Monday, 27 April 2009

வாயைக் கொடுத்துட்டு வாங்கி கட்டிக்காதீங்க

வீட்டில் விருந்தினர் இல்லாதிருந்தால், என் குடும்பத்தார் எப்போதும் தரையில் பாயில் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். எல்லோரும் உண்டு முடித்து எழுந்த பின்னரும் என் மகன் காலை நீட்டிக் கொண்டு முடிக்காமலே இருந்தான். ''என்னடா தம்பீ காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாயே! சாப்பாட்டுக்கு ஒரு மரியாதை இல்லையா? சீக்கிரம் முடித்து விட்டு எழு" என்றேன்.

"சரி டாடி. இனிமேல் சாப்பாட்டை, வாங்க சாப்பாடு! போங்க சாப்பாடு! உடகாருங்க சாப்பாடு! என்று மரியாதையாக சொல்கிறேன்" என்கிறான்.
என் தங்கமணியை அழைத்து "என்ன இவன் இப்படி பேசுகிறானே!" என்றேன். அதற்கவன், "டாடி பாருங்கள். முழங்கால்வரை ஒழுங்காக மூடி, இறைவனின் பெயர் கூறித்தான் துவங்கினேன். வேறென்ன சாப்பாட்டிற்குள்ள மரியாதை?" எனறான். தங்கமணியோ "சரிதானே! அவன் கிட்ட வாயைக் கொடுத்துட்டு ஏங்க வாங்கி கட்டிக்கறீங்க" என்கிறார்கள். என் மகனுக்கு அப்போது வயது எட்டு.


இப்போதுள்ள பிள்ளைகள் குசும்பனையே என்ன விலை என்று விலை பேசும் குழந்தைகளாக உள்ளனர். இது போல ஒரு தொடர் பார்ப்போமா?

சிறு குழந்தைகளுக்கு திமிங்கலம் பற்றி ஒரு ஆசிரியர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். 'திமிங்கலம் ஒரு மிகப்பெரிய பாலூட்டிதான் என்றாலும் அது மனிதனை விழுங்க முடியாது. ஏனெனில் அதன் குரல்வளை மிகச்சிறியது'
ஒரு குழந்தை எழுந்து 'ஜோனாவை(நபி யூனூஸ்) திமிங்கலம் விழுங்கி இருக்கிறதே'
எரிச்சலடைந்த ஆசிரியர், 'இல்லம்மா. திமிங்கிலத்தால் மனிதனை விழுங்க முடியாது. அது சாத்தியமானதல்ல'

அதற்கந்த குழந்தை, 'நான் சொர்க்கம் போகும்போது அதை ஜோனாவிடம் கேட்பேன்'
அது கேட்ட ஆசிரியர், 'ஜோனா நரகத்தில் இருந்தால்....'
குழந்தை, 'அப்ப நீங்க கேளுங்க சார்'


ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை பிள்ளைகளை படம் வரையச் சொல்லி விட்டு அவ்வப்போது குழந்தைகள் எவ்வாறு வரைகின்றன என நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை வெகு சிரத்தையாக எதையோ வரைவதைப் பார்த்து விட்டு, 'நீ என்னம்மா வரைகிறாய்?' எனக் கேட்க 'நான் கடவுளை வரைகிறேன் டீச்சர்' என்றது.

சிறிது தாமதித்த ஆசிரியை, 'கடவுள் எப்படி இருப்பார் என்றுதான் யாருக்கும் தெரியாதே' எனச் சொல்ல
தன்னுடைய வரைதலினின்றும் தலையைக்கூட உயர்த்தாமல் அக்குழந்தை பளிச்சென்று சொன்னது
'இன்னும் இரண்டு நிமிடம் கழிந்த பின் எல்லோருக்கும் தெரிந்து விடும்'


தன் அம்மா சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்த ஒரு குழந்தை, 'ஏம்மா முழுதும் கருப்பாக உள்ள உன் முடியில் சில முடிகள் மட்டும் வெள்ளையாக இருக்கிறதே! அது ஏனம்மா?' எனக் கேட்க, அந்த அம்மா

'அது வந்து, எப்போதெல்லாம் நீ தப்பு செய்து என்னை கோபப்படுத்தி அழ வைக்கின்றாயோ, அப்போதெல்லாம் ஒரு முடி வெள்ளையாகி விடும்' என்றார்கள்.
இந்தப் புதிய அறிவைப் பற்றி சிறிது யோசித்த குழந்தை உடனே கேட்டது, 'அதனால்தான் பாட்டி முடி எல்லாமே வெளுத்து விட்டதா?'


