ஒரு ஆண் செய்யும் அசிங்கத்தையும் அருவருப்பானதையும் கேவலமானதையும் பார்த்து அதைப் போல ஒரு பெண் செய்தாலென்ன என நினைப்பதுதான் பெண்ணியமா?
கேவலமானவற்றை செய்யும் ஆணோடு போட்டியிட்டு அதைப் போல அல்லது அதை விட கீழ்த்தரமாக செய்து காண்பிப்பதுதான் பெண்ணியமா?
ஆண்களைப் போல் ஆடை அணிவது, 'இன்னும் குறைப்பேன் என்ன பந்தயம்?' எனக் கேட்டு அங்கங்கள் வெளியில் தெரிய ஆடை குறைப்பு, தலை முடியை சிறிதாக்கிக் கொள்வது, மேற்கத்திய நாகரிகம் செல்லும் திக்கை நோக்கியே பயணிப்பது, இதுதான் பெண்ணியம் என சில பெண்கள் சூடு வைத்துக் கொள்கின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் இரும்புச் சங்கிலிகளை அறுத்து வந்த பெருமை பெற்ற பெண்களை சிறிது யோசியுங்கள். அவர்கள் இம்முறையில் கீழ்த்தரமானதை செய்ததாலா பெருமை பெற்றனர்? மனித குலத்தை உயர்த்தும் செயலிற்சிறந்த ஆண்களோடு போட்டியிட்டு அவர்களைப் போல அல்லது அதை விடவும் சிறப்பாக செயலாற்றிக் காண்பித்ததாலேயே பெண் குலத்துக்கு பெருமை சேர்த்தனர்.
பழங்காலத்தைப் போல் இன்று பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக ஆண்கள் இல்லை என்னுமளவுக்கு ஆண்கள் மாறியுள்ளனர். அது மட்டுமின்றி பெண் வளர்ச்சிக்காகவும் விடுதலைக்காகவும் சமீப கால இந்தியாவில் பாடுபட்டவர்களில் பெரும்பாலோர் இராஜா ராம் மோகன்ராய், தந்தை பெரியார், திரு.வி.க., பாரதி, பாரதிதாசன் போன்ற ஆண்கள்தான்.
முதலில் திறந்து விடப்பட்டுள்ள வழிகளில் பயணம் செய்ய பெண்கள் தயாராக வேண்டும். ஓட்டுரிமை மறுக்கப்பட்ட காலம் போய் இன்று 33 விழுக்காடு இட ஓதுக்கீடு இலக்கை பெற முயற்சித்துப் பெருங்கள். நாளை இது 50 விழுக்காடு நோக்கிய பயணமாயிருக்கட்டும்.
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். பெண்களால் இயலாது எனப்பட்ட காவல் துறை, இராணுவம் ஏன் விண்வெளி வரை பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்.
ஆனாலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற பெரும் பழியை வரதட்சனை, மருமகள் கொடுமை போன்றவற்றால் இன்னும் பெண்கள் சுமக்கிறார்கள். இவற்றையெல்லாம் உடைத்து வெளி வருவதில்தான் பெண் முழு விடுதலை நோக்கி வருவாள்.
மிகக் கேவலமான கற்பப்பை சுதந்திரம், நினைத்ததை எல்லாம் செய்யும் கட்டுப்பாடற்ற சுதந்திரம், முடிவெடுக்கும் அதிகாரம் இவை கிடைத்து விடுதல்தான் பெண் விடுதலை என சில பெண்கள் பிதற்றித் திரிகின்றனர்.
இல்லை. பெண் விடுதலை என்பது சுயத்தை இழக்காமல், அதாவது பெண்களுக்குரிய தனித்தன்மைகளை இழக்காமல் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்வதே ஆகும்.
தாய்மைப்பேறு, தாய்ப்பால் கொடுத்தல், ஒரே ஆணோடு வாழ்தல் இவையனைத்தும் பெண்களுககே உரிய தனித்தன்மைகள். இவற்றை விட்டு விலகுவது காலப்போக்கில் பண்பாட்டுச் சீரழிவை விதைத்து, உயரிய கலாச்சாரத்தைக் கெடுத்து, பெண்களுக்கே எதிரான விளைவுகளைத்தான் தரும்.
ஆண்களோடு உடல் வலுவில் பெண்கள் போட்டியிட முடியாது போலவே பெண்ணின் இத்தகு தனித்தன்மைகளில் ஆண்களும் போட்டியிடவே முடியாது. இதுதான் இயற்கை நியதி.
பெண்ணிணமற்ற ஆணிணமும், ஆணிணமற்ற பெண்ணிணமும் உலகில் நிலைக்குமா? சேர்ந்திருந்தால்தானே நிலைக்கும்.
என் மகளே! சகோதரிகளே! எது உண்மையான விடுதலையோ அதை நோக்கிய பயணத்தை செலுத்துங்கள். பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் சில நியதிகளை கடைபிடித்துக் கொண்டே உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடி வெற்றி பெருங்கள். அப்போதுதான் உங்களோடு இந்த சமுதாயமும் உயரும்.
24 comments:
சகோதரரே! பெண்ணியம் என்பதை மிகவும் தவறாக புரிந்திருக்கிறீர்கள். பெண்ணியம் என்பது பெண்களை புறக்கணித்து - இழிவுபடுத்தி -தாழ்வுபடுத்தும் நோக்கத்தோடு கட்டமைக்கப்பட்ட சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் கோட்பாடுகளின் கோர்வையாகும்.
//சில பெண்கள் சூடு வைத்துக் கொள்கின்றனர்.//
ஆமாம் சுல்தான் சார் ஒட்ட ஒட்ட புகைப்பிடிக்கிறார்கள்! பல பெண்கள் கையில் சிகரெட் இருக்கிறது இப்பொழுது!
மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!!! அட ஒரு ஆண் சொல்லி திருந்துவதா?அப்படின்னு வீம்பு புடிப்பாங்க:)
//சகோதரரே! பெண்ணியம் என்பதை மிகவும் தவறாக புரிந்திருக்கிறீர்கள். பெண்ணியம் என்பது பெண்களை புறக்கணித்து - இழிவுபடுத்தி -தாழ்வுபடுத்தும் நோக்கத்தோடு கட்டமைக்கப்பட்ட சமூக, அரசியல், பொருளாதார நடைமுறைகள், மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கவனப்படுத்தும் சமூக, கலாசார, அரசியல் இயக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் கோட்பாடுகளின் கோர்வையாகும்.//
நன்றி பிறைநதிபுரத்தான்.
நான் சொல்ல விரும்புவது பெண் விடுதலை அல்லது பெண்ணுரிமை பற்றித்தான். தலைப்பை எப்படி மாற்றலாம் என்று சொல்லுங்கள் சகோதரரே!.
//ஒட்ட ஒட்ட புகைப்பிடிக்கிறார்கள்! பல பெண்கள் கையில் சிகரெட் இருக்கிறது இப்பொழுது!//
:)))
ஆனால் அதுவும் சீர்கேடுதான்.
//மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள்!!!//
நன்றி குசும்பன்.
//அட ஒரு ஆண் சொல்லி திருந்துவதா?அப்படின்னு வீம்பு புடிப்பாங்க:)//
யாரும் என் பதிவு பார்த்து திருந்துவதா.
நான் சும்மா மனதிலுள்ளதை எழுதினேன்.
யாருக்காவது மனதில் சின்னதா ஒரு கிளிக்கினாலே அதுவே மிகப்பெரிய விடயம்.
மதிப்பிற்குரிய நண்பருக்கு, அஸ்ஸலமு அலைக்கும்..
ஒரு சிலவிசயங்களில் வேறுபாடு இருந்தாலும்..ஆண்போல பெண்கள் தங்களை மாற்றிக்கொள்வது தங்களை இழப்பதாகவே முடியும் என்ற தங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்! அதைவிடக்கொடுமை ஆணியம் பெண்ணியம் என்று பிரிப்பது என்றுகூட தோன்றும் சில விசயங்களை படிக்கும்பொழுது.. மேல்நாட்டுப் பெண்ணியப் போக்கு பற்றி எழுதிய போது திருமதி ரங்கநாயகி போன்றொர் அது நமக்கு உதாவதுபோல் தெரிகின்றதே செல்லா என்று சிறு ஐயம் கூட தெரிவித்திருந்தார்கள். தனித்தன்மைகளை இழப்பது என்பது மிகவும் கொடுமையான விசயம் தான் நண்பரே!
அதுசரி.. நாம் இணையத்தில் பேசி ரொம்பநாள் ஆகிவிட்டது! நலம் தானே!? (பின்னூட்டாவிட்டாலும் உங்கள் பதிவுகளை மாதம் ஒரு முறை சைட் அடித்துவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்! சீக்கிரம் உங்கள் படமும் என் வலைப்பூவில் உங்கள் பதிவின் லின்க் ஓடு வரும்.. உங்களுக்கு ஆட்சேபனையில்லை என்றால்...
அன்புடன்
ஓசை செல்லா
//அஸ்ஸலமு அலைக்கும்..//
அலைக்கும் வஸ்ஸலாம்.
//தனித்தன்மைகளை இழப்பது என்பது மிகவும் கொடுமையான விசயம் தான் நண்பரே!//
நன்றி
//அதுசரி.. நாம் இணையத்தில் பேசி ரொம்பநாள் ஆகிவிட்டது! நலம் தானே!? (பின்னூட்டாவிட்டாலும் உங்கள் பதிவுகளை மாதம் ஒரு முறை சைட் அடித்துவிட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்! சீக்கிரம் உங்கள் படமும் என் வலைப்பூவில் உங்கள் பதிவின் லின்க் ஓடு வரும்.. உங்களுக்கு ஆட்சேபனையில்லை என்றால்...//
இங்கு நலம். அங்கும் நலமே விழைவு. நானும் 'நச்' என்று வலைப்பூவை தவறாமல் பார்ப்பதும் அவ்வப்போது பின்னூட்டுவதும் உண்டு. தொடர்நது வாருங்கள் நண்பரே. நமக்கேது ஆட்சேபணை.
//ஆண்களைப் போல் ஆடை அணிவது, 'இன்னும் குறைப்பேன் என்ன பந்தயம்?' எனக் கேட்டு அங்கங்கள் வெளியில் தெரிய ஆடை குறைப்பு, தலை முடியை சிறிதாக்கிக் கொள்வது, மேற்கத்திய நாகரிகம் செல்லும் திக்கை நோக்கியே பயணிப்பது, இதுதான் பெண்ணியம் என சில பெண்கள் சூடு வைத்துக் கொள்கின்றனர். //
இதற்கு பெயர்தான் அப்பட்டமான ஆணாதிக்கம். ஆடை விதிமுறைகள் பெண்களுக்கு மட்டுந்தான் போலிருக்கு. ஆடை சுதந்தரத்தால் பெண்கள் சில ஆண் சமூக விரோதிகளால் பாதிபிற்குள்ளாவதாகிவிடும் என்ற கருத்தை ஏற்க முடியாது. இது வல்லூறு தன் குற்றத்திற்கு இரையை குற்றஞ்சாட்டுவதை போன்றது. எந்த பெண்ணாலும் அப்படியொரு பாதிப்பு ஆண்களுக்கில்லை. வெறும் உடல் வலிமை பொறுத்தே இந்த வித்தியாசம் இருக்கின்றதே ஒழிய வேறொன்றும் இல்லை. பெண்களுக்கு ஆடை தொடங்கி அனைத்திலும் சம உரிமை கொடுத்துவிட்டு சமூகத்திற்கு அறிவுரை சொல்வதுதான் சரியாக இருக்க முடியும்.
ஆணியம், பெண்ணியம் என்று பிரித்துப் பேசும் நிலையே தவறு என்று தோன்றுகிறது எனக்கு..கிராமங்களில் தவிர்த்து..கிராமத்தில் இன்னும் பெண்ணடிமைத்தனம் இருக்கத்தான் செய்கிறது..இது கிராமத்தில் பொதுப் ப்ரச்னைதான்..
பொதுவான உரிமைகள் ஒரே போன்று இருக்க, சுதந்திரங்களைச் சரிவரப் பயன்படுத்துவது ஒரு தனி நபரைப் பொறுத்தது, ஒரு தனிக் குடும்பத்தைப் பொறுத்தது..
அவரவர் பயன்படுத்தும், மீறும் சுதந்திரங்களுக்கு அவரவரே பொறுப்பு..
இதை சமூக ப்ரச்னையாக அணுகாமல், அந்தந்தத் தனி நபர் இருக்கும் இடம், மற்றும் சூழலுக்குத் தகுந்தாற் போல் அணுகினால்..ப்ரச்னையே இல்லை..
உங்கலுக்கு நேரமிருப்பின் இதைப் படித்துப் பாருங்களேன்..
http://pettagam.blogspot.com/2007/11/blog-post_28.html
சுல்தான் சார் ஆணுக்கென்று சிலவும் பெண்ணுக்கென்று சிலவும் இருக்கட்டும் .அது படைப்பின் நியதி.இதில் பெண்ணீயம் ஆணியம் என்று பிரிச்சி பேதப் படுத்தியது எது?
