Showing posts with label நண்பர்கள். Show all posts
Showing posts with label நண்பர்கள். Show all posts

Thursday, 6 November 2008

ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும் (2)

(ஏற்கனவே போட்ட பதிவு ஏதோ சினிமாவில் வந்தது என ஜிகே சொன்னதால் கொசுவர்த்தி சுழல விட்டு இன்னொரு பதிவு)
சென்னை. முது நிலை பட்டப்படிப்பில் தனிம வேதியியல் ஆய்வுக்கூடத் தேர்வு.(M.Sc Chemistry Inorganic Practical Exam - இதைத்தான் அப்படித் தமிழாக்கி ஒப்பபேத்தி இருக்கிறேன்) ஒரே நிறத்திலுள்ள மூன்று தாது உப்புக்களைக் ஒன்றாகக் கலந்து கொடுத்து விடுவார்கள். அது என்ன என்ன என்று படிப்படியான ஆய்வு முறைகளின் மூலம் கண்டு பிடிக்க வேண்டும்.

என்னத்தை கலந்தார்களோ சரியான முடிவகள் வராமல் எல்லோரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். எனக்கு முன்னால் ஒரு ஈரானிய மாணவன் அலி. குள்ளமானவன். பிப்பெட்டோ, பியூரெட்டோ (தமிழில் தெரியவில்லை) எடுக்கக் குனிந்தவன், நிமிர்நதால்.... அவன் ஆய்வு செய்து கொண்டிருந்த குடுவை கீழே விழுந்து உடைந்து, கொடுத்திருந்த(sample) தாது உப்புகளோடு கரைந்து போனது.
திரும்பக் கேட்டாலும் பெரிய இழுவைக்குப்பின் தருவார்கள். கெஞ்சிக் கொஞ்சி பணிவோடு நிற்க வேண்டும்.

மீதமிருந்த ஒரு மணி நேரத்தில் கால்மணி நேரத்துக்கு மேல் வாய்மொழி(viva voce)த் தேர்வு நடக்கும். மீதி நேத்தில் குட்டிக்கரணம் போட்டாலும் பெரிதாக சாதிக்க முடியாது. கடுப்பாகி, இதுவரை செய்த ஆய்வுகளில் எடுத்து வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு முடிவைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

அப்போது 'வைவா'க்கு அவனுக்கு அழைப்பு. சுல்தான் என்ன செய்ய? என்பது போலப் பார்த்தான். ஆதரவாக ஒரு சிரிப்பு 'ஜமாய் ராஜா' ன்னு கை காண்பித்தேன். வைவா அறைக்குப் பக்கத்தில்தான் நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு குழப்பத்தில் தவறான பதில்களையே சொல்ல.

சரி கடைசிக் கேள்வி: மின்மினிப்பூச்சிகள் எவ்வாறு மின்னுகின்றன.
அலி: இறைவன் படைக்கும் போதே அதன் புட்டத்தில் சீரியல் லைட் வைத்து படைத்து விட்டதால்.... போங்கப்பா..

அந்தப் பேராசிரியை அடுத்து வந்த என்னை.... சொல்லனுமா?
ஏனய்யா அலீ. ஆங்கிலத்தில்தானே பதில் சொல்லி வந்தாய். கடைசிக் கேள்விக்கு மட்டும் இவ்வளவு சிரமப்பட்டு தெரியாத தமிழில் ஏனய்யா சொல்ல வேண்டும். அவ்வ்வ்வ்வ்வ்:(((((

(டிஸ்கி: இயற்கையில் அதன் பின்புறம் படிந்துள்ள பாஸ்பரஸ் எனும் தனிமத்தின் ஒளிரும் தன்மையால் - The fluorescent effect of Natural Phosphorous available on its back என்பது சரியான பதில் என நினைக்கிறேன்.)

