ஐயாவுக்கு 'சாவின் சிறப்பும்' ஒரு 'அருக்காணியும்'..... பார்...சல்

பத்தாவது தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருக்கும் நேரம்.

தம்பீ அந்த ஊர் கல்யாணத்துக்கு போக வேணும். எனக்கு போக வசதிப்படாது. கோவிச்சுப்பாங்க. பக்கத்து வீட்டு அக்கா தெருக்கோடி மாமா எல்லாம் போறாங்க. நீயும் அவுங்க கூட போய் விட்டு கல்யாணத்துல கலந்து விட்டு நூற்றி ஒரு ரூபா மொய் வைத்து விட்டு வருகிறாயா?

எனக்கிதெல்லாம் தெரியாதேம்மா?

என்ன பெரிய விடயம். வர வர பெரிய பிள்ளைதானே. பார் பெரிய மாமா வீட்டில சின்ன மச்சான்தான் போரான். போய்ட்டு வாடா ராசா. காரிலதானே போகப்போறே.

சரிம்மா.

புதுச் சட்டை, புதுக் கைலி, கையில ரொக்கம். பெரிய மனுசன் கௌம்பியாச்சுல்ல. அங்க வஸ்திரம் மட்டும்தான் குறைவு.

ஊரில் போய் இறங்க இரவு 7மணி.
''மச்சான் விடியல் காலையில 5மணிக்கு மேலதான் கல்யாணம். பக்கத்தூரில போய் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்திட்டு வருவோம்'' - இது மாமா மகன்
''இல்ல மச்சான் தெரியாத ஊர்ல வம்பு என்னாத்துக்கு''
''சே. நாங்க சின்னப்பசங்களே பயப்படலே. நீ என்ன பயப்படறே. சைக்கிள் எடுத்து ஒரு மிதி. 2 மணிக்கு வந்திட்டா அப்புறம் என்னா?'' - இது கூட வந்திருக்கிற வானரப் பட்டாளம்
மச்சான் போய், இரவு வாடகைக்கு சொல்லி, எடுத்த ஐந்து மிதிவண்டிகளில் பயணம்
நாங்கள் போன நேரம் அந்த ஊரில் அன்று திருவிழா நாள்.
''வேணாம் மச்சான் ஒரே கூட்டமா இருக்கு. லெப்ட்ல ஒடிச்சி போயிரலாம்'' - இது நான்
''கூட்டமா இருந்தா என்னா? சும்மா வா மச்சான்'' - இது மாமா மகன்

போலீஸ் மாமா பிடித்து விட்டார். "யார்ரா நீங்க? ராத்திரில லைட் இல்லாம சைக்கிள்ல சுத்தறது?"
"பக்கத்து ஊரு கல்யாணத்துக்கு வந்தோம். சினிமா பார்க்க வந்தோம்'' - நான்
''சாயபு பசங்களா?'' சைக்கிளோடு எங்களையும் தள்ளிக் கொண்டு போய் காவல் நிலையத்தில்
''இல்ல சார் இனிமே வர மாட்டோம் வாடக வண்டி சார்''- நான்
''யோவ் ஏட்டு. பசங்கள ஒரு பதினைந்து நாள் உள்ள வச்சாதான் சரிப்படுவானுங்க. நீ பாத்துக்க''. கிளம்பிட்டார்

திடீரென்று காவல் நிலையத்தில் பயங்கர சத்தம். திரும்பிப் பார்த்தா நம்ப பசங்க நாலு பேரும் 'ஓ'வென்ற இரைச்சலோடு பேரழுகை. நமக்கும் தொண்டை வரை..... வெளி வராத அழுகை.

அதில ஒருத்தன் கைலி ஈரமாகி அடியில திட்டாக. கைலியிலிருந்து சொட்டு சொட்டா.....
அங்கு வந்த ஏட்டு, 'ஐயைய்ய' அவனுக்கு மட்டும் ஒரு அடி. சத்தம் பெரிதாக ஒங்கி குரலெடுக்க ஏட்டின் அதட்டல்
''சார். விட்ருங்க சார். இனிமே வர மாட்டோம் சார்'' - நான்
''எஸ்ஐ புடிச்சிருக்கார் நான் உட கூடாதய்யா'' - ஏட்டு

"சரி இங்க வா. எவ்வளவு வச்சிருக்கீங்க''
ஆளுக்கு நூற்றிஒன்று. மொய், ஏட்டுக்கு.

