Tuesday, 19 March 2013

மெயிலில் வந்த சர்தார்ஜி கதை.


லண்டனிலிருந்து இரண்டு பாகிஸ்தானிகள் விமானத்தில் பயணம் செய்ய வந்தனர். ஒருவர் ஜன்னலோர இருக்கையிலும் மற்றவர் அதற்கடுத்த நடு இருக்கையிலும் அமர்ந்து கொண்டனர். விமானம் புறப்படும் நேரத்தில் ஒரு சர்தார்ஜி பாதையோர இருக்கையில் (ஐஸ்ல்) வந்தமர்ந்தார்.

விமானம் டேக்ஆப் ஆகி பறக்கத் துவங்கியவுடன் சர்தார்ஜி தன் ஸூவை கழற்றி விட்டு விட்டு காலாட்டிக் கொண்டு வசதியாக இருக்கையில் சாய்ந்தார். ஜன்னலோர பாகிஸ்தானி, 'நான் எழுந்து போய் ஒரு கோக் வாங்கி வர வேணடும்' என்றார்.

சர்தார்ஜி, 'நீங்கள் எழ வேண்டாம். நான் போய் வாங்கி வருகிறேன்' என்று எழுந்து போனார். அவர் எழுந்து போன உடனே அந்த பாகி சர்தார்ஜியின் ஒரு ஸூவை எடுத்து அதில் எச்சிலை நன்றாக துப்பி வைத்து விட்டார்.

சர்தார்ஜி கோக்கை கொடுத்து விட்டு இருக்கையில் அமர்ந்ததும் அடுத்த பாகி, 'எனக்கும் ஒரு கோக் தேவைப்படுகிறதே' என்றார். சர்தார்ஜி அவருக்காக கோக் வாங்கி வர எழுந்து போனார். அவர் எழுந்து போனதும் இந்த பாகி யும் சர்தார்ஜியின் இன்னொரு ஸூவை எடுத்து அதில் எச்சிலை நன்றாக துப்பி வைத்தது.

பயணம் முடிந்து, விமானம் தரையிறங்கியதும், சர்தார்ஜி தன் ஸூவுக்குள் காலை நுழைக்கவும் என்ன நடந்திருக்கிறது என புரிந்து விட்டது. சர்தார்ஜி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து, தன் சக பயணிகளான பாகி களிடம்,

இது ஏன் நமக்குள் இன்னமும் இப்படியே இருக்கிறதென தெரியவில்லை!

இன்னும் எவ்வளவு நாளுக்குத்தான் இது இப்படியே தொடருவது?

நமது நாட்டிற்கிடையில் பகைமையும் போரும்.......?

இந்த மாதிரி வெறுப்பும்...?

இத்தகைய குரோதமும்...?

ஸூவுக்குள் எச்சில் துப்பி வைப்பதும்,,,,?

கோக்குக்குள் மூத்திரம் பெய்து கொடுப்பதும்...? 

Post Comment

Thursday, 14 October 2010

பொம்மை - ஒரு நெஞ்சுருகும் நிகழ்வு

பெரிய கடைத்தெருவில் ஏதோ சாமான் வாங்க போயிருந்தேன். ஒரு கடையில் ஒரு ஐந்தாறு வயது மதிக்கத்தக்க சிறுபையனிடம் அந்தக் கடையின் கேஷியர் விவாதம் செய்து கொண்டிருந்தார். 'இந்த பொம்மையை வாங்குவதற்கு உன்னிடம் உள்ள காசு போதாது தம்பீ.'

அந்தப் பையன் என் பக்கம் திரும்பி 'என்னிடம் இருக்கும் இந்தக் காசுகள் நிச்சயம் பத்தாதா மாமா?' என்று கேட்டான். நான் அந்தக் காசுகளை வாங்கி எண்ணிப் பார்த்துவிட்டு, 'இது அந்த பொம்மை வாங்க பத்தாதய்யா' என்றேன். ஆனாலும் அந்தப் பையன் பொம்மையை கீழே வைக்கவில்லை.

நான் அந்தப்பையன் அருகில் சென்று 'நீ இந்த பொம்மையை யாருக்காக வாங்கப் போகிறாய்?' என்று கேட்டேன். 'இந்த பொம்மையை என் தங்கை மிகவும் விரும்பி தனக்காகக் கேட்டாள். நான் இதை அவள் பிறந்த நாளுக்காக பரிசளிக்கப் போகிறேன்' என்றான். 'நான் இதை என் மம்மியிடம் கொடுத்து விடுவேன். என் மம்மி என் தங்கையிடம் போகும்போது கொடுத்து விடுவார்கள்' என்றான். அதைச் சொல்லும்போது அவன் கண்களில் அப்படியொரு சோகம். 'என் தங்கை கடவுளிடம் போய் விட்டாள். எங்க டாடி சொன்னாங்க எங்கம்மாவும் சீக்கிரம் கடவுளிடம் போயிடுவாங்களாம். அதனால்தான் மம்மியிடம் கொடுத்தால் என் தங்கையிடம் கொடுத்திருவார்கள்' என்றான்.

என் இதயம் செயலிழந்து விட்டதைப்போல் உணர்ந்தேன். அந்தப் பையன் என்னைப் பார்த்து 'எங்க டாடியிடம் மம்மியை நான் கடைக்கு போயிட்டு வருவதற்குள் போக வேண்டாம்னு சொல்லுங்க என்று சொல்லி விட்டு வந்திருக்கிறேன்' என்றான்.
அந்தப் பையன் அழகாய் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்றையும் காட்டினான். 'என் தங்கை என்னை மறக்காமல் இருக்க மம்மியிடம் இந்த போட்டோவையும் கொடுத்தனுப்பப் போகிறேன். எனக்கு மம்மியை ரொம்ப பிடிக்கும் அவர்கள் என்னை விட்டுவிட்டு போகக்கூடாது என்றுதான் நான் சொல்கிறேன். ஆனால் டாடிதான் என் தங்கையுடன் இருப்பதற்காக அவர்கள் போகப் போவதாக சொல்கிறார்' என்று சொல்லிவிட்டு அந்த பொம்மையை அமைதியாக சோகத்துடன் பார்த்தான்.

நான் உடனே என் பர்சை எடுத்துக் கொண்டு, 'அப்படியானால் நாம் இன்னொரு தடவை உன்னோட பணம் போதுமா என்று எண்ணிப் பார்ப்போமா?' என்றேன். 'ஓகே! இந்த பணம் போதுமேன்றுதான் நினைக்கிறேன்' என்றான். அவனுக்குத் தெரியாமல் என் காசுகளை அதில் கலந்து விட்டு எண்ணினேன். பொம்மைக்குப் போக மீதமும் இருந்தது. அவனிடம் சொன்னேன்.

