Wednesday, 8 April 2009

ஈழப்போரா? இனப்படுகொலையா?


இலங்கையில் என்ன நடக்கிறது?

இனப்படுகொலைகளும் அழுகுரல்களும் ஓய்வதாக இல்லையே.
தமிழினம் இப்படியே அழிந்து பட வேண்டியதுதானா?


ஜனவரி 20 முதல் மார்ச்15 வரையிலான சுமார் 55 நாட்களுக்குள் தமிழ் மக்களில் சுமார்2700 பேர் கொல்லப்பட்டும் 7500பேர் காயமடைந்தும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்கே முயற்சி? நம் பங்களிப்பை நாம் எப்படிச் செய்ய முடியும்? கையறு நிலையாக இருக்கிறதே.


ஒன்றுமறியா அப்பாவிகளும் குழந்தைகளும் செத்து மடிவதையும் ஊனமானவதையும் எல்லோரையும் போல என் மனதும் பொறுத்துக் கொள்ள மறுக்கிறது. என் இனத்தார், மூத்த தமிழ்க்குடியினர் படும் துயரங்கள் கேட்க இதயம் துடிக்கிறது.

பாதுகாப்பு வளையத்துக்குள் கூட்டி வைத்து கொல்வதாக கேட்கும் போது காதுகளில் சுடும் ஈயம் பாய்கிறது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்தும் தீவிர தாக்குதல்களினால், அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் கொடுமைகள் அளவிடற்கரியது. சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையில்தான் சண்டையென்றால் அவர்களைப் பிரித்து வைத்து சமர் செய்யுங்கள். ஒன்றும் செய்யாத அப்பாவிகளைக் கொல்லாதீர்கள்.

அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட உடனடியான போர் நிறுத்தமே இப்போதைய தேவை, அதுவே உடனடித் தீர்வு. அது புலிகளை பொது மக்களிலிருந்து தனிமைப்படுத்த தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம். பொது மக்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்த பங்கமும் வராமல் எம் தமிழினம் காப்பாற்றப்பட வேண்டும். போர் நடக்கும் பகுதிகளிலிருந்து அப்பாவி பொது மக்களும் பெண்களும் குழந்தைகளும் அப்புறப் படுத்தப்படுவதோடு அவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் மற்ற குடிமக்கள் பெரும் உரிமைகளையும் சலுகைகளையும் ஈழத்தமிழர்களும் பெற உறுதியான உடன்பாடு பேச்சு வார்த்தைகளின் முலம் எட்டப்பட வேண்டும். பேச்சு வார்த்தைகளில் உலக சமுதாயப் பிரதிநிதிகளுக்கும் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும.

தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை தம் அரசியல் இலாபங்களை கணக்கில் கொண்டே செய்கிறார்கள். கலைஞர் ஓரளவு முயன்றார். ஆனால் அது வெற்றி பெறவில்லை என்கின்ற போது, பழைய சறுக்கலகளை நினைந்து விட்டு விடாமல், இன்னும் கூடுதலாக முனையாமல் விடுவது அவர் தம் தமிழினக்காவலர் என்ற பெயருக்கு பொருத்தமானதாக அமையாது. இப்போதைக்கு தமிழகம் அவரைத்தான் எதிர் நோக்குகிறது. வேறு போக்கிடம் இல்லை.

படங்கள்: பிற தளங்களிலிருந்து
மேலும் அறிய: 1. அபி அப்பா , 2. தூயா

Post Comment

Wednesday, 1 April 2009

நாங்க தமிழ்நாட்டுகாரங்க

நம் நண்பரின் ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தார். கனமான குரல். அவருக்கே தான் கொஞ்சம் விவரமானவர் என்ற எண்ணம். அதனால் பேச்சு கொஞ்சம் பெரிய மனித தோரணையாக இருக்கும். கிராமத்தில் மற்றவர்கள் கொடுக்கும் சிறு வேலைகளை அங்கங்கே போய் முடித்துத் தந்து விடுவார். தயங்காமல் உதவிகள் செய்வதால் நல்ல பெயர். சில பேர் ஊரிலிருந்து சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்தார்கள் அதிலே இவரும் இருந்தார். பெரு நகரங்களுக்கு அப்போதுதான் வருகிறார்கள் போலுள்ளது.

சென்னையில் ஒரு பெரிய சைவ உணவகத்தில் நம் நண்பரோடு காலை உணவு சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் இட்லி சொல்லி, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அடுத்து தோசைக்கும் சொல்லியாகி விட்டது. இவர் இட்லி சாப்பிட்டு விட்டு தோசைக்காக காத்திருந்த சமயத்தில் பையன் தட்டை எடுத்து போய் விட்டான். அவருக்கு கோபம் வந்து விட்டது.

