Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Monday, 25 January 2010

கடவுள் இல்லை மனிதன்தான்

1980வது வருடத்தில் ஒரு வெயில் நாள். ரோட்டோரம் எள் அடிப்பதற்காக போராக குவித்து வைக்கப்பட்டிருந்த செடிகளை பிரித்து, வெயிலில் அடுக்கி, உலர்த்தி, எள் வேறாக சக்கை வேறாக எடுப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. அம்மாவின் கடின உழைப்புக்கு முன், நான் அவ்வளவு உழைப்பாளி இல்லை. அந்த உழைப்பிலும், 'தம்பி! கை முகம் கழுவிட்டு நிழல்ல போய் சாப்பிடப்பா!' எனும் அம்மாவின் கருணைக்கு அளவே இல்லை. '
ஏம்மா. உனக்கு பசிக்காதா? நீயும் வாயேன்' என்றாலும்
'நீ போய்ட்டு சீக்கிரம் வாப்பா'
ஒரு தேநீர்தான் அவர் பசியடக்க அல்லது பசி மறக்க.
காடு, கழனி, மாடுகளின் உதவியோடு தனியாளாய் ஆறு குழந்தைகளை வளர்த்த அம்மா இன்னும் அதிசயம்தான் எனக்கு.

விடியலில் வந்ததால், விரைவில் வேலைகள் முடிந்து அம்மாவை ஈருருளியின் (bi-cycle) பின்புறம் அமர்த்திக் கொண்டு சென்னை திருச்சி NH45 நெடுஞ்சாலையில் வீடு நோக்கிய பயணம். மதியம் மூன்று மணி. சாலையில் அத்தனை வாகனங்களோ சன சந்தடியோ இல்லை.

எதிர்த்த சென்னை சாரியில் இருந்து வரும் ஒரு மகிழுந்து. ஆங்கிலப் படத்தில் வருவது போல ஒரு பயங்கர கிரீச். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மகிழுந்து சாலையிருந்து இருபதடி தூரம் பறந்து மல்லாந்து விழுகிறது.

'அல்லாஹூ! அல்லாஹூ!' அம்மா பார்த்துக் கொண்டே அலறுகிறார்கள். ஆள் நடமாட்டம் அற்ற பகுதி. எங்களிலிருந்து ஒரு நூற்றைம்பது அடிகள் தள்ளி சம்பவம்.
'எம்மா. பயமாயிருக்கம்மா. போலீஸ் கேஸ்ன்னு வந்தா யார் போய் நிக்கிறது. வாம்மா போயிடலாம்'
'ஏண்டா! பன்னண்டாவது படிக்கிற ஆம்புள புள்ள. ஒரு உதவி கூட செய்யாம ஓடுவாங்களா? வண்டியை நிறுத்துறா'
ஓடிப்போய் பார்த்தால் வண்டி நிறைய ஆணும் பெண்ணுமாய் அலறல் சத்தம்.

'பயப்படாதீங்க! பயப்படாதீங்கம்மா! ஒவ்வொரு ஆளா வெளியேறப் பாருங்க.'
உடைந்திருந்த திறந்த பக்க கதவின் வழியே ஒவ்வொருவராய் அம்மாவும் நானும் வெளியே இழுக்கிற முயற்சியில்.
'தம்பீ! ரோட்டுப் பக்கம் போய் சத்தம் போடு. அக்கம் பக்கம் வயலில் வேலை பார்க்கிற ஆளுங்க இருந்தா வருவாங்க. ஓடு.'
'ஓடியாங்க. ஓடியாங்க. ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு. ஆளுங்க மாட்டிக்கிட்டாங்க. ஓடியாங்க. ஓடியாங்க'
ஏழெட்டு முண்டாசுகாரர்கள் ஓடி வந்தனர். வழியில் போன சுமையுந்தும் நின்றது.
அதற்குள் அம்மா ஒரு ஆணையும் பெண்ணையும் மகிழுந்தில் இருந்து வெளியில் எடுத்திருந்தார்கள்.
மற்ற ஆட்கள் வந்து மீதமிருந்தவர்களையும் நல்ல அடி, உள் காயம், வெளிக் காயம், இரத்தத்துடன் மீட்டார்கள்.
நாங்கள் கையில் வைத்திருந்த நீரைக் கொண்டு அம்மா பெண்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று 'ஐயோ! எங் கொளந்த!. வண்டியில!' வந்திருந்த பெண்ணில் ஒருவரது அலறல்

