Tuesday 29 January 2008

மாற்றத்திற்கான காலம் இன்னும் வரவில்லையா? – குடியரசு நாள் விவாதம்


சமீபத்தில் பத்திரிக்கையாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. குல்தீப் நய்யார் அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த அந்தந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவில் பாராளுமன்ற மரபுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றி ஒரு வகுப்பபெடுத்தார். அதில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக, அப்போதைய இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் உயர்ந்த அறிஞர்களைத் தேர்ந்தெடுத்து ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் தலைவராக பாபு இராஜேந்திர பிரசாத் அவர்கள் இருந்தார்கள். அதன் உறுப்பினர்களாக டாக்டர்.அம்பேத்கர், பண்டிட் ஜவஹர்லால் நேரு முதலியோர் இருந்தனர்.

அக்குழு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி அதை ஏற்று செயல் வடிவம் தந்து அமுலாக்கிய நாளில் பாபு இராஜேந்திர பிரசாத் இறுதி உரை நிகழ்த்தினார். அதில் இந்தியாவின் மிகச்சிறந்த அறிஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்டமாகிய இதை படிப்பறிவற்றவர்களெல்லாம் ஓட்டுரிமை வடிவில் பெற்று நாடாளுமன்றமும் பாராளுமன்றமும் வரப் போகிறார்கள் என்று வேதனை தெரிவித்து முடித்தாராம். அப்போது அங்கிருந்த பண்டிட் நேரு அவர்கள் தலைவரது பேச்சிற்கான சிறு விளக்கம் தர அனுமதி பெற்று பேசினாராம்.

அதில், நாட்டின் சுதந்திர போராட்டத்தில், படித்தவர்களில் பெரும்பாலோர், கலந்து கொள்ளாதவர்களாகவும் அன்னியருக்கு அடிவருடிகளாகவுமே இருந்தனர். படிக்காத இந்த பாமர மக்கள்தான் குடும்பத்தையும் தொழிலையும் மறந்து தெருக்களில் இறங்கி போராட்டம் செய்தனர். எனவே சுதந்திரத்தின் பலனை படிக்காத இந்தப் பாமரர்கள் அதிகம் அனுபவித்தலே முறைமையாகும் என்று பேசினாராம். அதை பாபு இராஜேந்திர பிரசாத்துடன் குழுவிலிருந்த மற்ற அறிஞர்களும் ஆமோதித்தனராம்.


எந்தவொரு பொறுப்புக்கும் அடிப்படையான சில தகுதிகளை எதிர்பார்க்கும் இக்காலத்தில், நாடு சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் குடிமகன் என்ற தகுதியைத் தவிர வேறெந்த அடிப்படைத் தகுதியுமற்ற, படிப்பறிவற்ற நபர்களை ஆளும் மன்றங்களுக்கு அனுப்புதல் அவசியம்தானா? நேரு சொன்ன கருத்து தற்போதைய நிலையில் காலாவதியாகி விட்டதாக கருதலாமா? சில தகுதிகளை வரையறுப்பது நாட்டுக்கு நல்லதில்லையா?

இதில் எனக்கென்று ஒரு எண்ணம் உள்ளது – அது தான் நாட்டுக்கு சிறந்ததென்றும் தோன்றுகிறது. உங்களுக்குள்ளும் ஒரு எண்ணம் தோன்றலாம். தங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே. படிப்பவர்களுக்கு இது குறித்த சிந்தனையைத் தூண்டலாமே.

Post Comment

No comments: