Thursday, 22 February 2007

எச்சில்...... ஐயையே....!!!

(என் சகோதரரிடம் பேசிக்கொண்டிக்கும்போது, பேச்சின் போக்கில் அவர் சொன்னது. அவர் எந்த புத்தகத்தில் படித்தாரென்பதோ, யார் சொன்னார்களென்றோ தெரியாது. ஆகவே, நீங்கள் கேட்டதாகக்கூட இருக்கலாம்.)

கல்லூரி நண்பர்கள் நான்கு பேர். எப்போதும் லந்து, அரட்டை, அலம்பல்தான். அவர்கள் கண்ணில் மாட்டியவர்கள், வம்பில் மாட்டாமல் தப்பிப்பது அபூர்வம்.

அவர்கள் வழமையாகச் செல்லும் ஒரு உணவகத்தில் (Restaurant), உணவு கொண்டு வரும் ஒரு குறிப்பிட்ட பரிமாறுபவரிடம் (supplier) எப்போதும் தகராறு செய்வார்கள். அந்த பணியாளர் எந்த மேசையில் பரிமாறுகிறாரோ அங்கேயேதான் போவார்கள். அவர்களை வேறு இடத்துக்கு மாறச் சொன்னாலும் மாற மாட்டார்கள. அந்தப் பணியாளரையும் மாற விட மாட்டார்கள்.

உதாரணமாக: தோசை கொண்டுவரச் சொல்லி, அவர் கொண்டு வந்ததும், நாங்கள் சொன்னது பரோட்டாதான் என்று மாற்றச் சொல்லி அவரைத் தொந்தரவு செய்வார்கள். இவர்கள் வந்தாலே அவருக்குப் பிரச்னைகள் துவங்கி விடும். முதலாளியிடம் வசவுகளும் கிடைப்பதுண்டு. தொடர்ந்து இரண்டு வருடம், அவர்கள் வரும் போதெல்லாம், இந்த மாதிரி தொல்லை தருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது கல்லூரி வாழ்க்கை முடிந்து விடை பெறுகிற நேரம். கடைசியாக அந்தப் பணியாளரை சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்தார்கள். ஐந்து அல்லது ஆறாயிரம் பெறுமானமுள்ள நல்லதொரு அன்பளிப்பை வாங்கிச் சென்று, அவரிடம் கொடுத்து, 'நாங்கள் இதுநாள் வரை செய்ததை மன்னித்து, எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது தவறே இல்லை. வேண்டுமென்றே, விளையாட்டுக்காக, நாங்கள்தான் அவ்வாறு நடந்து கொண்டோம்' என்று சொன்னார்கள்.

அன்பளிப்பை ஏற்றுக் கொண்ட அந்த நல்ல பணியாளர், 'ஓகோ அப்படியா! இதுநாள் வரை அது விளையாட்டுக்காகத்தான் எனப் புரியாமலிருந்து விட்டேன். இனிமேல் நீங்கள் எப்போது சாப்பிட வந்தாலும், உங்கள் உணவில் எச்சிலைத் துப்பித்துப்பிப் பரிமாறுவதை கண்டிப்பாக நிறுத்தி விடுவேன்' என்று சொன்னாராம்.

(இதைக் கேட்டதிலிருந்து அலுவலக உதவியாளரை கோபமாக எதுவும் பேசக்கூட யோசனையாயிருக்கிறது. அவரிடம் கோபமாக ஏதும் பேசியிருந்தால், அன்றைய தேநீரை நானே தயாரித்துக் கொள்வேன். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.....)

Post Comment

Tuesday, 6 February 2007

SMS - அன்புவழி ஆயுதம்

நமக்கு வருகிற SMS பெரும்பாலும் விளம்பரங்களாகவே இருப்பதால், அதைப் பார்ப்பதற்கே பல நேரங்களில் தொல்லையாய் இருக்கிறது. ஆனால் சீனாவில் நடந்த இந்நிகழ்ச்சியைப் பார்த்தால் SMS மூலம் எத்தகைய சாதனைகளும் செய்யலாம் என அறியலாம். 'சிறு துறும்பும் பல்குத்த உதவும்' அல்லது 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'.

ஒரு சீன இளம்பெண் கடைவீதிக்குப் போயிருந்த போது, ஒரு திருடன் அவள் கைப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்து விட்டான். அந்த கைப்பையில் சுமார் 630 அமெரிக்க டாலர்கள் பெறுமதியுள்ள சீனப்பணமும், அத்துடன் அப்பெண்ணின் செல்போன், ஓட்டுனர் உரிமம் மற்றும் I.D. முதலிய முக்கிய ஆவணங்களும் இருந்தனவாம்.

அந்தப் பெண் தன் தோழியிடம் உள்ள செல்போன் மூலம் தனது எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது மணியடிக்கிறது ஆனால் திருடன் எடுக்கவில்லை. ஆனால் இணைப்பையும் துண்டிக்கவில்லை.

அடுத்ததாக அப்பெண் செய்தது முதலில் ஒரு SMS: – 'உன் நிலைமையை என்னால் உணர முடிகிறது. அதனால் உன்னை என்னால் ஒரு திருடனாக எண்ண மனம் இடந்தரவில்லை. உனக்கு வேறு வழியில்லாததால்தான் இவ்வாறு எடுத்திருக்கிறாய் என நினைக்கிறேன்' என்பதாக அனுப்பினாள்.

அடுத்த SMS: – 'உன்னைப் போன்றவர்கள் நினைத்தால், நல்ல வழிமுறைகளில் சிறந்த சாதனைகள் செய்ய இயலும். முயன்ற ஓரிரு இடங்களில் நீ பெற்ற தோல்விகள் உன்னை இவ்வாறு செய்யத் தூண்டியிருக்கும் என்றே நான் நினைக்கிறேன்' என்பதாக.

அடுத்து, அதற்கடுத்து, அதற்கடுத்து என தொடர்ந்து வரிசையாக (21) இருபத்தியொரு SMS அனுப்பினாள். அதனூடாக 'அப்பணத்தை அவன் எடுத்துக் கொள்வதால் தனக்கேதும் வருத்தமில்லை. திறமைசாலியான இளைஞர்களில் ஒருவன் தவறான வழியில் சென்றுள்ள மன வேதனைதான்' எனவும், இன்னும் 'பணம் போனாலும் அதிலுள்ள (கை பேசியில் சேமிக்கப்பட்டுள்ள) தொலைபேசி எண்களும், மற்ற முக்கிய ஆவணங்களும் தொலைவதால் அவளுக்கேற்பட விருக்கிற மன அழுத்தத்தையும்' குறிப்பிடத் தவறவில்லை.

அவள் வீட்டுக்கு திரும்பிய போது, ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, அவளுடைய கைப்பை அழகாக பொதியப்பட்டு, அவள் வீட்டுக் கதவருகில் அவளுக்காக காத்திருந்தது. அதிலிருந்து எதுவும் எடுக்கப்படவில்லை. உள்ளது உள்ளபடியே. ஆனால் கூடவே ' அவள் அனுப்பிய SMSகளால் தன் மனம் திருந்தியதாகவும், தன் செயலுக்கு வருந்துவதாகவும், இனி இது போன்ற செய்கைகளில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான வழிகளில் கவனத்தைத் திருப்பி,
சிறந்த மனிதனாக வாழப்போகிறேன்' என்ற குறிப்போடு.

(துபாய் 96.7 FM மலையாள வானொலியில் சொல்லக் கேட்டது. சிறிது மெருகேற்றப்பட்டுள்ளது.)

Post Comment