உடலின் இரத்த ஓட்டத்தைப் பற்றி ஒரு ஆசிரியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை இன்னும் தெளிவு படுத்த, 'பிள்ளைகளே ! நான் இப்போது தலைகீழாக நின்றால் எல்லா இரத்தமும் என் தலைக்கு பாய்ந்து முகமெல்லாம் சிவந்து விடும்'
குழந்தைகள் எல்லாம் 'ஆமாம் டீச்சர்' என்றார்கள்.

'பின் ஏன் நான் நேராக சாதாரண நிலையில் நிற்கும் போது மட்டும் என் கால்களுக்குள் இரத்தம் பாய்ந்து கால்கள் சிவப்பதில்லை'
ஒரு பையன் எழுந்து சொன்னான் 'உங்கள் தலை போல, காலினுள்ளேயும் வெற்றிடம் இல்லை போலிருக்கிறது?'


ஒரு கிறித்துவ சிறார் பள்ளியின் உணவு இடைவேளையின் போது, மேசையின் தொடக்கத்தில் ஒரு தட்டில் ஆப்பிள்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த தட்டிற்கு அருகில் ஒரு குறிப்பும் வைக்கப்பட்டிருந்தது. ''ஒன்று மட்டும் எடுக்கவும். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்''
அந்த சாப்பாட்டு வரிசையின் கடைசியில் ஒரு தட்டு நிறைய சாக்லெட்டும் பிஸ்கட்டுகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த தட்டிற்கு பக்கத்தில் ஒரு பையன் குறிப்பெழுதி வைத்தான்
''வேண்டும் வரையில் எடுத்துக் கொள்ளுங்கள். கடவுள் ஆப்பிளை பார்த்துக் கொண்டிருக்கிறார்''


பிள்ளைகளை வைத்து குழாம் புகைப்படம் எடுத்த பின்னர் ஆசிரியர் மாணவர்களுக்கு தனித்தனியாக ஒரு புகைப்படம் விற்க விரும்பி, ''எல்லோரும் இதை வாங்கிக் கொள்ளுங்கள். சில வருடங்கள் கழித்து பாருங்கள். அருந்ததீ வக்கீல் ஆயிடுச்சு, முஹம்மதும், வஹீதாவும் டாக்டர் ஆயிட்டாங்க, கலையரசன் பொறியியலாளன் என்று பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கும்''.

பின்னாலிருந்து ஒரு பையன் ''இதிலிருக்கிற ஆசிரியர் இறந்துட்டார் என்றால் கூடவா? "

Post Comment

Sunday, 26 April 2009

மனிதர்களில் புதிய காய்ச்சல்! அபாயம்!!


Swine Flu (Influenza) எனப்படும் இந்த பன்றிக் காய்ச்சல் பன்றிகளுக்கு ஏற்படும் ஒருவகை சுவாசக்குழல் நோயாகும். இவை சாதாரணமாக மனிதர்களை தாக்குவதில்லை. எனினும் சில மனிதர்களை இது தாக்கியுள்ளதாகவும் இது ஒரு மனிதரிலிருந்து மற்றவர்களுக்கு பரவும் அபாயம் கொண்டதெனவும் மருத்துவ பதிவுகளில் குறிக்கப் பட்டுள்ளது. டிசம்பர் 2005 முதல் பிப்ரவரி 2009 வரை 12 பேர் அமெரிக்காவின் பத்து மாநிலங்களிலிருந்து இந்நோயால் பாதிக்கப் பட்டிருந்தனர். மார்ச் 2009ல் இந்த வகை பன்றிக் காய்ச்சல்(H1N1) நோய் கலிபோர்னியா, டெக்ஸாஸ், மெக்சிகோ முதலிய மாநிலத்திலிருந்தும் உள்ள நோயாளிகளிலிருந்து மனிதரிலும் பரவும் என ஊர்ஜிதப்படுத்தப் பட்டுள்ளது.

சிக்கன் குனியா போல இப்போது பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. மெக்சிகோவில் மட்டும் இதன் பாதிப்பால் சுமார் 80பேர் வரை இறந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முழு அமெரிக்காவுக்கும் பரவி வருவதாகவும் சுமார் 18பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் இறந்து விட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.இது மனிதர்களுக்கிடையே மேலும் பரவாமல் தடுக்க மெக்சிகோவின் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படடுள்ளன. அவசர நிமித்தம் வெளியில் செல்பவர்களும் (mask)முகமூடி அணிந்தே செல்கின்றனர்.