"பசங்களா! பாருங்க!. நேரா கொட்டகைல போய் எம்பேர சொல்லுங்க. காசு வாங்காம உள்ள விட்ருவாங்க. சரியா"
"சார் மணி பன்னென்டு ஆவப் போகுது. படம் ஆரம்பிச்சிருப்பாங்க. நாங்க திரும்ப போயிடறோம் சார்" - நான் "டேய் ஒழுங்கா கொட்டகைக்கு போய் பாத்துட்டுதான் போகனும். போங்கடா"

அப்புறம் கொட்டகைக்கு போய் ஏட்டு பேரச் சொல்லி பாதிக்கு மேல படம் பார்த்து.....
'மச்சான்! யாருக்கும் தெரியாம நடந்த விஸயம் நமக்குள்ள இருக்கட்டும்' - இது மாமா மகன்
டேய் வாயை மூடு. இனி வாயைத் தொறந்தே....... - இது நான்

கல்யாணம் முடிந்து கிளம்பலாம்னு பார்த்தால்.......
கூட வந்த பக்கத்து வீட்டு அக்கா - தம்பீ. புள்ளைக்கு உடம்பு சரியில்ல. கடையில போய் 'ஒரு சாவின் சிறப்பு' வாங்கிட்டு வாப்பா?
புள்ளைக்கு உடம்பு சரியில்ல! சாவின் சிறப்பா? என்னக்கா சொல்றே
நீ கடையில போய் அப்படியே கேள்றா தம்பீ.
போக்கா நான்லாம் இந்தாட்டத்துக்கு வர்ல
வந்த இடத்தில யார்றா இருக்கா? போய்ட்டு வாடா.
கடையில போய், தயங்கித் தயங்கி, 'ஒரு சா....வின்.....
ஹேய்... இங்க ஒரு சாவின் சிறப்பு கொடுப்பா?
கொடுத்தார். அது Salvin Syrub

கார் ஊருக்கு திரும்புகிறது
வழியில் கோடி வீட்டு மாமா மாத்திரை எடுத்து வர மறந்துட்டாராம்.
மாத்திரை வாங்கிட்டு வா தம்பீ
ஏங்க நாந்தான் கெடைச்சனா? இத்தனை பசங்க இருக்காங்கள்லே. மாத்திரை பேர் என்னான்னு சொல்லனும். இல்லன்னா மாத்திரை அட்டைய காமிக்கணும். என்னா மாத்திரைங்க? - நான்
வண்டி சக்கரம் ஹீரொயினி பேர் என்னா? - இது மாமா
மாமு இதெல்லாம் ரொம்ப ஓவர் - இது என் மச்சான்
இல்ல தம்பி. மாத்திரை அந்த பேர் மாதிரிதான் வரும் - மாமா
அது சரிதா - பக்கத்து வீட்டு அக்கா
அதில்லம்மா. படத்துல அவ பேர் என்னா? - - மாமா
மாமு நீ போற வரைக்கும் தாங்குவயா - இது என் மச்சான்
டேய் நீ சும்மா இரப்பா - டிரைவர் வண்டியை நிறுத்திட்டு கடை கடையா பொய் சரிதாவுடைய பேர் விசாரிக்க போய் விட்டார்
15 நிமிடத்துல திரும்ப வந்து - கடைசி கடை வரைக்கும் கேட்டாச்சு, யாருக்கும் தெரியலெங்க
மாமு ம்ஹிம் நீ பூட்ட கேசு - மச்சான்
இறங்கி ஓடி ஐந்து நிமிடத்தில திரும்ப வந்த மச்சான் 'கண்டு பிடிச்சுட்டேன்' 'அருக்காணி'
அட ஆமாந்தம்பீ. அந்த மாத்திரைதான் - மாமு
ஏங்க என்ன வெளையாடறீங்களா. அருக்காணி மாத்திரையா? -நான்
என்ன செய்ய…..
திரும்ப தயங்கித் தயங்கி - 'அருக்...காணி... மாத்....திரை...'
எதுக்கு சாப்பிடறது - கடைக்காரர்
BP, கொலஸ்ட்ரால்
அதா..... ஏதோ Hல் ஆரம்பிக்கும் பேருள்ள மாத்திரை கொடுத்தார். எனக்கும் இப்ப மறந்து விட்டது.

வாயைக் கொடுத்துட்டு வாங்கி கட்டிக்காதீங்க

வீட்டில் விருந்தினர் இல்லாதிருந்தால், என் குடும்பத்தார் எப்போதும் தரையில் பாயில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். எல்லோரும் உண்டு முடித்து எழுந்த பின்னரும் என் மகன் காலை நீட்டிக் கொண்டு முடிக்காமலே இருந்தான். ''என்னடா தம்பீ காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாயே! சாப்பாட்டுக்கு ஒரு மரியாதை இல்லையா? சீக்கிரம் முடித்து விட்டு எழு" என்றேன்.