'என்னிடம் போதுமான அளவுக்கு பணம் இருக்கச் செய்த கடவுளுக்கு நன்றி' என்று சொல்லிவிட்டு என்னைப் பார்த்து 'நான் நேற்று படுக்கப் போவதற்கு முன், என் தங்கைக்கு இந்த பொம்மை வாங்கி அனுப்ப போதுமான பணம் என்னிடம் இருக்கச் செய் என கடவுளிடம் கேட்டு விட்டுத்தான் படுத்தேன். அதுதான் கொடுத்திருக்கிறார்' என்றான்.
'எங்க மம்மிக்கு ஒயிட் ரோஸ் ரொம்ப பிடிக்கும் அதனால் அவர்களுக்கு ஒரு ஒயிட் ரோஸ் வாங்கித் தரனும் என்று அப்போதே நினைத்தேன். ஆனால் கடவுளிடம் ரொம்ப கேட்க வேணாமே என்று விட்டுட்டேன். ஆனால் கடவுள் அதற்கும் சேர்த்தே செய்து விட்டார்' என்றான்.

கடையிலிருந்து வெளியேறும்போது என் நிலைமையே வேறாக இருந்தது. அந்த சிறுபையன் என் மனதிலேயே இருந்தான்.

அதன் பின்தான் இரண்டு நாள் முன்னே நான் உள்ளூர் செய்தியில் படித்தது நினைவுக்கு வந்தது. ஒரு குடிகார டிரைவர் ஓட்டி வந்த ட்ரக், இளம் பெண்ணும் அவளுடைய பெண் குழந்தையும் பயணித்த காரின் மீது மோதிய விபத்தில் பெண் குழந்தை நிகழ்விடத்திலேயே இறந்து விட்டதோடு, அந்த இளம்பெண் கோமாவில் இருக்கிறாள் என்ற செய்தி. ஒருவேளை அந்த சிறுவன் இந்த இளம் பெண்ணின் மகனாய் இருக்குமோ?

சிறுவனை சந்தித்ததன் பின், இரண்டு நாள் கழித்து, அந்த இளம்பெண் இறந்து விட்டாள் என்று செய்தி வெளியாகி இருந்தது. உடனே கொஞ்சம் ஒய்ட் ரோஸ் வாங்கிக் கொண்டு உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு சென்றேன். அங்கு அந்த இளம் பெண்ணின் உடல் சவப்பெட்டியில் வைக்கப் பட்டிருந்தது. அதன் கையில் அழகான வெள்ளை ரோஜா அந்த சிறுவனின் போட்டோவுடன். அதன் மார்புக்கு மேல் அந்த பொம்மை வைக்கப் பட்டிருந்தது. மிகவும் கனத்த மனதுடன் கண்ணீருடன் என் வாழ்வே மாறிப் போன உணர்வுடன் அங்கிருந்து வெளியேறினேன்.

அந்த சிறுவனையும், அவன் தன் தாயின் மீதும் தன் தங்கையின் மீதும் கொண்டிருந்த அன்பும் என்னால் எப்போதும் மறக்க இயலாதது. ஒரு கண நேரத்தில் ஒரு குடிகார காரோட்டியால் அவையாவும் பறிக்கப்பட்டு விட்டது.

தயவுசெய்து குடித்து விட்டு காரோட்டாதீர்கள்.
(இந்நிகழ்வு ஆங்கிலத்தில் எங்கிருந்தோ படித்தது)


சாலை விபத்துகளில் உயிரிழப்பிற்குரிய காரணங்களில் முக்கியமானவை
போதை மருந்துகள்,
மது பானங்கள் மற்றும்
அதீத சோர்வு !!!

Post Comment

Wednesday, 13 October 2010

மீந்த செய்திகள் ஐந்து

ஒரு நிலம் வாங்குவது சம்பந்தமாக தங்கமணியிடம் நகைகளில் கால் பகுதி கேட்டேன். நீங்கள் போட்டதுதானே எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.அட! தேவலாமே!

அடுத்த நாள், 'நகை எல்லாம் விலையேறிக் கொண்டே இருக்கிறது. எது வாங்கினாலும் பணம் இருப்பதைக் கொண்டு வாங்குங்கள். நகை விற்பதெல்லாம் வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். ஹூம்! அதானே!

நான்கைந்து நாட்களுக்கு முன் நகை கிராமுக்கு 147திர்ஹம் என்று பார்த்தேன். இப்போது 157 ஆகி விட்டதாம் . நண்பர் சொன்னார்.

அட. இந்த தங்கமணிங்க எல்லாம் கொஞ்சம் புத்திசாலிங்கதான் போல் இருக்கு. :) நகை விடயத்தில் மட்டுமாவது.. :))

7. அயோத்யா பாப்ரி மஸ்ஜித் நில விவகாரத்தில் அலாபாத் உயர் அநீதி மன்ற தீர்ப்பு மனதில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது.

இந்த அநீதி தீர்ப்பினால் என்னில் ஏற்பட்ட அதே வலி, நாடு முழுவதிலுமுள்ள எத்தனையோ இந்துக்களுக்கும், கிறித்துவர்களுக்கும், மதமற்ற எத்தனையோ நடுநிலையாளர்களுக்கும் ஏற்பட்டதை கண்ட போதும், கேட்ட போதும், அதை அவர்கள் அதிர்ச்சியெனவும் ஏமாற்றமெனவும் வெளிப்படுத்திய போதும் சிறிது ஆசுவாசம் வந்தது உண்மை. ஆனாலும் உரிய நீதி கிடைக்குமா என்ற அவநம்பிக்கை மனதில் வளர்கிறது.

8. தொலைக்காட்சிப் பெட்டிகள் மிகுந்த பிரபலமாவதற்கு முன், நான் சிறுவனாய் இருந்த போது, திருச்சியில் ஒரு (Radio Repair) கடையில்
'இங்கு வானொலிப் பெட்டிகள் பழுது நீக்கித் தரப் ப(h)டும்'
என்று எழுதி வைத்திருந்ததை மிகவும் இரசித்திருந்தேன். (பிறை அடைப்புக்குள் துணையெழுத்தை மட்டும் எப்படிக் கொண்டு வருவது?)

அதே போல், இப்போது, துபையில ஒரு (Watch Repair) கடையில்
'இது பொழுது பார்க்கும் கருவிகளின் பழுது நீக்கும் இடம்'
என்று எழுதி இருந்தார்கள். மிக அருமை. இனிமைத் தமிழ் மொழி எனது.

9. எங்கள் ஊரில் ஒருவர் விறகு பிளந்தும் மூட்டை சுமந்தும் கடின உழைப்பிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். வயது 85க்கும் மேல் ஆனாலும் திடகாத்திரமான உடம்பு. வலுவேறிய கைகள்.

