Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Wednesday, 21 January 2009

சும்மா சாப்பிடுங்க


ஊருக்கு போயிருந்த போது, நீண்ட நாட்களுக்குப் பின் சில உறவினரைப் பார்த்த போது, பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. அதிலொன்று.

சென்னைக்கு ஹஜ் செல்பவர்களை வழியனுப்ப போனார்கள் என் ஊர்க்காரர்களில் சிலர். சென்னை வரைதான் பேருந்து. அதற்கப்புறம் நடை வண்டிதான். காசும் மிச்சம் ஊரையும் சுற்றிப் பார்த்த மாதிரி. முன்னால் ஆண் சித்தீக் சராய்க்கு வழிகாட்டிப் போக, பின்னால் வந்த பெண்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே.... வெயில் கடுமை. வெகுளி மனிதர்கள். சென்ட்ரல் அருகே

சர்பத் விற்பவர்: வாங்கம்மா வந்து சாப்பிடுங்க. வெயிலுக்கு நல்லது சும்மா சாப்பிடுங்க. சும்மா சாப்பிடுங்கம்மா.
பின்னால் வந்த பெண்கள்: அட இவ்வளவு சொல்றார். சாப்பிடலாமே.
பெண்கள்: ஆளுக்கொரு கிளாஸ் சாப்பிட்டாச்சு. ஆமா. வெயிலுக்கு நல்லாத்தான் இருக்கு.
பெண்கள்: ரொம்ப சந்தோஷங்க. வரோங்க
விற்பவர்: ஏது வறீங்களா? காசு கொடும்மா?
பெண்: காசா? சும்மா சாப்பிடுன்னுதானய்யா சொன்னே.
விற்பவர்: என்னம்மா வெளாடறீங்களா? காசை எடும்மா?
பெண்: ஏங்கோ? தாம்பாட்டுக்கு போறீங்களே. இங்க வந்து பாருங்க. (வீட்டுக்காரரை கூவி அழைக்கிறார்)
அவ்வளவு தூரம் போனவருக்கு மனைவி கூப்பிட்டது சரியாக காதில் விழுந்து, ஓட்டமும் நடையுமாய் திரும்ப வருகிறார்.
ஆண்: என்னாச்சு?
பெண்: கலர் கலக்கி வச்சிகிட்டு சும்மா சாப்பிடுங்க. சும்மா சாப்பிடுங்க ன்னான்.
விற்பவர்: வாயை மூடும்மா. மரியாதையா பேசும்மா.
பெண்: பொறுய்யா? அதான் குடிச்சோம். இப்ப காசு கேக்கறான்.
ஆண்: பெரிய்ய தொந்தரவா போச்சு. ஒங்களையெல்லாம் மதறாஸ்க்கு அளைச்சிட்டு வந்தேனே. உனக்கு கலர் கொடுக்கிற அளவுக்கு அவன் என்ன சொந்தமா? (விற்பவரிடம் பேரம் பேசி, பாதி காசு கொடுக்கிறார்)
விற்பவர்: சாவு கிராக்கி. எங்கேர்ந்து வந்து தொலைச்சீங்கன்னு தெரியிலயே. மிச்சம் காசு கொடுய்யா.
ஆண் மிச்சம் காசையும் கொடுத்து விட்டு, மனைவியை கையைப் பிடித்து அழைத்து போகிறார்.
பெண்: இல்ல. நம்மூரில வெயில் காலத்துல மோர் கொடுக்கிற மாதிரி இங்க கலர் கொடுக்கிறாங்கன்னு நினைச்சிட்டேன்.
ஆண்: அதுக்கு என்னையும் கூப்பிட்டருக்கலாம்ல.

வசதி வாய்ப்புகள் மனிதர்களை மாற்றுகிறதென்னவோ உண்மைதான். அவர்களை இப்போது பார்த்தால் அப்படி நடந்து கொண்டவர்கள் இவர்கள்தானா என வியப்பாக இருக்கிறது.