ஏன்?உடை,சுதந்திரம் மட்டுமே பெண்ணீயம் கோரவில்லை.
நீ [பாவம்]பொம்பளை எனும் சொல்லில் உள்ள மட்டம் தட்டும் போக்கைத்தான் வேண்டாம் என்கிறோம்.
//தலைப்பை எப்படி மாற்றலாம் என்று சொல்லுங்கள் சகோதரரே!.//
மிகச் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள். இதைவிட பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது. பெண்ணியம் என்கிற மாயையில் சில சகோதரிகள் (நம் வலையுலகத்தில் இருப்பவர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்) தங்களை தாங்களே இழிவுபடுத்திக் கொள்வது வேதனையான விஷயம்.
ஆண்கள் செய்வதையெல்லாம் நாங்களும் செய்வோம் என்கிற எண்ணமே ஒரு தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான். பெண்மையின் தனித்தன்மையை விடாமல் இருப்பதுதான் உண்மையான பெண்ணீயம்!
எந்த ஆணாவது பெண்கள் செய்வதையெல்லாம் நானும் செய்வேன் என்று சொல்கிறானா?!
//இதற்கு பெயர்தான் அப்பட்டமான ஆணாதிக்கம். ஆடை விதிமுறைகள் பெண்களுக்கு மட்டுந்தான் போலிருக்கு. ஆடை சுதந்தரத்தால் பெண்கள் சில ஆண் சமூக விரோதிகளால் பாதிபிற்குள்ளாவதாகிவிடும் என்ற கருத்தை ஏற்க முடியாது.//
ஆடை விஷயத்தில் முழுச்சுதந்திரம் என்று கிளம்பும் பெண்கள் அனைத்து விஷயங்களிலும் அதே போல் இருக்கிறார்களா? இல்லையே!. அரைகுறை ஆடையுடன் அவர்களின் அங்கங்கள் ஆண்களால் ரசிக்கப்படும் பொழுது ஏன் அவர்களால் தாங்க முடியவில்லை. பெண்களின் உச்சி முதல் உள்ளங்கால்வரை கூறுபோட்டு வியாபரம் செய்யும் சினிமாக்காரர்களைக் கண்டுமா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை பெண்களின் தற்காலத்தின் எதார்த்த நிலையை.
நான் பணிபுரிந்த கிளப் நீச்சல் குளத்தில் பெண்கள் குளிப்பதற்கான உடை ஜட்டி மற்றும் பிரா ஆனால் ஆண்கள் டிரவுசர் அணிந்துதான் கட்டயமாக குளிக்கவேண்டும் தவறின் நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்படுவர். ஏனிந்த பாடுபாடு?.
பொது இடத்தில் ஆண்கள் அரைகுறை ஆடையுடன் இருப்பதை பெரும்பாலான பெண்கள் அருவருப்பாகத்தான் கருதுகின்றனர். ஆனால் ஆண்கள் அவ்வாறு இருக்கின்றனரா?
ஏன் என்பது முக்கியமில்லை! எதற்க்காக என்பதுதான் முக்கியம்.
//இதற்கு பெயர்தான் அப்பட்டமான ஆணாதிக்கம். ஆடை விதிமுறைகள் பெண்களுக்கு மட்டுந்தான் போலிருக்கு.//
எது ஆணாதிக்கம். ஆண்களும் பெண்களும் அவரவர்க்கு தகுந்த மாதிரி உடலை மறைக்க வேண்டுமென்பதா!
நீங்கள் ஒரு பெர்முடாவோடு வெளியே சென்றாலும் அல்லது குடும்பத்தினருடன் காற்றாட அமர்ந்தாலும் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. உங்கள் தாயை, தமக்கையை, மனைவியை இதே உடையுடன் குடும்பத்தினருடன் காற்றாட அமர்ந்திருக்க, அல்லது வெளியே, உங்கள் மனம் ஒப்புமா? பெண்களுக்கு ஆண்களை விட மறைக்க வேண்டிய பகுதி அதிகம். எவ்வளவு மறைக்க வேண்டும் என்பதில்தான் சில கருத்து வேறுபாடுகள்.
//பெண்களுக்கு ஆடை தொடங்கி அனைத்திலும் சம உரிமை கொடுத்துவிட்டு சமூகத்திற்கு அறிவுரை சொல்வதுதான் சரியாக இருக்க முடியும்.//
சம உரிமை ஆடையிலா! சமமான ஆடையிலா! நீங்களே முடிவு செய்யுங்கள்.
நன்றி பாசமலர். சுட்டிக்கும் நன்றி. உங்கள் பதிவு சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்.
கிராமமோ நகரமோ பெண்ணடிமைத்தனம் எங்கிருந்தாலும் அது முற்றிலுமாக களையப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. அதை வேகமாய் முன்னெடுத்துச் செல்ல பொதுமைப் படுத்துவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் எது பெண்ணடிமைத்தனம் என்பதை வரையறுத்துக் கொள்வது வேகத்திற்கு கட்டியம் கூறும்.
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி வலைஞன்.
உங்கள் பெயரைச் சொடுக்கினால் உங்கள் பதிவுத் தளத்துக்கு போகாமல் இங்கேயே சுற்றுகிறதே என்ன காரணம்?
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ஸயீத்.
////ஆடை விஷயத்தில் முழுச்சுதந்திரம் என்று கிளம்பும் பெண்கள் அனைத்து விஷயங்களிலும் அதே போல் இருக்கிறார்களா? இல்லையே////
பெண்கள் எந்த விசயத்தில் தங்களுக்கு முழுச்சுதந்தரம் வேண்டாம் என்று சொன்னார்கள்?
////அரைகுறை ஆடையுடன் அவர்களின் அங்கங்கள் ஆண்களால் ரசிக்கப்படும் பொழுது ஏன் அவர்களால் தாங்க முடியவில்லை.////
எதிர் பாலினம் தம்மை ரசிப்பதைத்தான் எவரும் விரும்புவர். விருப்பம் இல்லாதவர்கள் முகத்தை திருப்பிக்கொண்டாலே போதும். கீழ்த்தரமாக பேசுவதும் செய்கைகளால் அசிங்கப்படுதுவதும் எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. பெரும்பாலும்...இல்லை முற்றிலும் ஆண்களே இதைச்செய்கிறார்கள்...பெண்கள் புலம்புகிறார்கள்.