'வண்டியில யாரும் இல்லயே!'
வண்டிக்கு அடுத்து ஒரு இருபதடி தள்ளி வயலில் இருந்து ஒரு கைக்குழந்தையை அம்மா எடுத்து வந்தார்கள்.
சாலையிலிருந்து மகிழுந்து இருபதடி தள்ளி, மகிழுந்திலிருந்து குழந்தை இருபதடி தள்ளி.
நாற்பதடி தூரத்தில் விழுந்த குழந்தை சிறு சிராய்ப்போ காயமோ ஏதுமின்றி அம்மாவின் கைகளில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது ஆச்சரியம்தான்.

"நாங்க திருப்பதியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம். அந்த திருப்பதி ஏழுமலையானே நேரில் வந்தது போல் வந்து எங்களை காப்பாற்றினீங்க". அந்தம்மா என் அம்மாவின் காலில் விழப்போக
"கால்ல உளாதெ! நாங் கடவுளில்ல. மனுசங்கதான்"
அடுத்து குடும்பத் தலைவரும் காலில் விழப்போக
"கால்ல உளாதய்யா. நாங் கடவுளில்ல. மனுசங்கதான்"

அவ்வழி வந்த பேருந்தை நிறுத்தி மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவலனுப்பினேன்

'தம்பீ! இனி நிக்காதே. வா போயிரலாம்' - அம்மா
'நீ செய்த பெரிய காரியம். எல்லாம் வாழ்த்துராங்க பொறும்மா'
'நீ போடா!. இனி போலீஸ் பார்த்துக்கும்'.

[வெளியூரில், இரவு உணவு அருந்த, தூக்க மிகுதியில், கையை முட்டுக் கொடுத்து அயற்சியோடு அம்மா.
அதை அவர்களுக்குத் தெரியாமல் கிளிக்கி, என் மகளிடம் காண்பிக்க
என் மகள் 'எம்மா!. சூப்பர் போஸ் மா!' எனச் சொல்ல, படத்தை வாங்கிப் பார்த்து விட்டு 'வைகோல' என்றார்கள். (இப்படியெல்லாம் செய்வார்களா என்பதைக் குறிக்க உபயோகிக்கும் சொல்)
(சரியான பொருள் என்ன என்று பழமைபேசி இடம்தான் கேட்க வேண்டும்.)]

Post Comment

Sunday, 15 February 2009

அம்மாவுக்கு ஓர வஞ்சனையா?



எங்க ஊர்க்காரர் துபையில் வந்து சில ஆண்டுகள் இருந்து விட்டு விடுமுறையில் ஊர் போகிறார். இங்கு பஜாரில் பச்சை டிரெஸ் வேலை. பொருட்களை வாங்கித் தந்தால் அதை கை வண்டியில் வைத்துத் தள்ளி வந்து கொடுத்தல், தலைச்சமை தூக்குதல் முதலிய கடுமையான உடலுழைப்பைத் தர வேண்டிய கூலிப்பணி. அயர்வை மறக்க இங்கிருந்த நாட்களில் நன்றாக குடிக்கக் கற்றுக் கொண்டு விட்டார். ஒரு நாளைக்கு ஒரு அவுண்ஸாவது உள்ளே தள்ளா விட்டால் உறக்கம் வராது என்ற நிலைமை.

