Wednesday 21 January 2009

சும்மா சாப்பிடுங்க


ஊருக்கு போயிருந்த போது, நீண்ட நாட்களுக்குப் பின் சில உறவினரைப் பார்த்த போது, பழைய சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. அதிலொன்று.

சென்னைக்கு ஹஜ் செல்பவர்களை வழியனுப்ப போனார்கள் என் ஊர்க்காரர்களில் சிலர். சென்னை வரைதான் பேருந்து. அதற்கப்புறம் நடை வண்டிதான். காசும் மிச்சம் ஊரையும் சுற்றிப் பார்த்த மாதிரி. முன்னால் ஆண் சித்தீக் சராய்க்கு வழிகாட்டிப் போக, பின்னால் வந்த பெண்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே.... வெயில் கடுமை. வெகுளி மனிதர்கள். சென்ட்ரல் அருகே

சர்பத் விற்பவர்: வாங்கம்மா வந்து சாப்பிடுங்க. வெயிலுக்கு நல்லது சும்மா சாப்பிடுங்க. சும்மா சாப்பிடுங்கம்மா.
பின்னால் வந்த பெண்கள்: அட இவ்வளவு சொல்றார். சாப்பிடலாமே.
பெண்கள்: ஆளுக்கொரு கிளாஸ் சாப்பிட்டாச்சு. ஆமா. வெயிலுக்கு நல்லாத்தான் இருக்கு.
பெண்கள்: ரொம்ப சந்தோஷங்க. வரோங்க
விற்பவர்: ஏது வறீங்களா? காசு கொடும்மா?
பெண்: காசா? சும்மா சாப்பிடுன்னுதானய்யா சொன்னே.
விற்பவர்: என்னம்மா வெளாடறீங்களா? காசை எடும்மா?
பெண்: ஏங்கோ? தாம்பாட்டுக்கு போறீங்களே. இங்க வந்து பாருங்க. (வீட்டுக்காரரை கூவி அழைக்கிறார்)
அவ்வளவு தூரம் போனவருக்கு மனைவி கூப்பிட்டது சரியாக காதில் விழுந்து, ஓட்டமும் நடையுமாய் திரும்ப வருகிறார்.
ஆண்: என்னாச்சு?
பெண்: கலர் கலக்கி வச்சிகிட்டு சும்மா சாப்பிடுங்க. சும்மா சாப்பிடுங்க ன்னான்.
விற்பவர்: வாயை மூடும்மா. மரியாதையா பேசும்மா.
பெண்: பொறுய்யா? அதான் குடிச்சோம். இப்ப காசு கேக்கறான்.
ஆண்: பெரிய்ய தொந்தரவா போச்சு. ஒங்களையெல்லாம் மதறாஸ்க்கு அளைச்சிட்டு வந்தேனே. உனக்கு கலர் கொடுக்கிற அளவுக்கு அவன் என்ன சொந்தமா? (விற்பவரிடம் பேரம் பேசி, பாதி காசு கொடுக்கிறார்)
விற்பவர்: சாவு கிராக்கி. எங்கேர்ந்து வந்து தொலைச்சீங்கன்னு தெரியிலயே. மிச்சம் காசு கொடுய்யா.
ஆண் மிச்சம் காசையும் கொடுத்து விட்டு, மனைவியை கையைப் பிடித்து அழைத்து போகிறார்.
பெண்: இல்ல. நம்மூரில வெயில் காலத்துல மோர் கொடுக்கிற மாதிரி இங்க கலர் கொடுக்கிறாங்கன்னு நினைச்சிட்டேன்.
ஆண்: அதுக்கு என்னையும் கூப்பிட்டருக்கலாம்ல.

வசதி வாய்ப்புகள் மனிதர்களை மாற்றுகிறதென்னவோ உண்மைதான். அவர்களை இப்போது பார்த்தால் அப்படி நடந்து கொண்டவர்கள் இவர்கள்தானா என வியப்பாக இருக்கிறது.