////பெண்களின் உச்சி முதல் உள்ளங்கால்வரை கூறுபோட்டு வியாபரம் செய்யும் சினிமாக்காரர்களைக் கண்டுமா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை பெண்களின் தற்காலத்தின் எதார்த்த நிலையை.////
இந்த வாக்கியத்தை பெண்ணுரிமை அல்லது பெண் கட்டுப்பாடு என்பதுடன் எவ்வாறு தொடர்பு படுத்துகிறீர்கள் என்று விளக்குங்கள். மற்றபடி சினிமாவின் 'உடலை கூறு போடும் வியாபாரம்', பெண் கட்டுப்பாடு பற்றி அதன் வியாக்கியானங்கள் எல்லாம் நான் புரிந்தே இருக்கிறேன்.
/////நான் பணிபுரிந்த கிளப் நீச்சல் குளத்தில் பெண்கள் குளிப்பதற்கான உடை ஜட்டி மற்றும் பிரா ஆனால் ஆண்கள் டிரவுசர் அணிந்துதான் கட்டயமாக குளிக்கவேண்டும் தவறின் நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்படுவர். ஏனிந்த பாடுபாடு?////
இதில் பாகுபாடு ஏதும் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது. இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது ஏன் என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். சில விசயங்களில் சில சமயங்களில் தங்களை தாங்களே கட்டுப்படுத்த இயலாமல் ஆண்கள் தவிப்பதை தவிர்க்கவே அவ்விதிமுறை அங்கிருப்பதாகவே நான் நினைக்கிறேன். அவர்கள் சுதந்திரத்தை இதனால் கெடுக்க முடியாது. மேலும் ஆண்களுக்கு உடை சுதந்தரம் இல்லை என நீங்கள் கூறவருவதாக கொள்கிறேன். இதை எவரேனும் ஏற்பரா?
////பொது இடத்தில் ஆண்கள் அரைகுறை ஆடையுடன் இருப்பதை பெரும்பாலான பெண்கள் அருவருப்பாகத்தான் கருதுகின்றனர்.////
உண்மைதான். முகம் சுழிப்பது, அமைதியாக இருப்பது, ஏற்பது என்பதெல்லாம் சட்டம் அனுமதித்த தனிமனித சுதந்திரத்தை ஏற்போர், அல்லது மறுப்போரை பொறுத்தது. ஆனால், அதற்காக அவர்கள் சீட்டி அடித்து கலாட்டா செய்வதில்லை. கையை பிடித்து படுக்கைக்கு அழைப்பதில்லை.
////ஆனால் ஆண்கள் அவ்வாறு இருக்கின்றனரா?/////
நீங்கள் கூறும் அரைகுறை ஆடை ஆணுக்கு எது பெண்ணுக்கு அது என்று நாம் திட்டவட்டமாக வரையறுத்து விட்டு பேச தொடங்கவில்லை என்பதால் இந்த கேள்விக்கு ஆம் இல்லை என்ற இரு பதில்களும் பொருந்தும்.
////ஆண்களும் பெண்களும் அவரவர்க்கு தகுந்த மாதிரி உடலை மறைக்க வேண்டுமென்பதா!////
'தகுந்த மாதிரி' என்பது என்ன? முகத்தை மறைக்கும் உடையும் சில நாடுகளில் தகுந்த உடைகளே! அதற்காக எல்லோரையும் முகத்தை மறைக்க சொல்ல முடியுமா? மறைத்தே வைப்பதால் சில பகுதிகள் மறைக்க வேண்டிய பகுதிகளாகின்றன. திறந்து போட்டு அலையச்சொல்லவில்லை. அலைவதால் எனக்கு பிரச்சினை இல்லை என்கிறேன். கும்பல் சேர்த்து கோஷமிட்டோ அல்லது அறிவுரை சொல்லியோ அடுத்தவர் சுதந்தரத்தில் தலையிடுவது தேவையற்றது. எனவேதான் அநாகரிகமான உடை அம்மணம் மட்டுமே என்கிறது சட்டம். சட்டம் அனுமதித்ததை நாம் ஏன் மறுக்கவேண்டும்?
////உங்கள் தாயை, தமக்கையை, மனைவியை////
என் குடும்பத்து பெண்களை குறிப்பிடுவீர்கள் என எதிர்பார்த்தே இவ்விவாதத்தில் இறங்கினேன். போலியாக பெண்ணுரிமை பேசுபவர்களை அடக்க ஆணாதிக்கவாதிகள் ஆயுதம் எனக்கருதி கையிலெடுப்பது இதைத்தான். நான் பங்குபெற்ற அனைத்து விவாதத்திலும் இது போன்றதொரு கேள்வியை எழுப்புவர். அவர்களுக்கு நான் தரும் பதில் "என் பிள்ளையை (அவனது/அவளது 18 வயது வரை மட்டுமே) தவிர மற்றெவரையும் கட்டுப்படுத்தும் உரிமை எனக்கில்லை" என்பதே. உங்களுக்கும் அதே பதில்தான். என் மனம் ஏன் ஒப்ப அல்லது ஒப்பமறுக்க வேண்டும்?
/////பெண்களுக்கு ஆண்களை விட மறைக்க வேண்டிய பகுதி அதிகம். எவ்வளவு மறைக்க வேண்டும் என்பதில்தான் சில கருத்து வேறுபாடுகள்////
ம்ம்...உயிரியல் விசயத்தை சொல்கிறீர்கள். சரி, கூச்சமின்றி தெருவில் நடமாட எவ்வளவு உடை வேண்டும் என்பதை பெண்களே (பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அல்ல, ஒவ்வொருவரும், தனித்தனியாக, அவரவர்க்காக) முடிவு செய்யட்டும். ஒவ்வொரு சுதந்தரதிலும் தலையிட்டு மீண்டும் அவர்களை அடுக்களைக்கு நாம் அனுப்ப வேண்டாம்.
////சம உரிமை ஆடையிலா! சமமான ஆடையிலா!////
ஆடையில் உரிமை கொடுத்துவிட்டால் பிறகு சமமான ஆடை, சமன் குறைந்த ஆடை என்ற விவாதமே உரிமை மீறலாகிவிடும்.
இன்முகத்துடன்,
மோகன் கந்தசாமி.