Post Comment

Wednesday, 5 November 2008

ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும்

(சிறிது மஞ்சள். பிடிக்காதவர்கள் விலகவும்.)
ஒரு பெரிய பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.
வந்தவரிடம் அதிகாரி : இந்தியா எப்போது விடுதலையடைந்தது?
பதில்: வெகு நீண்ட நாட்களாக அதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் 1947ல் தான் பலன் கிடைத்தது.

அதிகாரி: அந்த விடுதலை யாரால் கிடைத்தது?
பதில்: அதற்காக பல பேர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றனர். அதில் யாராவது ஒருவர் பெயரைச் சொல்வது மற்றவர்களை அவமதிப்பதாக ஆகும்.

அதிகாரி : இந்தியா இன்னும் சிறந்த முறையில் முன்னேறாததற்கு நாட்டில் உலவும் இலஞ்ச இலாவண்யங்களே காரணம் எனற கருத்து சரியானதா?
பதில்: இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே சரியாகச் சொல்ல இயலும்.

அதிகாரி: உங்கள் பதில்கள் நிறைவளிக்கின்றன. நாங்கள் பின்னர் உங்களுக்கு விவரம் தெரிவிப்போம். எனினும் இதே கேள்வியையே மற்றவர்களிடம் நாங்கள் கேட்க நினைப்பதால் இந்தக் கேள்விகளை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்.

தேர்வுக்கு வந்திருந்த மற்றவர்கள், வெளியில் வந்தவரிடம் கேட்டபோது ‘சுலபமான கேள்விகள்தான். எல்லோரும் பதில் சொல்ல முடியும்’ என்று சொல்லி நழுவி விட்டார்.

நம் நண்பர் அவரை வெளியில் சென்று பிடித்து கேள்விகளைப் பற்றி கேட்டபோது ‘நான் அவர்களிடம் கேள்விகளை யாருக்கும் சொல்ல மாட்டேன் என் வாக்குக் கொடுத்திருக்கிறேன்’ என்று சொன்னார்.

'அதனாலென்ன. நீங்கள் சொன்ன பதில்களை மட்டும் சொல்லுங்கள்' என நம் நண்பர் நச்சரிக்கவும் வேறு வழியில்லாமல் தான் சொன்ன பதில்களை மட்டும் சொல்லி விட்டுப் போனார்.

நம் நண்பரின் முறை வந்தது.
நண்பரிடம் அதிகாரி: ஒரு பெரிய பணிக்கு அனுப்பியுள்ள உங்கள் விபரங்களை தெளிவற்ற கையெழுத்துகளால் எழுதி இருக்கின்றீர்களே. நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
நண்பர்: வெகு நீண்ட நாட்களாக அதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் 1947ல் தான் பலன் கிடைத்தது.

அதிகாரி: என்ன உளறுகிறீர்கள். இதிலே வேறு வருடம் குறிக்கப் பட்டிருக்கிறதே. உங்கள் தந்தையார் பெயரென்ன?
நண்பர்: அதற்காக பல பேர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றனர். அதில் யாராவது ஒருவர் பெயரைச் சொல்வது மற்றவர்களை அவமதிப்பதாக ஆகும்.

அதிகாரி: உங்களுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?
நண்பர்: இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே சரியாகச் சொல்ல இயலும்.

Post Comment

Wednesday, 29 October 2008

என்னை அடிக்க முடியுமா? +செத்துட்டாங்கய்யா!

என் ஊரில் ஒரு நண்பர் சம்சுதீன். வயதில் மூத்தவர் அதனால் சம்சண்ணண். ஊரில் வாடகைக்கு மகிழுந்து ஓட்டிக் கொண்டிருந்தார். துபையிலிருந்து வருபவர்களை சென்னை விமான நிலையம் சென்று அழைத்து வருவதுதான் அதிகமான நேரத்தில் கிடைக்கும் முக்கிய பணி. அப்போதெல்லாம் அமீரகத்திலிருந்து திருச்சிக்கு விமான சேவை அவ்வளவு பிரபலமாகவில்லை. கைப்பேசி இல்லாத காலம்.
>
>
>
>
>