அப்போதெல்லாம் நம் ஊரில் இப்போது போல் அரசாங்கக் கடைகள் திறக்கப் படவில்லை. சன்னாசிக் கோயில் மறைவில், புளிய மரத்தடியில், கரும்புக் காட்டுப் புதர்களில் ஊத்திக் கொண்டு ஓடி வர வேண்டும். போலீஸ் பிடித்து விட்டால், அங்கேயே கேட்கிற காசை கொடுத்து விட்டு தப்பித்தால், மானம் போகாமல் தப்பும். அதனாலேயே ஊருக்குப் போகாமல் தள்ளிப் போட்டு மூன்று வருடத்துக்குப்பின் பயணம்.

விமான நிலையத்தில் இருப்பதிலேயே பெரிய அளவு பாட்டில் ஒன்று வாங்கி சாமானோடு திணித்தாகி விட்டது. மனைவியை சமாளிச்சிடலாம். அம்மாதான் துருவித் துருவி கேட்பார்கள். செவிடர் மாமனாரைச் சந்திக்க சென்றபோது யோசித்தது போல் பதிலை யோசித்துக் கொண்டே ஊரும் வந்து விட்டது .

தாய், தங்கை, தாரம், தன் பிள்ளைகள், தங்கை பிள்ளைகள் என எல்லோர் முன்னிலையிலும் கொண்டு வந்திருந்த சாமான்களைப் அம்மா பிரித்துக் கொடுக்கிறார்கள். பார்க்க பகட்டாய் இருப்பதெல்லாம் மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகளுக்கு, சுமாரானதெல்லாம் மகன் வீட்டுப் பிள்ளைகளுக்கென்று பிரிக்கப் படுகிறது.

மனைவி அதையெல்லாம் கவனித்தாலும் கட்டியவனிடம் தனியாகத்தான் சொல்ல வேண்டும். இவருக்கோ எப்ப பாட்டிலை எடுத்து…… என்ன கேள்வி வருமோ….. அதை எப்படி சமாளிப்பதோ…….. அதே கவலை.


என்னப்பா இது?
டானிக் மருந்தம்மா.
நல்லாத்தானே இருக்கே. உனக்கேனப்பா மருந்து?
அங்கெல்லாம் வேலை கடுமை. உடம்பு தேறுவதற்கு டாக்டர் கொடுத்திருக்கார்.
அதுக்கு இவ்ளோ பெரிய பாட்டிலா?
இரண்டு மூன்று மாசத்துக்கு தொடர்நது சாப்பிட சொல்லி இருக்கார். துபை மருந்து இங்கே கெடைக்காதுல்ல. அதான் கொஞ்சம் பெருசா. அங்கெல்லாம் சின்ன பசங்க கூட சாப்டுவாங்கம்மா. உடம்புக்கு நல்லது.
அது சரி. சின்னப்பசங்க சாப்டாலும் உடம்பு தேறுமா?
பாட்டில் மூடியால ஒரு மூடி. ஒன்னும் ஆகாதும்மா.
இவ்ளோ இருக்குதே தம்பி!
மிச்சமிருந்தா ஊருக்கு போகும்போது எடுத்துட்டு போயிட வேண்டியதுதான்

அப்பாடி. அம்மாவிடம் எப்டியோ சமாளிச்சு, எலி பூனை உருட்டாத இடமாப் பார்த்து, பத்திரமா படுக்கையறைல வைத்த உடன்தான் நிம்மதி.

"பாத்தீங்களா. நல்ல சாமானெல்லாம் மக வீட்டு பிள்ளைகளுக்கு. அவுங்க ஒதுக்கியது மட்டும் நம்ம பிள்ளைகளுக்கு" என்ற மனைவியிடம் "சரி சரி ஆரம்பிச்சிராதே. எல்லா பொருளும் நல்லதுதான். அவுங்களுக்கென்ன தெரியும் நல்லதும் கெட்டதும். விடு" என்று சொன்னதும் சரின்னுட்டாள்.