வரவேற்பை பார்த்துட்டு மற்றதையும் ஒவ்வொன்றாக... :))

Post Comment

Monday 19 January 2009

அற்புதம் நிகழ்த்தும் ஆபீஸ்பாய்தான் ஹீரோ!


பறவைகள் வந்து இடித்து தாக்கியதால், இயந்திரங்கள் பழுதாகி விட்ட அமெரிக்க ஏர்வேஸ் விமானம், அது பறக்க உயர்ந்த சில நிமிடங்களிலேயே அருகிலுள்ள ஹூட்ஸன் ஆற்றில் இறக்கப்பட்டது.

விமானம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே நீரில் மூழ்காமல் இருப்பதற்காக, கேபினுக்கு உள்ளே காற்று வரவும் போகவும் அமைக்கப்பட்டிருந்த வால்வுகள் மூடப்பட்டன. அவசர காலத்தில் உபயோகிக்கப்பட வேண்டிய எமர்ஜென்ஸி வழிகள் திறந்து விடப்பட்டன. பாதுகாப்புக்கான காற்று நிரப்பிய வழுக்குப்பாதை திறந்து விடப்பட்டு அவை தானாகவே மிதவைகள் போலானது.

தண்ணீரில் எவ்வாறு பாதுகாப்பாக தப்புவது என்பதற்காக, 'உங்கள் இருக்கைகளுக்கு அடியில் இருக்கும் மஞ்சள் பலூன் போன்ற ஒன்றை கழுத்தில் மாட்டி இடுப்பிலும் கட்டிக் கொண்டு கீழே உள்ள கயிற்றை இழுத்தால் தானாக காற்று நிரம்பும். தேவையானால் வாயால் ஊதி அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதிலுள்ள விளக்கு தானாய் எரியும். சப்தமெழுப்ப விசில் இணைக்கப் பட்டுள்ளது. இது உங்கள் இருக்கைக்கு முன்னுள்ள அட்டையிலும் குறிக்கப்பட்டுள்ளது' என இயந்திரத்தனமாக பணிப்பெண் சொல்வதை மூன்று தடவைக்கு மேல் விமானத்தில் போய் வந்திருப்பவர்கள் கேட்டு அலுத்திருப்பார்கள்.

பயணிகளுக்குப் போலவே தண்ணீரில் அவசரமாக தரையிறக்கும்போது (emergency landing on water) கவனிக்கப்பட வேண்டியதென்ன என்பது பற்றி அடிக்கடி அளிக்கப்படும் (simulator sessions) பயிற்சி வகுப்பகளில் விமானிகள், பணிப்பெண்கள், பணியாளர்கள் ஆகியவர்களுக்கு சொல்லித் தருவது அவர்கள் கேட்க அலுக்கும் அடிப்படை விடயமாகும்.


அருகிலிருந்த நீர்நிலையில் விமானத்தை இறக்க எல்லாம் சாதகமாக இருந்தது.விமானி மற்றும் ஊழியர்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை பயிற்சியின்படியும் விமானத் தொழில் நுட்பத்தின்படியும் செயல்பட்டனர். ஆற்றில் இறக்கப்பட்டவுடன் அங்கேயே இருந்ததால் பாதுகாப்பு பணியாளர்கள் விரைவில் வந்து சேர முடிந்தது. எல்லா பயணிகளும் மீட்கப்பட்டனர்.

நமது பத்திரிக்கைகளில் வரும் சூடான தலைப்பைப் பார்த்து இனி குதிக்காதீர்கள்.
அமெரிக்காவின் Globe & Mail பத்திரிக்கையில் 'ஹூட்ஸன் ஆற்றில் ஒரு அற்புதம'; என தலைப்புச் செய்தி. BBC வானொலியில் 'அற்புதமாக தப்புவிக்கப்பட்ட விமானத்தின் கதை' என்கிறார்கள். 'அமெரிக்க விமானி அற்புத முறையில் தடுத்த விபத்து' என்கிறது Bloomberg. Sky News 'அந்த விபத்து விமானிதான் ஹூட்ஸன் ஹீரோ' என தாம் நம்புவதாகச் சொல்கிறது.

