Thursday, 24 January 2008

சிரிக்கவும் சிந்திக்கவுமான பாடல்கள்

தமிழ் இலக்கியமென்றெல்லாம் பெரிதாக ஒன்றும் பரிச்சயமில்லை. அவ்வப்போது கிடைக்கும் புத்தகங்களை படிப்பேன். படித்ததில் சில புத்தகங்கள் சில நேரம் ஆஹா என்று ஆச்சரியப்பட வைப்பதுண்டு. பழம் இலக்கியங்கள் வெகுவாக ஆச்சரியப்பட வைக்கின்றன. அவர்களுக்கு மாற்றாக இன்னும் யாரும் வரவில்லையே என்று தோன்றும். 'யாரும் வந்திருப்பார்கள். நீ என்னத்த படிச்சு கிழிச்சிட்டே!' என்று என்னை நானே சமாதானமும் செய்து கொள்வேன்.

சிறுவனாயிருக்கும்போது அழ.வள்ளியப்பா சிறுவர் பாடலில் வெட்டிக்கதைகள் பேசி வீண்காலம் கழிப்பவர்களைப் பற்றி ('உங்கள் பதிவுகள் மாதிரி' என்று யாராவது சொன்னால்.... ஹூம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வர.) ஒரு பாடல் எழுதியிருந்ததை படித்தேன். இன்றும் மனதினின்றும் அகலாதது.

நான்கு நண்பர்கள் ஒன்றாக இருக்கும்போது ஒருவன் வெள்ளெலியைப் பார்த்து தன் நண்பர்களிடம் சொல்வதையும் அதை ஒவ்வொருவரும் அவரவர் அறிவில் பேசுவதையும் பற்றி
(பாடலில் நினைவிலிருந்த ஒரு பகுதி)

'கட்டையா வெள்ளெலி கண்டாயோ
என மொட்டையன் கூறிட கட்டையனும்
காது குடைந்திட ஓர் இறகை அதில்
கண்டு பிடுங்கிவா என்றுரைக்க

ஏதிடா குன்புத்தி கட்டையடா அது
என்ன உடும்போ இறகெடுக்க
என்றே உரை செய்த மொட்டையனை
கட்டை ஏதுமறியாத மூடனென்றான்'
... ... ... ... ...
என்று எழுதியிருப்பார்.
(யாருக்காவது சில தமிழிணைய விவாதங்கள் நினைவுக்கு வந்தால் ... நான் பொறுப்பில்லை)

கடைசியில்
'இவ்வாறு வீண்காலம் போக்குவார் தோழர்களே!'
என்று சிரிப்பாகச் சொல்லி சிந்தனைக்கும் விருந்து தந்து முடித்திருப்பார்

அந்த வகையில் சில காலங்களுக்கு முன் நான் படித்த கீழுள்ள நாட்டுப்புற பாட்டும் என் மனதைக் கவர்ந்தது

சோகமான அல்லது ஒப்பாரி இராகத்தில் உள்ள இப்பாட்டின் கருத்துக்கள் ஒரு புதுவிதமான இரசனையை உருவாக்குகிறது. கவிதையின் பாங்கு, அதன் தடையில்லா ஓட்டம் சிறப்பானது.
இதுதான் இப்படியாகி விட்டது. அடுத்தது என்னவோ என்று ஆவல் கொள்ளச் செய்து
அடுத்ததும் அப்படித்தான் என்று அறிந்தவுடன், சரி, அடுத்ததில் வெற்றிதான் என எதிர்பார்க்கச்செய்து அதிலும் அப்படித்தான் என்று எதிர்பார்ப்புகளுடன் கேட்பவரை (படிப்பவரை) கொண்டு செல்லும் பாட்டு. வரிகளுக்கிடையில் 'அட செய்ததில் எதுவுமே வெற்றியில் முடியவில்லையே' என்று ஆழ்நிலை சோகம் இழையோடும்.

இனி பாட்டு - நினைவிலிருந்து எழுதியதுதான் - தவறிருந்து அறிவுறுத்தினால் திருத்தப்படும். எனக்கு பிடித்தது.

முள்ளு முனையிலே
மூணு குளம் வெட்டி வச்சேன்
இரண்டு குளம் பாழு
ஒண்ணுல தண்ணியே இல்ல

தண்ணியில்லாக் குளத்திலே
மண்ணெடுத்தான் மூணு பேரு
இரண்டு பேரு மொண்டி
ஒத்தனுக்கு கையே இல்ல

கையில்லா கொசவன்
வணஞ்ச சட்டி மூணு சட்டி
இரண்டு சட்டி பச்சை
ஒண்ணு வேகவே இல்ல

வேகாத சட்டியிலே
போட்டரிசி மூணரிசி
இரண்டரிசி கருக்கரிசி
ஒண்ணு வேகவே இல்ல

வேகாத அரிசிக்கு
மோர் கொடுத்தது மூணெருமை
இரண்டெருமை மலடு
ஒண்ணு ஈனவே இல்ல

ஈனாத மாட்டுக்கு
விட்ட காடு மூணு காடு
ரெண்டு காடு சொட்டை
ஒண்ணுல புல்லே இல்ல

புல்லில்லா காட்டுக்கு
கந்தாயம் மூணு வெள்ளி
ரெண்டு வெள்ளி கள்ள வெள்ளி
ஒண்ணு செல்லவே இல்ல

செல்லாத வெள்ளிக்கு
நோட்டக்காரன் மூணு பேரு
ரெண்டு பேர் குருடு
ஒத்தனுக்கு கண்ணே இல்ல

கண்ணில்லா குருடன்......
... ... ... ...


(அடுத்த பதிவு - ஒரு பொருள் பல சொல் பாடல் பற்றி)

Post Comment

4 comments:

VSK said...

ஆஹா! மிகவும் இன்பமாக இருக்கிறது நண்பரே! இதைத் தொடர்ந்து எழுதிவர வேண்டுமென வேண்டுகிறேன்.
சின்னஞ்சிறு பாடல்களில்தான் எத்தனை அறிவுரை விளக்கங்கள் இருக்கின்றன! தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன்.

தாமோதர் சந்துரு said...

இந்தப்பாடலை நானும் சிறு வயதில் சொல்லக் கேட்டிருக்கிறேன். பதிவுக்கு நன்றி.

karthik said...

//அப்போது அதையெல்லாம் தப்பாகச் சொல்லிவிட்டு இப்போது இதை மட்டுமாவது சரியாகச் சொல்கிறானே என்று பெருமைப்படலாம்.//

நல்ல பின்னூட்டம்.

சுல்தான் said...

//ஆஹா! மிகவும் இன்பமாக இருக்கிறது நண்பரே! இதைத் தொடர்ந்து எழுதிவர வேண்டுமென வேண்டுகிறேன்.
சின்னஞ்சிறு பாடல்களில்தான் எத்தனை அறிவுரை விளக்கங்கள் இருக்கின்றன! தொடர்ந்து படிக்க ஆவலாயிருக்கிறேன்.//
நன்றி டாக்டர்.

//இந்தப்பாடலை நானும் சிறு வயதில் சொல்லக் கேட்டிருக்கிறேன். பதிவுக்கு நன்றி//
நன்றி தாமோதர் சந்துரு. ஏதாவது சொற் பிழைகள் இருந்தால் அறியத்தாருங்கள்.

//நல்ல பின்னூட்டம்//
நன்றி கார்த்திக். நீங்கள் எதைப் பற்றி சொல்கிறீர்கள் எனத்தெரியவில்லை நண்பரே..