Tuesday 28 November 2006

அமெரிக்க முஸ்லீம் காமெடி

செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்க முஸ்லீம்கள் மனதளவில் பாதிக்கப் பட்டிருந்தார்கள். தொலைக்காட்சி முதல் அனைத்து மீடியாக்களும் அவர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டின. அவர்களது இஸ்லாமிய அடையாளங்களால் மற்றவர்கள் தீவிரவாதியைப் போல் பார்த்ததால் குழந்தைகள் கூட வெளியில் செல்லத் தயங்கினர்.
முஸ்லீம்களில் பெரியவர்கள் மற்றும் பிள்ளைகளின் பயத்தை போக்க இது போன்ற குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Post Comment

ஆண்களே ஜாக்கிரதை - இதோ பெண்கள்!

இங்கே துபையில், சாதாரணமாக பெண்கள் ஓட்டும் கார்களின் பின்னாலும் டாக்ஸிகளின் பின்னாலும் கார் ஓட்டுவதை முடிந்தவரை தவிர்த்து விடுவேன். எல்லாம் அனுபவம் தந்த பாடம்தான்.

1. ஏதாவது டாக்ஸிக்கு பின்னால் போகும் போது வழியில் ஏதாவது பயணி நின்றால் பின்னால் வருபவரை கவனிக்காமல் படக்கென்று பிரேக் அடிப்பார்கள். தொழில் தர்மம் அப்படி.

2. ஆனால் பெண்கள் எதற்கென்றே தெரியாமல் அடிக்கடி வேகத்தை கூட்டுவார்கள் அல்லது குறைப்பார்கள். கார் ஓட்டும்போது முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதம் என நினைக்கிறேன்.

அ. சமீபத்தில் அபுதாபி சென்றிருக்கும்போது வேகமாக கார்கள் சென்று கொண்டிருக்கிறது. என் முன்னால் உள்ள அம்மணி சிக்னலைப் பார்த்ததோ (விளக்கு சிவப்பில் இல்லை) உடனே காரை அவசரமாக நிறுத்தி விட, பின்னாலிருந்து என் கார் அவர் காரை இடிக்க, என் பின்னால் வந்த கார் என் காரை இடித்து விட்டது. அரபி காவலர், அராபிய பெண் - எனக்கும் தண்டனை என் பின்னால் இடித்தவருக்கும் தண்டனை. உண்மையில் தப்பு செய்த அந்தம்மா தப்பித்துக் கொண்டது.

ஆ. இன்னொரு முறை துபையில் வேகமாகச் சாலையில் வந்து கொண்டிருக்கிறேன். சாலையின் பக்கத்தில் நின்றிருந்த கார் வேகமாகத் திரும்பி என் வண்டியில் இடித்தது. என் வண்டியின் ஓட்டுநர் பக்க கதவைத் திறக்க முடியாமல் எதிர்ப்புற கதவு வழி வெளியே வந்து பார்த்தால் இடித்த வண்டியின் பெண் ஓட்டநர் ஸ்டிரியரிங்கில் தலை சாய்த்து படுத்திருக்கிறது. எனக்கு பயமாகியதால் அந்த வண்டியின் கதவைத் திறந்து 'ஏதாவது உதவி தேவையா?' எனக் கேட்க 'ஒன்றுமில்லை. நான் என் சகோதரனுக்கு தொலை பேசுகிறேன். நீ காவலுக்கு தொலைபேசு' என்றது. காவல் வந்து நல்ல வேளை பெண்மணியின் மேல் தவறென்று பதிந்தது. ஆனால் (ஆம்புலன்ஸ்) அவசர உதவி ஊர்தி வந்தது. காவலிடம் என்ன ஆனது என்று பதட்டத்துடன் கேட்டால் 'கவலைப்படாதே! ஒன்றுமில்லை. நீ வெளியே வரத் தாமதமானதால் உனக்கென்னவோ என்று ஒன்றும் இரண்டும் வண்டியிலேயே ஆகிவிட்டதாக' சிரித்தார்.

ஆனால் கீழேயுள்ள பெண்ணைப் பாருங்கள். திறமையென்றால் இதுதான். என்ன சொல்றீங்க?

Who said women cant park the car

Post Comment

Monday 27 November 2006

துபைக்கு வருக! வருக!

நண்பர் பொதக்குடியான் பதிவில் ஒரு அனானி பின்னூட்டமிட்டிருந்தார். குறிப்பாக அவரைப் போன்ற எண்ணமுள்ளவர்களுக்காகவே இந்தப்பதிவு.