பெரியவர்: டேய் இங்க வாடா. ஏன் தட்டை எடுத்த?
பையன்: சாப்பிட்டிங்கல்ல. தட்டில ஒன்னுமில்ல, காஞ்சிடுமேன்னுதான்
நண்பர்: தம்பீ நீங்க போங்க
நண்பர்: ஐயா இங்கே தோசை வேறு தட்டில் தருவார்கள்.
பெரியவர்: என்ன ஹோட்டலுக்கு கொண்ணாந்த?. தட்ட தூக்கிட்டு போயிறானுங்க. (கூட வந்தவர்களின் ஜால்ரா வேறு)
பையன்: நான் திரும்ப வச்சிரவா?
நண்பர்: நீங்க போங்க தம்பீ (சர்வர் ஒரு மாதிரியா பார்த்துக் கொண்டே போகிறார்)
நண்பர்: (ஐயையோ! இன்னும் எனனென்ன நடக்கப் போகுதோ! என்று மனதில் நினைந்தவனாய்) நீங்க சாப்பிடுங்கய்யா.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும்
பெரியவர்: இனிமே மதியம் மூணு மணிக்கு மேலதான் வேலை. பஸ்ஸில கடைசி சீட்டாப் போச்சு. ராத்திரி பூரா தூங்கவும் முடியல. எங்களை எங்கேயாச்சும் அழைச்சிட்டு போய் வர்ரியா தம்பீ.
நண்பர்: (மனதில்: உங்களையா? ஐயையோ!) ராத்திரி பூரா தூங்காம வந்திருக்கீங்க. இனிமேல் வெயிலும் கடுமையா இருக்கும். பக்கத்துல ஏசி தியேட்டர் இருக்கு. நல்ல படத்துக்கு டிக்கெட் கிடைக்காது. ஏதாவது ஒரு படத்துக்கு போய்ட்டா. ஏசியில நல்லா தூங்கிரலாம். அப்புறம் போற இடத்துக்கு கிளம்ப சரியாயிடும். (மனதில்: எனக்கும் நிம்மதியாக போயிடும்)
பெரியவர்: யாருக்கு சினிமா பார்க்க?. குளுகுளுன்னு கொஞ்சம் தூங்கலாம்னா சரிதான் தம்பீ.

எதிலும் டிக்கட் கிடைக்காமல், நண்பர் ஆங்கிலப்பட டிக்கெட் ஐந்து வாங்கி வருகிறார்.

பெரியவர்: என்ன படம் தம்பீ
நண்பர்: தமிழ் படமெல்லாம் முன்பதிவில் இருப்பதால் டிக்கட் கிடைக்கல. தூங்க தானே என்று ஆங்கிலப்பட டிக்கெட் எடுத்திட்டேன்.
பெரியவர்: நாலு கொட்டா இருக்கு. டிக்கட் எடுக்க முடியலியா. அதை கொடுத்துட்டு வந்திருங்க. நான் வாங்கியாரேன் பாருங்க.
நண்பர்: இல்லீங்கய்யா. திரும்ப கொடுத்தா வாங்க மாட்டாங்க.
பெரியவர்: அதென்ன அப்படி. நீங்க எங்கூட வாங்க. நான் வாங்கிக்க சொல்றேன்.
நண்பர்: பரவாயில்லீங்க. வேற டிக்கட் எடுத்துருவோம்.
பெரியவர்: இதெல்லாம் பெரிய விஷயமா. எங்கூட வாங்க எப்படி காச வாங்கறதுன்னு சொல்லித் தாரேன்.

நண்பர் என்ன கூத்து கட்டப் போறாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அறுப்புக்கு போகும் ஆடு போல இழுத்துக் கொண்டு போகப் படுகிறார்
நண்பர்: இருங்க. பொறுங்க. நானே கேட்டுப் பார்க்கிறேன்
நண்பர் டிக்கெட் தருமிடத்தில் போய்: (ஆங்கிலத்தில்) மன்னிக்கவும். இந்த டிக்கெட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வீர்களா? எங்களுக்கு வேறு ஒரு அவசர வேலையாக உடனே போக வேண்டி இருக்கிறது.
டிக்கட் தருபவர்: (ஆங்கிலத்தில்) மன்னிக்கவும். டிக்கெட்டுகள் திரும்பப் பெறவோ மாற்றவோ தகுந்ததல்ல.
ஏமாற்றத்துடன் பெரியவரை திரும்பிப் பார்க்கும் நண்பரிடம்
பெரியவர்: இங்க கொடுங்க. நான் எப்படி மாத்தறேன்னு பாருங்க

