Thursday 7 February 2008

எது பெண்ணியம் - மகளுக்கும் சகோதரிகளுக்கும்.



ஒரு ஆண் செய்யும் அசிங்கத்தையும் அருவருப்பானதையும் கேவலமானதையும் பார்த்து அதைப் போல ஒரு பெண் செய்தாலென்ன என நினைப்பதுதான் பெண்ணியமா?

கேவலமானவற்றை செய்யும் ஆணோடு போட்டியிட்டு அதைப் போல அல்லது அதை விட கீழ்த்தரமாக செய்து காண்பிப்பதுதான் பெண்ணியமா?

ஆண்களைப் போல் ஆடை அணிவது, 'இன்னும் குறைப்பேன் என்ன பந்தயம்?' எனக் கேட்டு அங்கங்கள் வெளியில் தெரிய ஆடை குறைப்பு, தலை முடியை சிறிதாக்கிக் கொள்வது, மேற்கத்திய நாகரிகம் செல்லும் திக்கை நோக்கியே பயணிப்பது, இதுதான் பெண்ணியம் என சில பெண்கள் சூடு வைத்துக் கொள்கின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் இரும்புச் சங்கிலிகளை அறுத்து வந்த பெருமை பெற்ற பெண்களை சிறிது யோசியுங்கள். அவர்கள் இம்முறையில் கீழ்த்தரமானதை செய்ததாலா பெருமை பெற்றனர்? மனித குலத்தை உயர்த்தும் செயலிற்சிறந்த ஆண்களோடு போட்டியிட்டு அவர்களைப் போல அல்லது அதை விடவும் சிறப்பாக செயலாற்றிக் காண்பித்ததாலேயே பெண் குலத்துக்கு பெருமை சேர்த்தனர்.

பழங்காலத்தைப் போல் இன்று பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக ஆண்கள் இல்லை என்னுமளவுக்கு ஆண்கள் மாறியுள்ளனர். அது மட்டுமின்றி பெண் வளர்ச்சிக்காகவும் விடுதலைக்காகவும் சமீப கால இந்தியாவில் பாடுபட்டவர்களில் பெரும்பாலோர் இராஜா ராம் மோகன்ராய், தந்தை பெரியார், திரு.வி.க., பாரதி, பாரதிதாசன் போன்ற ஆண்கள்தான்.

முதலில் திறந்து விடப்பட்டுள்ள வழிகளில் பயணம் செய்ய பெண்கள் தயாராக வேண்டும். ஓட்டுரிமை மறுக்கப்பட்ட காலம் போய் இன்று 33 விழுக்காடு இட ஓதுக்கீடு இலக்கை பெற முயற்சித்துப் பெருங்கள். நாளை இது 50 விழுக்காடு நோக்கிய பயணமாயிருக்கட்டும்.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். பெண்களால் இயலாது எனப்பட்ட காவல் துறை, இராணுவம் ஏன் விண்வெளி வரை பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற பெரும் பழியை வரதட்சனை, மருமகள் கொடுமை போன்றவற்றால் இன்னும் பெண்கள் சுமக்கிறார்கள். இவற்றையெல்லாம் உடைத்து வெளி வருவதில்தான் பெண் முழு விடுதலை நோக்கி வருவாள்.

மிகக் கேவலமான கற்பப்பை சுதந்திரம், நினைத்ததை எல்லாம் செய்யும் கட்டுப்பாடற்ற சுதந்திரம், முடிவெடுக்கும் அதிகாரம் இவை கிடைத்து விடுதல்தான் பெண் விடுதலை என சில பெண்கள் பிதற்றித் திரிகின்றனர்.

இல்லை. பெண் விடுதலை என்பது சுயத்தை இழக்காமல், அதாவது பெண்களுக்குரிய தனித்தன்மைகளை இழக்காமல் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்வதே ஆகும்.

தாய்மைப்பேறு, தாய்ப்பால் கொடுத்தல், ஒரே ஆணோடு வாழ்தல் இவையனைத்தும் பெண்களுககே உரிய தனித்தன்மைகள். இவற்றை விட்டு விலகுவது காலப்போக்கில் பண்பாட்டுச் சீரழிவை விதைத்து, உயரிய கலாச்சாரத்தைக் கெடுத்து, பெண்களுக்கே எதிரான விளைவுகளைத்தான் தரும்.

ஆண்களோடு உடல் வலுவில் பெண்கள் போட்டியிட முடியாது போலவே பெண்ணின் இத்தகு தனித்தன்மைகளில் ஆண்களும் போட்டியிடவே முடியாது. இதுதான் இயற்கை நியதி.

பெண்ணிணமற்ற ஆணிணமும், ஆணிணமற்ற பெண்ணிணமும் உலகில் நிலைக்குமா? சேர்ந்திருந்தால்தானே நிலைக்கும்.

என் மகளே! சகோதரிகளே! எது உண்மையான விடுதலையோ அதை நோக்கிய பயணத்தை செலுத்துங்கள். பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் சில நியதிகளை கடைபிடித்துக் கொண்டே உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடி வெற்றி பெருங்கள். அப்போதுதான் உங்களோடு இந்த சமுதாயமும் உயரும்.

