Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

Tuesday, 8 July 2008

நேர்மையான மனைவி (நகைச்சுவை)


ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார்.

அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார்.

அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.

அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள்.

அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

Post Comment

Monday, 30 June 2008

நண்பர்களே! தயவு செய்து ஹலோ சொல்லுங்கள்.

என்ன மக்களே. நலம்தானா?

திடீரென்று இந்தியா போக வாய்ப்பும் விடுமுறையும் கிடைத்தது. போய் விட்டு வந்தேன். அப்படியே நடக்கும் வீட்டு வேலைகளை கொஞ்சம் மேற்பார்வை பார்க்கவும் ஏதுவானது. துபை வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.

Nokia N73 கையில் வைத்திருந்தேன். வீட்டுக்கென்று ஒரு சைனா மொபைல் வாங்கிப் போயிருந்தேன். 'அதெல்லாம் எங்களுக்கு சரியாகப் புரியல' என்று சொல்லி N73யை வைத்துக் கொண்டு சைனாவை என்னிடம் கொடுத்தனுப்பி விட்டது புத்திசாலி தங்கமணி. அதிலிருந்த தொலைபேசி எண்களை மாற்றிக் கொண்டேன். எல்லா எண்களையும் மாற்றவில்லை என்பது உபயோகிக்கும் போதுதான் தெரிகிறது. மகளுக்கு பேசி 'எல்லா எண்களையும் கொடு' என்றால் 'நீங்கதான் மாற்றிக் கொண்டீர்களே என்று அப்போதே அழித்து விட்டேன்' என்கிறாள் புத்திசாலி மகள். சாத்தான்குளத்தார் தவிர மற்ற எந்த நண்பரின் எண்ணும் என்னிடமில்லை.

அதனால் நண்பர்களே. தயவு செய்து நீங்களாக ஹலோ சொல்லுங்கள். ப்ளீஸ்.

1. ஊரில் முக்கியமான செய்தி என்னவென்றால் மின்சாரத் தட்டுப்பாடு. காலையில் மின்சாரம் போனால் சில சமயம் இரவு பதினொன்றுக்கெல்லாம் திரும்பி விடும். வியர்வைக் குளியல் நடத்த நல்ல ஏற்பாடு.

2. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காற்றாட ஆற்றில் நடக்கும்போது
''சீ! இங்கதான் உட்கார்ந்து படிப்பீங்களா?.
ஆனா அமைதியா இருக்கும்.
பாம்பு எல்லாம் வராதா?'' என்று கேட்டது வாண்டு.

அந்த மரமும், மட்டைகளும், படிக்கட்டும், வாய்க்கால் சுவரும், நாணலும், ஆற்று மணல்களும்,

''அட. என்ன தம்பீ! எத்தனை வருடமாச்சு!.
சின்ன பிள்ளையாக இருக்கும்போது தினமும் படிக்க வருவாயே! படித்த இடமென்று ஞாபகம் இருக்கிறதா?.
வா! வந்து உட்கார்!!''
என்று அழைப்பது போல் இருந்தது.

கண்களில் கண்ணீர் வந்து விட்டால், பிள்ளைகள் ஏதும் கேட்குமே! என்று முயன்று அடக்கிக் கொண்டேன்.

3. அப்படியே பக்கத்து கிராமத்துக்கும் காலார அழைத்துப் போனேன்.
பெரிய பெரிய டயரை இப்படி வெட்டிப்போட்டு (side)சைடுல கட்டி வைத்து இருக்கே. அது என்ன என்று கேட்டார் பையன்.
அது பன்றிகளுக்கான 'கொடலை' அதாவது 'உணவிடும் ஏற்பாட்டுக்கு' என்று சொன்னேன்.
'சே' என்றது பெண்.
''இதுக்கு எதுக்கம்மா 'சே'. அவர்கள் அதை அன்பாய் வளர்க்கிறார்கள்'' என்றேன்.
''ஓ அதளால்தான் அது அவ்வளவு அழுக்கா இருந்தாலும் அதற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டியில பால் கொடுக்கிறாங்களா'' என்றது அடுத்த பெண்.
''சே. அது பால் இல்லம்மா. கழனித்தண்ணி'' என்றேன்.
''அப்படீன்னா'' என்றதற்கு விளக்கம் சொன்னேன்.
“அதுக்கு எதுக்கு 'சே' என்கிறீர்கள்” என்கிறாள். சரியான வாய்.

4. உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு தங்கமணி போயிருந்த போது வந்தவர்களுக்கெல்லாம் இரண்டு புத்தகம் கொடுத்தார்களாம். “நம்மூரில் கூட இப்படி நடக்கிறதே?” என ஆச்சரியப்பட்டுக் கொண்டே தங்கமணி கையிலிருந்த புத்தகத்தை வாங்கினேன். ‘நான் படித்து சொல்றேன்’ என்று வரிசையாக பொருளடக்கம் படித்துச் சொன்னாள் சின்ன பெண். 9 வயது.
“ஏம்மா! ‘வட்டி’ என்று படித்தாயே அப்படின்னா என்னம்மா?” என்று கேட்டேன்.
“Interest - எனக்கு தெரியும் டாடி” என்றாள்.
“ஆங்கிலத்தில் எப்படிச் சொல்றதுன்னா கேட்டேன்?” என்றேன்.
“கொடுத்த பொருளை அல்லது பணத்தை அதே அளவில் திரும்பப் பெற்றால் அது கடன் - அனுமதியுள்ளது.
கொடுத்ததை விட கூடுதலாக கேட்டுப் பெற்றால் அதுதான் வட்டி – அனுமதியில்லை” என்று அழகாய் விவரித்தாள்.
அட என்ன அழகா சொல்லுது - உண்மையிலேயே புத்திசாலி குழந்தைதான்.

5. ஊருக்கு போகு முன் கம்பெனி புதிய கார் கொடுத்திருந்தது. ஒரு மாதம் ஓட்டி விட்டு சர்வீஸ் செய்து வைக்கச் சொல்லி விட்டு ஊருக்குப் போயிருந்தேன்.

என்னுடைய காரை சர்வீசுக்கு விடாமல், நான் விடுமுறையில் இருந்த ஒரு மாதமாக ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தெரிந்து, அலுவலகத்தில் நான் கோபப்பட்டதால், அவசரமாக சர்வீஸ் செண்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தார்கள். சர்வீஸ் செண்டரிலிருந்து உடனே விடச் சொல்லி மதியம் அழைப்பு வந்தது.

நேராக NISSAN சர்வீஸ் செண்டர் போய் 'அழைப்பு வந்தது. வண்டியை சர்வீசுக்கு விட வேண்டும்' என்று சொல்லி Registration Card கொடுத்தேன். அங்கிருந்த மலையாளி ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தான்.
"என்ன ஆனது. என் வார்த்தைகள் விளங்கவில்லையா" என்று கேட்டேன்.
"நான் இந்த இடத்திற்கு புதுசு. எனக்கு உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் எண், என் சிஸ்டத்திலிருந்து கிடைக்க மாட்டேங்கிறது” என்றான்
“புதிதென்றால், தெரிந்த ஆளிடம் கொடு” என்றேன்.
அவன் பக்கத்துசீட்டு நண்பரிடம் கொடுத்தான். அவனே அவரிடம் விளக்கினான்.
“காரில் இலேசாக சிராய்ப்புகள் இருக்கிறது. பெயிண்ட்டும் செய்து விடுங்கள்” என்றேன்.
அவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு “உங்களை அழைத்தது ஆணா பெண்ணா” என்றார்.
“ஆண்தான். இந்த எண்ணிலிருந்து” என்று எண்ணையும் சொன்னேன்.
அவர் கார்டை ரிஸப்சனுக்கு அனுப்பி பார்க்கச் சொன்னார். அங்கிருந்தும் திரும்பி அவரிடமே வந்தது.
“தயவு செய்து கார்டை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி கார்டை வாங்கினேன்.
'இல்லை சார். கொஞ்சம் பொருங்க!. இப்ப பார்த்திடலாம்' என்றார்.
நான் வேகமாக வெளியில வந்திட்டேன்.

சே!. இதற்கு முன் வைத்திருந்ததுதான் NISSAN கார். இப்போதுள்ள புதிய கார் TOYOTA அல்லவா?.
நல்ல வேளை. அவர்கள் கார்டை சரியாகப் பார்த்து சொல்வதற்குள் வெளியேறி விட்டேன் - உண்மையிலேயே வயதாகி விட்டதோ!

Post Comment

Wednesday, 19 March 2008

பெண்ணாக மாற எனக்கொரு வரம் கொடு



தான் தினமும் ஆலுவலகம் சென்று பணி செய்வதும், தன் மனைவி தினமும் வீட்டிலேயே இருப்பதையும் பார்த்த ஒரு கணவனுக்கு மிகவும் எரிச்சலாயிருந்தது.