சிக்கன் குனியா நோய் பொதுவாக குழந்தைகளில் அதிகம் பரவாமல் வயதானவர்களையே கடுமையாக தாக்குவதாக இருந்தது. இதற்கு நேர்மாறாக இந்த (swine flu) பன்றிக் காய்ச்சல் நோய் குழந்தைகளை அதிகம் தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு விட்டதெனவும் வெள்ளை மாளிகை நிகழ்வுகளை உற்று நோக்கி வருவதாகவும் தேவையான முனனெச்சரிக்ககை ஏற்பாடுகள் தொடங்கி விட்டதெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நண்பர்களே! பார்த்து இருந்து கொள்ளுங்கள்.

Post Comment

Wednesday, 15 April 2009

மனக்கணக்கு, மனம் இதமாக

கேள்வி ஒன்று:
ஒரு ஓட்டப் பந்தயத்தில் நீங்கள் கலந்து கொண்டிருக்கின்றீர்கள். முதலிலிருந்து இரண்டாவதாக ஓடும் ஆளையும் முந்தி விட்டீர்கள். இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள்?

.
..
...
....

பதில்:
இரண்டாவது ஆளையும் முந்தி விட்டால் முதலிடம்தானே. இது என்ன கேள்வி என்கிறீர்களா?
தவறு.
இரண்டாவது ஆளை முந்தி நீங்கள் அவரிடத்தில்தானே வருவீர்கள்.
அதாவது... இரண்டாவது இடத்தில். சரிதானே!.


கேள்வி இரண்டு:
முதல் கேள்விக்கு எடுத்தது போல, நிறைய நேரம் எடுத்து யோசிக்காமல், வேகமாக பதில் சொல்லுங்கள். சரியா?

ஒரு ஓட்டப் பந்தயத்தில் கடைசி ஆளை நீங்கள் முந்தி விட்டீர்கள் என்றால் அப்போது உங்களின் இடம் எது?

.
..
...
....

பதில்:
இதில் தப்பாக சொல்ல வழியே இல்லை. கடைசிக்கும் முதல் ஆள். இதுதானே உங்கள் பதில்.
தவறு.
கடைசி ஆளை எப்படிங்க முந்த முடியும்.நீங்களே கடைசி ஆளாய் இருந்தாலும் கூட, கடைசிக்கும் முதல் ஆளைத்தானே முந்த முடியும்.

சே! என்று தானே சொன்னீங்க. பின்னால் உள்ள இரண்டிலும் வெற்றிதான். வாங்க!.

கேள்வி மூன்று:
சாதாரண கூட்டல் கணக்குதான். சின்ன தந்திரம் இருக்கிறது. மனதில்தான் போடணும். கால்குலேட்டர் எடுக்கக் கூடாது. சரியா?

ஒரு 1000 எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு 40 சேருங்கள். இதில் மேலும் ஒரு 1000 சேருங்கள். இப்போது அதில் ஒரு 30 சேருங்கள். அதில் இன்னொரு 1000 சேருங்கள். இதில் ஒரு 20ஐ சேருங்கள். மீண்டும் ஒரு 1000 சேருங்கள். அதில் ஒரு 10ஐ சேருங்கள். மொத்தம் எவ்வளவு?

.
..
...
....

பதில்:
5000 வந்திருக்கிறதா?
சரியான பதில் நான்காயிரத்து நூறுதான்.
நம்பவில்லையா?
இப்போது கால்குலேட்டர் கொண்டு கூட்டிப் பாருங்கள்.

போகட்டும் விடுங்கள். அடுத்த கேள்விக்கு சரியான விடை சொல்லி விடுவீர்கள். போவோமா?

கேள்வி நான்கு:
Maryயுடைய தந்தைக்கு ஐந்து பெண் குழந்தைகள்.
அவர்களுடைய பெயர்கள் முறையே
1. Nana 2.NeNe 3.Nini 4.Nono எனில்
ஐந்தாவது குழந்தையின் பெயரென்ன?

.
..
...
....