உங்கள் உடல் வளத்தின் ரகசியம் என்னங்க என்று கேட்டேன். அவர் தம் வாழ்வின் கதையை சொன்னார்.

நாங்கல்லாம் உங்கள மாதிரில்லாம் கிடையாது. அதிலும் இப்ப இருக்கிற புள்ளைங்க இருக்கே! 'தோலிருக்க சுளை முழுங்கிங்களா' வருது.

எனக்கு கல்யாணமாகி ஆறேழு வருசமாச்சு. என் மாமியார், எம்பொஞ்சாதிய கூப்பிட்டு, 'ஏம்புள்ள! கல்யாணமாகி இம்புட்டு நாளாச்சு. ஒரு புழு பூச்சியும் காணோம். ஒன்னை மருமகன் நல்லா வச்சிருக்கானாடி'ன்னு கேட்டாங்களாம். 'அதெல்லாம் நல்லாத்தான் வச்சுருக்காரு'ன்னாங்களாம்.

சரியான பொச கெட்டவளா இருக்காளேன்னு அவுங்க நன்னிம்மாவ (தாய் வழி பாட்டி) கூப்பிட்டு கேக்க சொன்னாங்களாம்.
'ஏண்டி ராத்திரில என்னடி செய்வே'ன்னு கேட்டாங்களாம்.
'ம்ம். அவுருக்கு சோறு வச்சு தருவேன். சாப்டுவோம். சாப்ட்டவுன்னே வெத்தில பாக்கு மடிச்சு தருவேன். அப்புறம் படுத்துக்குவோம்'
'ம் அப்புறம்'
'ம். அப்றம் என்னா? தூங்குவோம்'
'ம். அப்றம் என்னாடி'
'அப்றம் என்னா? பஜ்ருக்கு (விடியல் தொழுகைக்காக பள்ளிக்கு) போவார். நான் வூட்ல தொழுதிட்டு தண்ணி எடுக்க ஆத்துக்கு போவேன்'
'பஜ்ருக்கு முன்ன என்னாடீ?'
'அதான் தூங்குவேன்னு சொன்னன்ல'

ஒன்னும் விபரமில்லன்னு தெரிஞ்சவுடன்
ஹாஜியார் வீட்டுக்காரம்மா, கருப்பா குள்ளமா இருப்பாங்க, அவுங்கள்ட்ட விவரம் சொல்லித் தர அனுப்புனாங்க

அவுங்க வீட்டுக்கு போய் வந்தவொன்ன, அவுங்கம்மாட்ட "அவள்லாம் பொம்பளையா. அம்மா வயசில இருக்கா. எப்படி தப்பு தப்பா பேசுறா தெரியுமா? என்ன எதுக்கு அவுங்கள்ட்ட அனுப்பினன்னு" ரொம்ப தகராறு பண்ணிட்டு வூட்டுக்கு வந்திட்டா. அதுக்கப்புறம் அவுங்கம்மா வூட்டுக்கும் போறத உட்டுட்டா.

அதுக்கப்புறம் ஒரு அஞ்சாறு மாசம் கழிச்சு, நமக்கும் விபரமில்லன்னு தெரிஞ்சுகிட்டு பாடம் சொல்லித் தர ஹாஜியார்ட்ட (ஊரில் அப்ப அவர் பெரிய மனுஷர்) அனுப்னாங்க.
ஹாஜியார் கச்சா முச்சான்னு சொல்லித் தந்ததுல, அவர் மூஞ்சி மின்னாலயே திட்டி வுட்டுட்டு வந்தேன்.

அப்றம் திரிச்சாப்ல இரண்டு மூணு தரம் கூப்பிட்டு வச்சு அவுரு சொன்ன பின்னதானே விவரம் தெரிஞ்சுச்சு.

என் வூட்டுக்காரி குளிர் ஜூரம் வந்து பத்த நாள் கடந்தா.
கல்யாணமாயி எட்டு வருஷம் கழிச்சுதான் மொத மொதல்ல இரட்ட குழந்த புறந்துச்சு.

அப்டிலாம் வெள்ள வாயா இருந்ததுனாலதான் உடம்புல வலுவிருக்கு. உங்கள மாதிரியா என்றார்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை பற்றி ஒவ்வொரு பார்வை. இது கிராமத்து மனிதர்களின் பார்வை.

10. கடைசியாக, விடுமுறையில் படித்த ஒரு மீன் பிடிப்பவரின் கதை

ஒரு மீன் பிடிப்பவர் விடியற்காலையிலேயே எழுந்து கடலுக்கு வந்திருக்கிறார். சரியாக வெளிச்சம் வராமல் இருட்டாகவே இருந்திருக்கிறது. இன்னும் கொஞ்சம் விடிந்தவுடன் கட்டு மரத்தை சரி பண்ணி கடலுக்குள் போகலாமென்று கரையிலேயே அமர்ந்து விட்டார். அருகில் சிறு குவியலாக குவித்து வைக்கப்பட்டிருந்த பொடிக் கற்களை ஏதோ யோசித்தவராக ஒவ்வொன்றாக கடலில் வீசிக் கொண்டிருந்தார். கையில் ஒரு கல் மீதமிருந்த போது நன்றாய் விடிந்து விட்டிருந்தது. கையில் இருந்தது வைரக்கல்.

சே. அவ்வளவு வைரக்கற்களையும் தெரியாமல் கடலில் வீசி விட்டோமே என்று நொந்து தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

இதிலிருந்து நாம் பெரும் நீதியென்ன?

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

>>>

பையன் சொல்றான்
இனி இயன்றவரை இருட்டிலேயே விழித்து விடக்கூடாது என்பதுதானோ! :))))))))

ஹேய்!. ஒழுங்கா பஜ்ருக்கு போவுல உதை படுவே!.

Post Comment

Monday, 11 October 2010

சொந்த செய்திகள் பத்து

இந்த பக்கம் வந்து நீநீநீநீநீநீநீநீநீநீண்ட நாளாகி விட்டது. அதுதான் கொஞ்சம் கலவையாக ஊர் போய் வந்த சேதி

அம்மாவையும் தங்கமணியையும் அழைத்துக் கொண்டு திருச்சியில் மருத்துவமனைக்கு போய் விட்டு, அப்படியே மகளையும் அவள் விடுதியில் பார்த்து விட்டு, மதிய உணவு மத்திய பேருந்து நிலையம் அருகில் ஒரு உணவு விடுதியில்.

தங்கமணி 'ஏங்க! அந்த பையன எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. உங்களுக்கு யாருன்னு தெரியுதா?'

