showing posts with label கவலை. Show all posts
Showing posts with label கவலை. Show all posts

Wednesday, 30 July 2008

தமிழன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவனா?

இந்த ஆண்டில் அமீரகத்தில் மொத்தம் 118 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் 23 பேர் தமிழர்கள். மிகுதியில் கூடுதலானோர் மலையாளிகள்தாம். இந்த தற்கொலைகளில் மிகுதியானவை பணச்சுமையால் ஏற்பட்டவைதான் என்கிறது புள்ளி விபரம்.

தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள், இங்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்த வாழ்வியல் இங்கில்லை என்பதறிந்ததும் முதன் முதலாய் மனதொடிகிறார்கள். நிலம் நகை போன்றவற்றை அடகு வைத்து நிறைய பணம் கொடுத்து வந்தவர்கள், அந்தக் கடனை அடைக்கும் வரையிலாவது இங்கு இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இங்கு தன் செலவும், ஊரில் குடும்பத்தார் செலவும் போக எஞ்சிய குறைந்த பணத்தில் கடனை அடைக்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.

அவர் வீட்டிற்கு அனுப்பும் பணம் ஊரில் கொடுத்ததை விடவும் அதிகம். ஆனால் அதற்காக அவர் இழந்தது எவ்வளவு என்பது ஊரில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் மனது வருந்தக்கூடாதென்று இவர்களும் சொல்வதில்லை. அவர் முதலீடு செய்த பெருந் தொகையையும் ஊரில் பணத்தைப் பெறுபவர்கள் தற்காலிகமாக மறந்து விடுகிறார்கள். மகன் அல்லது கணவன் துபையில். இனி நம் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்பதான அவர்களின் கற்பனை, ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறையிலிருந்து சிறிது சொகுசான வாழ்க்கை முறைக்கு அவர்களை மாற்றுகிறது. அதற்காக கூடுதல் பணம் தேவையாகிறது. அவர் மேலும் அதிர்கிறார். பழைய கடன் பாரம் முழுவதையும் இரவும் பகலுமாய் இவரே சுமக்கிறார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.

அதற்குள் வந்து சிறிது நாளாகி விடுகிறது. நண்பர்கள் அதிகமாகின்றனர். குழுவாக இருக்கும் போதும், செல்லுமிடத்தும் புகை மற்றும் குடியைத் துவங்குகிறார். முதலில் மன ஆறுதலுக்கென்று இருந்தது, படிப்படியாக விடுமுறை என்றால் அதில்லாமலா என்ற நிலைக்கு தள்ளப் படுகிறார். இதிலே நண்பர்களின் முன் வீராப்புக்காக அல்லது முகஸ்துதிக்காக கூடுதல் செலவழிக்கிறார். சம்பள பற்றாக்குறை. மீண்டும் மன உளைச்சல்.

கார்டு தந்து கடனாளியாக்குகின்ற கிரெடிட் கலாச்சாரம் அவர் அறிந்தும் அறியாமலும் அவரை மேலும் கடனில் தள்ளுகிறது. வெளியேற முடியாமல் தத்தளிக்கிறார்.

இதல்லாமல் சிலருக்கு ஊரில் குடும்பத்தினரில் ஏற்படுகிற சிற்சில குழப்பங்களும் அவர் மனதை வாட்டிப் பிழிகிறது.

இவற்றிலிருந்து தப்பிக்க வழியறியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். சாதாரணமாக இவைதான் இங்கு நடப்பதாக சொல்கிறார்கள். அவைதான் தற்கொலைகளாய் முடிகின்றதாக சொல்கிறார்கள். உண்மையா?

அதனால் இங்கு வர நினைப்பவர்கள் முதலில் நன்றாகவும் சரியாகவும் திட்டமிடுங்கள். வந்த பின் கவனமாய் இருங்கள். உங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவற்றை குறிப்பாய் தவிர்த்து விடுங்கள். உணர்ச்சி வசப்படாமல் சிந்தியுங்கள். வாழ நினைத்தால் புவியில் நல்ல வழிகளா இல்லை. உங்களை நீங்களே சீர்திருத்தம் செய்து சிறப்பான வாழ்வை நோக்கி பயணமாகுங்கள்.

அது சரி. படித்தவர்கள் அதிகமுள்ளதாய் சொல்லப் படுகிற மலையாளிகளில் இது போன்ற தற்கொலைகள் அதிகமுள்ளதே. படிப்பு மனிதனை அதிகக் கோழைகளாக்குமோ!

