திடீரென்று இந்தியா போக வாய்ப்பும் விடுமுறையும் கிடைத்தது. போய் விட்டு வந்தேன். அப்படியே நடக்கும் வீட்டு வேலைகளை கொஞ்சம் மேற்பார்வை பார்க்கவும் ஏதுவானது. துபை வந்து ஒரு வாரம்தான் ஆகிறது.
Nokia N73 கையில் வைத்திருந்தேன். வீட்டுக்கென்று ஒரு சைனா மொபைல் வாங்கிப் போயிருந்தேன். 'அதெல்லாம் எங்களுக்கு சரியாகப் புரியல' என்று சொல்லி N73யை வைத்துக் கொண்டு சைனாவை என்னிடம் கொடுத்தனுப்பி விட்டது புத்திசாலி தங்கமணி. அதிலிருந்த தொலைபேசி எண்களை மாற்றிக் கொண்டேன். எல்லா எண்களையும் மாற்றவில்லை என்பது உபயோகிக்கும் போதுதான் தெரிகிறது. மகளுக்கு பேசி 'எல்லா எண்களையும் கொடு' என்றால் 'நீங்கதான் மாற்றிக் கொண்டீர்களே என்று அப்போதே அழித்து விட்டேன்' என்கிறாள் புத்திசாலி மகள். சாத்தான்குளத்தார் தவிர மற்ற எந்த நண்பரின் எண்ணும் என்னிடமில்லை.
அதனால் நண்பர்களே. தயவு செய்து நீங்களாக ஹலோ சொல்லுங்கள். ப்ளீஸ்.
1. ஊரில் முக்கியமான செய்தி என்னவென்றால் மின்சாரத் தட்டுப்பாடு. காலையில் மின்சாரம் போனால் சில சமயம் இரவு பதினொன்றுக்கெல்லாம் திரும்பி விடும். வியர்வைக் குளியல் நடத்த நல்ல ஏற்பாடு.
2. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காற்றாட ஆற்றில் நடக்கும்போது
''சீ! இங்கதான் உட்கார்ந்து படிப்பீங்களா?.
ஆனா அமைதியா இருக்கும்.
பாம்பு எல்லாம் வராதா?'' என்று கேட்டது வாண்டு.
அந்த மரமும், மட்டைகளும், படிக்கட்டும், வாய்க்கால் சுவரும், நாணலும், ஆற்று மணல்களும்,
''அட. என்ன தம்பீ! எத்தனை வருடமாச்சு!.
சின்ன பிள்ளையாக இருக்கும்போது தினமும் படிக்க வருவாயே! படித்த இடமென்று ஞாபகம் இருக்கிறதா?.
வா! வந்து உட்கார்!!''
என்று அழைப்பது போல் இருந்தது.
கண்களில் கண்ணீர் வந்து விட்டால், பிள்ளைகள் ஏதும் கேட்குமே! என்று முயன்று அடக்கிக் கொண்டேன்.
3. அப்படியே பக்கத்து கிராமத்துக்கும் காலார அழைத்துப் போனேன்.
பெரிய பெரிய டயரை இப்படி வெட்டிப்போட்டு (side)சைடுல கட்டி வைத்து இருக்கே. அது என்ன என்று கேட்டார் பையன்.
அது பன்றிகளுக்கான 'கொடலை' அதாவது 'உணவிடும் ஏற்பாட்டுக்கு' என்று சொன்னேன்.
'சே' என்றது பெண்.
''இதுக்கு எதுக்கம்மா 'சே'. அவர்கள் அதை அன்பாய் வளர்க்கிறார்கள்'' என்றேன்.
''ஓ அதளால்தான் அது அவ்வளவு அழுக்கா இருந்தாலும் அதற்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டியில பால் கொடுக்கிறாங்களா'' என்றது அடுத்த பெண்.
''சே. அது பால் இல்லம்மா. கழனித்தண்ணி'' என்றேன்.
''அப்படீன்னா'' என்றதற்கு விளக்கம் சொன்னேன்.
“அதுக்கு எதுக்கு 'சே' என்கிறீர்கள்” என்கிறாள். சரியான வாய்.