கொட்டாப்புளி தம்பு கிட்ட வாங்கி, குந்த வச்சு அடிச்சி, போலீஸ்ல மாட்டி மானம் போகாமல், வெளியே தெரியாமல் ஒரு நாளைக்கு ஒரு மூடி. பெரிய ஆசுவாசம்தான். நல்ல படியாய்தான் போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் கடைத்தெருவில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு ஆள் "சீக்கிரம் வீட்டுக்கு போங்க. எதையோ சாப்பிட்டுட்டு வீட்டில பிள்ளைங்களுக்கு எல்லாம் விஷம் பாய்ந்து, பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார்கள். நம்மூர் பெரிய டாக்டரை அழைக்க பெரியவன் போய் இருக்கிறார்" என்று சொல்லவும்.

பரக்கப் பரக்க, அடித்துப் பிடித்து போய் பார்த்தால், மக்களெல்லாம் வீட்டு வாசலில் பெருங்கும்பலாய்.
சைக்கிளை தெருவிலே தள்ளி விட்டு வீட்டுக்குள்.
பிள்ளைகள் பாயில் கிடத்தப்பட்டு டாக்டர் பரிசோதித்து கொண்டிருக்கிறார்.


ஐயையோ. பிள்ளைங்களுக்கு என்ன ஆச்சு?
டாக்டர்: ஏன்ய்யா கத்துறீர். செக் பண்ணிக்கிட்டுதானே இருக்கேன். தள்ளி நில்லய்யா. பெரியவரே இவரை தூரமா இருக்கச் சொல்லுங்க.
"தம்பீ" வீட்டுக்குள்ளிருந்து அம்மாவுடைய சத்தம் பெரிதாய் வரவும்
ஒரே தாவலில் அம்மாவின் முன்னில்

"என்னாச்சும்மா? தங்கையை காணோம். இவளையும் காணோம். பிள்ளைங்க மட்டும் கிடக்குது!"
"தம்பீ. நீ கொண்ணாந்த துபை மருந்தை பிள்ளைகளுக்கு கொடுத்தாலும் உடம்புக்கு நல்லதுன்னு சொன்னியே. அதான் கொடுத்தேன். இப்டி ஆயிடுச்சே." -பயம் கலந்த கலக்கத்தோடு அம்மா.
"ஐயையோ. அதையாக் கொடுத்தே. சப்தம் போடாம இரு. நல்லாயிடும் நான் பாத்துக்கரேன்".

பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரை தனியே அழைத்து பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவர் வருகைக்கான தொகையை கையிலே திணித்து வழியனுப்பி விட்டு,
தெரு மக்களை கலைந்து போகச் சொல்லி விட்டு பார்த்தால்...
தெருவிலே மனைவியும் பிள்ளைகளும் வீட்டை நோக்கி ஓடி வருகிறார்கள்.

"டேய் பசங்களா? உள்ளெ படுத்திருப்பது நீங்க இல்லையா?"
"இல்லையே. காலையிலேயே அப்பம்மா எங்களை அம்மம்மா வீட்டுக்கு போகச் சொல்லிடுச்சு"

நேராக வீட்டுக்குள் வந்து,
"ஏம்மா! நான் வாங்கி வந்ததை எம் பிள்ளைகளுக்கு கொடுக்காமல், எம் பிள்ளைகளை அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு, மகள் வீட்டு பிள்ளைங்கள மட்டும் தனியாக வரவழைத்து வச்சு கொடுத்திருக்கியே இது உனக்கே நல்லாருக்காம்மா?"
"நான் சொன்னேன் நீங்க எங்க கேட்டீங்க?" - இது மனைவி

(குறிப்பு: எல்லா அம்மாவுக்கும் மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகள் மீது மகனுடைய பிள்ளைகளை விடவும் பாசம் சிறிது மிகையாய் இருக்கிறதென்பது உண்மைதானா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்?)

Post Comment