என் அலுவலகத்தில் ஒரு இயந்திரம்தான் சூடான குளம்பி (காபி) உண்டாக்குகிறது. அதுவும் அற்புதம்தானே? அந்த இயந்திரத்தை இயக்கும் என் ஆபீஸ்பாய் ஹீரோதானே?

டிஸ்கி: அன்பர்களே! இது என் சொந்த சரக்கில்லை. ஒரு ஆங்கில பதிவில் படித்ததுதான். நான் என்ன நினைக்கிறேன் என்பதை விட நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என அறிய விரும்புகிறேன்.

Post Comment

Thursday 8 January 2009

லேட்டாயிடுச்சு போலீஸ் அங்கிள்! பள்ளி முக்கியமல்லவா!


இந்த வாரம் நடந்ததுதான். சூடான தகவல்.

அமெரிக்காவின் விர்ஜீனியாவில் ஒரு கார், சாலை நடுவிலுள்ள பிரிப்பான்(Divider)களையும் பக்கங்களிலுள்ள தடுப்பு(Barrier)களையும் மோதி விட்டு பின்னர் சுதாரித்தவாறு முன்னேறுகிறது. ஆனால் வேறெந்த காரையோ மக்களையோ இடிக்கவில்லை. அது வீட்டிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர்கள் பயணித்திருக்கிறது.

காவலர்கள் பார்த்து விட்டனர். இவ்வளவு காலையில் எவன்யா தண்ணி போட்டுட்டு காரோட்டறவன்?. நேத்து அடிச்சதின் ஹேங் ஓவரா இருக்கலாம். வண்டியை மடக்கி, நிறுத்த சைகை செய்ததும், சொன்ன மாதிரி நின்று விட்டது. டிரைவரை பார்த்த காவலர்களுக்கு அதிர்ச்சி. ஆச்சர்யம்.

வண்டியோட்டி ஆறு வயது சிறுவன். வேறு யாரும் காரில் இல்லை.

என்ன தம்பி? என்ன இது?

காலையில் ஸ்கூல் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டேன் போலீஸ் அங்கிள். எப்படியாவது பள்ளிக்கு நேரத்துல போய்ச் சேரனும். என்ன செய்யலாம்னு பார்த்தேன். வீட்டில் அம்மாவோ அப்பாவோ இல்லை. ஆனால் அப்பாவோட கார் நின்றது. காரின் சாவியும் வீட்டில்தான் இருந்தது. எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.

நான் இரண்டு வயதிலிருந்து காரோட்டுகிறேன். நல்ல எக்ஸ்பீரியன்ஸ், எக்ஸ்பர்ட். யாரு மேலேயும் இடித்து விட மாட்டேன். ஆனால் என்ன? தரையில் ஓட்டியதில்லை.
கம்ப்யூட்டரில்தான்.

இப்போதுதான் சாலையில் முதன் முதலாக.

பையன் மேல் வழக்கு பதிய முடியாது. புண்ணியமில்லை. காவல்துறை பொடியனின் பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறது.

Post Comment

உலகம் அறிந்து கொல்ல, புதிய போர்முறை


தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் தினமும் நிகழும் மிருகத்தன நிகழ்வுகளின் படங்களைக் காணும் போது, நாம் இருபத்தோறாம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என நினைக்கத் தோன்றுகிறது. குழந்தைகளும் முதியவர்களும் அப்பாவிகளும் இரக்கமற்ற வகையில் குரூரமாக கொல்லப் படுகிறார்கள்.


கடைத் தெருக்கள், மருந்துக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிக் கட்டிடங்கள், தனியார் குடியிருப்புகள், பள்ளிவாயில்கள், கலாச்சார மையங்கள், சாலைகள், வியாபாரத் தலங்கள், போன்ற மக்கள் கூடுமிடங்கள் குறி வைத்து தகர்க்கப் படுவதை உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

எப்போதும் போல் அரபு நாடுகள் மவுனியாகி விட்டன. இந்த முடியாட்சி நாடுகள் அடுத்த முஸ்லீம் நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை, மனித உரிமை என்றால் என்னவென்றே உணராமல் வேடிக்கை பார்க்கின்றன.