"சரி டாடி. இனிமேல் சாப்பாட்டை, வாங்க சாப்பாடு! போங்க சாப்பாடு! உடகாருங்க சாப்பாடு! என்று மரியாதையாக சொல்கிறேன்" என்கிறான்.
என் தங்கமணியை அழைத்து "என்ன இவன் இப்படி பேசுகிறானே!" என்றேன். அதற்கவன், "டாடி பாருங்கள். முழங்கால்வரை ஒழுங்காக மூடி, இறைவனின் பெயர் கூறித்தான் துவங்கினேன். வேறென்ன சாப்பாட்டிற்குள்ள மரியாதை?" எனறான். தங்கமணியோ "சரிதானே! அவன் கிட்ட வாயைக் கொடுத்துட்டு ஏங்க வாங்கி கட்டிக்கறீங்க" என்கிறார்கள். என் மகனுக்கு அப்போது வயது எட்டு.


இப்போதுள்ள பிள்ளைகள் குசும்பனையே என்ன விலை என்று விலை பேசும் குழந்தைகளாக உள்ளனர். இது போல ஒரு தொடர் பார்ப்போமா?

சிறு குழந்தைகளுக்கு திமிங்கலம் பற்றி ஒரு ஆசிரியர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். 'திமிங்கலம் ஒரு மிகப்பெரிய பாலூட்டிதான் என்றாலும் அது மனிதனை விழுங்க முடியாது. ஏனெனில் அதன் குரல்வளை மிகச்சிறியது'
ஒரு குழந்தை எழுந்து 'ஜோனாவை(நபி யூனூஸ்) திமிங்கலம் விழுங்கி இருக்கிறதே'
எரிச்சலடைந்த ஆசிரியர், 'இல்லம்மா. திமிங்கிலத்தால் மனிதனை விழுங்க முடியாது. அது சாத்தியமானதல்ல'

அதற்கந்த குழந்தை, 'நான் சொர்க்கம் போகும்போது அதை ஜோனாவிடம் கேட்பேன்'
அது கேட்ட ஆசிரியர், 'ஜோனா நரகத்தில் இருந்தால்....'
குழந்தை, 'அப்ப நீங்க கேளுங்க சார்'


ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை பிள்ளைகளை படம் வரையச் சொல்லி விட்டு அவ்வப்போது குழந்தைகள் எவ்வாறு வரைகின்றன என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை வெகு சிரத்தையாக எதையோ வரைவதைப் பார்த்து விட்டு, 'நீ என்னம்மா வரைகிறாய்?' எனக் கேட்க 'நான் கடவுளை வரைகிறேன் டீச்சர்' என்றது.

சிறிது தாமதித்த ஆசிரியை, 'கடவுள் எப்படி இருப்பார் என்றுதான் யாருக்கும் தெரியாதே' எனச் சொல்ல
தன்னுடைய வரைதலினின்றும் தலையைக்கூட உயர்த்தாமல் அக்குழந்தை பளிச்சென்று சொன்னது
'இன்னும் இரண்டு நிமிடம் கழிந்த பின் எல்லோருக்கும் தெரிந்து விடும்'


தன் அம்மா சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்த ஒரு குழந்தை, 'ஏம்மா முழுதும் கருப்பாக உள்ள உன் முடியில் சில முடிகள் மட்டும் வெள்ளையாக இருக்கிறதே! அது ஏனம்மா?' எனக் கேட்க, அந்த அம்மா

'அது வந்து, எப்போதெல்லாம் நீ தப்பு செய்து என்னை கோபப்படுத்தி அழ வைக்கின்றாயோ, அப்போதெல்லாம் ஒரு முடி வெள்ளையாகி விடும்' என்றார்கள்.
இந்தப் புதிய அறிவைப் பற்றி சிறிது யோசித்த குழந்தை உடனே கேட்டது, 'அதனால்தான் பாட்டி முடி எல்லாமே வெளுத்து விட்டதா?'


உடலின் இரத்த ஓட்டத்தைப் பற்றி ஒரு ஆசிரியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை இன்னும் தெளிவு படுத்த, 'பிள்ளைகளே ! நான் இப்போது தலைகீழாக நின்றால் எல்லா இரத்தமும் என் தலைக்கு பாய்ந்து முகமெல்லாம் சிவந்து விடும்'
குழந்தைகள் எல்லாம் 'ஆமாம் டீச்சர்' என்றார்கள்.