பெரியவர்: (டிக்கட் கொடுக்குமிடத்தில் தலையை விட்டுக் கொண்டு) நாங்க தமிழ்நாட்டிலேந்து வந்திருக்கோம். பையன் தெரியாம இந்த இங்லீசு டிக்கட் வாங்கிட்டான். காசக் கொடுத்திடுங்க.
டிக்கெட் தருபவர்: எங்கே? தமிழ்நாட்லேர்நது வந்திருக்கிங்களா? கொஞ்சம் பொறுங்க. மேனேஜர் வரட்டும்.
சிறிது நேரத்தில் மேனேஜரை அழைத்து வருகிறார்.
மேனேஜர்: யாரது? யாருங்க தமிழ்நாட்லேர்ந்து வந்திருக்கறது?
பெரியவர்: இந்தா. நாங்க அஞ்சு பேருமுங்க
மேனேஜர்: எந்த ஊரு
பெரியவர்: ஊர் பெயரைச் சொல்கிறார்
மேனேஜர் (டிக்கட் தருபவரிடம்): தமிழ்நாட்டிலேர்ந்து வந்திருக்காங்க. டிக்கட்டை வாங்கிகிட்டு பணத்தை கொடுத்தனுப்புங்கள். (தலையிலடித்துக் கொண்டு போகிறார்)
பணத்தை வாங்கிக் கொண்டு பெரியவர் வெற்றிக் களிப்பில்….
கூட வந்திருப்பவர்கள் நண்பரை ஏளனமாக பார்க்க.....
அவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கே இருந்து வந்தவர்தான், அதிலிருந்து எங்கே போனாலும் தனியாகத்தான்.

Post Comment

Thursday, 26 March 2009

துபாயில் ஆலங்கட்டி மழை அனுபவம்

நான் துபை வருவதற்கு முன் ஒரு முறை துபையில் கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததாக என் தம்பி சொல்வார். அவர் அப்போது ஒரு அரபி வீட்டில் வேலைக்கு இருந்தார். வீடுகளெல்லாம் இப்போது போல் இல்லை. மழையில் வீடெல்லாம் ஈரம். "இங்கெல்லாம் மழையே வராது. இந்தியர்களும் பாகிகளும் வந்து, உங்கள் நாட்டு மழையை இங்கே கொண்டு வந்து விட்டீர்கள்" என்றார்களாம். "ஆமாமாம். எங்கள் ஊரில் கூட மழையே இல்லை" என தபால் வந்திருக்கிறது என்றாராம்.

ஒரு ஆட்டையும் அதன் குட்டியையும் ஒரு சிறிய அறையில் கட்டி வைத்திருந்தார்களாம். அந்த அறையில் மழை வெள்ளம் கூடுதலாக இருந்ததால் ஆட்டை வேறு இடத்தில் கட்டச் சொல்லி இருக்கிறார்கள். மேலே ஒரு துணியை போர்த்திக் கொண்டு முதலில் குட்டிகளை கொண்டு வந்து விட்டு விட்டு, ஆட்டை இழுத்துக் கொண்டு வெளியில் வரவும், அவர் பின்னாலேயே அந்த அறை அப்படியே நொறுங்கி உட்கார்ந்ததாம். அரபியின் முகம் வெளிறிப் போய் பயந்து கத்தவும், திரும்பிப் பார்த்தவுடன்தான் தெரிநததாம். இரண்டு நாளைக்கு இரண்டு பேருமே காய்ச்சல் வந்து எழவில்லையாம்.

சரி நேற்றைய கதையை பார்ப்போம்.

மழை வருவதற்கு முன் வானம் மேக மூட்டமாய் இருக்குமாமே. அதற்கு இப்படியா?


மேகம் திரண்டு......
அடேங்கப்பா! என்னய்யா அது?


என்னது இங்க கூடவா?
யாரோ காரின் மேல் கல்லெடுத்து போடற மாதிரி இருக்கிறதே
அடே! ஆலங்கட்டி டோய்!..!!


ஹய்யா! ரோடு பூரா சிறு சிறு பனிக்கட்டி
என்ன அழகு? காரை நிறுத்த முடியலியே




என்னப்பா இவ்வளவு ஜாலி?. வானத்துக்கும் பூமிக்குமா தாவுறே!.
கொஞ்சம் அடக்கு.


ஹய்! கண்ணாடியையே உடைச்சிடுச்சே!
செம ஸ்பீடுதான்!

ஏய்... என்னா? அடங்க மாட்டியா?


ஐயைய்யோ. இரண்டு இடத்துலே கண்ணாடி புட்டுகிச்சு.
போய்யா. நீங்களும் ஆலங்கட்டியும்

இன்ஸ்யூரண்ஸ்ல காரை எத்தனை நாள் நிப்பாட்டுவானோ?
பொழப்பு போச்சு. சே!

(படங்கள் உதவி: மொஹையதீன் அப்துல் காதர்)

Post Comment