வரவேற்பை பார்த்துட்டு மற்றதையும் ஒவ்வொன்றாக... :))

Post Comment

Wednesday, 26 November 2008

தமிழர்கள் கணக்கில் புலிகள்?

பொதுவாக தமிழர்கள் கணக்கு வழக்குகள் பார்ப்பதில் கைதேர்நதவர்கள் என்ற எண்ணமுள்ளது. இங்குள்ள பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் வணிக் நிறுவனங்களில் தமிழர்களையே கணக்கெழுத வைத்திருக்கின்றனர். மலையாளி வேண்டாம் மதராஸிதான் வேண்டும் என்ற தெளிவோடும் இருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பெருமைதானே. எண்களில் தேர்ந்தவர்களாயும் நேர்மையாளர்களாகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருப்பதுதான் மதராஸிகளை விரும்பச் செய்கிறது என அவர்கள் சொல்கின்றனர்.

எங்கள் நிறுவனத்தில் வங்கிக்கு ஒரு காசோலை 340000க்கு அனுப்பினோம். வங்கியோ எங்கள் கணக்கில் 390000 வரவு வைத்திருந்தார்கள். எங்கள் நிறுவன முதன்மை கணக்காளர் பாகிஸ்தானி. “எமது வங்கியில் கணக்கர்கள் அனைவரும் மதராஸிகள் அதுதான் தப்பாய் செய்து விட்டார்கள். நான் சொல்லப் போவதில்லை” என இருந்தது மட்டுமில்லாமல், என்னிடம் கிண்டல் வேறு. ஒரு நான்கு மாதம் கழிந்து காசோலை கொடுத்த நிறுவனம் என்னை அழைத்து தொகை கூடுதலாக பெறப்பட்டுள்ளது என அறிவித்ததுடன், தங்களது வங்கியிலும் புகார் கொடுக்க, அப்போதுதான் தெரிந்தது. தவறு ஏற்பட்ட இடம் ஹபீப் பேஙக். கணக்கர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள். எங்கள் முதன்மை கணக்காளர் முகம், பார்க்க வேண்டுமே.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சகோதரர் இங்குள்ள நகராட்சியில் அடிமட்ட தொழிலாளியாகச் சேர்ந்தார். அவர் எண்களைக் கையாளுவதைப் பார்த்து அரபி, ஒரு பகுதி அலுவலகத்தின் முழுப் பொறுப்பையுமே அளித்தார். படித்த மற்ற நாட்டவர்களுக்கே கடினமாயிருந்த அப்பணியை பத்தாவது வரை மட்டுமே படித்த அவர் சிரமமில்லாது செய்தார் என்பதுதான் ஆசசர்யம். நமது படிப்பு முறை அடிப்படையிலேயே அவ்வாறு அமைந்துள்ளதென சொல்வது சரியானதுதானா?


மற்றொரு சகோதரர் தங்க நகைகள் மொத்த வியாபார நிறுவனத்தில் ஓட்டுனராகச் சேர்ந்தார். தொலைபேசியில் வியாபாரம், நகைகளைப் பெற்றுக் கொள்ள தனியிடம் என்று இருந்தது. உரிமையாளர்களாகிய தந்தையும் இரு மகன்களும் இருக்கும் நிறுவனத்தில் அவர் இருக்க வேண்டும். தொலைபேசி பேரங்களில் புதிதாக கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்பதால் அவர் வரும்போதே பொழுது போக்குக்காக கதைப் புத்தகங்களையோ சஞ்சிகைகளையோ எடுத்து வந்து படித்துக் கொண்டிருப்பாராம். அதைப் பார்த்த உரிமையாளர் தந்தை, தன் மகனைப் பார்த்து "அந்த மதராஸி வெறும் ஓட்டுனர் 1500 சம்பளம் பெறுகிறான். தினமும் குளித்து அழகாக உடையுடுத்தி வருகிறான். நீங்கள் சரிவர தினமும் குளிப்பது கூட இல்லை. சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் புத்தகத்தில் மூழ்கி விடுகிறான். அனதால்தான் மதராஸிகள் நல்ல அறிவாளிகளாய் இருக்கின்றனர்" என்றாராம். சொல்லிச் சிரித்தார் சகோதரர்.
நல்ல கதைகள் வாழ்க்கைப் பாடங்களாகின்றன. சஞ்சிகைகள் அரசியலையும் கலையையும் கலந்து தருகின்றன என்பதை அந்த பாகிஸ்தானி அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