தனக்கு நேர்வதை அவள் பார்க்க வெண்டுமென்பதற்காக
'கடவுளே! நான் தினமும் வேலைக்குச் சென்று எட்டு மணி நேரங்கள் படாத பாடுபடுகிறேன். என் மனைவியோ எப்போதும் வீட்டிலேயே இருக்கிறாள். எனக்கு நேர்வதை அவள் அறிய வேண்டுமாகையால், ஒரே ஒரு நாளைக்கு மட்டும் அவள் நானாகவும், நான் அவளாகவும் மாற வேண்டும்' எனப் பிரார்த்தித்தார்.
கடவுளும் தன் மாறாத கருணையால் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் காலை அவர் ஒரு பெண்ணாக விழித்து எழுந்தார்.

எழுந்தவுடன் தன்னுடைய துணைக்காக காலை உணவு தயார் செய்தார். குழந்தைகளை எழுப்பினார். அவர்களுடைய பள்ளிச்சீருடைகளை சரி செய்தார். பிள்ளைகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு விட்டு, மதிய உணவை பொதிந்து கொடுத்தார். அவர்களை தன் வண்டியில் அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தார்.

திரும்ப வீட்டுக்கு வந்து, உலர் சலவை செய்ய வேண்டிய துணிகளை சலவைக்காரனிடம் கொடுத்து வந்தார். திரும்பும் வழியில் வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றார். திரும்ப வீட்டுக்கு வந்து வாங்கிய மளிகைகளை அதனதன் சாடிகளில் கொட்டி சரியாக அடுக்கி வைத்தார்.

வாங்கிய பொருட்களும் கொடுத்த பணமும், வங்கியில் செலுத்தப்பட்ட தொகை, வங்கி நிலுவை, கையிருப்பு எல்லாம் சரி பார்த்து கணக்குகளை குறித்து வைத்தார்.

பின்னர் வீட்டில் வளரும் பூனை செய்து வைத்திருந்த கழிவுகளை அகற்றி, துடைத்து சுத்தம் செய்து வைத்து விட்டு, வீட்டு நாயை குளிப்பாட்டினார்.

அப்போதே மணி மதியம் ஒன்று ஆகி விட்டிருந்தது. உடனே அவசரம் அவசரமாக படுக்கைகளை புரட்டி, சுத்தம் செய்து, ஒழுங்கு படுத்தி விட்டு, துணிகளை துவைத்து காயப் போட்டார். பெருக்க வேண்டிய இடங்களை பெருக்கி, துடைக்க வேண்டியவைகளை துடைத்து, வேக்குவம் செய்ய வேண்டியவற்றை செய்து, சமையறை தரையை மோப் செய்து விட்டார்.

பிள்ளைகளின் பள்ளிக்கூடம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு, வீடு வரும் வரை அவர்களிடம் விவாதம் செய்து கொண்டு வந்தார். வீட்டில் பிள்ளைகளுக்கு பாலும் பிஸ்கட்டுகளும் கொடுத்து, சீருடையிலிருந்து சாதாரண உடைகளுக்கு மாற்றி, அவர்கள் தங்கள் வீட்டுப் பாடங்களை சிரமமின்றிச் செய்ய வசதி ஏற்படுத்தி வைத்தார்.

பின்னர் பிள்ளைகளுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே காய்ந்த துணிகளை இஸ்திரி செய்தார். அதற்குள் மணி நான்கரை ஆகி விட்டிருந்தது. உடனே உருளைக் கிழங்குகளை தோல் சீவி வைத்து, சலாடுக்கு வேண்டிய காய் கறிகளை நீர் விட்டு அலம்பி, கறித் துண்டுகளை நறுக்கி வைத்து விட்டு, இரவு உணவுக்காக புதிய பீன்ஸை உடைத்து நாரெடுத்து வைத்தார்.

இரவு உணவு தயாரித்து வைத்து, உண்டு முடித்த பின், பாத்திரங்களை கழுவி அடுக்கி விட்டு, சமையலறையை சுத்தம் செய்து விட்டு, இஸ்திரி செய்த துணிகளை அதனதன் இடத்தில் வைத்து விட்டு, பிள்ளைகளுக்கு மேல் கழுவி விட்டு அவர்களை படுக்கையில் உறங்கச் செய்தார். மணி இரவு ஒன்பதைத் தாண்டிய நிலையில் ஒரே அலுப்பாகவும்
உடம்பு அசதியாகவும் இருந்தது.

