Tuesday 29 January 2008

மாற்றத்திற்கான காலம் இன்னும் வரவில்லையா? – குடியரசு நாள் விவாதம்


சமீபத்தில் பத்திரிக்கையாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. குல்தீப் நய்யார் அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த அந்தந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவில் பாராளுமன்ற மரபுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றி ஒரு வகுப்பபெடுத்தார். அதில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக, அப்போதைய இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் உயர்ந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக பாபு இராஜேந்திர பிரசாத் அவர்கள் இருந்தார்கள். அதன் உறுப்பினர்களாக டாக்டர்.அம்பேத்கர், பண்டிட் ஜவஹர்லால் நேரு முதலியோர் இருந்தனர்.

அக்குழு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அதை ஏற்று செயல் வடிவம் தந்து அமுலாக்கிய நாளில் பாபு இராஜேந்திர பிரசாத் இறுதி உரை நிகழ்த்தினார். அதில் இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமாகிய இதை படிப்பறிவற்றவர்களெல்லாம் ஓட்டுரிமை வடிவில் பெற்று நாடாளுமன்றமும் பாராளுமன்றமும் வரப் போகிறார்கள் என்று வேதனை தெரிவித்து முடித்தாராம். அப்போது அங்கிருந்த பண்டிட் நேரு அவர்கள் தலைவரது பேச்சிற்கான சிறு விளக்கம் தர அனுமதி பெற்று பேசினாராம்.

அதில், நாட்டின் சுதந்திர போராட்டத்தில், படித்தவர்களில் பெரும்பாலோர், கலந்து கொள்ளாதவர்களாகவும் அன்னியருக்கு அடிவருடிகளாகவுமே இருந்தனர். படிக்காத இந்த பாமர மக்கள்தான் குடும்பத்தையும் தொழிலையும் மறந்து தெருக்களில் இறங்கி போராட்டம் செய்தனர். எனவே சுதந்திரத்தின் பலனை படிக்காத இந்தப் பாமரர்கள் அதிகம் அனுபவித்தலே முறைமையாகும் என்று பேசினாராம். அதை பாபு இராஜேந்திர பிரசாத்துடன் குழுவிலிருந்த மற்ற அறிஞர்களும் ஆமோதித்தனராம்.


எந்தவொரு பொறுப்புக்கும் அடிப்படையான சில தகுதிகளை எதிர்பார்க்கும் இக்காலத்தில், நாடு சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் குடிமகன் என்ற தகுதியைத் தவிர வேறெந்த அடிப்படைத் தகுதியுமற்ற, படிப்பறிவற்ற நபர்களை ஆளும் மன்றங்களுக்கு அனுப்புதல் அவசியம்தானா? நேரு சொன்ன கருத்து தற்போதைய நிலையில் காலாவதியாகி விட்டதாக கருதலாமா? சில தகுதிகளை வரையறுப்பது நாட்டுக்கு நல்லதில்லையா?

இதில் எனக்கென்று ஒரு எண்ணம் உள்ளது – அது தான் நாட்டுக்கு சிறந்ததென்றும் தோன்றுகிறது. உங்களுக்குள்ளும் ஒரு எண்ணம் தோன்றலாம். தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே. படிப்பவர்களுக்கு இது குறித்த சிந்தனையைத் தூண்டலாமே.

Post Comment

Sunday 27 January 2008

வளைகுடா நண்பர்களே! சரிதானா இது?

வளைகுடாவுக்கு பணியில் வந்திருக்கும் நண்பர்கள், இங்கு வந்தவுடன் அவர்களில் எவ்வாறு மாற்றங்கள் எற்படுகின்றன என்பதை இப்படங்கள் விளக்குகின்றன.

நீங்கள் வந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இவற்றில் குறிப்பிட்டுள்ளது சரிதானா என்று பாருங்கள்.











வளைகுடா வர விரும்பும் நண்பர்களே! பார்த்துக் கொள்ளுங்கள்
சும்மா விளையாட்டுக்குத்தான்.
யாரும் பயந்திர போறீங்க.

Post Comment

Saturday 26 January 2008

வியக்க வைக்கும் பாடல்கள்

தமிழில் ஒரு பொருளுக்கு இத்தனை சொற்கள் இருக்கின்றதென்பதை இப்பாடல் விளக்கும் திறன் வியக்கச் செய்கிறது. எழுதியது யார் என்பது மறந்து விட்டது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன்
பூசுமென்றாள்
மாதங்கமென்றேன்
யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்பு சீர் வேழமென்றேன்
தின்னுமென்றாள்
கம்பமா என்றேன்
நற்களியாமென்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே பாணீ

அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனவி கேட்கிறாள்.

புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்

புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.

இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.

அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.

புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்

அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.

யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.

பாணர்கள் எக்காலத்திலும் பொருளுள்ளவராய் வாழ்ந்ததில்லையாம். கிடைக்கும் பெரும் பரிசில்களை எல்லோருக்கும் ஈந்து விட்டு அடுத்த வேளை உணவுக்கு எதிரபார்ப்பவராய் இருப்பர் என்ற குறிப்பையும் முதலிரு வரிகளுக்கிடையே தருவது தெரிகிறதல்லவா?
_______________________________________________________________________________

அடுத்து,
சிலேடை என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கவி.காளமேகப் புலவர். அவருடைய பாடல்களை படிக்குந்தோறும் வியத்தகு முறையில் இரு பொருட்களை இணைக்கும் திறம் கண்டு மனம் மகிழும். அவருடைய பாடல்களில் பல தமிழிணையத்தில் வந்துள்ளது.
இணையத்தில் வராத ஒரு சிலேடைப் பாடல்

வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன
இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை
மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே.

இதை இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.
1. மளிகைக்கடைக்காரர்; பெரு வியாபாரியிடம்: வெங்காயம் சுக்காக காய்ந்து விட்ட பின் வெறும் வெந்தயத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு வியாபாரம் செய்வது. வீணாகாத நல்ல சீரகம் கொடுத்தீர்களானால் பெருங்காயம் இல்லாவிட்டாலும் எப்படியாவது கடையை கொண்டு செலுத்தி விடலாம்.

2. கடவுளின்; முன் அடியான்: வெம்மையான இவ்வுடம்பு வற்றிக் காய்ந்து விட்ட பின் இவ்வுலகில் இவ்வுடம்பைச் சுமந்து வாழ்ந்திருப்பதால் என்ன பயன். சீர் பொருந்திய இடமாகிய உன் திருவடிகளை எனக்குக் கொடுத்து விடுவீரேயானால் இவ்வுடம்மைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்

எவ்வளவு அழகாக பொருந்திப் போகிறதென்று பாருங்கள்.

பொருள் சொன்னதில் பிழை இருந்தால் சுட்டுங்கள். திருத்தி விடுவோம்.

Post Comment

Thursday 24 January 2008

சிரிக்கவும் சிந்திக்கவுமான பாடல்கள்

தமிழ் இலக்கியமென்றெல்லாம் பெரிதாக ஒன்றும் பரிச்சயமில்லை. அவ்வப்போது கிடைக்கும் புத்தகங்களை படிப்பேன். படித்ததில் சில புத்தகங்கள் சில நேரம் ஆஹா என்று ஆச்சரியப்பட வைப்பதுண்டு. பழம் இலக்கியங்கள் வெகுவாக ஆச்சரியப்பட வைக்கின்றன. அவர்களுக்கு மாற்றாக இன்னும் யாரும் வரவில்லையே என்று தோன்றும். 'யாரும் வந்திருப்பார்கள். நீ என்னத்த படிச்சு கிழிச்சிட்டே!' என்று என்னை நானே சமாதானமும் செய்து கொள்வேன்.

சிறுவனாயிருக்கும்போது அழ.வள்ளியப்பா சிறுவர் பாடலில் வெட்டிக்கதைகள் பேசி வீண்காலம் கழிப்பவர்களைப் பற்றி ('உங்கள் பதிவுகள் மாதிரி' என்று யாராவது சொன்னால்.... ஹூம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வர.) ஒரு பாடல் எழுதியிருந்ததை படித்தேன். இன்றும் மனதினின்றும் அகலாதது.

நான்கு நண்பர்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவன் வெள்ளெலியைப் பார்த்து தன் நண்பர்களிடம் சொல்வதையும் அதை ஒவ்வொருவரும் அவரவர் அறிவில் பேசுவதையும் பற்றி
(பாடலில் நினைவிலிருந்த ஒரு பகுதி)

'கட்டையா வெள்ளெலி கண்டாயோ
என மொட்டையன் கூறிட கட்டையனும்
காது குடைந்திட ஓர் இறகை அதில்
கண்டு பிடுங்கிவா என்றுரைக்க

ஏதிடா குன்புத்தி கட்டையடா அது
என்ன உடும்போ இறகெடுக்க
என்றே உரை செய்த மொட்டையனை
கட்டை ஏதுமறியாத மூடனென்றான்'
... ... ... ... ...
என்று எழுதியிருப்பார்.
(யாருக்காவது சில தமிழிணைய விவாதங்கள் நினைவுக்கு வந்தால் ... நான் பொறுப்பில்லை)