//'தகுந்த மாதிரி' என்பது என்ன? முகத்தை மறைக்கும் உடையும் சில நாடுகளில் தகுந்த உடைகளே! அதற்காக எல்லோரையும் முகத்தை மறைக்க சொல்ல முடியுமா? மறைத்தே வைப்பதால் சில பகுதிகள் மறைக்க வேண்டிய பகுதிகளாகின்றன. திறந்து போட்டு அலையச்சொல்லவில்லை. அலைவதால் எனக்கு பிரச்சினை இல்லை என்கிறேன். கும்பல் சேர்த்து கோஷமிட்டோ அல்லது அறிவுரை சொல்லியோ அடுத்தவர் சுதந்தரத்தில் தலையிடுவது தேவையற்றது. எனவேதான் அநாகரிகமான உடை அம்மணம் மட்டுமே என்கிறது சட்டம். சட்டம் அனுமதித்ததை நாம் ஏன் மறுக்கவேண்டும்?//
பெண்களுக்கு கூடுதலாக மறைக்க வேண்டிய பகுதிகள் இருக்கின்றன அதைத்தான் தகுந்த மாதிரி என்று சொல்கிறேன். இதிலும் உங்களுக்கு கருத்து வேற்றுமை இருப்பது போல் தெரிகிறது. ஏனெனில் 'திறந்து போட்டு அலைவதால் உங்களுக்கு ஏதும் பிரச்னையில்லை' என்கிறீர்கள். அத்துடன் 'அநாகரிகமான உடை அம்மணம் மட்டுமே' என்றும் சொல்கிறீர்கள். இதெல்லாம் என்னைப் போல் பொதுவாக பலரும் ஏற்றுக் கொள்வதில்லை. இது பொதுவாக எழுதியது.
//அவர்களுக்கு நான் தரும் பதில் 'என் பிள்ளையை (அவனது/அவளது 18 வயது வரை மட்டுமே) தவிர மற்றெவரையும் கட்டுப்படுத்தும் உரிமை எனக்கில்லை' என்பதே. உங்களுக்கும் அதே பதில்தான். என் மனம் ஏன் ஒப்ப அல்லது ஒப்பமறுக்க வேண்டும்?//
சமுதாயம் என்பது (அவரவர் அல்லது) ஒவ்வொரு குடும்பமாய்ச் சேர்ந்ததுதான். உங்கள் பிள்ளையை அவள் 18 வயது வரை நீங்கள் ஏன் கட்டுப்படுத்த வேண்டும். இந்த உரிமையை எப்படிப் பெற்றீர்களோ அதே போல் சமுதாயத்தில் நல்லவை நடக்க நம் உரிமையை நாம் தேடிப் பெற வேண்டும். அதனால் சட்டம் என்று இருந்தாலும் அதனினும் மேலாய் சில காரியங்கள் நாம் செய்ய வேண்டியுள்ளது. நாளை உங்கள் மகள் என்ன சொல்லுமோ ஆனால் இன்று உங்கள் தாய் தமக்கையின் உடை விடயத்தில் அங்கம் தெரிய உடையுடுத்துதல் குறைபாடாய் உங்களுக்குத் தோன்றாதது உங்களின் தனிப்பட்ட எண்ணப் போங்கை காட்டுகிறது. மேனாட்டு நாகரீகத்தில் ஊறி மூழ்கித்திளைத்தவர்களை குறிப்பதல்ல இப்பதிவு. என் நாட்டில் சர்வ சாதாரணமாய் புழங்கும் என் மகள்களுக்கும் சகோதரிகளுக்குமானது.
//ஒவ்வொரு சுதந்தரதிலும் தலையிட்டு மீண்டும் அவர்களை அடுக்களைக்கு நாம் அனுப்ப வேண்டாம்.//
அசிங்கமான உடைகள்தான் வளர்ச்சியைத் தடுக்கலாமே தவிர அழகான அங்கம் மறைந்த உடைகள் வளர்ச்சியைத் தடுப்பதில்லை. இதைத்தான்
"பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் இரும்புச் சங்கிலிகளை அறுத்து வந்த பெருமை பெற்ற பெண்களை சிறிது யோசியுங்கள். அவர்கள் இம்முறையில் கீழ்த்தரமானதை செய்ததாலா பெருமை பெற்றனர்? மனித குலத்தை உயர்த்தும் செயலிற்சிறந்த ஆண்களோடு போட்டியிட்டு அவர்களைப் போல அல்லது அதை விடவும் சிறப்பாக செயலாற்றிக் காண்பித்ததாலேயே பெண் குலத்துக்கு பெருமை சேர்த்தனர்"
என்று பதிவில் சொல்லி இருக்கிறேன்.
//ஆடையில் உரிமை கொடுத்துவிட்டால் பிறகு சமமான ஆடை, சமன் குறைந்த ஆடை என்ற விவாதமே உரிமை மீறலாகிவிடும்.//
ஆடை உடுத்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதை அழகாக பயன்படுத்துமாறு சொல்கிறோம். அவ்வளவே.
அன்புடன் சுல்தான்.
நீ ஜபாவம்ஸபொம்பளை எனும் சொல்லில் உள்ள மட்டம் தட்டும் போக்கைத்தான் வேண்டாம் என்கிறோம்
நன்றி டீச்சர். (எப்படியோ விடுபட்டு விட்டது)
சரியாகச் சொன்னீர்கள். நான்கு இடத்தில் அலைந்து பொருள் தேடி வரும் கணவணுக்கு உள்ளதைப் விடவும் அதைக் கொண்டு குடும்பத்தைச் செலுத்தும் குடும்ப மாலுமியாகிய பெண் சிறப்புக்குரியவள். குடும்ப வாரிசுகளின் வாழ்க்கைக்கே ஆதார சுருதியாயிருப்பவள் பெண். பெண்கள் இன்னும் திடம் பெற்று வந்தால் இத்தகு மட்டம் தட்டும் எண்ணங்கள் மாறி ஓடி ஒழிந்து விடும்.
ஆடை என்பது உடலை மறைக்க என்பதைவிட கூச்சத்தை போக்க என்பதே சரி. கூச்சம் என்பது அவரவர் பிரச்சினை. அடுத்தவர் கூச்சத்திற்கு நாம் உடை விகிதங்கள் பரிந்துரைக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட உடை விகிதத்தை எல்லோருக்குமாக நிர்ணயிக்கவும் முடியாது, 'பொது சிவில் சட்டம்' மாதிரி. 'திறந்து போட்டலைவதை' உங்களைப்போன்றே நானும் விரும்பவில்லை. நம் விருப்பத்தை அடுத்தவர் மீதெப்படி திணிக்கமுடியும்? உடை விசயத்தில் தெரியாமல் செய்பவர்களை (சிறுவர் சிறுமிகள், மனநோயாளிகள் இன்னபிற) அழைத்து அறிவுரை கூறலாம், உதவி என்பதாக. தெரிந்தே, விரும்பியே தன் ஆடையை தானே முடிவு செய்து அணிந்து வருபவர்களை மற்றவர் தடுக்கலாமா? சர்வாதிகாரத்தின் முதல் இனுக்கே அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது தான்.
---
'அநாகரிகமான உடை அம்மணம் மட்டுமே' என சட்டம் கூறுவது ஆடை விதிமுறைகளை எல்லோருக்கும் பொதுவாக்க முடியாது என்பதற்காகத்தான். அம்மணம் தவிர்த்த அனைத்து
ஆடை முறைகளையும் ஏற்க செய்யும் முயற்சி அல்ல இது. அவ்வித உடைகளில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனால் அவர்களுக்கு இருக்கும் பட்சத்தில் அதற்கு உரிமையும் இருக்கிறது.
