Thursday 16 November 2006

வார்த்தை விளையாட்டு

நாங்கள் மேல்நிலை வகுப்பு (ப்ளஸ்டூ) படித்துக் கொண்டிருந்த போது தாத்தையங்கார்பேட்டையிலிருந்து வயதான ஆசிரியர் ஒருவர் வகுப்பாசிரியராக வந்திருந்தார். தமிழைத் தமிழாகவும் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் தான் எழுத பேச வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். நீங்கள் படிப்பது தமிழுமில்லாமல் ஆங்கிலமுமில்லாமல் 'தங்லீஸ்'; ஆக இருக்கிறதென்று ஒரு புது வார்த்தையையும் கற்றுக் கொடுத்தார்;.

ஒரு நாள் பிள்ளைகளுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு விருப்பமுள்ளவர்கள் போகலாம் என்று பள்ளியில் அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வயது நம்மை பிள்ளைகள் என்று சொல்வதை விரும்பாத வயது. எனவே எங்கள் குழு போகவில்லை. வகுப்பிலேயே இருந்தோம்.

அப்போது எங்கள் வகுப்பாசிரியர் வகுப்புக்கு வந்து பையன்கள் மிகக்குறைவு என்பதால் பாடம் எடுக்காமல் சும்மா பேசிக்கொண்டிருந்தார். அப்போது பேச்சு வாக்கில் நான் நீங்கள் சினிமாவுக்கு போகவில்லையா என்பதை 'உங்களுக்குத்தான் இடமெல்லாம் ரிசர்வ் செய்திருப்பார்களே போயிருக்கலாமே சார்' என்று கேட்டேன். அதற்கு அவர் கிண்டலாக 'என்னப்பா நீ! என்னை அனுப்பிச்சிட்டுதான் விடுவே போலிருக்கே!' ஏன்று கையை வானை நோக்கி காட்டி சொல்லவும் வகுப்பறையே சிரிப்பில் ஆழ்ந்தது. இருந்தாலும் நான் 'சார் அப்டிலாம் இல்லை சார்' என்று சொல்லவும் 'சும்மா கிண்டலுக்கப்பா. உட்கார்' என்று சொல்லி விட்டார்

அடுத்து கொஞ்ச நாளுக்குப் பிறகு கார்த்திகை தீபத்துக்காக நிறைய வெளியூர் ஆசிரியர்கள் விடுப்பெடுத்திருந்தும் இவர் விடுப்பெடுக்கவில்லை. வகுப்பறையில் பாடமில்லாமல் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஏன் விடுப்பு எடுக்கவில்லை என அறிவதற்காக 'சார் உங்களுக்கு தீபமாச்சே' என்று ஆரம்பிக்கவும் 'ஹைய் நீதானா? என்னை அனுப்பாம விட மாட்ட போலிருக்கே! உன்னை கவனிச்சுகறேன்' என்று அவர் கிண்டல் பேச வகுப்பறை சிரிப்பில் ஆழ்ந்தாலும் எனக்கு மிகவும் துக்கமாகி விட்டது. வயதானவரை இப்படி சொல்லிவிட்டோமே என்று அழுகை வந்து விட்டது. அவர்தான் சரிப்படுத்தினார்.

அடுத்து கொஞ்ச நாட்களில் இதே போல் இன்னொரு சமயம் வாய்த்தது. யாராவது பையன்கள் பாட்டு பாடுங்கப்பா என்று அவர் சொன்னார். அப்போது என் நண்பன் 'சார். இவன் நல்லா பாடுவான் சார்' என்று என்னைக் காட்டி சொல்லவும் அவர் 'நீதானா! வசமா மாட்டிக்கிட்டே!' 'தம்பீ! உன்னை பாடயிலே பாக்கணுமின்னு ரொம்ப நாளா ஆசை!' என்று சொல்லி எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். (பேச்சு வழக்கில் 'பாடயிலே' என்பதை 'பாடும்போது' என்றும் 'பாடையில்' என்றும் இரு பொருள் கொள்ள இடமுண்டு)

சின்ன செய்திதான் என்றாலும் சிலேடை, இருபொருள் வசனம் என பேசும் போதெல்லாம் எனககு இந்த நினைப்பு வந்து விடும்.

Post Comment

4 comments:

நாமக்கல் சிபி said...

:))

எந்த ஊரில் படித்தீர்கள்?

Unknown said...

நான் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த இலப்பைக்குடிக்காட்டில் (எனது சொந்த ஊரில்தான்) படித்தேன்.

Anonymous said...

Dear Sultan please correct our birth place name. This should be read as this. லப்பைக்குடிக்காடு. Many thanks EKBASHA

Anonymous said...

//This should be read as this. லப்பைக்குடிக்காடு. Many thanks EKBASHA//


அன்பின் EKBASHA,

சுல்தான் தமிழ் தெரிந்து எழுதுகிறார். உங்களுக்கு அது தெரியவில்லை. அது இலப்பைக்குடிகாடு என்று தான் இருக்கவேண்டும். சுல்தான் சரியாகவே எழுதியிருக்கிறார்.