4. உறவினர் வீட்டு கல்யாணத்துக்கு தங்கமணி போயிருந்த போது வந்தவர்களுக்கெல்லாம் இரண்டு புத்தகம் கொடுத்தார்களாம். “நம்மூரில் கூட இப்படி நடக்கிறதே?” என ஆச்சரியப்பட்டுக் கொண்டே தங்கமணி கையிலிருந்த புத்தகத்தை வாங்கினேன். ‘நான் படித்து சொல்றேன்’ என்று வரிசையாக பொருளடக்கம் படித்துச் சொன்னாள் சின்ன பெண். 9 வயது.
“ஏம்மா! ‘வட்டி’ என்று படித்தாயே அப்படின்னா என்னம்மா?” என்று கேட்டேன்.
“Interest - எனக்கு தெரியும் டாடி” என்றாள்.
“ஆங்கிலத்தில் எப்படிச் சொல்றதுன்னா கேட்டேன்?” என்றேன்.
“கொடுத்த பொருளை அல்லது பணத்தை அதே அளவில் திரும்பப் பெற்றால் அது கடன் - அனுமதியுள்ளது.
கொடுத்ததை விட கூடுதலாக கேட்டுப் பெற்றால் அதுதான் வட்டி – அனுமதியில்லை” என்று அழகாய் விவரித்தாள்.
அட என்ன அழகா சொல்லுது - உண்மையிலேயே புத்திசாலி குழந்தைதான்.
5. ஊருக்கு போகு முன் கம்பெனி புதிய கார் கொடுத்திருந்தது. ஒரு மாதம் ஓட்டி விட்டு சர்வீஸ் செய்து வைக்கச் சொல்லி விட்டு ஊருக்குப் போயிருந்தேன்.
என்னுடைய காரை சர்வீசுக்கு விடாமல், நான் விடுமுறையில் இருந்த ஒரு மாதமாக ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்று தெரிந்து, அலுவலகத்தில் நான் கோபப்பட்டதால், அவசரமாக சர்வீஸ் செண்டர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக் கொடுத்தார்கள். சர்வீஸ் செண்டரிலிருந்து உடனே விடச் சொல்லி மதியம் அழைப்பு வந்தது.
நேராக NISSAN சர்வீஸ் செண்டர் போய் 'அழைப்பு வந்தது. வண்டியை சர்வீசுக்கு விட வேண்டும்' என்று சொல்லி Registration Card கொடுத்தேன். அங்கிருந்த மலையாளி ஒரு மாதிரியாக என்னைப் பார்த்தான்.
"என்ன ஆனது. என் வார்த்தைகள் விளங்கவில்லையா" என்று கேட்டேன்.
"நான் இந்த இடத்திற்கு புதுசு. எனக்கு உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் எண், என் சிஸ்டத்திலிருந்து கிடைக்க மாட்டேங்கிறது” என்றான்
“புதிதென்றால், தெரிந்த ஆளிடம் கொடு” என்றேன்.
அவன் பக்கத்துசீட்டு நண்பரிடம் கொடுத்தான். அவனே அவரிடம் விளக்கினான்.
“காரில் இலேசாக சிராய்ப்புகள் இருக்கிறது. பெயிண்ட்டும் செய்து விடுங்கள்” என்றேன்.
அவரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு “உங்களை அழைத்தது ஆணா பெண்ணா” என்றார்.
“ஆண்தான். இந்த எண்ணிலிருந்து” என்று எண்ணையும் சொன்னேன்.
அவர் கார்டை ரிஸப்சனுக்கு அனுப்பி பார்க்கச் சொன்னார். அங்கிருந்தும் திரும்பி அவரிடமே வந்தது.
“தயவு செய்து கார்டை என்னிடம் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி கார்டை வாங்கினேன்.
'இல்லை சார். கொஞ்சம் பொருங்க!. இப்ப பார்த்திடலாம்' என்றார்.
நான் வேகமாக வெளியில வந்திட்டேன்.
சே!. இதற்கு முன் வைத்திருந்ததுதான் NISSAN கார். இப்போதுள்ள புதிய கார் TOYOTA அல்லவா?.
நல்ல வேளை. அவர்கள் கார்டை சரியாகப் பார்த்து சொல்வதற்குள் வெளியேறி விட்டேன் - உண்மையிலேயே வயதாகி விட்டதோ!