இந்த நாடு அமெரிக்கா போல், கனடா போல், U.K.போல் அல்ல. இங்கே எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் நாம் இந்நாட்டின் குடிமகனாக முடியாது. இந்நாட்டு குடிமகன்கள் அனுபவிக்கின்ற எல்லாவற்றையும் பெறவும் முடியாது.

இங்கேயிருப்பவர்களில் முக்கால்வாசி இந்தியரும் பாகிஸ்தானியரும் பெங்காளிகளும் தங்கள் குடும்பத்தை தத்தமது நாடுகளில் விட்டு விட்டு இங்கே தனியாய் தவிப்பவர்கள்தாம். தொலைபேசிக் குடித்தனம்தான்.

நான் உள்பட எனக்குத் தெரிந்த பலரும் ஊரில் ஒரு தரமான அல்லது குடும்பத்தை கவுரவமாக கொண்டு செல்லத்தக்க ஒரு சுமாரான வேலை கிடைத்தால் கூடப் போதும், ஓடி விடலாம் என நினைப்பவர்கள்தாம். அந்த அனானி என்னவென்றால் இந்தியாவை வல்லரசாக்க...... எங்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறார்.

இனி சாம்பிளுக்கு துபை சாலை பற்றி 'துபைக்கு வருக! வருக!' என்ற தலைப்பில் எனது நண்பர் திரு மற்றும் திருமதி இரவிக்குமார் அவர்கள் அனுப்பிய மயிலை இங்கே பறக்க விடுகிறேன்.