மனித உரிமைக் காப்பதையே முழுநேரத் தொழிலாக(?)க் கொண்ட ஐரோப்பிய நாடுகள், நடக்கும் நிகழ்வுகளிலிருந்து தம் கண்களை திருப்பிக் கொண்டு ஏதுமே நடக்காதது போல் செயல்படுகின்றனர்.


நாளை அமெரிக்காவை பொறுப்பேற்க போகும் பாரக் ஒபாமாவும் மவுனம். சுதந்திரம், மனித உரிமை முதலியவற்றின் முதல் எதிரியான தற்போதைய அதிபர் போல இவரும் அதே அமெரிக்க பாராம்பர்யத்தை பின்பற்றுபவர்தானோ? வெள்ளை மாளிகையில் வெள்ளைத் தோலுக்குப் பதிலாக கருத்த தோலுள்ளவர் ஆனால் உள்ளங்கள் கருத்தவைதான். மாறப் போவதில்லை.


காஸாவில் இத்துணை அப்பாவிகளின் மரணத்துக்கும் காரணமாகிப்போன ஹமாஸ் போராளிகள் நிலத்தடி சுரங்கங்களில். இந்த மரணங்களில் ஹமாஸூக்கும் பொறுப்பிருப்பதை அவர்கள் உணர்கிறார்களா? அவர்களின் செயல்களுக்குரிய விலையை இந்த அப்பாவிகள் தருகின்றனரே. இது உண்மையான அவமானமில்லையா?


இஸ்ரேலுக்கு தனதான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அக்காரணங்கள் அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. தன்னுடைய நிலப்பரப்பை, உரிமையைக் காத்துக் கொள்ள நாடுகளுக்கிடையில் போர் மூளலாம். அவை இரு நாட்டு இராணுவ கேந்திரங்களை, படைகளை, தளவாடங்களை மட்டுமே அழிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய, மக்களின் அன்றாட புழங்குமிடங்களை குறி வைத்து தகர்ப்பதாக இருக்கக் கூடாது. குழந்தைகளை, முதியவர்களை, அப்பாவிகளை குறி வைத்துத் தாக்கும் இஸ்ரேலியத்தனம் மன்னிக்க முடியாதது.

இதுபோன்ற இரக்கமற்ற தாக்குதலை இஸ்ரேலின் வெளியில் வாழும் ஒரு நல்ல மனதுடைய யூதரால் கூட ஏற்றுக் கொள்ள இயலாது.

காஸாவில் இத்தனை நடக்கின்ற போதும் மத்திய கிழக்கலுள்ள அண்டை முஸ்லீம் நாடுகளான சிரியா, சவுதி அரேபியா, ஜோர்டான், எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் முதலிய அனைத்தும் ஊமைகளாய். துருக்கியின் தய்யிப் எர்டோகன், லிபிய அதிபர் முஅம்மர் அல் கடாபி, ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் போன்றவர்கள் மட்டும் தங்களின் பலத்த எதிர்ப்பை உலக அரங்கில் பதிவு செய்தது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

சில நாடுகளில் மக்களின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட போதிலும், மேற்கத்திய நாடுகள் சுதந்திரம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளில் தங்களின் இரட்டை வேடத்தை எப்போதும் போல் அப்பட்டமாக்கியுள்ளன.


பொது மக்களும், குழந்தைகளும் முதியவர்களும் காஸாவில் கொல்லப்படுவதை இன்று வேடிக்கை பார்க்கும் எந்த நாட்டுத் தலைவருக்கும் சுதந்திரம், மனித உரிமை என்ற பேச்செடுக்க இனி எந்த தகுதியோ அதிகாரமோ இல்லவே இல்லை.

Post Comment