உலகம் சுற்றும் வாலிபன்
முதன் முதலில் பெரிய அளவில் தமிழர்களுக்கு உலகைச் சுற்றிக் காட்டிய படம். தண்ணீருக்கடியில் ஒரு பாட்டு முழுதும் படமாக்கப் பட்டிருக்கும். புத்த விகாரத்தினுள் துருத்திய பற்களோடு நம்பியார் எம்ஜிஆருடன் சண்டையிடுவது சிறப்பான காட்சியமைப்பு. எனக்கு பிரமிப்பை ஏற்படுத்திய படம்.
இந்தப் படத் தயாரிப்பின் போது கவிஞர் வாலி அவர்கள் 'நானில்லையென்றால் இந்தப் படமே வெறும் பன் ஆகி விடும்' என்று எம்ஜிஆரிடம் சொல்ல, அவர் கோபமடைந்து விட்டாராம். அதன் பின் 'உலகம் சுற்றும் வாலிபனி'ல் வாலியை எடுத்துவிட்டால் 'உலகம் சுற்றும் பன்' தானே எனச் சொல்லி பின் சமாதானமானாராம்.
அவள் ஒரு தொடர்கதை
இயக்குநர் பாலசந்தரின் இயக்கத்தில் வெளி வந்த படம். ஒரு பெண் தனியாளாய் நின்று, பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி, இயன்றவரை நேர்மையான முறையில் பொருள் திரட்டி, தன் குடும்பத்தாரை மட்டுமில்லாமல் ஊதாரியாய் சுற்றித்திரியும் தன் அண்ணணின் குடும்பத்தையும் காப்பாற்றுவதாக காட்டும் படம். ஒரு பெண் தீபமாய் ஒளிர்ந்து தியாகங்கள் செய்து என்று பெண்ணின் சிறப்பை அழகாக காட்டி பெருமை படுத்திய படங்களில் நான் பார்த்த முதல் படம்.
இதில் பாடகர் ஏசுதாஸ் பாடிய 'தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு' என்ற பாடலும், நடிகர் கமலஹாசன் மிமிக்ரி செய்து பாடுதாக அமைந்த 'கடவுள் அமைத்து வைத்த மேடை' பாட்டும் இப்போதும் என் மனதினின்றும் அகலாதது. நடிகை சுஜாதாவுக்கு முதல் படமாம்.
நினைத்தாலே இனிக்கும்
எனது டீன் ஏஜ் நாட்களில் வெளி வந்த படம். இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் அதிகமாக பாடல்களை கொடுத்து எல்லா பாடல்களும் ஹிட்டாகி பரபரப்பாக பேசச் செய்தது. சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது. கமலஹாசனின் நடிப்பும், நடிகை ஜெயப்ரதா(வுக்கு முதல் படமாம்), 'இல்லை' என்று சொல்ல வருவதை மேலிருந்து கீழாக அழகாய் தலையாட்டி ஆரம்பித்து இடமிருந்து வலமாக முடிப்பதும், அது போலவே 'ஆமாம்' எனச் சொல்ல வருவதை இடமிருந்து வலமாக அழகாய் தலையாட்டி ஆரம்பித்து மேலிருந்து கீழாக முடிப்பதும், நடிகர் ரஜினியின் குறும்புத் தனமும், காதலை மென்மையாய் சொல்லியிருப்பதும், ஆங்காங்கே உள்ள டைரக்டர் டச்சும் படத்தை தொய்வில்லாமல் நெய்திருக்கும். நான் நிறைய தடவை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.
மூடுபனி
கல்லூரி நாட்களில் கண்ட படம். டைரக்டர் பாலுமகேந்திராவின் கேமரா, ஒவ்வொரு காட்சியிலும் கவிதையாய் கதை சொல்லும் நேர்த்திக்காகவே இந்தப்படத்தை பார்க்கலாம். நடிகர் பிரதாப் போத்தன், நடிகை ஷோபா ஆகியோரது சிறந்த நடிப்பு. 'என் இனிய பொன் நிலாவே' என்று மேற்கத்திய பாணியில் பாடகர் ஏசுதாஸ் பாட்டு முதலியவை படத்தின் கூடுதல் அம்சங்கள்.
சுலங்கை ஒலி
நடனத்துக்காகவே எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தில் எதை எடுப்பது எதை விடுவது. மிகச்சிறப்பான படம். நான் நிறைய தடவை பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. 'என் குழந்தைகளுக்கு நான் நடித்ததென்று காட்ட' என்றும் 'இனியொரு முறை என்னால் கூட திரும்பவும் இதுபோல் நடிக்க முடியாது' என்றும் நடிகர் கமலஹாசனே கூறிய படம். நிறைய விவாதங்களை அந்நாளில் சந்தித்தது. 'கலையை ரசிக்க வேண்டிய மாது கம்முகாட்டை ரசிப்பதேன்' என்று ஒரு பெயர் பெற்ற நர்த்தகிக்கு எதிராக அவர் குமுதத்தில் எழுதினார்.
சிந்து பைரவி
தமிழிசைக்காகவே எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படம். கவி. வைரமுத்து தேசிய அளவில் பேசப்பட காரணமாயிருந்தது. சங்கராபரணத்துக்குப் பின் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாட தமிழக இளைஞர்களைத் தூண்டியது. சுலக்சனா, டெல்லி கணேஷ், ஜனகராஜ் ஆகியோரது நடிப்பு படத்துக்கு பலம். எல்லா பாடல்களுமே பேசப்பட்டது.
இதல்லாமல் பல படங்களும் இந்த வரிசையில் வரும். உங்கள் பொறுமையை ரொம்ப சோதிக்க வேண்டாமே என்று இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
அடுத்து இந்த வரிசையில் எழுத, எனக்கு வலையுலகில் அறிமுகமானவர்களில் இருந்து யாரை அழைக்க? அழைத்தால் என் அழைப்பு கேட்டு பதிவார்களா எனத் தெரியாததால் யாரையும் அழைக்கவில்லை.
3 comments:
முதல் 2 படங்களை விட்டுவிட்டால் எனக்கும் அதே ரசனை தான் திரு சுல்தான்.
நன்றாக சொல்லியுள்ளீர்கள்.
நன்றி வடுவூர் குமார்.
நல்ல ரசனை
Post a Comment