கடைசியில்
'இவ்வாறு வீண்காலம் போக்குவார் தோழர்களே!'
என்று சிரிப்பாகச் சொல்லி சிந்தனைக்கும் விருந்து தந்து முடித்திருப்பார்

அந்த வகையில் சில காலங்களுக்கு முன் நான் படித்த கீழுள்ள நாட்டுப்புற பாட்டும் என் மனதைக் கவர்ந்தது

சோகமான அல்லது ஒப்பாரி இராகத்தில் உள்ள இப்பாட்டின் கருத்துக்கள் ஒரு புதுவிதமான இரசனையை உருவாக்குகிறது. கவிதையின் பாங்கு, அதன் தடையில்லா ஓட்டம் சிறப்பானது.
இதுதான் இப்படியாகி விட்டது. அடுத்தது என்னவோ என்று ஆவல் கொள்ளச் செய்து
அடுத்ததும் அப்படித்தான் என்று அறிந்தவுடன், சரி, அடுத்ததில் வெற்றிதான் என எதிர்பார்க்கச்செய்து அதிலும் அப்படித்தான் என்று எதிர்பார்ப்புகளுடன் கேட்பவரை (படிப்பவரை) கொண்டு செல்லும் பாட்டு. வரிகளுக்கிடையில் 'அட செய்ததில் எதுவுமே வெற்றியில் முடியவில்லையே' என்று ஆழ்நிலை சோகம் இழையோடும்.

இனி பாட்டு - நினைவிலிருந்து எழுதியதுதான் - தவறிருந்து அறிவுறுத்தினால் திருத்தப்படும். எனக்கு பிடித்தது.

முள்ளு முனையிலே
மூணு குளம் வெட்டி வச்சேன்
இரண்டு குளம் பாழு
ஒண்ணுல தண்ணியே இல்ல

தண்ணியில்லாக் குளத்திலே
மண்ணெடுத்தான் மூணு பேரு
இரண்டு பேரு மொண்டி
ஒத்தனுக்கு கையே இல்ல

கையில்லா கொசவன்
வணஞ்ச சட்டி மூணு சட்டி
இரண்டு சட்டி பச்சை
ஒண்ணு வேகவே இல்ல

வேகாத சட்டியிலே
போட்டரிசி மூணரிசி
இரண்டரிசி கருக்கரிசி
ஒண்ணு வேகவே இல்ல

வேகாத அரிசிக்கு
மோர் கொடுத்தது மூணெருமை
இரண்டெருமை மலடு
ஒண்ணு ஈனவே இல்ல

ஈனாத மாட்டுக்கு
விட்ட காடு மூணு காடு
ரெண்டு காடு சொட்டை
ஒண்ணுல புல்லே இல்ல

புல்லில்லா காட்டுக்கு
கந்தாயம் மூணு வெள்ளி
ரெண்டு வெள்ளி கள்ள வெள்ளி
ஒண்ணு செல்லவே இல்ல

செல்லாத வெள்ளிக்கு
நோட்டக்காரன் மூணு பேரு
ரெண்டு பேர் குருடு
ஒத்தனுக்கு கண்ணே இல்ல

கண்ணில்லா குருடன்......
... ... ... ...


(அடுத்த பதிவு - ஒரு பொருள் பல சொல் பாடல் பற்றி)

Post Comment

Wednesday 23 January 2008

நான் செத்துப் பொழச்சவன்டா!

ஜனவரி 2008ல் ஒரு நாள். அங்கோல் எனும் ஸேண்டியகோ மாநிலத்திலுள்ள ஒரு சிலி கிராமம். அங்கே 81 வயதான ஒருவரை காலையில் எழுப்ப முயற்சித்த போது உடம்பு சில்லிட்டு, மூச்சில் காற்றில்லை. உடனே அப்பகுதி வானொலியில் தகவல் சொல்லப்பட்டு, இறுதி யாத்திரை தயாரிப்புக்கான ஆட்கள் வரவழைக்கப்பட்டார்கள். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முயன்றபோது, பூக்களை உதறி விட்டு எழுந்து அமர்ந்து, குடிக்க கொஞ்சம் தண்ணீர் கேட்டு, வந்திருந்த உறவினர்களை அசர வைத்தாராம் அந்த மனிதர் - இன்னும் வாழ வயதிருக்கிறது அந்த வாலிபருக்கு.
தண்ணிய போட்டா சந்தோஷம் பொறக்கும்
தள்ளாடி நடந்த உல்லாசம் இருக்கும்
என்னென்ன கவலை எல்லாமே மறக்கும்
எப்போதும் மனசு நல்லாருக்கும்