ஆமா. பார்த்த மாதிரி இருக்கு. ஆனா யாருன்னு ஞாபகம் வர்ல்ல.
அந்த பையனும் இங்க பாக்கிற மாதிரி இருக்கே. கப் போர்டுக்கு பெயிண்ட் அடிக்க வந்த பையனோ, எலக்ட்ரீஷியனோ' என்றேன்

சாப்பிட்டு முடித்தவுடன் அந்த பையனிடம் போய், 'உங்களை பார்த்த மாதிரி இருக்கு. யாருன்னு தெரியலயே' என்றேன்.
'என் பெயர் மகேஷ். ஈரோடுங்க. ஈரோட்டுல பார்த்திருப்பீங்க' - அந்த பையன்.
'நல்லுதுங்க. தெரியல். ஈரோடு போனதில்ல' என்று சொல்லி விட்டு வந்து, தங்கமணியிடம் ஒப்பித்தேன்.

காரில் ஏறினவுடன் தங்கமணி 'அந்த பையன் அசத்தப் போவுது யாரு, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில வர்ரவருங்க'.

அப்புறம் திரும்ப அவரிடம் போய் 'சரிங்க. தெரிஞ்சிடுச்சு. தங்ஸ் சொல்லிட்டாங்க' என்றேன். 'அப்டிங்களா' என்று சிரித்தார்.


2. இந்த தடவை ஊருக்கு போய் ஒரு பிரபல பதிவரை சந்திப்பதென இருந்தேன். இங்கிருந்தே பேசி வைத்திருந்தேன். ஊரில் போயும் இரண்டு மூன்று முறைகள் போன் செய்தேன். அவரும் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி விட்டு வரவில்லை. ஏழு நாள் விடுமுறையில் எனக்கும் அதன் பின் நேரம் கிடைக்கவில்லை. இயன்றால், இறைவன் நாட்டமிருந்தால், அடுத்த முறை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் நண்பரே.


3. பள்ளியில் படிக்கிற காலத்தில், நுண்கலை மற்றும் அறிவுப் போட்டிகளில் நான் பரிசு வாங்கும் போது, என் அண்ணண் 'ஏண்டா எப்ப பார்த்தாலும் செகண்ட் பிரைஸ்தான் வாங்குவாயா?' என்று கேட்பார்.

என் மகள் கல்லூரியில் ஒரு பாடத்தில் பல்கலையின் இரண்டாமிடத்தை பிடித்திருப்பதைச் சொன்னது.பெருமையாய் இருந்தது.

அது சரி! இந்த ஜீன், நாம எப்பவும் இரண்டாமிடம் பிடிச்சதை எல்லாம் கூட, அடுத்த தலைமுறைக்கு கடத்துமோ?!


4. என் மூத்த மகள், தன் தம்பி தங்கைகளையும் அம்மாவையும் ஒரு அனாதை விடுதிக்கு அழைத்து போய், அங்குள்ள விபரம் எல்லாம் எடுத்துச் சொல்லி, அவர்களின் தங்குமிடத்தை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு, அழைத்து வந்திருக்கின்றார் போல் இருக்கிறது.


அந்த பாதிப்பினால், என் நான்கு பிள்ளைகளும், இந்த நோன்பு பெருநாளுக்கு தங்களுக்கு அன்பளிப்பாக கிடைத்த எல்லா பணத்தையும் சிறிதும் செலவு செய்யாமல் தங்கள் தமக்கையிடம் கொடுத்து அங்கே அனாதை விடுதியில் வசதி குறைவாக வாழும் அந்த குழந்தைகளுக்காக கொடுக்கச் சொல்லி இருக்கின்றார்கள். அது ஒரு நல்ல தொகையாகவும் இருந்தது.

கேட்டபோதே மனதுக்கு மிக நிறைவாக இருந்தது. அதனால் எல்லா பிள்ளைகளைகளுக்கும் பெருநாள் செலவுக்கென்று திரும்பவும் சிறிது பணம் கொடுத்தேன்.


5. துபையிலிருந்து ஊர் போகும் போதே திரும்பி வருவதற்கும் சேர்த்து இரு வழிக்கும் 1550திர்ஹத்துக்கு(Rs.19000) விமான பயணச்சீட்டு எடுத்துக கொண்டுதான் போனேன். ஊரில் போய் நான்கு நாட்கள் கூடுதலாக தங்கி விட்டதால், திரும்ப வர பயணச்சீட்டு தனியாக வாங்க வேண்டியதாகி விட்டது. ஒரு வழி பயணத்துக்கு மட்டும் 15000 இந்திய ரூபாய்கள் அழ வேண்டியதாகி விட்டது. இனியாவது பயண திட்டத்தை சரியாக போடணும். மாற்றக் கூடாது.
மீதம் ஐந்தும் வரும்.... .... ....

Post Comment

Wednesday, 27 January 2010

படங்கள் அருமை -3

படத்தை பெரிதாக்கிப் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்.

1. இது நகைச்சுவை இல்லை. அருமையாக எடுக்கப்பட்ட நிழல்(!) படம்

ஒரு மாலை மங்கும் நேரத்தில் பாலைவனத்தில் செல்லும் ஒட்டகக் கூட்டம். இந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.

இதில் என்ன அப்படியொரு சிறப்பு?

உண்மையில் படத்தில் வெள்ளையாகத் தெரியும் கோடுகள்தான் ஒட்டகங்கள். கருப்பாகத் தெரிபவை ஒட்டகத்தின் நிழல்கள.

2. இதுவும் அருமையான படம்தான்.
என்ன சிறப்பு?

தரையில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ள ஓவியம்

3.ஒரு பத்திரிக்கைச் செய்தி


4.ஒரு பத்திரிக்கையில் வந்த விளம்பரச் செய்தி


5.வீர(?) விளையாட்டு


6. மகிழுந்தே சுமையுந்தும்


7. வால் முளைக்காத பையன்
அந்தம்மா வேறொரு முக்கியமான வேலையில் கவனமாயிருப்பதால் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் என்று அவர்கள் கையிலுள்ள ஜூஸைக் குடிக்கிறாரா!

வாலிருந்தால் மரத்தில் ஏற்றி விட்டிருக்கலாம்


8.இதற்கு இப்படியும் பொருள் கொள்ளலாமோ?


9.மாறும் சுவை
தாஜ்மஹால் சென்றிருந்த போது ஒரு கையை காற்றில் கூம்பி வைத்து தாஜ்மஹால் கும்பாவின் மேல்நுனியை பிடித்திருப்பது போல் படமெடுத்தார்கள்.
ஆனால் இவர் சுவை வேறு மாதிரி போலிருக்கிறது.