சினிமா தியேட்டரில் இரண்டு குழுக்களுக்கிடையில் சண்டை. சம்சண்ணண் நடுவில் போய் விலக்கப்போக இரண்டு கூட்டத்தினரிடமிருந்தும் சரியாக வாங்கிக் கொண்டார்.
ஊரில் பஞ்சாயத்து.
தலைவர்: பாவம். விலக்கப் போனதற்கு நம்ம சம்சுக்குதான் சரியான அடி.
சம்சண்ணண்: என்னை அடிக்க முடியுமா? என்ன எவங்க அடிச்சான்?
தலைவர்: அப்ப பரவாயில்ல சம்சு.
சம்சண்ணண்: தொவச்சு பிழிஞ்சில்ல காயப்போட்டானுங்க
தலைவர்: அடி வாங்கினாலும் குசும்ப பார்.
>
>
>
>
>

ஒரு முறை பக்கத்து ஊரிலிருந்த தன் நிலத்துக்கு போயிருந்த எங்களுர் முக்கியஸ்தர் ஒருவர் அங்கேயே மரணமடைந்ததாக செய்தி வரவும், சம்சண்ணண் மகிழுந்து எடுத்துச் செல்ல, துணைக்கு தலைவர் போய் இருக்கிறார். மகிழுந்தில் பிணம் கொண்டு வர தடை இருப்பதால், பிணத்தை பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போல் இருக்கச் செய்து, வண்டியை எடுத்து வந்திருக்கிறார்கள். கூட இருந்த தலைவர் பிணத்தின் கூட வரும்போதே பயந்த மாதிரி பேசி இருக்கிறார். ஒரு திருப்பத்தில் பக்கவாட்டிலிருந்து ஒரு வண்டி வர, சம்சண்ணண் காருக்கு சடன்பிரேக் போட வேண்டியதாகி விட்டது. அப்போது பின்னாலிருந்த பிணத்தின் இரு கைகளும் முன்னால் இருந்த தலைவரின் இரு தோள்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக விழ, அலறியடித்து வண்டியை நிறுத்தி இறங்கிய தலைவரை சமாதானப்படுத்தி ஆசுவாசப்படுத்தி மீண்டும் காரிலேற்ற சம்சண்ணண் மிகுந்த பாடுபட வேண்டியதாகி விட்டதாம்.
>
>
>
>
>

மற்றொரு முறை சென்னை விமான நிலையத்தில் அன்று வர வேண்டியவர்கள் வரவில்லையாதலால், சம்சண்ணண் ஆளில்லாத வெற்று வண்டியை இரவில் எடுத்து வந்திருக்கிறார். சென்னையைத் தாண்டி வரும் வழியில் வெளிச்சம் குறைவான இடத்தில் நான்கைந்து பேர் வண்டியை மடக்கவும், வெலவெலத்துப் போய் வண்டியை நிறுத்தி இருக்கிறார். "தம்பி எங்கள் ஊர் வேன் விபத்துக்குள்ளாகி விட்டது. இப்போதுதான் நாங்கள் இருவர் ஊரிலிருந்து வந்தோம். ஐந்தாறு பேர் இறந்து விட்டார்கள். அடிபட்ட இவ்விருவரையும் மருத்துவமனைக் கொண்டு செல்ல வேண்டும். நீ ஒரு இரண்டு பிணத்தை உன் வண்டியில் கொண்டு போய் எங்களுர் சேர்த்து விடு" என்று கெஞ்சி இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள அனுபவத்தாலும், கூட துணைக்கு வேறு ஆளில்லாததாலும் மறுத்திருக்கிறார்.