Post Comment

Thursday, 3 July 2008

வெகு சிறப்பாக வாழவே நான்

1. தினமும் 10 முதல் 30 நிமிடம் வரை நடந்து பழகுங்கள். நடக்கும்போது சிரியுங்கள். மன அழுத்தம் குறைய இது மிகச்சிறந்த வழி.
2. தினமும் ஒரு பத்து நிமிடம் அமைதியாய் அமருங்கள். தேவையென்றால் அதற்காக ஒரு பூட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
3. தினம் முறைப்படி இறைவனைத் தொழுங்கள். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
4. சிறிது நேரம் ஒதுக்கி 70 வயதுக்கு மேற்பட்டோர்களிடமும் 6 வயதுக்கு குறைந்தவர்களிடமும் தினமும் பழகுங்கள்.
5. மரத்திலும் செடிகளிலும் வளருவதை அதிகம் உணவில் சேருங்கள். ஆனால் அவற்றிலிருந்து தயாரிக்கப் படுபவற்றை குறைத்து உண்ணுங்கள்.
6. அதிகமாய் நீரருந்துங்கள். Green டீ குடியுங்கள்.
7. ஒரு நாளில் குறைந்தது மூன்று பேரை சிரிக்க வையுங்கள்.
8. உங்கள் வீடும், காரும், மேசையும் அழுக்குகளை விட்டும் தினமும் தூய்மையாகட்டும். உங்கள் வாழ்வில் புதுமையும் சக்தியும் நிரம்பட்டும்.
9. கிசுகிசு, பழையன பேசுதல், எதிர்மறை சிந்தனை, உங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட விடயங்கள் போன்றவற்றை பேசுவதற்காக உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள். மாறாக உங்கள் சக்தியை நிகழ்கால நேரான விடயங்களில் செலவிடுங்கள்.
10. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம் என்பதை உணருங்கள். நாம் இங்கே கற்றுக் கொள்ள வந்தோம். பிரச்னைகளும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதிதான். அல்ஜீப்ரா வகுப்பு போல பிரச்னைகள் வரும் போகும் ஆனால் நாம் படித்தவைகள் நம் வாழ்வு முழுதும் தங்கும்.
11. உங்கள் காலை உணவில் ஒரு அரசனாகவும், மதிய உணவில் ஒரு வழிப் போக்கனாகவும், இரவு உணவில் ஒரு பிச்சைக்காரனாகவும் உண்ணுங்கள்.
12. வாழ்க்கை சில வேளைகளில் நியாயாமற்றதாக தோன்றலாம் ஆனால் அப்போதும் வாழ்க்கை அழகானது.
13. வாழ்க்கை மிகச் சிறியது அதில் மற்றவர்களை வெறுக்க ஏன் நேரத்தை வீணடிக்க வேண்டும்.
14. உங்களை நீங்களே மிக முக்கியமானவராக கருதிக் கொள்ளாதீர்கள். மற்றவர்களும் நம்மை அவ்வாறு கருத மாட்டார்கள்.
15. ஒவ்வொரு விவாதத்திலும் நீங்களே வெல்ல வேண்டுமென நினைக்காதீர்கள். உங்கள் வாதம் ஏற்கப்படாமலிருக்கலாம் என்பதை ஏற்கப் பழகுங்கள்.
16. உங்களின் இறந்த காலத்தை அமைதிப் படுத்துங்கள் அப்போதுதான் அது உங்கள் நிகழ்காலத்தை கெடுக்காது.
17. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். மற்றவர்களுடைய வாழ்க்கைப் பயணம் எவ்வாறானது என்பதை நீங்கள் உணர முடியாது.