1. உங்களிடம் துபையின் சில வாரத்துக்கு முந்திய சாலை வரைபடம் வைத்திருந்தால், உடனே தூக்கி எறிந்து விட்டு புதிய ஒன்றை வாங்கவும்.
2. நீங்கள் ராசிதியா போன்ற இடங்களில் தங்கியிருந்து உங்களிடம் நேற்றைய வரைபடம் இருந்தால் அது வழக்கத்திலில்லாத வரைபடமாகும். இன்றைய வரைபடம் தேவை.
3. வேறெங்காவது படித்த சாலை விதிகளை மறந்து விடுங்கள். துபைக்கென தனியான விதிகளுண்டு அதாவது ' வண்டியை நிறுத்தி, (நிற்காமல் தொடர்ந்து செல்லவேண்டுமென) பிரார்த்தி'.
4. அந்த சந்திப்பை கடப்பதற்கு உங்களுக்கு முன்னுரிமையுள்ள இடம்தானே! அதையெல்லாம் மற, பொறு.
5. அதி வேகத்தில் ஆபத்தான முறையில் துரத்தும் கார்கள் என்றெல்லாம் துபையில் எதுவுமில்லை. எல்லோருமே அப்படித்தான் பயங்கரமாக பயணிப்பர்.
6. புதிய கார் வாங்க நினைத்தால் முதலில் அது மணிக்கு 80கிமீ முதல் 160கிமீ வேகம் சாதாரணமாகப் போகுமா என்று ஊர்ஜிதம் செய்யுங்கள். எமிரேட்ஸ் சாலை உபயோகிப்பாளராக இருந்தால் இது மிகவும் முக்கியம்.
7. எல்லா திசைகளும் ஷேக் ஜாயித் சாலையிலிருந்து தொடங்கும். அந்த சாலைக்கோ தொடக்கமுமில்லை முடிவுமில்லை. இனி வரும் காலங்களில் இந்த சாலையைக் கடக்க ஒரு நாளைக்கு குறைந்தது 4 திர்ஹம் முதல் அதிக பட்சமாக 29 திர்ஹம் சாலை வரி கட்ட வேண்டுமாம்.
8. சாலையின் நெருக்கம் மிகுந்த நேரம் காலை 5.00 மணிக்குத் தொடங்கும். பின்னர் மாலை 1.00 முதல் 10.00 மணி வரை. சில நாட்களில் இந்நேரங்கள் கூடலாம்.
9. புதன் கிழமைகளின் சாலை நெருக்கம் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து தொடங்கும்.
10. நீங்கள் மஞ்சள் விளக்கைப் பார்த்து வண்டியின் வேகத்தை குறைத்தீர்களானால் பின்னாலுள்ள வண்டியால் மோதப்பட்டு காவலரிடமிருந்து சீட்டு பெற ஏதுவாகி விடும்.
11. நீங்கள் சிக்னலில் முதல் ஆளாக நின்று, பச்சை விளக்கு எரியத் தொடங்கியவுடன், பின்னாலுள்ள வண்டிகள் என்னதான் கத்தினாலும் பொருட்படுத்தாமல், ஒன்றிலிருந்து ஐந்து வரை பொறுமையாக எண்ணி விட்டு வண்டியை எடுங்கள். இல்லாவிட்டால் எதிர்த்த சாரியில் சிவப்பு விளக்கை கடந்து வரும் வண்டியோடு மோத நேரிடும்.
12. எல்லா முக்கியச் சாலைகளிலும் கட்டுமானப் பணிகள் எப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருப்பது இங்கே வாடிக்கை - வேடிக்கை. (உங்களின் வசதிக் குறைவுக்கு வருந்துகிறோம்! தொடர்ந்து...).
13. சில முக்கிய மில்லாத இடங்களில் 'ஓ நாம் இப்போது ஷார்ஜாவில் இருக்கிறோம்' என்ற வாசகம் கேட்கலாம்.
14. பெரிய பெரிய விளையாட்டு பையன்களுக்கு காரின் ஹார்ன் சத்தம்தான் விளையாட்டுச் சாதனம்.
15. யாராவது Land Cruiser, Tuned Patrol, Mercedes முதலிய பெரிய கார்களில் கண்ணாடியை வண்ணப் பேப்பரில் மறைத்துக் கொண்டு வந்தால் அவர்கள் போவதற்குத்தான் முதலிடம். அதுதான் இறுதி.
16. நீங்கள் ஏதாவது Corolla, Sunny அல்லது இது போன்ற சிறிய ஜப்பானிய கார்களில் வந்தால் வலது பக்க கடைசி வரிசையில் நின்று கொண்டேயிருங்கள். எதுவும் பேசாதே!.
17. சில சாலைகளில் நீங்கள் சிக்னலை தாண்டியபின் பார்த்தால் சாலையின் பெயரே மர்மமான முறையில் மாறியிருக்கும்..
18. திசையை கேட்டறிய வேண்டுமா? உருது தெரியுமா?
19. துபையில் குறுக்கே எங்கேயாவது ஒரு முறை போய் வர குறைந்தது 4 மணி நேரம் ஆகும். ஷேக் ஜாயித் சாலையில் மணிக்கு 140கிமீ வேகத்தில் போக முடியுமென்றாலும்.
20. மனதுக்கு அமைதி தரும் செய்தி - இந்நாட்டு அரபிகள் எப்படி ஓட்டுவது என்பதை பாகிஸ்தானியரிடம் கற்றார்களாம்.
21. பதினெட்டு (18) சக்கர வாகனங்கள் இந்நாட்டின் ஒரு முக்கிய அதிவேக வாகனமாகும். ஹத்தா to ஒமான் சாலையில் - வண்டி நிறைய பாரத்துடன் - மணிக்கு 120கிமீ வேகத்துக்கு மேல் இரத்தம் உறையும் பயங்கரமாய் பறக்கும்.
22. எமிரேட்ஸ் சாலையின் மணிக்கு 160கிமீ வேகத்தில் போவதெல்லாம் 'ஜூஜூபி;'. அதை விட குறைவான வேகத்தில் செல்வதெல்லாம் 'பப்பா'ஸ். வேகமாகச் செல்லும் வண்டி கேமராவை பார்த்ததும் திடீரென்று பூனையாய் 'பம்'மும் ஜாக்கிரதை.
23. துபை ஆட்டோட்ராம் (Dubai Autodrome) எமிரேட்ஸ் சாலையின் புதிய எக்ஸ்டென்ஷன் (extension).

வேலை தேடி துபைக்கு வருக வருக.
யாம் பெற்ற துன்பம் நீங்களும் அடைய விரும்பினால்.......

Post Comment

Saturday 18 November 2006

படித்ததில் பிடித்தது

அப்போதெல்லாம் எந்த புத்தகம் படித்தாலும் அதிலே பிடித்த சில வரிகளை எழுதி வைத்துக் கொள்வது வழக்கமாயிருந்தது. 1985, 86களில் அதுபோல் எழுதி வைத்திருந்த ஒரு புத்தகம் கிடைத்தது. எதிலிருந்து எடுத்தது, யாருடைய வார்த்தைகள் என்று எழுத விட்டிருந்தேன். தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

நல்ல நல்ல கருத்துகள் என்று தோன்றியதால் இங்கே!. அப்படித்தானா, இல்லையா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்..

1. உலகில் நாம் ஒரு பட்டம். நம்மை கீழே இழுக்காவிட்டால் நாம் மேலே போக முடியாது. நாம் ஒரு பறவை. காற்று அடிக்காவிட்டால் சூனியத்தில் பறக்க முடியாது. நாம் ஒரு பந்து. பலமாக ஓங்கி கீழே அடிக்காவிட்டால் மேலே உயர முடியாது.