Post Comment

Monday, 25 January 2010

கடவுள் இல்லை மனிதன்தான்

1980வது வருடத்தில் ஒரு வெயில் நாள். ரோட்டோரம் எள் அடிப்பதற்காக போராக குவித்து வைக்கப்பட்டிருந்த செடிகளை பிரித்து, வெயிலில் அடுக்கி, உலர்த்தி, எள் வேறாக சக்கை வேறாக எடுப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. அம்மாவின் கடின உழைப்புக்கு முன், நான் அவ்வளவு உழைப்பாளி இல்லை. அந்த உழைப்பிலும், 'தம்பி! கை முகம் கழுவிட்டு நிழல்ல போய் சாப்பிடப்பா!' எனும் அம்மாவின் கருணைக்கு அளவே இல்லை. '
ஏம்மா. உனக்கு பசிக்காதா? நீயும் வாயேன்' என்றாலும்
'நீ போய்ட்டு சீக்கிரம் வாப்பா'
ஒரு தேநீர்தான் அவர் பசியடக்க அல்லது பசி மறக்க.
காடு, கழனி, மாடுகளின் உதவியோடு தனியாளாய் ஆறு குழந்தைகளை வளர்த்த அம்மா இன்னும் அதிசயம்தான் எனக்கு.

விடியலில் வந்ததால், விரைவில் வேலைகள் முடிந்து அம்மாவை ஈருருளியின் (bi-cycle) பின்புறம் அமர்த்திக் கொண்டு சென்னை திருச்சி NH45 நெடுஞ்சாலையில் வீடு நோக்கிய பயணம். மதியம் மூன்று மணி. சாலையில் அத்தனை வாகனங்களோ சன சந்தடியோ இல்லை.

எதிர்த்த சென்னை சாரியில் இருந்து வரும் ஒரு மகிழுந்து. ஆங்கிலப் படத்தில் வருவது போல ஒரு பயங்கர கிரீச். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மகிழுந்து சாலையிருந்து இருபதடி தூரம் பறந்து மல்லாந்து விழுகிறது.

'அல்லாஹூ! அல்லாஹூ!' அம்மா பார்த்துக் கொண்டே அலறுகிறார்கள். ஆள் நடமாட்டம் அற்ற பகுதி. எங்களிலிருந்து ஒரு நூற்றைம்பது அடிகள் தள்ளி சம்பவம்.
'எம்மா. பயமாயிருக்கம்மா. போலீஸ் கேஸ்ன்னு வந்தா யார் போய் நிக்கிறது. வாம்மா போயிடலாம்'
'ஏண்டா! பன்னண்டாவது படிக்கிற ஆம்புள புள்ள. ஒரு உதவி கூட செய்யாம ஓடுவாங்களா? வண்டியை நிறுத்துறா'
ஓடிப்போய் பார்த்தால் வண்டி நிறைய ஆணும் பெண்ணுமாய் அலறல் சத்தம்.

'பயப்படாதீங்க! பயப்படாதீங்கம்மா! ஒவ்வொரு ஆளா வெளியேறப் பாருங்க.'
உடைந்திருந்த திறந்த பக்க கதவின் வழியே ஒவ்வொருவராய் அம்மாவும் நானும் வெளியே இழுக்கிற முயற்சியில்.
'தம்பீ! ரோட்டுப் பக்கம் போய் சத்தம் போடு. அக்கம் பக்கம் வயலில் வேலை பார்க்கிற ஆளுங்க இருந்தா வருவாங்க. ஓடு.'
'ஓடியாங்க. ஓடியாங்க. ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு. ஆளுங்க மாட்டிக்கிட்டாங்க. ஓடியாங்க. ஓடியாங்க'
ஏழெட்டு முண்டாசுகாரர்கள் ஓடி வந்தனர். வழியில் போன சுமையுந்தும் நின்றது.
அதற்குள் அம்மா ஒரு ஆணையும் பெண்ணையும் மகிழுந்தில் இருந்து வெளியில் எடுத்திருந்தார்கள்.
மற்ற ஆட்கள் வந்து மீதமிருந்தவர்களையும் நல்ல அடி, உள் காயம், வெளிக் காயம், இரத்தத்துடன் மீட்டார்கள்.
நாங்கள் கையில் வைத்திருந்த நீரைக் கொண்டு அம்மா பெண்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று 'ஐயோ! எங் கொளந்த!. வண்டியில!' வந்திருந்த பெண்ணில் ஒருவரது அலறல்

'வண்டியில யாரும் இல்லயே!'
வண்டிக்கு அடுத்து ஒரு இருபதடி தள்ளி வயலில் இருந்து ஒரு கைக்குழந்தையை அம்மா எடுத்து வந்தார்கள்.
சாலையிலிருந்து மகிழுந்து இருபதடி தள்ளி, மகிழுந்திலிருந்து குழந்தை இருபதடி தள்ளி.
நாற்பதடி தூரத்தில் விழுந்த குழந்தை சிறு சிராய்ப்போ காயமோ ஏதுமின்றி அம்மாவின் கைகளில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது ஆச்சரியம்தான்.

"நாங்க திருப்பதியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம். அந்த திருப்பதி ஏழுமலையானே நேரில் வந்தது போல் வந்து எங்களை காப்பாற்றினீங்க". அந்தம்மா என் அம்மாவின் காலில் விழப்போக
"கால்ல உளாதெ! நாங் கடவுளில்ல. மனுசங்கதான்"
அடுத்து குடும்பத் தலைவரும் காலில் விழப்போக
"கால்ல உளாதய்யா. நாங் கடவுளில்ல. மனுசங்கதான்"

அவ்வழி வந்த பேருந்தை நிறுத்தி மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவலனுப்பினேன்

'தம்பீ! இனி நிக்காதே. வா போயிரலாம்' - அம்மா
'நீ செய்த பெரிய காரியம். எல்லாம் வாழ்த்துராங்க பொறும்மா'
'நீ போடா!. இனி போலீஸ் பார்த்துக்கும்'.

[வெளியூரில், இரவு உணவு அருந்த, தூக்க மிகுதியில், கையை முட்டுக் கொடுத்து அயற்சியோடு அம்மா.
அதை அவர்களுக்குத் தெரியாமல் கிளிக்கி, என் மகளிடம் காண்பிக்க
என் மகள் 'எம்மா!. சூப்பர் போஸ் மா!' எனச் சொல்ல, படத்தை வாங்கிப் பார்த்து விட்டு 'வைகோல' என்றார்கள். (இப்படியெல்லாம் செய்வார்களா என்பதைக் குறிக்க உபயோகிக்கும் சொல்)
(சரியான பொருள் என்ன என்று பழமைபேசி இடம்தான் கேட்க வேண்டும்.)]

Post Comment

Wednesday, 21 October 2009

டிரைவ் இன் ATMல் பணமெடுக்க வழிகாட்டுதல்கள்

நமது நிறுவனத்துக்கு ISO Certification வேண்டுமென்றால் இந்த ISOகாரர்கள் ஒன்றும் தெரியாமல் வந்து நம்மிடமே வழி முறைகளைக் கேட்டறிந்து கொள்வார்கள். பின்னர் என்னவோ இவர்களே கண்டு பிடித்ததுக் கொண்டது போல் வெட்கமில்லாமல் நம்மிடமே அளந்து கட்டுவார்கள்.

ஆனால் இங்கே ஒரு வங்கியில் புதிதாக வண்டியில் இருந்தபடியே பணமெடுக்க வசதியாக ஒரு ATMஐ நிறுவினார்கள். சில ஆட்களை நியமித்து மக்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என பல மாதங்களாக கணித்து கீழ்க்காணும் பயன்படுத்தும் வழிகாட்டுதல் முறைகளை உருவாக்கி விளம்பரத்தட்டி அமைத்துள்ளார்கள்.


வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:
பல மாதங்கள் கவனமாக பரிசீலனை செய்த பின், நமது வங்கியில் புதிதாக நிறுவப் பட்டுள்ள, வண்டியில் இருந்தபடியே ATMல் பணமெடுக்க ஆண்கள், பெண்களுக்கான இந்த வழிகாட்டுதல் முறைகள் உருவாக்கப் பட்டுள்ளது. தங்கள் பாலினத்துக்கு தக்கவாறு சரியானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.

ஆண்களுக்கு:


1. உங்கள் வாகனத்தை பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் நிறுத்தவும்
2. உங்கள் வாகனத்தின் பக்க கண்ணாடியை கீழிறக்கவும்
3. உங்கள் பண அட்டையை அதற்குரிய இடத்தில் திணித்து உங்கள் இரகசிய எண்களை அழுத்தவும்
4. உங்களுக்குத் தேவையான பணத்தைக் குறிப்பிட்டு பின் எடுத்துக் கொள்ளவும்
5. உங்கள் பண அட்டையையும் பணமெடுத்த ரசீதையும் எடுத்துக் கொள்ளவும்
6. உங்கள் வாகன கண்ணாடியை மேலேற்றவும்
7. வாகனத்தை ஓட்டிச் செல்லவும்

பெண்களுக்கு:


1. உங்கள் வாகனத்தை பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் நிறுத்தவும்
2. உங்கள் வாகனம் இயந்திரத்திலிருந்து சரியான தூரத்தில் இருக்குமாறு உங்கள் வாகனத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி சரி செய்யவும்
3. வாகனத்தின் Parking Breakஐ போட்டு விட்டு வாகனத்தின் பக்க கண்ணாடியை கீழிறக்கவும்
4. உங்கள் கைப்பையைத் தேடி எடுத்து, அதிலுள்ள சாதனங்களை பக்க இருக்கையில் ஒவ்வொன்றாக வைத்தவாறு, உங்கள் பண அட்டையை சரியாகத் தேடி எடுக்கவும்.
5. உங்கள் கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பவர்களிடம், பிறகு பேசுவதாகக் கூறி, கைப்பேசியை நிறுத்தவும்
6. உங்கள் பண அட்டையை இயந்திரத்தில் அதற்குரிய இடத்தில் திணிக்க முயற்சிக்கவும்
7. உங்கள் வாகனத்துக்கும் இயந்திரத்துக்குமான தூரம் அதிகம் இருப்பதால், சுலபமாக உங்கள் பண அட்டையை அதற்குரிய இடத்தில் திணிக்க வசதியாக, வாகனத்தின் பக்க கதவுகளைத் திறந்து கொள்ளவும்.
8. உங்கள் பண அட்டையைத் திணிக்கவும்
9. உங்கள் பண அட்டையை திருப்பி இட்டிருப்பீர்கள். எனவே பண அட்டையை வெளியில் எடுத்து இப்போது சரியான முறையில் திணிக்கவும்
10. உங்கள் கைப்பையின் பின்புற ரகசிய பையிலுள்ள, தங்கள் ரகசிய எண் குறிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத்தை எடுக்க மீண்டும் கைப்பையைத் துழாவவும்
11. உங்கள் இரகசிய எண்களை அழுத்தவும
12. அந்த எண்களை நீக்கி விட்டு, இப்போது சரியான எண்களை அழுத்தவும்
13. உங்களுக்குத் தேவையான பணத்தைக் குறிப்பிடவும்
14. வாகனத்திலுள்ள (Rear View Mirror) பின்னால் பார்க்கும் கண்ணாடியில் தங்கள் முகப் பூச்சு, உதட்டுச் சாயம், தனித்து விழும் முடிக் கற்றைகள் முதலியவற்றை சரி செய்யவும்
15. உங்கள் பணத்தையும் அதற்கான ரசீதையும் எடுத்துக் கொள்ளவும்
16. உங்கள் கைப்பையை தலை கீழாக பக்க இருக்கையில் கவிழ்த்து, தங்களின் பணப்பையைத் தேடி எடுத்து, பணத்தை வைக்கவும்
17. உங்கள் செக் புத்தகத்தின் பின்னாலுள்ள கட்டங்களில் இப்போது எடுத்த பணத்தையும் இருப்பையும் குறித்து விட்டு பணமெடுத்த ரசீதையும் அதில் மடக்கி வைக்கவும்
18. மீண்டும் தங்கள் முகப் பூச்சு, உதட்டுச் சாயம், தனித்து விழும் முடிக் கற்றைகள் முதலியவை சரியாக இருக்கிறதா என சோதித்துக் கொள்ளவும்
19. உங்கள் வாகனத்தை இரண்டு அல்லது மூன்று அடிகள் முன்னால் நகர்த்தவும்
20. இப்போது வாகனத்தை பின்னால் கொண்டு வந்து பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் மீண்டும் நிறுத்தவும்
21. உங்கள் பண அட்டையை எடுத்துக் கொள்ளவும்
22. உங்கள் கைப்பையை தலை கீழாக பக்க இருக்கையில் கவிழ்த்து, அட்டைகள் வைக்கும் பையை எடுத்து, அதில் பண அட்டையை சரியான இடத்தில் செருகவும்.
23. உங்கள் பின்னால் பொறுமையிழந்து நிற்கும் ஆண் காரோட்டியை படுகேவலமாக ஒரு பார்வை பார்க்கவும்
24. ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வாகனத்தை, மீண்டும் ஸ்டார்ட் செய்து, கிளம்பிப் போகவும்
25. உங்கள் கைப்பேசியில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவரை திரும்ப அழைக்கவும்
26. உங்கள் வாகனத்தை குறைந்தது மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர்கள் ஓட்டிச் செல்லவும்
27. உங்கள் வாகனத்தின் Parking Breakஐ எடுத்து விடவும்.

