Showing posts with label தகுதி. Show all posts
Showing posts with label தகுதி. Show all posts

Wednesday, 26 November 2008

தமிழர்கள் கணக்கில் புலிகள்?

பொதுவாக தமிழர்கள் கணக்கு வழக்குகள் பார்ப்பதில் கைதேர்நதவர்கள் என்ற எண்ணமுள்ளது. இங்குள்ள பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் வணிக் நிறுவனங்களில் தமிழர்களையே கணக்கெழுத வைத்திருக்கின்றனர். மலையாளி வேண்டாம் மதராஸிதான் வேண்டும் என்ற தெளிவோடும் இருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பெருமைதானே. எண்களில் தேர்ந்தவர்களாயும் நேர்மையாளர்களாகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருப்பதுதான் மதராஸிகளை விரும்பச் செய்கிறது என அவர்கள் சொல்கின்றனர்.

எங்கள் நிறுவனத்தில் வங்கிக்கு ஒரு காசோலை 340000க்கு அனுப்பினோம். வங்கியோ எங்கள் கணக்கில் 390000 வரவு வைத்திருந்தார்கள். எங்கள் நிறுவன முதன்மை கணக்காளர் பாகிஸ்தானி. “எமது வங்கியில் கணக்கர்கள் அனைவரும் மதராஸிகள் அதுதான் தப்பாய் செய்து விட்டார்கள். நான் சொல்லப் போவதில்லை” என இருந்தது மட்டுமில்லாமல், என்னிடம் கிண்டல் வேறு. ஒரு நான்கு மாதம் கழிந்து காசோலை கொடுத்த நிறுவனம் என்னை அழைத்து தொகை கூடுதலாக பெறப்பட்டுள்ளது என அறிவித்ததுடன், தங்களது வங்கியிலும் புகார் கொடுக்க, அப்போதுதான் தெரிந்தது. தவறு ஏற்பட்ட இடம் ஹபீப் பேஙக். கணக்கர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள். எங்கள் முதன்மை கணக்காளர் முகம், பார்க்க வேண்டுமே.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சகோதரர் இங்குள்ள நகராட்சியில் அடிமட்ட தொழிலாளியாகச் சேர்ந்தார். அவர் எண்களைக் கையாளுவதைப் பார்த்து அரபி, ஒரு பகுதி அலுவலகத்தின் முழுப் பொறுப்பையுமே அளித்தார். படித்த மற்ற நாட்டவர்களுக்கே கடினமாயிருந்த அப்பணியை பத்தாவது வரை மட்டுமே படித்த அவர் சிரமமில்லாது செய்தார் என்பதுதான் ஆசசர்யம். நமது படிப்பு முறை அடிப்படையிலேயே அவ்வாறு அமைந்துள்ளதென சொல்வது சரியானதுதானா?


மற்றொரு சகோதரர் தங்க நகைகள் மொத்த வியாபார நிறுவனத்தில் ஓட்டுனராகச் சேர்ந்தார். தொலைபேசியில் வியாபாரம், நகைகளைப் பெற்றுக் கொள்ள தனியிடம் என்று இருந்தது. உரிமையாளர்களாகிய தந்தையும் இரு மகன்களும் இருக்கும் நிறுவனத்தில் அவர் இருக்க வேண்டும். தொலைபேசி பேரங்களில் புதிதாக கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்பதால் அவர் வரும்போதே பொழுது போக்குக்காக கதைப் புத்தகங்களையோ சஞ்சிகைகளையோ எடுத்து வந்து படித்துக் கொண்டிருப்பாராம். அதைப் பார்த்த உரிமையாளர் தந்தை, தன் மகனைப் பார்த்து "அந்த மதராஸி வெறும் ஓட்டுனர் 1500 சம்பளம் பெறுகிறான். தினமும் குளித்து அழகாக உடையுடுத்தி வருகிறான். நீங்கள் சரிவர தினமும் குளிப்பது கூட இல்லை. சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் புத்தகத்தில் மூழ்கி விடுகிறான். அனதால்தான் மதராஸிகள் நல்ல அறிவாளிகளாய் இருக்கின்றனர்" என்றாராம். சொல்லிச் சிரித்தார் சகோதரர்.
நல்ல கதைகள் வாழ்க்கைப் பாடங்களாகின்றன. சஞ்சிகைகள் அரசியலையும் கலையையும் கலந்து தருகின்றன என்பதை அந்த பாகிஸ்தானி அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