2. என்ன உடைமை, சொத்து, சுகமெல்லாம்?. ஏதை உண்டு களித்தோமோ அதுவே நமக்கு கிடைத்த பங்கு. எதை உடுத்திக் கிழித்தோமோ அதுவே நம் சொத்தில் கிடைத்த சுகம். ஏதை நம் மறுமை வாழ்விற்காக செலவிட்டுக் கொண்டோமோ அதுவே நமக்குக் கிடைத்த சிறப்பு. இவைகளை வேண்டுமானால் நம் உடைமை என்று துணிச்சலாய் சொல்லிக் கொள்ளலாம்.

3. நல்ல இலட்சியங்களுக்காக இலட்சத்தை செலவிடுபவர்கள் போற்றத்தகுந்தவர்கள். இலட்சங்களுக்காக தன் இலட்சியத்தையே இழக்கத் தயாராயிருப்பவர்கள்......?

4. துன்ப காலத்தில் நாம் இன்பமாக இருந்த நாட்களை நினைவு படுத்திப் பார்ப்பது போன்றதொரு பெரிய கவலை வேறெதுவுமில்லை

5. கடந்த கால தோல்விகளின் நினைவுகளிலேயே மனதை நிலைக்க விட்டுத் துன்பங்களை அதிகரித்துக் கொள்வது கூடாது. கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களோ, சூழ்நிலைகளோ மறுபடியும் வரப்போவதேயில்லை. ஆகையால் அவைகளை நினைத்து உருகுவதால் எந்த வகையான நன்மையும் ஏற்படப் போவதில்லை. கையை விட்டுப் போன செல்வத்தைப் பற்றியும் கடந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றியும் பிதற்றுவதால் இப்போது ஒன்றுமே வரப்போவதில்லை. பிறர் மேல் குற்றம் சுமத்துவதோ சூழ்நிலையைப் பற்றிக் குற்றம் சொல்வதோ கூடாது. நம்மில் நம்பிக்கை, நமது ஆற்றலில் நம்பிக்கை, நமது சக்திகளில் நம்பிக்கை இவைகளையே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

6. இந்த உலகத்தை குற்றம் சாட்டுவதை விட அதை புரிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனமானது.

7. குழந்தைகளும் அழகான பூக்களும் மனதை என்னமாய் தூய்மைப்படுத்தி குதூகலிக்கச் செய்கின்றன!. இவை மனிதனின் வாழ்வைப் பாதிக்காமல் மட்டும் இருந்திருந்தால் உலகம் எவ்வாறு களையிழந்து போயிருக்கும்? ஆம்! இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு ஆழமான உள்கருத்து இருக்கத்தான் செய்கிறது. புரியத்தான் நாளாகிறது.

8. ஒவ்வொருவர் பிரச்னையையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். வெளியே இருந்து அதன் அழகையும் அருவருப்பையும் சரிபார்க்கிறேன். பிரச்னைக்கு உள்ளிருந்து பார்ப்பதை விட வெளியிலிருந்து பார்ப்பதில் எத்தனை சவுகரியங்களும் பாடங்களும் இருக்கிறது.
உலகம் என்னவோ அதன் பாட்டையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டேதானிருக்கிறது. அதன் சுழற்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதும் கொள்ளாமல் இருப்பதும்தான் அவரவர் பிரச்னைக்குரிய விஷயங்கள்.

9. உண்மை ஒன்றுதான். அது எப்போதும் ஒன்றுதான். அது வேண்டாதவர்களுக்கு சுகமாய் இருப்பதில்லை. ஆனால் பொய் பல வடிவில் இருக்கும். சுகமாயும் இருக்கும்.

10. அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள் அன்பு செலுத்த வேண்டும். பதிலுக்கு அன்பு கிட்டாது. கிட்டினாலும் நெடுநாள் ஒட்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆனாலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். அன்பு செலுத்த முடியதவர்களைப் பற்றியும் அன்பையே மறந்தவர்களைப் பற்றியும் யோசிக்க வேண்டும். யாரும் நம்மிடம் அன்பாய் இல்லையே என்று வருத்தப்படக்கூடாது. அது முக்கியம் இல்லை. பாவம்! பல மனிதர்களுக்கு அன்பு செலுத்த தெரியவேயில்லை. நமக்குத் தெரிகிறது. எனவே அன்பு செலுத்த நம்மை அறிய வைத்திருக்கும் இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.(இதில் மட்டும் எழுத்தாளர் ஜெயகாந்தன் என எழுதிவைத்துள்ளேன்)

பிடித்திருந்தால் ஏது? ஏன? என்று சொல்லுங்களேன்.