பதில்:
NuNu என்று சொன்னால் சரியானதுதான் என்று சொல்ல மாட்டேன்.
தவறு. அவளுடைய பெயர் Mary.
சந்தேகம் வந்தால் கேள்வியை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

சரி விடுங்க.
கடைசியாக போனஸ் கேள்வி. சொல்லிடுவீங்க

போனஸ் கேள்வி:
ஒரு வாய் பேச இயலாதவர் tooth brush வாங்க ஒரு கடைக்குச் சென்றார். கடைக்காரரிடம், ஒருவன் பல் விளக்குவது போல செய்கை காண்பித்து, அதைக் கடைக்காரருக்கு புரிய வைத்து, வெற்றிகரமாக வாங்கி விட்டார். இப்போது ஒரு பார்வையற்றவர் sunglasses வாங்க அதே கடைக்கு வந்திருப்பதாகக் கொள்வோம். அவர் எப்படி கடைக்காரருக்கு விளங்க வைப்பார்?

.
..
...
....


பதில்:
இதென்ன பெரிய அதிசயமா? அவர் வாயால் கேட்டு வாங்கி வருவார். அவர் பார்வையற்றவர்தான் பேசத் தெரியாதவர் அல்லவே.
(நன்றி: பர்வீன், நஜீர் அஹ்மத்)

Post Comment

மரம்! எனக்கு நம்ப முடியல!! உங்களுக்கு?


மேலேயுள்ள மரம் ஆந்திராவிவின் அடர்ந்த காடுகளில் எங்கோ இருப்பதாக சொல்கிறார்கள். யாராவது பார்த்தவர்கள் இருக்கின்றீர்களா?. பெரிய அடிக்கட்டையைப் பார்த்தால் ஆலமரம் போன்ற தோற்றம் தரும் இம்மரம் ஒரு தனிப்பிறவி.

மரத்தின் அடிப்பாகத்தையும் கிளைகளையும் நோக்கினால் விதவிதமான உயிரினங்கள் அதைச் சுற்றி படர்ந்துள்ளது போலவே வளர்ந்து இருக்கிறது.


Post Comment

Wednesday, 8 April 2009

ஈழப்போரா? இனப்படுகொலையா?


இலங்கையில் என்ன நடக்கிறது?

இனப்படுகொலைகளும் அழுகுரல்களும் ஓய்வதாக இல்லையே.
தமிழினம் இப்படியே அழிந்து பட வேண்டியதுதானா?


ஜனவரி 20 முதல் மார்ச்15 வரையிலான சுமார் 55 நாட்களுக்குள் தமிழ் மக்களில் சுமார்2700 பேர் கொல்லப்பட்டும் 7500பேர் காயமடைந்தும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எங்கே முயற்சி? நம் பங்களிப்பை நாம் எப்படிச் செய்ய முடியும்? கையறு நிலையாக இருக்கிறதே.


ஒன்றுமறியா அப்பாவிகளும் குழந்தைகளும் செத்து மடிவதையும் ஊனமானவதையும் எல்லோரையும் போல என் மனதும் பொறுத்துக் கொள்ள மறுக்கிறது. என் இனத்தார், மூத்த தமிழ்க்குடியினர் படும் துயரங்கள் கேட்க இதயம் துடிக்கிறது.

பாதுகாப்பு வளையத்துக்குள் கூட்டி வைத்து கொல்வதாக கேட்கும் போது காதுகளில் சுடும் ஈயம் பாய்கிறது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்தும் தீவிர தாக்குதல்களினால், அங்குள்ள தமிழ் மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் கொடுமைகள் அளவிடற்கரியது. சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையில்தான் சண்டையென்றால் அவர்களைப் பிரித்து வைத்து சமர் செய்யுங்கள். ஒன்றும் செய்யாத அப்பாவிகளைக் கொல்லாதீர்கள்.

அப்பாவி மக்கள் பாதுகாக்கப்பட உடனடியான போர் நிறுத்தமே இப்போதைய தேவை, அதுவே உடனடித் தீர்வு. அது புலிகளை பொது மக்களிலிருந்து தனிமைப்படுத்த தற்காலிகமானதாகக் கூட இருக்கலாம். பொது மக்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எந்த பங்கமும் வராமல் எம் தமிழினம் காப்பாற்றப்பட வேண்டும். போர் நடக்கும் பகுதிகளிலிருந்து அப்பாவி பொது மக்களும் பெண்களும் குழந்தைகளும் அப்புறப் படுத்தப்படுவதோடு அவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும். இலங்கையில் மற்ற குடிமக்கள் பெரும் உரிமைகளையும் சலுகைகளையும் ஈழத்தமிழர்களும் பெற உறுதியான உடன்பாடு பேச்சு வார்த்தைகளின் முலம் எட்டப்பட வேண்டும். பேச்சு வார்த்தைகளில் உலக சமுதாயப் பிரதிநிதிகளுக்கும் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும.