Post Comment

Tuesday 5 February 2008

ஒரு கணவன், மனைவி டயரிக் குறிப்பு. நாள்: 17 மார்ச் 2007



மனைவியின் டயரி

இன்றிரவு அவர் ஒரு மாதிரியாக நடந்து கொண்டதாக எனக்குப் படுகிறது. ஒரு உணவு விடுதியில் நாங்கள் சந்தித்து தேநீர் அருந்துவதாக ஏற்பாடு.

இன்று முழுதும் எனது தோழிகளுடன் கடைத்தெருக்களில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். அதனால் நான் சிறிது தாமதமாக வந்தது, அவருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அவர் எதுவுமே சொல்லவில்லை. எங்களுக்குள் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. நான் சிறிது நேரம் வெளியில் போய் வந்தால் பேசி அமைதிப் படுத்தி விடலாமென்று வெளியில் போக அழைத்தேன். ஒப்புக்கொண்டார் ஆனால் எதுவம் பேசாமல் ஏதோ சிந்தனையில் இருப்பது போல்தான் இருந்தார்.

'ஏன்? என்ன ஆனது?' என்றும் கேட்டுப் பார்த்தேன். 'ஒன்றுமில்லை' என்று சொல்லி விட்டார்.

'இவ்வளவு வருத்தமாக இருப்பதற்கு நான்தான் காரணமா?' என்றும் கேட்டுப் பார்த்து விட்டேன். 'அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஒன்றும் கவலைப்படாதே' என்று சொல்லி விட்டார்.

திரும்ப வரும் போது 'ஐ லவ் யூ' என்று சொன்னேன். அவர் சும்மா புன்னகைத்து விட்டு வண்டி ஓட்டுவதிலேயே கவனமாயிருந்தார். அவர் நடந்து கொண்ட விதத்தை எப்படி சொல்வதென்றே விளங்கவில்லை. அவர் 'ஐ லவ் யூ டூ' என்று ஏன் சொல்லாமல் இருந்தார்?

நாங்கள் வீட்டுக்குத் திரும்பிய போது, அவருக்கு என்னிடம் எந்தத் தேவையும் இல்லாதது போலவும், அவர் என்னை விட்டு நீங்கி விட்டதாகவும் உணர்ந்தேன். அவர் சும்மா அமர்ந்து, எதிலும் மனது இலயிக்காதவராக, ஏதா யோசித்தவராக தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கடைசியாக நான் படுக்கைக்குப் போனேன். பத்து நிமிடம் கழிந்த பின் அவரும் படுக்கைக்கு வந்தார். எனக்கு ஒன்றும் நிலை கொள்ளவில்லை. இந்த இறுக்கமான சூழ்நிலையைப் போக்க ஏதாவது செய்ய வேண்டுமென முடிவெடுத்தேன். ஆனால் அதற்குள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். நான் அழுதழுது கன்னம் வீங்கி எப்போது தூங்கிப் போனேன் என்றே தெரியவில்லை.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் என்னை விட்டு விட்டு வேறு யாரையோ மனதில் கொண்டு விட்டார் என்றே நினைக்கிறேன்.

எனக்கு வாழ்க்கையே வெறுக்கிறது.

கணவனது டயரி

இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா பங்களாதேஸிடம் தோற்றது. இந்திய கிரிக்கெட்டுக்கே பெருத்த அவமானம்.

நன்றி:ரவிஷர்மி

Post Comment

Sunday 3 February 2008

எனக்கு பிடித்த திரைப்படங்களில் சில

சமீபத்தில் கோவி கண்ணண் அவர்கள் சாம்பார் வடை கேட்டுக்கொண்டதற்கிணங்கி இது பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தார். அதில் என்னையும் அழைத்திருந்தார். நான் பார்த்த பன்னூறு தமிழ் திரைப்படங்களில் சிறந்ததாக எனக்குத் தோன்றியவைகளில் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கின்றேன். உங்களுக்கும் பிடித்த படங்கள் இதில் இருக்கிறதா என்று சொல்லுங்களேன்.

உலகம் சுற்றும் வாலிபன்
முதன் முதலில் பெரிய அளவில் தமிழர்களுக்கு உலகைச் சுற்றிக் காட்டிய படம். தண்ணீருக்கடியில் ஒரு பாட்டு முழுதும் படமாக்கப் பட்டிருக்கும். புத்த விகாரத்தினுள் துருத்திய பற்களோடு நம்பியார் எம்ஜிஆருடன் சண்டையிடுவது சிறப்பான காட்சியமைப்பு. எனக்கு பிரமிப்பை ஏற்படுத்திய படம்.

இந்தப் படத் தயாரிப்பின் போது கவிஞர் வாலி அவர்கள் 'நானில்லையென்றால் இந்தப் படமே வெறும் பன் ஆகி விடும்' என்று எம்ஜிஆரிடம் சொல்ல, அவர் கோபமடைந்து விட்டாராம். அதன் பின் 'உலகம் சுற்றும் வாலிபனி'ல் வாலியை எடுத்துவிட்டால் 'உலகம் சுற்றும் பன்' தானே எனச் சொல்லி பின் சமாதானமானாராம்.