Post Comment

Tuesday, 29 January 2008

மாற்றத்திற்கான காலம் இன்னும் வரவில்லையா? – குடியரசு நாள் விவாதம்


சமீபத்தில் பத்திரிக்கையாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. குல்தீப் நய்யார் அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த அந்தந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவில் பாராளுமன்ற மரபுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றி ஒரு வகுப்பபெடுத்தார். அதில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக, அப்போதைய இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் உயர்ந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக பாபு இராஜேந்திர பிரசாத் அவர்கள் இருந்தார்கள். அதன் உறுப்பினர்களாக டாக்டர்.அம்பேத்கர், பண்டிட் ஜவஹர்லால் நேரு முதலியோர் இருந்தனர்.

அக்குழு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அதை ஏற்று செயல் வடிவம் தந்து அமுலாக்கிய நாளில் பாபு இராஜேந்திர பிரசாத் இறுதி உரை நிகழ்த்தினார். அதில் இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமாகிய இதை படிப்பறிவற்றவர்களெல்லாம் ஓட்டுரிமை வடிவில் பெற்று நாடாளுமன்றமும் பாராளுமன்றமும் வரப் போகிறார்கள் என்று வேதனை தெரிவித்து முடித்தாராம். அப்போது அங்கிருந்த பண்டிட் நேரு அவர்கள் தலைவரது பேச்சிற்கான சிறு விளக்கம் தர அனுமதி பெற்று பேசினாராம்.

அதில், நாட்டின் சுதந்திர போராட்டத்தில், படித்தவர்களில் பெரும்பாலோர், கலந்து கொள்ளாதவர்களாகவும் அன்னியருக்கு அடிவருடிகளாகவுமே இருந்தனர். படிக்காத இந்த பாமர மக்கள்தான் குடும்பத்தையும் தொழிலையும் மறந்து தெருக்களில் இறங்கி போராட்டம் செய்தனர். எனவே சுதந்திரத்தின் பலனை படிக்காத இந்தப் பாமரர்கள் அதிகம் அனுபவித்தலே முறைமையாகும் என்று பேசினாராம். அதை பாபு இராஜேந்திர பிரசாத்துடன் குழுவிலிருந்த மற்ற அறிஞர்களும் ஆமோதித்தனராம்.


எந்தவொரு பொறுப்புக்கும் அடிப்படையான சில தகுதிகளை எதிர்பார்க்கும் இக்காலத்தில், நாடு சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் குடிமகன் என்ற தகுதியைத் தவிர வேறெந்த அடிப்படைத் தகுதியுமற்ற, படிப்பறிவற்ற நபர்களை ஆளும் மன்றங்களுக்கு அனுப்புதல் அவசியம்தானா? நேரு சொன்ன கருத்து தற்போதைய நிலையில் காலாவதியாகி விட்டதாக கருதலாமா? சில தகுதிகளை வரையறுப்பது நாட்டுக்கு நல்லதில்லையா?

இதில் எனக்கென்று ஒரு எண்ணம் உள்ளது – அது தான் நாட்டுக்கு சிறந்ததென்றும் தோன்றுகிறது. உங்களுக்குள்ளும் ஒரு எண்ணம் தோன்றலாம். தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே. படிப்பவர்களுக்கு இது குறித்த சிந்தனையைத் தூண்டலாமே.

Post Comment