'பின் ஏன் நான் நேராக சாதாரண நிலையில் நிற்கும் போது மட்டும் என் கால்களுக்குள் இரத்தம் பாய்ந்து கால்கள் சிவப்பதில்லை'
ஒரு பையன் எழுந்து சொன்னான் 'உங்கள் தலை போல, காலினுள்ளேயும் வெற்றிடம் இல்லை போலிருக்கிறது?'


ஒரு கிறித்துவ சிறார் பள்ளியின் உணவு இடைவேளையின் போது, மேசையின் தொடக்கத்தில் ஒரு தட்டில் ஆப்பிள்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த தட்டிற்கு அருகில் ஒரு குறிப்பும் வைக்கப்பட்டிருந்தது. ''ஒன்று மட்டும் எடுக்கவும். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்''
அந்த சாப்பாட்டு வரிசையின் கடைசியில் ஒரு தட்டு நிறைய சாக்லெட்டும் பிஸ்கட்டுகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த தட்டிற்கு பக்கத்தில் ஒரு பையன் குறிப்பெழுதி வைத்தான்
''வேண்டும் வரையில் எடுத்துக் கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளை பார்த்துக் கொண்டிருக்கிறார்''


பிள்ளைகளை வைத்து குழாம் புகைப்படம் எடுத்த பின்னர் ஆசிரியர் மாணவர்களுக்கு தனித்தனியாக ஒரு புகைப்படம் விற்க விரும்பி, ''எல்லோரும் இதை வாங்கிக் கொள்ளுங்கள். சில வருடங்கள் கழித்து பாருங்கள். அருந்ததீ வக்கீல் ஆயிடுச்சு, முஹம்மதும், வஹீதாவும் டாக்டர் ஆயிட்டாங்க, கலையரசன் பொறியியலாளன் என்று பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கும்''.

பின்னாலிருந்து ஒரு பையன் ''இதிலிருக்கிற ஆசிரியர் இறந்துட்டார் என்றால் கூடவா? "

மனிதர்களில் புதிய காய்ச்சல்! அபாயம்!!


Swine Flu (Influenza) எனப்படும் இந்த பன்றிக் காய்ச்சல் பன்றிகளுக்கு ஏற்படும் ஒருவகை சுவாசக்குழல் நோயாகும். இவை சாதாரணமாக மனிதர்களை தாக்குவதில்லை. எனினும் சில மனிதர்களை இது தாக்கியுள்ளதாகவும் இது ஒரு மனிதரிலிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் கொண்டதெனவும் மருத்துவ பதிவுகளில் குறிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் 2005 முதல் பிப்ரவரி 2009 வரை 12 பேர் அமெரிக்காவின் பத்து மாநிலங்களிலிருந்து இந்நோயால் பாதிக்கப் பட்டிருந்தனர். மார்ச் 2009ல் இந்த வகை பன்றிக் காய்ச்சல்(H1N1) நோய் கலிபோர்னியா, டெக்ஸாஸ், மெக்சிகோ முதலிய மாநிலத்திலிருந்தும் உள்ள நோயாளிகளிலிருந்து மனிதரிலும் பரவும் என ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது.

சிக்கன் குனியா போல இப்போது பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. மெக்சிகோவில் மட்டும் இதன் பாதிப்பால் சுமார் 80பேர் வரை இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முழு அமெரிக்காவுக்கும் பரவி வருவதாகவும் சுமார் 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.



இது மனிதர்களுக்கிடையே மேலும் பரவாமல் தடுக்க மெக்சிகோவின் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படடுள்ளன. அவசர நிமித்தம் வெளியில் செல்பவர்களும் (mask)முகமூடி அணிந்தே செல்கின்றனர்.

சிக்கன் குனியா நோய் பொதுவாக குழந்தைகளில் அதிகம் பரவாமல் வயதானவர்களையே கடுமையாக தாக்குவதாக இருந்தது. இதற்கு நேர்மாறாக இந்த (swine flu) பன்றிக் காய்ச்சல் நோய் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விட்டதெனவும் வெள்ளை மாளிகை நிகழ்வுகளை உற்று நோக்கி வருவதாகவும் தேவையான முனனெச்சரிக்ககை ஏற்பாடுகள் தொடங்கி விட்டதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நண்பர்களே! பார்த்து இருந்து கொள்ளுங்கள்.