18. பெண்களே!. அந்த நறுமணத்தை இப்போதே புகைய விடுங்கள். அந்த நல்ல விலையுயர்ந்த துகிலை இன்றே உடுத்துங்கள். சிறந்த நாட்களின் வருகையை எதிர்நோக்கி தாமதிக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் சிறந்த நாள்தான்.
19. உங்களது மகிழ்ச்சிக்கு உங்களைத் தவிர வேறு யாரும் பொறுப்பல்ல.
20. உங்களது ஒவ்வொரு பெருந்துன்பத்தையும் இதைச் சொல்லி கட்டம் கட்டுங்கள்.
'இன்னும் ஐந்து வருடத்துக்குப்பின் இது நமக்கு துன்பமாகத் தோன்றுமா?'
21. எல்லோரையும் எல்லாவற்றுக்காகவும் மன்னித்து விடுங்கள்.
22. உங்களைப்பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் கவலையடையத் தேவையில்லை.
23. காலம் எல்லாவற்றையும் ஆற்றுப் படுத்தும். எனவே காலத்துக்கும் சிறிது கால அவகாசம் தாருங்கள்.
24. நிலைமை எவ்வளவுதான் நல்லதாகவோ கெட்டதாகவோ இருந்தாலும் அதுவும் மாறக்கூடியதே.
25. நீங்கள் நோய்வாய்ப்பட்டால் உங்கள் வேலை வந்து உங்களை கவனித்துக் கொள்ளாது. உங்கள் நண்பர்கள் வந்து கவனிப்பார்கள். அவர்களோடு தொடர்பில் இருங்கள்.
26. பயனற்றதாகவும், அழகற்றதாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் உள்ளவற்றிலிருந்து ஒதுங்குங்கள்.
27. பொறாமை கொள்வது நேரத்தை வீணடிப்பதாகும். நமக்கு அனைத்தையும் கடவுள் அளித்திருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
28. உங்கள் வாழ்வின் சிறந்தவை இனிதான் நிகழவிருக்கிறது.
29. நீங்கள் எப்படி இருந்தாலும் எழுங்கள். நன்றாக உடுத்துங்கள். சிறப்பாகத் தோன்றுங்கள்.
30. நல்லவற்றை மட்டுமே செய்யுங்கள்.
31. அடிக்கடி உங்கள் குடும்பத்தினரிடம் பேசுங்கள்.
32. ஒவ்வொரு நாளும் உறங்கும் முன் கீழுள்ள வாசகத்தை பூர்த்தி செய்யுங்கள்
இன்று நான் ____________ நன்றி செலுத்துகிறேன்.
இன்று நான் _______________ நன்றாய் முடித்தேன்.
33. நீங்கள் மன அழுத்தம் கொள்வதை விட்டும் சிறப்பானவராக வடிவமைக்கப் பட்டிருக்கின்றீர்கள்.
34. பயணத்தை சுவையுங்கள். எல்லாமே வேகமாக பறப்பதற்கு இது ஒன்றும் டிஸ்னி வேர்ல்ட் இல்லை. கடந்து செல்லுங்கள். வாழ்க்கை என்பது ஒரே பயணம்தான் அதை முழுவதும் சுவையுங்கள். அதை அழகாக அனுபவியுங்கள்.
வாழுங்கள். அன்பு செலுத்துங்கள். வாழ்க்கை என்பதே ஒரு வெகுமதி.
போனதையும் வருவதையும் எண்ணி நிகழ்காலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.
அதனால்தான் நிகழ்காலமே PRESENT என ஆங்கிலப் படுத்தப் படுகிறது.
வாழ்வை நேசித்து அனுபவியுங்கள்.

Post Comment