"பணம் பிரச்னையில்லை தம்பி. ஒரு பிணம் கொண்டு போக ஐயாயிரம் (அப்போதைய சென்னை சவாரிக்கு கிடைப்பது போல இரு மடங்கு) முன் பணமாகத் தந்து விடுகிறோம்" என்று சொல்லவும், வேறு வழியின்றி கார் டிக்கியில் ஒரு பிணத்தை வைத்து விட்டு, முன்பு போலவே பின் இருக்கையில் இரண்டு பிணங்களை அமர்ந்த நிலையில் வைத்து, விழாதிருக்க துணிகளால் கட்டி விட்டு, பதினைந்தாயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பி இருக்கிறார். இருந்தாலும் போலீஸ் பயத்தோடு பிணங்களோடு பயணம் செய்கிற பதைபதைப்பு மனதில். ஆசுவாசத்துக்காக அடுத்ததாக வழியிலுள்ள தேநீர் கடையில் தேநீர் பருகிக் கொண்டிருந்த போது
ஒரு ஆள்: அண்ணே! உளுந்தூர் பேட்டை வரை வரலாமா?
சம்சண்ணண்:உளுந்தூர் பேட்டை தாண்டி பக்கத்தூர்தான் போறேன். முதலாளி வண்டியிலே இருக்காங்க. இருங்க கேட்டுட்டு வரேன்.
(வண்டியின் உள் விளக்கை போட்டு, கட்டு அவிழ்ந்திடாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு வந்து)
சம்சண்ணண்: முதலாளி சரின்னுட்டார். எவ்ள காசு தருவீங்க.
ஆள்: பஸ்க்கு 15 ரூவாதான். நிறுத்த மாட்டேங்கிறான். 30 ரூவா தாரேன்.
சம்சண்ணண்: பரவாயில்ல. முதலாளிட்ட சொல்ல கூடாது. இப்பவே கொடுத்திடனும். முன் சீட் தான். தூங்கக் கூடாது.
[அபிஅப்பா, குசும்பன் பதிவு மாதிரி, சம்சண்ணண் வாயத் தொறந்தா நாம் சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகிடும். பயங்கர அரட்டை. பேசிக் கொண்டே போய் இருக்கிறார்கள்.]
ஆள்: நாம இவ்வளவு பேசி சிரிக்கிறோம். பின்னால இருக்குறவங்க பேச மாட்டேங்கறாங்களே.
சம்சண்ணண்: அவுங்க செத்துட்டாங்கய்யா
ஆள்: (குசுகுசுப்பாக) முதலாளி முளிச்சிரப் போறாங்க. காதில விழுந்தா என்னாறது.
சம்சண்ணண்: அட போய்யா. அவுங்க செத்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா?
ஆள்: என்னய்யா சொல்ற?
சம்சண்ணண்: இவ்ள நேரம் பேசி பிரண்ட் ஆயிட்டோம். ஒண்ட்ட சொல்றதுக்கு என்னா. மெட்ராஸ்ல வர்ற வழில விபத்துல செத்தவங்க பொணம்யா. வேப்பூர் பக்கத்துல சேக்கனும்.
ஆள்: லைட்ட போடுய்யா
சம்சண்ணண்: கொஞ்சம் கூட வாயேன். திரும்ப உளுந்தூர் பேட்டை வந்து விட்டுடறேன்.
ஆள்: யோவ் லைட்ட போடுறியா என்னா?
சம்சண்ணண்: சந்தேகமா இருந்தா நீயே போட்டுப் பாரு
(வந்த ஆள் விளக்கைப் போட்டுப் பார்த்து விட்டு அலறுகிறார்.)
ஆள்: வண்டியை நிறுத்துய்யா. வண்டியை நிறுத்துய்யா.
சம்சண்ணண்: உளுந்தூர் பேட்டை இன்னும் பத்து கிலோ மீட்டர் இருக்கு
ஆள்: வண்டியை நிறுத்துய்யா. நிறுத்தறியா என்னா?
சம்சண்ணண் வண்டியை நிறுத்துகிறார்.
வந்த ஆள் வண்டியை விட்டுக் குதித்து சென்னையை நோக்கி "ஐயையோ" என்று கத்திக் கொண்டே திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.
சம்சண்ணண்: யோவ். இந்தப் பக்கம் ஓடினாலும் உளுந்தூர் பேட்டை வரும்.
வந்த ஆள் ஓடிக் கொண்டே இருக்கிறார்.