அறிவுரை என்ற பெயரில் இன்றும், அறிவுரை கூறுவது, கட்டுப்படுத்துவது போன்றவற்றை போராடிபெறுவோம் என்று நாளையும், பெற்ற உரிமையை சட்டமாக்குவோம் என்று நாளை மறுநாளும், முழு பெண்ணடிமையை அடுத்த நாளும் கொண்டு வந்துவிடும் அபாயத்திற்கு
துணை போகவேண்டாம்.
---
பதிவை மீண்டும் படித்தேன். பொதுவாய் எழுதியது போன்று தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் இல்லை. ஏனெனில், "ஒரே ஆணோடு வாழ்தல் இவையனைத்தும் பெண்களுககே உரிய தனித்தன்மைகள்" என்று நீங்கள் சொல்வதில் ஆணுக்கு பல
பெண்களுடன் வாழும் தன்மை இருக்கிறது எனக்கூறவே. இது பொதுவானதா? அல்லது உங்கள் கருத்து மட்டுமா?
"முதலில் திறந்து விடப்பட்டுள்ள வழிகளில் பயணம் செய்ய பெண்கள் தயாராக வேண்டும்" எனச்சொல்வது பெண்கள் சுதந்திரத்தை தவணை முறையில் ஆண்களிடமிருந்து
பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது போல் உள்ளது. இது பொதுவானதா? அல்லது உங்கள் கருத்து மட்டுமா?
"மிகக் கேவலமான கற்பப்பை சுதந்திரம்" - கற்பப்பை சுதந்திரம் மிகக் கேவலம் என்கிறீர்கள். இது பொதுவானதா? அல்லது உங்கள் கருத்து மட்டுமா?
//////பெண் விடுதலை என்பது சுயத்தை இழக்காமல், அதாவது பெண்களுக்குரிய தனித்தன்மைகளை இழக்காமல் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்வதே ஆகும்////
எல்லாம் சரிதான். ஆனால் தனித்தன்மைகள் என தாய்மைப்பேறு, தாய்ப்பால் கொடுத்தல் ஆகியவற்றுடன் 'ஒரே ஆணோடு வாழ்தல்' என்பதையும் சேர்த்ததை பெண்ணுரிமைவாதிகள் ஏற்பரா? தந்தை பெரியார் பற்றி குறிப்பிடுகிறீர்களே, பெண்ணுரிமை பற்றி அவரிடம் இருந்த போக்கு ஏதேனும் உங்கள் இந்த பதிவில் இருக்கிறதா?
பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அடைக்க முற்ப்பட்டவர் அல்ல பெரியார். அதை தோண்டியெடுக்க சொன்னவர். மேம்போக்கான அறிவுரை சொன்னவரோ அல்லது 'டிப்லமேட்டிக்' காக பேசியவரோ அல்ல பெரியார். பிரச்சினையின் மையத்தில்
சென்று 'டிட்டனேட்' செய்பவர். குடும்பமுறை பெண்களுக்கு அனுகூலமில்லை என்றார்.
'ஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்' என்று பேசினார். அதனால் அவர் உங்கள் வாதத்திற்கு பொருந்த மாட்டார்.
---
18 வயது வரை ஒருவரின் செய்கைக்கு அவரது பெற்றோரை பொறுப்பாக்குகிறது சட்டம்.
எனவே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவரை கட்டுப்படுத்தும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் நெகிழ்வுத்தன்மை உண்டு. ஆனால், தன் பிள்ளையை தவிர தாய், தந்தை, உடன் பிறந்தோர், மனைவி போன்றோர் செய்கைகளுக்கு ஒருவரை சட்டம் பொறுப்பாக்குவதில்லை. சமூகம் பொறுப்பாக்கும் என்றால் சமூகத்திற்கு அறிவுரை கூறுவோம். சமூகத்திற்கு பதில் சொல்லவேண்டியதிருக்குமேவென்று பயந்து, சட்டத்தை மீறியோ,
திருத்தியோ அல்லது போராடியோ அந்த உரிமையை பெற்று அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
////மேனாட்டு நாகரீகத்தில் ஊறி மூழ்கித்திளைத்தவர்களை /////
மேநாடு மட்டுமின்றி எந்நாட்டிலும், ஒரு நாகரிகமான சமுதாயத்தில், ஒரு பொது விவாதத்தில் "உங்கள் தாய்.....உங்கள் தமக்கை......உடல்.....அங்கம்.....வெளியே தெரிகிறது..." போன்று குறிப்பால் ஒருவரை சுட்டும் பேச்சு எழாது.
/////என் நாட்டில் சர்வ சாதாரணமாய் புழங்கும் என் மகள்களுக்கும் சகோதரிகளுக்குமானது/////
அந்த மகள்களும், சகோதரிகளும் உள்ள உங்கள் நாடு தென்கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம்
என்றால் அந்த செந்தமிழ் நாட்டு பெண்களை பற்றித்தான் நானும் பேசுகிறேன்.
//////ஆடை உடுத்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. அதை அழகாக பயன்படுத்துமாறு சொல்கிறோம்//////
அடுத்தவர் உரிமையில் தலையிட்டு அவரை அழகுபடுத்தும் தேவை கிஞ்சித்தும் இல்லை.
/////ஆணாதிக்கத்தின் இரும்புச் சங்கிலிகளை அறுத்து வந்த பெருமை பெற்ற பெண்களை.......பெண் குலத்துக்கு பெருமை சேர்த்தனர்"
என்று பதிவில் சொல்லி இருக்கிறேன்//////
உங்கள் அறிவுரை பெண் குலத்துக்கு பெருமை சேர்க்க துடிக்கும் பெண்களுக்காக இருப்பதாலும்,
என் வாதம் ஜனநாயகம் தரும் சுதந்தரத்தை அனுபவிக்க நினைக்கின்ற, சிறு சிறு ஆசைகளை
நிறைவேற்றிக்கொண்டு இன்புற்றிருக்க நினைக்கின்ற சாதாரண பெண்களைப் பற்றியதாலும் நான் ஒரு சமரசத்திற்கு வந்துவிடுகிறேன்.
பெண்ணுரிமைவாதிகள் கூட வேண்டாம். பெண் பதிவர்கள் எவரேனும் (குறைந்தது ஐவர்)
உங்கள் கருத்தை (உடை விசயத்தில் அடுத்தவரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவது தொடர்பாக...)
