Wednesday, 1 April 2009

நாங்க தமிழ்நாட்டுகாரங்க

நம் நண்பரின் ஊரில் ஒரு பெரிய மனிதர் இருந்தார். கனமான குரல். அவருக்கே தான் கொஞ்சம் விவரமானவர் என்ற எண்ணம். அதனால் பேச்சு கொஞ்சம் பெரிய மனித தோரணையாக இருக்கும். கிராமத்தில் மற்றவர்கள் கொடுக்கும் சிறு வேலைகளை அங்கங்கே போய் முடித்துத் தந்து விடுவார். தயங்காமல் உதவிகள் செய்வதால் நல்ல பெயர். சில பேர் ஊரிலிருந்து சென்னைக்கு ஒரு வேலையாக வந்திருந்தார்கள் அதிலே இவரும் இருந்தார். பெரு நகரங்களுக்கு அப்போதுதான் வருகிறார்கள் போலுள்ளது.

சென்னையில் ஒரு பெரிய சைவ உணவகத்தில் நம் நண்பரோடு காலை உணவு சாப்பிட அமர்ந்திருக்கிறார்கள். எல்லோருக்கும் இட்லி சொல்லி, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அடுத்து தோசைக்கும் சொல்லியாகி விட்டது. இவர் இட்லி சாப்பிட்டு விட்டு தோசைக்காக காத்திருந்த சமயத்தில் பையன் தட்டை எடுத்து போய் விட்டான். அவருக்கு கோபம் வந்து விட்டது.

பெரியவர்: டேய் இங்க வாடா. ஏன் தட்டை எடுத்த?
பையன்: சாப்பிட்டிங்கல்ல. தட்டில ஒன்னுமில்ல, காஞ்சிடுமேன்னுதான்
நண்பர்: தம்பீ நீங்க போங்க
நண்பர்: ஐயா இங்கே தோசை வேறு தட்டில் தருவார்கள்.
பெரியவர்: என்ன ஹோட்டலுக்கு கொண்ணாந்த?. தட்ட தூக்கிட்டு போயிறானுங்க. (கூட வந்தவர்களின் ஜால்ரா வேறு)
பையன்: நான் திரும்ப வச்சிரவா?
நண்பர்: நீங்க போங்க தம்பீ (சர்வர் ஒரு மாதிரியா பார்த்துக் கொண்டே போகிறார்)
நண்பர்: (ஐயையோ! இன்னும் எனனென்ன நடக்கப் போகுதோ! என்று மனதில் நினைந்தவனாய்) நீங்க சாப்பிடுங்கய்யா.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்ததும்
பெரியவர்: இனிமே மதியம் மூணு மணிக்கு மேலதான் வேலை. பஸ்ஸில கடைசி சீட்டாப் போச்சு. ராத்திரி பூரா தூங்கவும் முடியல. எங்களை எங்கேயாச்சும் அழைச்சிட்டு போய் வர்ரியா தம்பீ.
நண்பர்: (மனதில்: உங்களையா? ஐயையோ!) ராத்திரி பூரா தூங்காம வந்திருக்கீங்க. இனிமேல் வெயிலும் கடுமையா இருக்கும். பக்கத்துல ஏசி தியேட்டர் இருக்கு. நல்ல படத்துக்கு டிக்கெட் கிடைக்காது. ஏதாவது ஒரு படத்துக்கு போய்ட்டா. ஏசியில நல்லா தூங்கிரலாம். அப்புறம் போற இடத்துக்கு கிளம்ப சரியாயிடும். (மனதில்: எனக்கும் நிம்மதியாக போயிடும்)
பெரியவர்: யாருக்கு சினிமா பார்க்க?. குளுகுளுன்னு கொஞ்சம் தூங்கலாம்னா சரிதான் தம்பீ.

எதிலும் டிக்கட் கிடைக்காமல், நண்பர் ஆங்கிலப்பட டிக்கெட் ஐந்து வாங்கி வருகிறார்.