அவள் ஒரு தொடர்கதை
இயக்குநர் பாலசந்தரின் இயக்கத்தில் வெளி வந்த படம். ஒரு பெண் தனியாளாய் நின்று, பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி, இயன்றவரை நேர்மையான முறையில் பொருள் திரட்டி, தன் குடும்பத்தாரை மட்டுமில்லாமல் ஊதாரியாய் சுற்றித்திரியும் தன் அண்ணணின் குடும்பத்தையும் காப்பாற்றுவதாக காட்டும் படம். ஒரு பெண் தீபமாய் ஒளிர்ந்து தியாகங்கள் செய்து என்று பெண்ணின் சிறப்பை அழகாக காட்டி பெருமை படுத்திய படங்களில் நான் பார்த்த முதல் படம்.

இதில் பாடகர் ஏசுதாஸ் பாடிய 'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு' என்ற பாடலும், நடிகர் கமலஹாசன் மிமிக்ரி செய்து பாடுதாக அமைந்த 'கடவுள் அமைத்து வைத்த மேடை' பாட்டும் இப்போதும் என் மனதினின்றும் அகலாதது. நடிகை சுஜாதாவுக்கு முதல் படமாம்.

நினைத்தாலே இனிக்கும்
எனது டீன் ஏஜ் நாட்களில் வெளி வந்த படம். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் அதிகமாக பாடல்களை கொடுத்து எல்லா பாடல்களும் ஹிட்டாகி பரபரப்பாக பேசச் செய்தது. சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது. கமலஹாசனின் நடிப்பும், நடிகை ஜெயப்ரதா(வுக்கு முதல் படமாம்), 'இல்லை' என்று சொல்ல வருவதை மேலிருந்து கீழாக அழகாய் தலையாட்டி ஆரம்பித்து இடமிருந்து வலமாக முடிப்பதும், அது போலவே 'ஆமாம்' எனச் சொல்ல வருவதை இடமிருந்து வலமாக அழகாய் தலையாட்டி ஆரம்பித்து மேலிருந்து கீழாக முடிப்பதும், நடிகர் ரஜினியின் குறும்புத் தனமும், காதலை மென்மையாய் சொல்லியிருப்பதும், ஆங்காங்கே உள்ள டைரக்டர் டச்சும் படத்தை தொய்வில்லாமல் நெய்திருக்கும். நான் நிறைய தடவை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

மூடுபனி
கல்லூரி நாட்களில் கண்ட படம். டைரக்டர் பாலுமகேந்திராவின் கேமரா, ஒவ்வொரு காட்சியிலும் கவிதையாய் கதை சொல்லும் நேர்த்திக்காகவே இந்தப்படத்தை பார்க்கலாம். நடிகர் பிரதாப் போத்தன், நடிகை ஷோபா ஆகியோரது சிறந்த நடிப்பு. 'என் இனிய பொன் நிலாவே' என்று மேற்கத்திய பாணியில் பாடகர் ஏசுதாஸ் பாட்டு முதலியவை படத்தின் கூடுதல் அம்சங்கள்.

சுலங்கை ஒலி
நடனத்துக்காகவே எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் எதை எடுப்பது எதை விடுவது. மிகச்சிறப்பான படம். நான் நிறைய தடவை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. 'என் குழந்தைகளுக்கு நான் நடித்ததென்று காட்ட' என்றும் 'இனியொரு முறை என்னால் கூட திரும்பவும் இதுபோல் நடிக்க முடியாது' என்றும் நடிகர் கமலஹாசனே கூறிய படம். நிறைய விவாதங்களை அந்நாளில் சந்தித்தது. 'கலையை ரசிக்க வேண்டிய மாது கம்முகாட்டை ரசிப்பதேன்' என்று ஒரு பெயர் பெற்ற நர்த்தகிக்கு எதிராக அவர் குமுதத்தில் எழுதினார்.

சிந்து பைரவி
தமிழிசைக்காகவே எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படம். கவி. வைரமுத்து தேசிய அளவில் பேசப்பட காரணமாயிருந்தது. சங்கராபரணத்துக்குப் பின் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாட தமிழக இளைஞர்களைத் தூண்டியது. சுலக்சனா, டெல்லி கணேஷ், ஜனகராஜ் ஆகியோரது நடிப்பு படத்துக்கு பலம். எல்லா பாடல்களுமே பேசப்பட்டது.

இதல்லாமல் பல படங்களும் இந்த வரிசையில் வரும். உங்கள் பொறுமையை ரொம்ப சோதிக்க வேண்டாமே என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அடுத்து இந்த வரிசையில் எழுத, எனக்கு வலையுலகில் அறிமுகமானவர்களில் இருந்து யாரை அழைக்க? அழைத்தால் என் அழைப்பு கேட்டு பதிவார்களா எனத் தெரியாததால் யாரையும் அழைக்கவில்லை.

Post Comment