இவை அத்தனையும் நகைச்சுவையான உண்மைகள் என்பதை பரிசோதித்து அறியலாம். ஆனால் நீங்கள் கண்காணிக்கும் போது யாரும் ATM கொள்ளையர்கள் என சந்தேகித்து காவலர்களுக்கு தகவல் தந்து வம்பாகி விடப் போகிறது. கவனம்.

Post Comment

Wednesday, 14 October 2009

எலி பிடித்துத் தின்னும் தாவரம்

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் குடுவை போன்றதொரு புலால் உண்ணும் தாவரம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர். இது பூச்சிகள் மட்டுமல்லாது எலிகளையும் பிடித்து உண்பதாக அறிவித்துள்ளனர்.


ஆங்கிலேய நாட்டுத் தாவரவியல் நிபுணர்களான ஸடீவர்ட் மெக்ஃபெர்ஸன், அலைஸ்டர் இராபின்ஸன் (Stewart McPherson and Alastair Robinson) ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் விக்டோரியா மலைகளில் இதைக் கண்டு பிடித்து இதற்கு வன உயிரிகளைப் பற்றிய பரப்புரையாளர் சர். டேவிட் அட்டன்பரோ அவர்களது பெயரைக் கொண்டு நெபன்த்தெஸ் அட்டன்பரோயீ (Nepenthes attenboroughii) எனப் பெயரிட்டுள்ளனர். மேலேயுள்ள அத்தாவரத்தின் படம் ஸடீவர்ட் மெக்ஃபெர்ஸன் அவர்களால் பிடிக்கப்பட்டது.

புலால் உண்ணும் (Pitcher Plant) குடுவை வடிவ தாவரங்களில் இதுவே பெரியது என்றும் இதிலிருந்து வெளிவரும் அமிலம் போன்றதொரு வேதிப்பொருள் எலிகளையும் செரித்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு கிறிஸ்துவ மிஷனரிகள் விக்டோரிய மலையில் 2000ம் ஆண்டில் ஏறிய போது இது போன்றதொரு தாவரத்தைக் கண்டதாக எழுந்த பேச்சுதான் அவர்கள் இத்தாவரத்தைத் தேடத் தூண்டுகோலாக அமைந்ததாம்.

ஸ்டீவர்ட் மெக்ஃபெர்ஸன் இதைப்பற்றிக் கூறும்போது "இத்தாவரம் கண்ணைக் கவரும் வகையிலான பொறிகளை அமைத்து பூச்சிகளை மட்டுமில்லாது எலிகளையும் பிடித்து விடுகின்றன. இந்த அதிசயத் தாவரம் 21ம் நூற்றாண்டு வரை கண்டு பிடிக்கப்படாமல் இருந்ததுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கின்றார்.


இயற்கை உலகின் வனப்பையும் அதன் பரந்துபட்ட தன்மையையும் நன்முறையில் அறிந்து கொள்ள பற்பல தலைமுறையினருக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ள சர்.டேவிட் அவர்களுடைய பணிகளுக்கு மரியாதை தரும் விதத்தில் எங்கள் குழுவும் நானும் இத்தாவரத்துக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளோம் என்கிறார் ஸ்டீவர்ட் மெக்ஃபெர்ஸன்.
இந்தக் கண்டு பிடிப்புக்கு தன் பெயரை இட அனுமதி கேட்ட போதே, அதற்காக தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் சர்.டேவிட் (வயது 83, படம்)

இந்தக் குழு, 2007ல் தம் இரண்டு மாத முயற்சியில் கண்டறிந்த இத்தாவரத்தைப் பற்றியும், இது போன்ற புலால் உண்ணும் குடுவை வடிவ தாவரங்களின் 120 வகைகளைப் பற்றியும் மூன்று ஆண்டுகள் ஆய்வுகள் செய்த பின், இந்த வருட தொடக்கத்தில் Botanical Journal of Linnean Societyல் வெளியிட்டுள்ளது.

இதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, நம் விவசாயிகளின் விளைநிலங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டை வளர்த்து வந்தால், எலிகளால் நம் விவசாயத் தொழிலுக்கும் நம் நாட்டுக்கும் ஏற்படும் மிகப்பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். நம் தாவரவியல் விஞ்ஞானிகளின் கண்களில் பட வேண்டும். மிக எளிய வழியாகத் தெரிகிறது.

Post Comment

Monday, 12 October 2009

மன அழுத்தமும் தீர்வும்

சமீபத்தில்தான் இதைப் படிக்க நேர்ந்தது. இவ்வளவு எளிய தீர்வா! எப்படி சாத்தியம்?

கீழே ஒரு படம் இருக்கிறது. இப்போது பார்க்காதீர்கள். மீதமுள்ளதையும் படித்து விட்டுப் பார்த்தால்தான் சரியாகப் புரியும். புகழ் பெற்ற மாரி மருத்துவமனையில் மனஅழுத்தத்தை அளக்க இந்தப் படம்தான் பயன்படுகிறதாம்.

ஒத்த தோற்றமுடைய இரண்டு டால்பின்கள் தண்ணீரில் தாவிக் குதிப்பது போல படத்தில் காட்டப் பட்டுள்ளது. கவனமாக பரிசீலிக்கப்பட்ட அறிவியல் ஆய்வுகளின் படி ஒத்த தோற்றமுடைய இந்த டால்பின்கள் மன அழுத்தம் உள்ளவர்களின் அழுத்த அளவுக்கேற்ப மாறித் தோன்றுமாம். எவ்வளவு மாறித் தெரிகிறதோ அதற்குத் தகுந்தாற் போல் மன அழுத்தம் கூடுதலாக இருக்கிறதாம்.

இப்போது மடத்தைப் (சே!.. படத்தைப்) பாருங்கள். கூடுதல் வித்தியாசம் தெரிந்தால் உடனே விடுப்பு எடுத்து ஊர் போய் நன்றாக ஓய்வெடுத்து விட்டு வாருங்கள். மாற்றம் அவசியம்.



நான் பார்த்த போது இரண்டில் ஒரு டால்பின், மாடு போலத் தெரிந்தது. அதனால் பெருநாளோடு சேர்தது ஒரு பத்து நாள் விடுமுறை எடுத்து ஊர் போய் விட்டு வந்தேன்.

வந்து திரும்பவும் பார்த்தால் இப்போது பசு மாதிரி தெரிகிறது. அதனால் அடுத்த பெருநாளிலும் சுமார் பத்து நாள் விடுப்புக்கு இப்போதே சொல்லி விட்டேன்.

அடுத்தடுத்து ஊர் போய் வருகின்றவர்களுக்கு இரண்டும் ஒத்த தோற்றமுடைய டால்பின்களாகத்தான் தெரியும். அவ்வாறு தெரிந்தால் அடுத்துள்ள நல்ல கண் மருத்துவரை உடனே பார்க்கவும்.