Post Comment

Saturday, 26 April 2008

மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு யோசனை

(குசும்பனுக்கும் மின்னுதுமின்னலுக்கும் அய்யனாருக்கும்)

ஒரு தம்பதியினரது 25 வருட வாழ்க்கையில் ஒரு முறை கூட இருவருக்கிடையில் சண்டையே வந்ததில்லை. அந்த ஊரிலேயே எல்லோராலும் பேசப்படுகிற ஆதர்ஸ தம்பதியினராய் இருந்தனர்.

அவர்களின் திருமண நாள் விழாவின் போது, உள்ளுர் பத்திரிக்கையாளர், "உங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையின் ரகசியமென்ன?" என்று கணவரிடம் கேட்டார்

அந்தக் கணவர் அவர்களது தேனிலவு நாளில் நடந்த நிகழ்ச்சியொன்றை அவருக்காக நினைவு கூர்ந்தார்

"நாங்கள் இருவரும் தேனிலவுக்காக சிம்லா போயிருந்தோம். அங்கிருக்கின்ற எந்த விளையாட்டை முதலில் தேர்ந்தெடுப்பது எனக் குழம்பி, கடைசியில் குதிரையேற்றத்திலிருந்து தொடங்குவது என்று முடிவெடுத்தோம்.

நான் ஒரு குதிரையிலும் என் மனைவி ஒரு குதிரையிலும் ஏறிக்கொண்டோம். எனக்கு கிடைத்தது நல்ல குதிரை. எந்த பிரச்னையும் தராமல் நல்லபடியாய் சென்றது.

ஆனால் என் மனைவிக்கு கிடைத்த குதிரை கொஞ்சம் சண்டித்தனம் செய்தது. ஒரு முறை திடீரென்று குதிரை குதித்ததில் என் மனைவி கீழே விழுந்து விட்டாள். என் மனைவியோ கொஞ்சம் கூட வருத்தப்படாமல், அதன் முதுகில் தட்டிக் கொடுத்து, 'முதல் தடவை. பரவாயில்லை' என்று குதிரையிடம் சொல்லி விட்டு திரும்ப ஏறி அமர்ந்து கொண்டாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் குதிரை குதித்து, என் மனைவியை கீழே தள்ளி விட்டது. என் மனைவியோ கொஞ்சம் கூட சினமில்லாமல், திரும்ப குதிரையிடம் வந்து 'இது உனக்கு இரண்டாம் தடவை' என்று சொல்லி விட்டு திரும்பவும் குதிரையில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

சிறிது தூரம் சென்று மூன்றாவது தடவையாக குதிரை குதித்து, என் மனைவி கீழே விழுந்ததும், அமைதியாக தன் கைப்பையைத் திறந்து தன் துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றே விட்டாள்.

வந்த இடத்தில் என்ன செய்வது எனத் தெரியாமல் நான் விழி பிதுங்கி, 'என்ன காரியம் செய்து விட்டாய்! ஒரு வாயில்லா ஜீவனை இப்படிக் கொன்று விட்டாயே! உனக்கென்ன பைத்தியமா?' என்று கோபமாகக் கத்தினேன்.

என் மனைவியோ கொஞ்சம் கூட கவலைப்படாமல், 'முதல் தடவைதானே. பரவாயில்லை' என்று அமைதியாக என்னிடம் கூறினாள்.

அவ்வளவுதான். அதற்கப்புறம் எங்கள் வாழ்வில் சிறு வாய்த்தகராறு கூட வந்ததில்லை."