ஏற்று பின்னூட்டம் இட்டாலோ அல்லது இதுபோன்றதொரு கருத்துடன் வேறெங்கும்
பதிவிட்டிருந்தலோ என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன். சுட்டி கொடுத்துதவுங்கள்.!
/////பொதுவான உரிமைகள் ஒரே போன்று இருக்க, சுதந்திரங்களைச் சரிவரப் பயன்படுத்துவது ஒரு தனி நபரைப் பொறுத்தது/////
அப்படியென்றால் கட்டுப்பாடு அவசியமில்லை என்றுதானே பொருள்?
/////உடை,சுதந்திரம் மட்டுமே பெண்ணீயம் கோரவில்லை./////
உடை சுதந்தரம் கண்டிப்பாக கோரப்படுகிறதுதானே?
நன்றி சுல்தான், பாசமலர், கண்மணி ஏனையோர்.
இன்முகத்துடன்
மோகன் கந்தசாமி.
/////பொதுவான உரிமைகள் ஒரே போன்று இருக்க, சுதந்திரங்களைச் சரிவரப் பயன்படுத்துவது ஒரு தனி நபரைப் பொறுத்தது/////
அப்படியென்றால் கட்டுப்பாடு அவசியமில்லை என்றுதானே பொருள்//
கட்டுப்பாடு அவசியமில்லை என்று பொருளல்ல..பொதுக் கட்டுப்பாடுகள் தனி நபரால் மதிக்கப்படுவதில்லை...நபருக்கு நபர் உணவுக்கான சுவை மாறுவது போல் இதுவும்...
இந்த உணவு நல்லதில்லை என்று கூறலாம்..கட்டுப்பாடு விதிக்க முடியுமா?
அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதைக்கு..அதன் விளைவுகளுக்கு அவரவர் பொறுப்பு..
//'திறந்து போட்டலைவதை உங்களைப்போன்றே நானும் விரும்பவில்லை//,
//அவ்வித உடைகளில் எனக்கும் உடன்பாடில்லை.//
முதன் முதலில் 'திறந்து போட்டலைவதிலும்' 'அநாகரிகமான உடை அம்மணம் மட்டுமே' என்பதிலும் என்னைப் போல்தான் நீங்களும் விளங்கியிருக்கிறீர்கள் என்றால் பாராட்டுக்கள்.
//ஆடை என்பது உடலை மறைக்க என்பதைவிட கூச்சத்தை போக்க என்பதே சரி. கூச்சம் என்பது அவரவர் பிரச்சினை.//
இது உங்கள் பிரச்னை. மேலதிகம் அறிய முயற்சி செய்யுங்கள்.
மானத்தை மறைக்கத்தான் ஆடையே தவிர மானத்தினை காற்றில் பறக்க விடுவதற்கல்ல.
//தெரிந்தே, விரும்பியே தன் ஆடையை தானே முடிவு செய்து அணிந்து வருபவர்களை மற்றவர் தடுக்கலாமா? சர்வாதிகாரத்தின் முதல் இனுக்கே அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடுவது தான்.//
//அறிவுரை என்ற பெயரில் இன்றும், அறிவுரை கூறுவது, கட்டுப்படுத்துவது போன்றவற்றை போராடிபெறுவோம் என்று நாளையும், பெற்ற உரிமையை சட்டமாக்குவோம் என்று நாளை மறுநாளும், முழு பெண்ணடிமையை அடுத்த நாளும் கொண்டு வந்துவிடும் அபாயத்திற்கு
துணை போகவேண்டாம்.//
//பொதுவாய் எழுதியது போன்று தோற்றமளிக்கிறது. ஆனால் உண்மையில் இல்லை. ஏனெனில், "ஒரே ஆணோடு வாழ்தல் இவையனைத்தும் பெண்களுககே உரிய தனித்தன்மைகள்" என்று நீங்கள் சொல்வதில் ஆணுக்கு பல
பெண்களுடன் வாழும் தன்மை இருக்கிறது எனக்கூறவே. இது பொதுவானதா?//
இதற்கு பதிலாக நீங்கள் முதலில் எழுதிய பதிலைத் தருகிறேன்.
"கீழ்த்தரமாக பேசுவதும் செய்கைகளால் அசிங்கப்படுதுவதும் எவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. பெரும்பாலும்...இல்லை முற்றிலும் ஆண்களே இதைச்செய்கிறார்கள்... பெண்கள் புலம்புகிறார்கள்."
சரியாகச் சொன்னீர்கள். ஆண்களில் பெரும்பாலோர் சபலபுத்தி யுடையவர்கள்தான். ஒரு பாதையில் கணவணும் மனைவியும் நடந்தால் எதிரே வரும் பெண்களைக் கணவன் பார்ப்பான். ஆனால் எதிரே வரும் ஆண்களை மனைவி பார்ப்பதில்லை. பொதுவாக உலகில் காணும் நடைமுறை இது. ஆண்களைக் கவரக்கூடிய பல்வேறு விடயங்கள் பெண்களில் உண்டு. அதைக் காணும் போது அவன் மனது மிருகமாகிறது. நல்லவன் கூட அந்நேரத்தில் கெட்டவனாகிறான். தவறுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
எனவேதான் பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும், அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து தங்களைக் தற்காத்துக் கொள்ள வேண்டியும் சரியான ஆடைகளை உடுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். பெண் விடுதலை என நினைத்து, அங்கங்கள் வெளியே தெரிய ஆடை உடுத்துவது அவர்கள் அழிவுக்கே வழி வகுக்கும் என்று சொல்கிறோம்.
ஆண்கள் தான் திருந்த வேண்டியது என்று சொல்கிறீர்களா? அது சரிதான். அந்த புது யுகம் படைக்க நாம் இணைந்தே போராடுவோம். அதுவரை நம்மை நாம் காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனமானது என்கிறோம்.
//"முதலில் திறந்து விடப்பட்டுள்ள வழிகளில் பயணம் செய்ய பெண்கள் தயாராக வேண்டும்" எனச்சொல்வது பெண்கள் சுதந்திரத்தை தவணை முறையில் ஆண்களிடமிருந்து
பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது போல் உள்ளது.//
இல்லை. இது பெண்கள் அடிமைத்தளைகளால் அசந்து விடாமல், கூடிய மனத்துணிவு பெற வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது.
//"மிகக் கேவலமான கற்பப்பை சுதந்திரம்" - கற்பப்பை சுதந்திரம் மிகக் கேவலம் என்கிறீர்கள்.//
ஆம். உரிய உரிமைகள் ஏதுமின்றி யாரிடம் வேண்டுமானாலும் பிள்ளை பெற்றுக் கொள்ளுதல் ஆணாயினும் பெண்ணாயினும் தவறு. நாயினும் கீழானது என்கிறோம்.