நான் உயர்நிலை படித்துக் கொண்டிருந்த போது எனது நண்பர் அர. மணி வண்ணணின் தாயார் சொல்வார்கள். எனது நண்பர் பிறந்த போது, அவர் வீட்டில் பிரசவம் பார்த்த பெண், குழந்தை இறந்து பிறந்து விட்டதாக அறிவிக்கவும், சிறிது நேரத்தில் மயானம் எடுத்துச் சென்றார்களாம். மயானத்தில் கடைசி நேரத்தில் குழந்தை சிறுநீர் கழித்ததைப் பார்த்துதான் குழந்தை உயிருடன் இருப்பதாக அறிந்து வீட்டுக்கு கொண்டு வந்தார்களாம்.
நான் செத்துப் பொழச்சவண்டா!
எமனைப் பார்த்து சிரிச்சவண்டா!!

எனது தந்தைக்கு அடுத்த உறவினர். உடம்பு சுகமில்லாமல் இருந்து டாக்டர் பரிசோதித்து பின், இறந்ததாக ஊருக்கே அறிவிக்கப்பட்டு, எல்லாம் அழுது புலம்பும் வேளை, சப்தம் தாங்காமல் எழுந்து உட்கார்ந்து விட்டார்.
தெய்வமே! தெய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!

தெரிந்து உயிர் பிழைத்தவர்கள் இவர்கள். தெரியாமல் எத்தனை பேர் மண்ணில் புதைக்கப்பட்டு விட்டார்களோ!.. நினைத்தாலே.... ஐயோ!...

உங்கள் அனுபவத்தில் இதுபோல் ஏதாவது நடந்திருக்கிறதா?

Post Comment

Sunday 13 January 2008

உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

சாதாரணமாக யாரும் நமக்கு எந்த கெடுதலோ விபத்தோ வரக்கூடாதென்றுதான் நினைப்பார்கள். சிலர் நமக்கெல்லாம் அப்படியெதுவும் நேர்ந்து விடாதென்றும் இருப்பார்கள். ஆனால் எதுவும் சொல்லிக் கொண்டு வருவதில்லையே.

“கால் மணி நேரம் முன் என்னிடம் நன்றாக பேசி விட்டுத்தான் போனார். அதற்குள்ளாக விபத்து என்று சொல்கிறார்கள்”,
“இரவு வீட்டுக்குப் போகுமுன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். விடிந்ததும. இறந்து விட்டதாக செய்தி வருகிறது”
என்றெல்லாம் எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நமக்கும் அது போல் நேரலாம் என்பதாக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.

இப்போது வெகு சாதாரணமாக கைப்பேசி பழக்கத்தில் வந்து விட்டது. வெளியில் நடமாடும் எல்லோரது கைகளிலும் சாதாரணமாக கைப்பேசி உபயோகத்தை காணமுடிகிறது.

விபத்து நடந்து விட்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவரது கைப்பேசியில் கடைசியில் தொடர்பு கொண்ட எண்ணை (Last Dialed Number) அழைப்பது காவல் துறையினரிடம் சாதாரண பழக்கத்தில் உள்ளது. ஆனால் அது எப்போதும் உபயோகமாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை. உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும், பாதிக்கப்பட்டவரது இரத்த குரூப், ஒவ்வாமை தகவல்கள், நோய்கள் பற்றிய விபரம் அறிவதிலும் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டு மரணத்திலும் முடிவதுண்டு.

எனவே நமது கைப்பேசியில் அவரவர்கள் ‘ICE - In Case of Emergency’ என்று ஒரு பெயரை வைத்து, அதில் ஒன்று, இரண்டு என்று நம்மைப் பற்றிய விபரம் அறிந்தவர்கள், முக்கிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோரது எண்ணை குறிப்பிட்டு வைக்க வேண்டியது அவசியம்.
அது அவசர நேரத்தில் எல்லோருக்கும் மிக உதவியாக இருக்கும்.
தெரிந்திருந்தும் செய்யாமல் விட்டிருந்தால் உடனே ICE போடுங்கள்.

தேவையேற்படாமல் இருக்க பிரார்த்திப்போம்.
தேவையேற்பட்டால்….
பின்னர் வருத்தப்பட்டாலும் உபயோகமில்லாது போகும்.

Post Comment