தமிழகத்தின் எல்லா தலைவர்களும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டை தம் அரசியல் இலாபங்களை கணக்கில் கொண்டே செய்கிறார்கள். கலைஞர் ஓரளவு முயன்றார். ஆனால் அது வெற்றி பெறவில்லை என்கின்ற போது, பழைய சறுக்கலகளை நினைந்து விட்டு விடாமல், இன்னும் கூடுதலாக முனையாமல் விடுவது அவர் தம் தமிழினக்காவலர் என்ற பெயருக்கு பொருத்தமானதாக அமையாது. இப்போதைக்கு தமிழகம் அவரைத்தான் எதிர் நோக்குகிறது. வேறு போக்கிடம் இல்லை.

படங்கள்: பிற தளங்களிலிருந்து
மேலும் அறிய: 1. அபி அப்பா , 2. தூயா

Post Comment

Wednesday, 1 April 2009

நாங்க தமிழ்நாட்டுகாரங்க

நம் நண்பரின் ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தார். கனமான குரல். அவருக்கே தான் கொஞ்சம் விவரமானவர் என்ற எண்ணம். அதனால் பேச்சு கொஞ்சம் பெரிய மனித தோரணையாக இருக்கும். கிராமத்தில் மற்றவர்கள் கொடுக்கும் சிறு வேலைகளை அங்கங்கே போய் முடித்துத் தந்து விடுவார். தயங்காமல் உதவிகள் செய்வதால் நல்ல பெயர். சில பேர் ஊரிலிருந்து சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்தார்கள் அதிலே இவரும் இருந்தார். பெரு நகரங்களுக்கு அப்போதுதான் வருகிறார்கள் போலுள்ளது.

சென்னையில் ஒரு பெரிய சைவ உணவகத்தில் நம் நண்பரோடு காலை உணவு சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் இட்லி சொல்லி, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அடுத்து தோசைக்கும் சொல்லியாகி விட்டது. இவர் இட்லி சாப்பிட்டு விட்டு தோசைக்காக காத்திருந்த சமயத்தில் பையன் தட்டை எடுத்து போய் விட்டான். அவருக்கு கோபம் வந்து விட்டது.

பெரியவர்: டேய் இங்க வாடா. ஏன் தட்டை எடுத்த?
பையன்: சாப்பிட்டிங்கல்ல. தட்டில ஒன்னுமில்ல, காஞ்சிடுமேன்னுதான்
நண்பர்: தம்பீ நீங்க போங்க
நண்பர்: ஐயா இங்கே தோசை வேறு தட்டில் தருவார்கள்.
பெரியவர்: என்ன ஹோட்டலுக்கு கொண்ணாந்த?. தட்ட தூக்கிட்டு போயிறானுங்க. (கூட வந்தவர்களின் ஜால்ரா வேறு)
பையன்: நான் திரும்ப வச்சிரவா?
நண்பர்: நீங்க போங்க தம்பீ (சர்வர் ஒரு மாதிரியா பார்த்துக் கொண்டே போகிறார்)
நண்பர்: (ஐயையோ! இன்னும் எனனென்ன நடக்கப் போகுதோ! என்று மனதில் நினைந்தவனாய்) நீங்க சாப்பிடுங்கய்யா.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும்
பெரியவர்: இனிமே மதியம் மூணு மணிக்கு மேலதான் வேலை. பஸ்ஸில கடைசி சீட்டாப் போச்சு. ராத்திரி பூரா தூங்கவும் முடியல. எங்களை எங்கேயாச்சும் அழைச்சிட்டு போய் வர்ரியா தம்பீ.
நண்பர்: (மனதில்: உங்களையா? ஐயையோ!) ராத்திரி பூரா தூங்காம வந்திருக்கீங்க. இனிமேல் வெயிலும் கடுமையா இருக்கும். பக்கத்துல ஏசி தியேட்டர் இருக்கு. நல்ல படத்துக்கு டிக்கெட் கிடைக்காது. ஏதாவது ஒரு படத்துக்கு போய்ட்டா. ஏசியில நல்லா தூங்கிரலாம். அப்புறம் போற இடத்துக்கு கிளம்ப சரியாயிடும். (மனதில்: எனக்கும் நிம்மதியாக போயிடும்)
பெரியவர்: யாருக்கு சினிமா பார்க்க?. குளுகுளுன்னு கொஞ்சம் தூங்கலாம்னா சரிதான் தம்பீ.