பெரியவர்: என்ன படம் தம்பீ
நண்பர்: தமிழ் படமெல்லாம் முன்பதிவில் இருப்பதால் டிக்கட் கிடைக்கல. தூங்க தானே என்று ஆங்கிலப்பட டிக்கெட் எடுத்திட்டேன்.
பெரியவர்: நாலு கொட்டா இருக்கு. டிக்கட் எடுக்க முடியலியா. அதை கொடுத்துட்டு வந்திருங்க. நான் வாங்கியாரேன் பாருங்க.
நண்பர்: இல்லீங்கய்யா. திரும்ப கொடுத்தா வாங்க மாட்டாங்க.
பெரியவர்: அதென்ன அப்படி. நீங்க எங்கூட வாங்க. நான் வாங்கிக்க சொல்றேன்.
நண்பர்: பரவாயில்லீங்க. வேற டிக்கட் எடுத்துருவோம்.
பெரியவர்: இதெல்லாம் பெரிய விஷயமா. எங்கூட வாங்க எப்படி காச வாங்கறதுன்னு சொல்லித் தாரேன்.

நண்பர் என்ன கூத்து கட்டப் போறாரோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அறுப்புக்கு போகும் ஆடு போல இழுத்துக் கொண்டு போகப் படுகிறார்
நண்பர்: இருங்க. பொறுங்க. நானே கேட்டுப் பார்க்கிறேன்
நண்பர் டிக்கெட் தருமிடத்தில் போய்: (ஆங்கிலத்தில்) மன்னிக்கவும். இந்த டிக்கெட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்வீர்களா? எங்களுக்கு வேறு ஒரு அவசர வேலையாக உடனே போக வேண்டி இருக்கிறது.
டிக்கட் தருபவர்: (ஆங்கிலத்தில்) மன்னிக்கவும். டிக்கெட்டுகள் திரும்பப் பெறவோ மாற்றவோ தகுந்ததல்ல.
ஏமாற்றத்துடன் பெரியவரை திரும்பிப் பார்க்கும் நண்பரிடம்
பெரியவர்: இங்க கொடுங்க. நான் எப்படி மாத்தறேன்னு பாருங்க

பெரியவர்: (டிக்கட் கொடுக்குமிடத்தில் தலையை விட்டுக் கொண்டு) நாங்க தமிழ்நாட்டிலேந்து வந்திருக்கோம். பையன் தெரியாம இந்த இங்லீசு டிக்கட் வாங்கிட்டான். காசக் கொடுத்திடுங்க.
டிக்கெட் தருபவர்: எங்கே? தமிழ்நாட்லேர்நது வந்திருக்கிங்களா? கொஞ்சம் பொறுங்க. மேனேஜர் வரட்டும்.
சிறிது நேரத்தில் மேனேஜரை அழைத்து வருகிறார்.
மேனேஜர்: யாரது? யாருங்க தமிழ்நாட்லேர்ந்து வந்திருக்கறது?
பெரியவர்: இந்தா. நாங்க அஞ்சு பேருமுங்க
மேனேஜர்: எந்த ஊரு
பெரியவர்: ஊர் பெயரைச் சொல்கிறார்
மேனேஜர் (டிக்கட் தருபவரிடம்): தமிழ்நாட்டிலேர்ந்து வந்திருக்காங்க. டிக்கட்டை வாங்கிகிட்டு பணத்தை கொடுத்தனுப்புங்கள். (தலையிலடித்துக் கொண்டு போகிறார்)
பணத்தை வாங்கிக் கொண்டு பெரியவர் வெற்றிக் களிப்பில்….
கூட வந்திருப்பவர்கள் நண்பரை ஏளனமாக பார்க்க.....
அவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கே இருந்து வந்தவர்தான், அதிலிருந்து எங்கே போனாலும் தனியாகத்தான்.

Post Comment

5 comments:

Anonymous said...

enunga... where are they from.. which part... curious curious curious....

ஜோ/Joe said...

:))))

Unknown said...

//enunga... where are they from.. which part... curious curious curious....//
நன்றி Triumph. இன்னொருவர் வருவார். அவர் வந்ததும் ஒப்புதல் வாங்கிட்டுச் சொல்றேன்:)

Unknown said...

நன்றி ஜோ.

படகு said...

பெரியவர்: என்ன ஹோட்டலுக்கு கொண்ணாந்த?. தட்ட தூக்கிட்டு போயிறானுங்க. (கூட வந்தவர்களின் ஜால்ரா வேறு)
பையன்: நான் திரும்ப வச்சிரவா?
நண்பர்: நீங்க போங்க தம்பீ (சர்வர் ஒரு மாதிரியா பார்த்துக் கொண்டே போகிறார்)
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களே......
:-)))))