Post Comment

Thursday, 13 August 2009

பயோனிக்ஸ் எனும் அறிவியல் அற்புதம்


பயோனிக்ஸ் என்ற இந்த வார்த்தை Jack E. Steel என்பவரால் 1958ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. இது கிரேக்க வார்த்தையான 'bion' (bee-on) என்ற வார்த்தையிலிருந்து உருப் பெற்றது. bion என்ற வார்த்தைக்கு (unit of life) 'உயிரின் ஓர் அலகு' என பொருள் வரும். 'ic' என்ற அசைக்கு 'போன்ற' (like OR in the manner of) என்ற பொருள் வரும். ஆக 'உயிரைப் போன்ற' எனப் பொருள் கொள்ளலாம்.

எது எப்படியோ மனிதனின் வேகமான வளர்ச்சிக்கு, அல்லது முயற்சிக்கு இந்த பயோனிக் ஒரு சான்று. இதை biomimetics, bio-inspiration, biognosis, biomimicry அல்லது bionical creativity engineering என்றும் சொல்கிறார்கள். வேறு சிலர் Biology + Eletronics என உண்டானது என்கிறார்கள்.

மருத்துவத்துறையில் பயோனிக்ஸ் என்பது வெளி மற்றும் உள் உடலுறுப்புகளின் சிதைவுகளை இயந்திர முறையில் சரி செய்து அதை பழைய முறையில் அல்லது அதை விட சிறப்பாக இயக்கும் தொழில் நுட்பமாகும்.

பயோனிக்ஸ் முறை இன்னும் அதன் துவக்க நிலையில்தான் இருக்கிறது என்றாலும் 'cochlear implant' மூலம் காது கேளாதவர்களை கேட்க வைக்க முடியும். அதாவது பயோனிக்ஸ் காதுகள். பயோனிக்ஸ் முறையின் மூலம் 2004ம் ஆண்டில் இயங்கும் ஒருமுழு இதயத்தையே செயற்கையாக உருவாக்கி காட்டினார்கள். புதிய நானோ தொழில் நுட்பம் மூலம் இதில் பல வியத்தகு முன்னேற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பெனிசில்வேனியா பல்கலை கழகத்தின் பயோஇன்ஜினியரிங் துறையில் பணிபுரியும் Ghana நாட்டைச் சார்ந்த Kwabena Boahen என்ற பேராசிரியர் தம் எட்டு வருட கல்லூரி பணியில் மனித விழித்திரையை ஒத்த 'சிலிகான் விழித்திரை' ஒன்றை உருவாக்கி உள்ளார். காட்டுப் பல்லியின் கண்களின் இயக்க சிக்னல்களை அதில் அனுப்ப, கருப்பு வெள்ளையில் அதுவும் பார்ப்பதை நிரூபித்திருக்கிறார்.இதன் முன்னேற்றம் பற்றிV செய்தி இங்கே .

பயோனிக்ஸ் பற்றிய கூடுதல் செய்தி இங்கே கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கிளிக்குங்கள்.

இதுவரை மிக சீரியஸான விடயம். எனவே ஒரு சிறிய நகைச்சுவை.

கடவுள் சொர்க்கத்தில் வீற்றிருக்கிறார். அப்போது ஒரு விஞ்ஞானி வந்து "கடவுளே! இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. ஒன்றுமில்லாதவற்றிலிருந்து உயிரைப் படைக்கும் வித்தையை அறிவியல் கற்று விட்டது. அதாவது நீங்கள் ஆரம்பத்தில் செய்ததை இப்போது நாங்களும் செய்வோம்" என்றாராம்.

"ஓஹோ! எப்படி? சொல்!" என கடவுள் கேட்டாராம்.

"அதாவது வெறும் மண்ணிலிருந்து உம் சாயலில் ஒரு உருவைச் செய்து, அதில் சுவாசத்தை நிரப்பி மனிதனாக்கி விடுவோம்" என்றாராம் விஞ்ஞானி.

அதற்கு கடவுள் "அடடே! அப்படியா? எங்கே செய்து காட்டு!" என்றாராம்.

எனவே விஞ்ஞானி குனிந்து மண்ணை எடுத்து ஒரு உருவை செய்யத் துவங்கினாராம்.

அதைப் பார்த்த கடவுள், "பொறு! பொறு! நிறுத்து!. முதலில் நீ உன்னுடைய சொந்த மண்ணை எடுத்து வா!" என்றாராம்.

Post Comment

Tuesday, 4 August 2009

அரிதான ஆட்டோகிராப் - Autographs

பிரபலங்களிடம் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கி வைப்பது நம்மில் பல பேருக்கு பிடிக்கும். இந்திய நாட்டுக்காக உழைத்தவர்கள் மற்றும் உலக அரங்கில் இந்திய நாட்டுக்கு பெருமை தேடித் தந்தவர்களில் பலரது கையெழுத்துடன் ஒரு ஆட்டோகிராப் இங்குள்ளது.

காணக் கிடைக்காத காட்சி.

1. டாக்டர். A P J அப்துல் கலாம்

2. மௌலானா அபுல் கலாம் ஆசாத்

3.டாக்டர். ஜாகீர் ஹுசேன்

4. பண்டித ஜவஹர்லால் நேரு

5. அப்துல் கபார்கான் - எல்லை காந்தி

6. சுவாமி விவேகானந்தர்

7. அன்னை தெரசா

8. இரவீந்திரநாத் தாகூர்

9. வினோபாஜி

10. டாக்டர். இராதாகிருஷ்ணன்

11. ஜெயப்ரகாஷ் நாராயணண்

12. ஜெகஜீவன்ராம்

13. லால்பகதூர் சாஸ்திரி

14. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

15. சர் சி வி இராமன்

16. மொரார்ஜி தேசாய்

17. பாபு இராஜேந்திர பிரசாத்

18. சர்தார் வல்லப பாய் படேல்

19. பால கங்காதர திலகர்

20. கோபால கிருஷ்ண கோகலே

21. அன்னை இந்திரா காந்தி

22. இராஜீவ் காந்தி

23. அடல் பிகாரி வாஜ்பேயி

24. ராஜ்கபூர்

25. அமிதாப் பச்சன்

26. M S சுப்புலட்சுமி

27. உஸ்தாத் பிஸ்மில்லா கான்

28. பாலமுரளி கிருஷ்ணா

29. டாக்டர் அமர்த்தியா சென்

30. ஆஷா போஸ்லே

31. எஸ் பி பாலசுப்ரமணியம்

32. P. சுசீலா

33. டெண்டுல்கர்

34. விஸ்வநாதன் ஆனந்த்

35. சுனிதா வில்லியம்ஸ்

நம் பெயரோ, நம் குழந்தைகள் பெயரோ, நண்பர்கள் பெயரோ இப்பெயர்களோடு இணைந்து வர பாடுபடுவோம்

Post Comment