எதிலும் டிக்கட் கிடைக்காமல், நண்பர் ஆங்கிலப்பட டிக்கெட் ஐந்து வாங்கி வருகிறார்.

பெரியவர்: என்ன படம் தம்பீ
நண்பர்: தமிழ் படமெல்லாம் முன்பதிவில் இருப்பதால் டிக்கட் கிடைக்கல. தூங்க தானே என்று ஆங்கிலப்பட டிக்கெட் எடுத்திட்டேன்.
பெரியவர்: நாலு கொட்டா இருக்கு. டிக்கட் எடுக்க முடியலியா. அதை கொடுத்துட்டு வந்திருங்க. நான் வாங்கியாரேன் பாருங்க.
நண்பர்: இல்லீங்கய்யா. திரும்ப கொடுத்தா வாங்க மாட்டாங்க.
பெரியவர்: அதென்ன அப்படி. நீங்க எங்கூட வாங்க. நான் வாங்கிக்க சொல்றேன்.
நண்பர்: பரவாயில்லீங்க. வேற டிக்கட் எடுத்துருவோம்.
பெரியவர்: இதெல்லாம் பெரிய விஷயமா. எங்கூட வாங்க எப்படி காச வாங்கறதுன்னு சொல்லித் தாரேன்.

நண்பர் என்ன கூத்து கட்டப் போறாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அறுப்புக்கு போகும் ஆடு போல இழுத்துக் கொண்டு போகப் படுகிறார்
நண்பர்: இருங்க. பொறுங்க. நானே கேட்டுப் பார்க்கிறேன்
நண்பர் டிக்கெட் தருமிடத்தில் போய்: (ஆங்கிலத்தில்) மன்னிக்கவும். இந்த டிக்கெட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வீர்களா? எங்களுக்கு வேறு ஒரு அவசர வேலையாக உடனே போக வேண்டி இருக்கிறது.
டிக்கட் தருபவர்: (ஆங்கிலத்தில்) மன்னிக்கவும். டிக்கெட்டுகள் திரும்பப் பெறவோ மாற்றவோ தகுந்ததல்ல.
ஏமாற்றத்துடன் பெரியவரை திரும்பிப் பார்க்கும் நண்பரிடம்
பெரியவர்: இங்க கொடுங்க. நான் எப்படி மாத்தறேன்னு பாருங்க

பெரியவர்: (டிக்கட் கொடுக்குமிடத்தில் தலையை விட்டுக் கொண்டு) நாங்க தமிழ்நாட்டிலேந்து வந்திருக்கோம். பையன் தெரியாம இந்த இங்லீசு டிக்கட் வாங்கிட்டான். காசக் கொடுத்திடுங்க.
டிக்கெட் தருபவர்: எங்கே? தமிழ்நாட்லேர்நது வந்திருக்கிங்களா? கொஞ்சம் பொறுங்க. மேனேஜர் வரட்டும்.
சிறிது நேரத்தில் மேனேஜரை அழைத்து வருகிறார்.
மேனேஜர்: யாரது? யாருங்க தமிழ்நாட்லேர்ந்து வந்திருக்கறது?
பெரியவர்: இந்தா. நாங்க அஞ்சு பேருமுங்க
மேனேஜர்: எந்த ஊரு
பெரியவர்: ஊர் பெயரைச் சொல்கிறார்
மேனேஜர் (டிக்கட் தருபவரிடம்): தமிழ்நாட்டிலேர்ந்து வந்திருக்காங்க. டிக்கட்டை வாங்கிகிட்டு பணத்தை கொடுத்தனுப்புங்கள். (தலையிலடித்துக் கொண்டு போகிறார்)
பணத்தை வாங்கிக் கொண்டு பெரியவர் வெற்றிக் களிப்பில்….
கூட வந்திருப்பவர்கள் நண்பரை ஏளனமாக பார்க்க.....
அவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கே இருந்து வந்தவர்தான், அதிலிருந்து எங்கே போனாலும் தனியாகத்தான்.

Post Comment