அன்றாட வேலைகள் முடிந்தும் முடியாத நிலையில் படுக்கைக்குச் சென்று, தன் துணைக்கு மன அமைதி ஏற்படும் வரையில், பள்ளியறைச்சுகம் அளித்துப் பெற்றார்.

அடுத்த நாள் காலை எழுந்து முதல் வேலையாக,
'என் இறைவனே! நான் என்ன மாதிரி நினைத்திருந்தேன்!. என் மனைவி வீட்டில் இருப்பதற்காக இப்படி பொறாமைப் பட்டு விட்டேனே!. தயவு செய்து எங்களை பழைய நிலைமையிலாக்கு!' எனப் பிரார்த்தித்தார்.

கடவுள் தன் அபரிமிதமான அறிவால் கூறினார்.
"மகனே!, நீ சரியான பாடம் படித்து விட்டாய். நான் பழைய மாதிரி உங்களை மாற்ற வேண்டும்தான். ஆனால் அதற்கு நீ இன்னும் ஒன்பது மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். நேற்றிரவு நீ கர்ப்பமடைந்து விட்டாய்."

நன்றி:இரவி சர்மி

Post Comment

Tuesday, 5 February 2008

ஒரு கணவன், மனைவி டயரிக் குறிப்பு. நாள்: 17 மார்ச் 2007



மனைவியின் டயரி

இன்றிரவு அவர் ஒரு மாதிரியாக நடந்து கொண்டதாக எனக்குப் படுகிறது. ஒரு உணவு விடுதியில் நாங்கள் சந்தித்து தேநீர் அருந்துவதாக ஏற்பாடு.

இன்று முழுதும் எனது தோழிகளுடன் கடைத்தெருக்களில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். அதனால் நான் சிறிது தாமதமாக வந்தது, அவருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அவர் எதுவுமே சொல்லவில்லை. எங்களுக்குள் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. நான் சிறிது நேரம் வெளியில் போய் வந்தால் பேசி அமைதிப் படுத்தி விடலாமென்று வெளியில் போக அழைத்தேன். ஒப்புக்கொண்டார் ஆனால் எதுவம் பேசாமல் ஏதோ சிந்தனையில் இருப்பது போல்தான் இருந்தார்.

'ஏன்? என்ன ஆனது?' என்றும் கேட்டுப் பார்த்தேன். 'ஒன்றுமில்லை' என்று சொல்லி விட்டார்.

'இவ்வளவு வருத்தமாக இருப்பதற்கு நான்தான் காரணமா?' என்றும் கேட்டுப் பார்த்து விட்டேன். 'அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒன்றும் கவலைப்படாதே' என்று சொல்லி விட்டார்.

திரும்ப வரும் போது 'ஐ லவ் யூ' என்று சொன்னேன். அவர் சும்மா புன்னகைத்து விட்டு வண்டி ஓட்டுவதிலேயே கவனமாயிருந்தார். அவர் நடந்து கொண்ட விதத்தை எப்படி சொல்வதென்றே விளங்கவில்லை. அவர் 'ஐ லவ் யூ டூ' என்று ஏன் சொல்லாமல் இருந்தார்?

நாங்கள் வீட்டுக்குத் திரும்பிய போது, அவருக்கு என்னிடம் எந்தத் தேவையும் இல்லாதது போலவும், அவர் என்னை விட்டு நீங்கி விட்டதாகவும் உணர்ந்தேன். அவர் சும்மா அமர்ந்து, எதிலும் மனது இலயிக்காதவராக, ஏதா யோசித்தவராக தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக நான் படுக்கைக்குப் போனேன். பத்து நிமிடம் கழிந்த பின் அவரும் படுக்கைக்கு வந்தார். எனக்கு ஒன்றும் நிலை கொள்ளவில்லை. இந்த இறுக்கமான சூழ்நிலையைப் போக்க ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்தேன். ஆனால் அதற்குள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். நான் அழுதழுது கன்னம் வீங்கி எப்போது தூங்கிப் போனேன் என்றே தெரியவில்லை.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் என்னை விட்டு விட்டு வேறு யாரையோ மனதில் கொண்டு விட்டார் என்றே நினைக்கிறேன்.

எனக்கு வாழ்க்கையே வெறுக்கிறது.

கணவனது டயரி

இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா பங்களாதேஸிடம் தோற்றது. இந்திய கிரிக்கெட்டுக்கே பெருத்த அவமானம்.

நன்றி:ரவிஷர்மி

Post Comment