(தலைப்பில் 'திருமதி' என்ற வார்த்தை மூன்று பேர் பெயருக்கும் முன்னால் சேர்க்க மறந்து விட்டது. அதனால் அந்தப் பெயர்களுக்கு முன்னால் 'திருமதி' என்ற வார்த்தையை சேர்த்து படிக்கக் கோருகிறேன்)

Post Comment

Monday, 25 June 2007

நண்பர்களுக்குச் செய்தி (வண்ணத்துப் பூச்சி)



கூட்டுப்புழுவில் ஒரு நாள், ஒரு சிறிய துவாரம் தென்படத் துவங்கியது. அந்தச் சிறிய சந்திலிருந்து அந்த வண்ணத்துப் பூச்சி வெளிவரப் போராடிக் கொண்டிருப்பதை ஒரு மனிதன் மிக நீண்ட நேரமாய் கவனித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று சலனங்கள் மறைந்து போனது. அது தன்னால் இயன்றவரை போராடியும், அதனால் முடியாமல் போய், நிறுத்தி விட்டதாக அவனுக்குத் தோன்றியது.

அவன் அந்த பூச்சிக்கு உதவ நினைத்து, ஒரு கத்தரியை எடுத்து அதன் துவாரத்தை சற்று பெரிதாக்கினான். இப்போது இந்த வண்ணத்துப் பூச்சி சுலபமாக வெளியில் வந்தது. ஆனால் அதன் உடம்பு சிறுத்து, உலர்நது போய், இறக்கைகள் வளர்ச்சியற்று வீணாகி இருந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் அதன் இறக்கைகள் வளர்ந்து விரிந்து அந்த வண்ணத்துப்பூச்சியின் உடலைத் தாங்கும் வண்ணம் செம்மையாவதைப் பார்ப்பதற்காக அந்த மனிதன் அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

எதுவும் நடக்கவில்லை. உண்மையில் அந்த வண்ணத்துப்பூச்சி தன் எஞ்சிய வாழ்நாளை பறக்க முடியா இறக்கைகளுடன், உலர்நத உடம்புடன், ஊர்ந்தே வாழ நேரிட்டது.

அந்த பூச்சி, அந்த கடினமான சிறிய துவாரத்திலிருந்து, முறைப்படி, சிறிது சிறிதாக போராடி வருவதே, இயற்கையான வழியில், அதன் உடம்பிலும், இறக்கையிலும் தேவையான பலத்தை பெற்றுத் தந்து, அது கூட்டிலிருந்து சுதந்திரமாய் வெளியேறி பறக்க உதவும் என்பதை அம்மனிதன் தன் இரக்க குணத்தினாலும் நேசத்தினாலும் அறிந்திருக்கவில்லை.

சில நேரங்களில் போராட்டங்கள் வாழ்வுக்கு மிகவும் அவசியமானது. எந்தத் தடைகளுமில்லாமல் வாழ்நாளை நாம் பழகியிருந்தால், அதுவே பின்னாளில் நம்மை முடக்கி விடும். தடை தாண்டத் தெரியாமல் தடுமாற்ற மேற்பட்டு, வாழ்வில் பறக்க வியலாது.

நான் பலத்தை வேண்டினேன்.
நான் பலம் பெற உதவியாக, சிரமங்கள் தரப்பட்டது.

நான் அறிவை வேண்டினேன்.
எனக்குச் சோதனைகள் தரப்பட்டு, தீர்க்க அறிவுறுத்தப்பட்டது.

நான் செழிப்பை வேண்டினேன்.
எனக்கு மூளையும், உடல் வலிவும் தரப்பட்டு, உழைக்க ஏவப்பட்டது.

நான் துணிவை வேண்டினேன்.
எனக்குத் தடைகள் தரப்பட்டு, தாண்டச் சொன்னது.

நான் அன்பை வேண்டினேன்.
வாழ்வில் துன்பப்படும் மனிதர்களைக் காட்டி, அவர்களுக்கு உதவச் சொன்னது.

நான் உதவி வேண்டினேன்.
எனக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டது.

நான் கேட்ட எதுவுமே எனக்கு கொடுக்கப்படவில்லை - ஆனால்
எனக்குத் தேவையான அனைத்தையும் நான் பெற்றுக் கொண்டேன்.

வாழ்க்கையை பயமின்றி வாழுங்கள். எல்லா தடைகளையும் துணிவோடு எதிர் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள்.

Post Comment