Post Comment

Saturday, 26 April 2008

நடந்ததும் நினைத்ததும் ஓ! உஃப்!!

சரி செய்ய முடியாத செயல்களில் நான்கு
1. சொல்லி விட்ட சொற்கள்
2. எறிந்த கல்லால் ஏற்பட்ட அலை
3. தவற விட்ட வசந்தம்
4. இழந்து விட்ட நேரம்

ஒரு ஹைடெக் இளம்பெண் விமானத்தில் பயணிப்பதற்காக ஒரு பெரிய விமான நிலையத்தின் பயணிகள் அறையில் தங்க நேர்ந்தது.


பல மணி நேர தாமதம் ஏற்படலாமென அறிந்த அவள், நேரப்போக்குக்காக ஒரு புத்தகத்தையும் ஒரு பிஸ்கட் பேக்கையும் வாங்கிக் கொண்டு, அமைதியாக படிப்பதற்காக மிக முக்கியமானவர்கள் தங்கும் நிலைய பயண அறையில் ஒரு கைநாற்காலியில் அமர்ந்தாள்.


அவள் இருந்த இருக்கையின் அருகே பிஸ்கட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்த கைநாற்காலிக்கு அடுத்ததில் ஒருவர் அமர்ந்து தான் கையுடன் கொண்டு வந்திருந்த பத்திரிக்கையை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.

அவள் பிஸ்கட் பாக்கைப் பிரித்து ஒன்றை எடுத்தவுடன் அடுத்து அமர்ந்திருந்தவனும் அதிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டான். பயங்கரமாக கோபம் வந்தாலும் ஒன்றும் பேசாமலே இருந்தாள். ஆனால் அவள் மனதில் 'எவ்வளவு கொழுப்பு இவனுக்கு!. இதே வேறு நேரமாயிருந்தால், இவனுடைய இந்தத் திமிருக்கு அவன் மூஞ்சியிலே ஒரு குத்து விட்டிருப்பேன்' என நினைத்தாள்.

அவள் ஒவ்வொரு முறை பிஸ்கட் எடுத்த போதும் அவனும் ஒன்றை எடுத்து சாப்பிட்டான். அது அவளை பயங்கரமாக எரிச்சலடைய வைத்தாலும் அந்த அசிங்கம் எல்லோருக்கும் தெரிய வேண்டாமே என சகித்துக் கொண்டாள்.

இப்போது ஒரு பிஸ்கட்தான் மீதம் இருந்தது. 'இந்த வீணாய்ப் போனவன் இப்போது என்ன செய்ய முடியும்?' என நினைத்தாள். அவனோ அந்த பிஸ்கட்டை எடுத்து, இரண்டாய் உடைத்து, அவன் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, அவளிடம் ஒரு பகுதியைக் கொடுத்தான்.

சே! என்ன கொடுமை இது. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. விசுக்கென்று அவ்விடத்திலிருந்து எழுந்து, அவள் புத்தகம் மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு, விமானமேறும் பயணிகளின் வரிசையில் நின்று கொண்டாள்.


விமானத்தினுள் சென்று தனது இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தான் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி வைக்க கைப்பையை திறந்தால் ஆச்சர்யம். உளளே அவளுடைய பிஸ்கட் பாக்கெட். திறக்கப் படாமல் - அப்படியே. தன் கைப்பையில் தான் வைத்த பிஸ்கெட். அவள் தன்னையே நொந்து தன் தவறுக்காக அவமானமாய் உணர்ந்தாள்.


அந்த மனிதன் எந்தக் கோபமும் கசப்புமின்றி அவனுடைய பிஸ்கெட்டை இவளுடன் பகிர்ந்து உண்டிருக்கிறான். ஆனால் இவளோ இவளுடையதை அவன் பகிர்ந்து கொண்டதாக நினைத்து கோபம் மற்றும் வெறுப்பின் உச்சத்திலிருந்தாள்.

அவன் எந்த விமானத்தில் எங்கு செல்பவனோ?. அவனிடம் நடந்ததை விளக்கவோ மன்னிப்புக் கோரவோ கூட இயலாத நிலை.

அவசர குணம் வேண்டாமே.

----------------------------------------------------------------------

கோவையில் ஒரு வயதான மனிதர் தன் நிலத்தை கொத்தி காய்கனிச் செடிகளாவது வைக்கலாமே என்று தம் தோட்டத்திற்குச் சென்றார். நிலம் இறுகிக் கடினமாக இருந்ததில் அவரால் தோண்ட இயலவில்லை. அவருடன் எப்போதும் இப்பணியில் கூட வரும் ஒரே மகன் நிஜாம் இப்போது ஜெயிலில். தெருவில் போய்க் கொண்டிருந்த போது எவ்வித காரணமுமின்றி போலீஸ் பிடித்த தீவிரவாதி(?) அவன்.