Post Comment

Thursday 16 November 2006

வார்த்தை விளையாட்டு

நாங்கள் மேல்நிலை வகுப்பு (ப்ளஸ்டூ) படித்துக் கொண்டிருந்த போது தாத்தையங்கார்பேட்டையிலிருந்து வயதான ஆசிரியர் ஒருவர் வகுப்பாசிரியராக வந்திருந்தார். தமிழைத் தமிழாகவும் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் தான் எழுத பேச வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். நீங்கள் படிப்பது தமிழுமில்லாமல் ஆங்கிலமுமில்லாமல் 'தங்லீஸ்'; ஆக இருக்கிறதென்று ஒரு புது வார்த்தையையும் கற்றுக் கொடுத்தார்;.

ஒரு நாள் பிள்ளைகளுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு விருப்பமுள்ளவர்கள் போகலாம் என்று பள்ளியில் அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வயது நம்மை பிள்ளைகள் என்று சொல்வதை விரும்பாத வயது. எனவே எங்கள் குழு போகவில்லை. வகுப்பிலேயே இருந்தோம்.

அப்போது எங்கள் வகுப்பாசிரியர் வகுப்புக்கு வந்து பையன்கள் மிகக்குறைவு என்பதால் பாடம் எடுக்காமல் சும்மா பேசிக்கொண்டிருந்தார். அப்போது பேச்சு வாக்கில் நான் நீங்கள் சினிமாவுக்கு போகவில்லையா என்பதை 'உங்களுக்குத்தான் இடமெல்லாம் ரிசர்வ் செய்திருப்பார்களே போயிருக்கலாமே சார்' என்று கேட்டேன். அதற்கு அவர் கிண்டலாக 'என்னப்பா நீ! என்னை அனுப்பிச்சிட்டுதான் விடுவே போலிருக்கே!' ஏன்று கையை வானை நோக்கி காட்டி சொல்லவும் வகுப்பறையே சிரிப்பில் ஆழ்ந்தது. இருந்தாலும் நான் 'சார் அப்டிலாம் இல்லை சார்' என்று சொல்லவும் 'சும்மா கிண்டலுக்கப்பா. உட்கார்' என்று சொல்லி விட்டார்

அடுத்து கொஞ்ச நாளுக்குப் பிறகு கார்த்திகை தீபத்துக்காக நிறைய வெளியூர் ஆசிரியர்கள் விடுப்பெடுத்திருந்தும் இவர் விடுப்பெடுக்கவில்லை. வகுப்பறையில் பாடமில்லாமல் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஏன் விடுப்பு எடுக்கவில்லை என அறிவதற்காக 'சார் உங்களுக்கு தீபமாச்சே' என்று ஆரம்பிக்கவும் 'ஹைய் நீதானா? என்னை அனுப்பாம விட மாட்ட போலிருக்கே! உன்னை கவனிச்சுகறேன்' என்று அவர் கிண்டல் பேச வகுப்பறை சிரிப்பில் ஆழ்ந்தாலும் எனக்கு மிகவும் துக்கமாகி விட்டது. வயதானவரை இப்படி சொல்லிவிட்டோமே என்று அழுகை வந்து விட்டது. அவர்தான் சரிப்படுத்தினார்.

அடுத்து கொஞ்ச நாட்களில் இதே போல் இன்னொரு சமயம் வாய்த்தது. யாராவது பையன்கள் பாட்டு பாடுங்கப்பா என்று அவர் சொன்னார். அப்போது என் நண்பன் 'சார். இவன் நல்லா பாடுவான் சார்' என்று என்னைக் காட்டி சொல்லவும் அவர் 'நீதானா! வசமா மாட்டிக்கிட்டே!' 'தம்பீ! உன்னை பாடயிலே பாக்கணுமின்னு ரொம்ப நாளா ஆசை!' என்று சொல்லி எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். (பேச்சு வழக்கில் 'பாடயிலே' என்பதை 'பாடும்போது' என்றும் 'பாடையில்' என்றும் இரு பொருள் கொள்ள இடமுண்டு)

சின்ன செய்திதான் என்றாலும் சிலேடை, இருபொருள் வசனம் என பேசும் போதெல்லாம் எனககு இந்த நினைப்பு வந்து விடும்.

Post Comment