அவர் தன் மகனுக்கு தன் நிலைமை குறித்து தபால் எழுதினார்.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு மகன் நிஜாமுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
இவ்வருடம் நம் தோட்டத்தில் எதுவும் பயிரிட முடியாதென்று கவலையுடன் உள்ளேன். தோட்டத்தில் தோண்டி, பண்படுத்தி, செடிகள் நட இயலாத அளவுக்கு மூப்படைந்து விட்டேன். நீ என்னுடன் இருந்திருந்தால், நீயே அவ்வேலைகளைச் செய்து கொடுத்திருப்பாய். எனக்கு இந்தக் கவலை ஏற்பட்டிருக்காது. இறைவன் நலமருள
பிரார்த்தனையுடன் உன் தந்தை.

சின்னாட்கள் கழித்து மகனிடமிருந்து தந்தைக்கு கடிதம் வந்திருந்தது.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு வாப்பாவுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
தற்போது தோட்டத்தை எங்கும் தோண்டி விடாதீர்கள். அங்குதான் பிணங்களை புதைத்து வைத்துள்ளேன்.
நன்மைக்கான பிரார்த்தனைகளுடன்
உங்கள் அன்பு மகன் நிஜாம்

அடுத்த நாள் விடியற்காலை 4மணி. உளவுத்துறை வட்டாரங்களுடன் பெரிய போலீஸ் படை அந்தத் தோட்டமெங்கும் தோண்டித் தோண்டிப் பார்த்தும் ஒரு பிணத்தையும் கண்டெடுக்க முடியாமல், முதியவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தோட்டத்தை விட்டு அகன்றது. அதே நாள் மகனிடமிருந்து முதியவருக்கு இன்னொரு கடிதம் கிடைத்தது.


புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு வாப்பாவுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
இப்போது தோட்டத்தில் உங்கள் விருப்பம் போல் பயிரிட்டுக் கொள்ளுங்கள்.
என் இந்த நிலைமையில் என்னால் இவ்வளவுதான் உதவ முடிந்தது.
நன்மைக்கான பிரார்த்தனைகளுடன்
உங்கள் அன்பு மகன் நிஜாம்

தழுவல்: நன்றி-ஷர்மி இரவி

Post Comment

Saturday, 24 March 2007

எதற்கு கவலை!

85களில் துபை வந்த புதிதில் எனது நெருங்கிய நண்பரின் சகோதரர் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அவர் வீட்டுச் சுவரில் ஒட்டியிருந்த ஒரு ஆங்கிலக் கவிதையொன்று என் கருத்தைக் கவர்ந்தது. மனதில் சோகம் கூடும்போதெல்லாம் அந்தக் கவிதை நினைவுக்கு வந்து, வாழ்வின் நிதர்சனத்தை உணர வைத்து, என் சோகத்தைக் குறைத்தது.

யாருக்காவது பயன்படலாமென்று (நினைவில் உள்ளவரை) அதன் கருத்து தமிழில் இங்கே:

மனிதன் கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் உடல் நலமுள்ளவனா? நோயாளியா?
நீ உடல் நலமுள்ளவனெனில் கவலையடைய ஏதுமில்லை

நோயாளியென்றாலும், கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் நலமடைந்து விடுவானா? இறந்து விடுவானா?
நீ நலமடைந்திடுவாயெனில் கவலையடைய ஏதுமில்லை

இறந்து விடுவாயென்றாலும், கவலைப்பட இரண்டு விடயங்கள்தான்
அவன் சுவனம் சேர்வானா? நரகத்தில் வீழ்வானா?
நீ சுவனம்தான் சேருவாயெனில் கவலையடைய ஏதுமில்லை

நரகம் சேர்பவனெனில் உனக்கு கவலையடைய நேரமேது சகோதரா!
ஓடு. உனது தோழர்களைச் சந்தித்து விடைபெறு!
உனது எதிரிகளை சந்தி!, கை குலுக்கு!,
உன் தவறுகளுக்காக வருத்தம் தெரிவி!,
மன்னிப்பைக் கேட்டுப் பெறு!
நரகத்திலிருந்து விடுதலை பெற முடிந்தவரை முயற்சி செய்!.

Post Comment