//எல்லாம் சரிதான். ஆனால் தனித்தன்மைகள் என தாய்மைப்பேறு, தாய்ப்பால் கொடுத்தல் ஆகியவற்றுடன் 'ஒரே ஆணோடு வாழ்தல்' என்பதையும் சேர்த்ததை பெண்ணுரிமைவாதிகள் ஏற்பரா? தந்தை பெரியார் பற்றி குறிப்பிடுகிறீர்களே. பெண்ணுரிமை பற்றி அவரிடம் இருந்த போக்கு ஏதேனும் உங்கள் இந்த பதிவில் இருக்கிறதா?
பிரச்சினையின் ஊற்றுக்கண்ணை அடைக்க முற்ப்பட்டவர் அல்ல பெரியார். அதை தோண்டியெடுக்க சொன்னவர். மேம்போக்கான அறிவுரை சொன்னவரோ அல்லது 'டிப்லமேட்டிக்' காக பேசியவரோ அல்ல பெரியார். பிரச்சினையின் மையத்தில்
சென்று 'டிட்டனேட்' செய்பவர். குடும்பமுறை பெண்களுக்கு அனுகூலமில்லை என்றார்.//
தோழர். தமிழச்சிக்கு சொன்ன அதையே திரும்பவும் உங்களுக்காக இடுகிறேன்.
நமது பெற்றோர் கூட சில கண்டிஷன்களை வைத்து நம்மை நடத்துகிறார்கள். அதனால் பெற்றோர்களே தவறென்று சொல்ல முடியுமா? நமது நன்மைக்காக இருந்தால் ஏற்றுக் கொள்வது தானே அறிவுடைமை.
பெரியார் எந்த இஸத்தையும் போதிக்கவில்லை. மனிதன் மனிதனாய் வாழ மக்களை சிந்திக்கத் தூண்டினார். சிந்திக்க முடியாமல் அடிமைகளாய் தடுக்கப் பட்டவர்களுக்காக அவர் சிந்தனைகளைப் பேசினார். அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வர கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை கையாண்டார். படித்து சிந்திக்க தகுதியுடைய உங்களைப் போன்றவர்கள், பெரியாரோடு நின்று விடாமல் மேலும் சிந்தியுங்கள். பெரியாரிஸத்தையே முடிவாகக் கொள்ளாதீர்கள். உயிரோடிருந்தால் அதைத்தான் பெரியாரும் விரும்புவார்.
//'ஒரு பெண்ணுக்குப் பல புருஷர்கள்' என்று பேசினார். அதனால் அவர் உங்கள் வாதத்திற்கு பொருந்த மாட்டார்.//
அதற்கு நான் என்ன செய்ய முடியும். அவர் கருத்து அவருக்கு. என் கருத்துகளில் நியாயம் இருக்கும் வரை, அதை என்னால் தெளிவாய் சொல்ல முடியும் வரை - அவர் பொருந்திப் போவார். அவர் நியாயங்களை ஏற்காதவரில்லை
//18 வயது வரை ஒருவரின் செய்கைக்கு அவரது பெற்றோரை பொறுப்பாக்குகிறது சட்டம்.
எனவே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அவரை கட்டுப்படுத்தும் உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் நெகிழ்வுத்தன்மை உண்டு. ஆனால், தன் பிள்ளையை தவிர தாய். தந்தை, உடன் பிறந்தோர், மனைவி போன்றோர் செய்கைகளுக்கு ஒருவரை சட்டம் பொறுப்பாக்குவதில்லை. சமூகம் பொறுப்பாக்கும் என்றால் சமூகத்திற்கு அறிவுரை கூறுவோம். சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டியதிருக்குமே வென்று பயந்து, சட்டத்தை மீறியோ,
திருத்தியோ அல்லது போராடியோ அந்த உரிமையை பெற்று அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.//
நெருப்பில் கை வைப்பதை சட்டம் தடுப்பதில்லை. அதற்காக தாய், தமக்கை விடயத்தில் சட்டம் பொறுப்பாவதில்லை என்று, சரி வர செய்யத் தெரியாமல் ஒரு நெருப்பு பற்றும் வேலையில், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்த ஒன்றில் நாம் விட்டு விடலாமா?
சட்டத்தின் முன் நாம் குற்றவாளியல்ல என்பது உண்மைதான். எனினும் நாம் நல்ல மகனாக, சகோதரனாக நம் கடைமையைச் செய்யவில்லை என்பதும் உண்மை.
ஆண் பெண் இருவருடைய இயைவு இருப்பின், கூடா ஒழுக்கத்தையும் சட்டம் தடுப்பதில்லை. அதனால் சமுகம் சீர் கேட்டுக்கு ஆளாகாதா? அதைப் பார்த்துக் கொண்டு வாளாவிருத்தல் நல்ல குடிமகனுக்கு அழகா? சமூகக் கடமைகளை பேணி வாழ்வதுதான் நல்ல மனிதனின் குணம் நண்பரே.
//மேநாடு மட்டுமின்றி எந்நாட்டிலும், ஒரு நாகரிகமான சமுதாயத்தில், ஒரு பொது விவாதத்தில் 'உங்கள் தாய்.....உங்கள் தமக்கை......உடல்.....அங்கம்.....வெளியே தெரிகிறது...' போன்று குறிப்பால் ஒருவரை சுட்டும் பேச்சு எழாது.//
சொந்த குடும்பத்தை விட்டு விட்டு ஊருக்குத்தான் உபதேசம் என்பதை நம் சமுதாயம் மட்டுமல்ல. எந்த சமுதாயமும் ஏற்காது. அத்தகையவர்கள் தவறாகத்தான் பேசப்படுவர். சமுதாயம் என்பது தனிமனிதன். பின் குடும்பம்... என்று விரியும்.
//அந்த மகள்களும், சகோதரிகளும் உள்ள உங்கள் நாடு தென்கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம்
என்றால் அந்த செந்தமிழ் நாட்டு பெண்களை பற்றித்தான் நானும் பேசுகிறேன்.//
மிகவும் நல்லது. நீங்களும் அவர்களைப் பற்றிப் பேச விழைவதால், பேச நான் தயார்.
//அடுத்தவர் உரிமையில் தலையிட்டு அவரை அழகுபடுத்தும் தேவை கிஞ்சித்தும் இல்லை.//
உரிமை என்ற பெயரில் உள்ள நல்லதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்கிறேன் நான்.
//உங்கள் அறிவுரை பெண் குலத்துக்கு பெருமை சேர்க்க துடிக்கும் பெண்களுக்காக இருப்பதாலும்,
என் வாதம் ஜனநாயகம் தரும் சுதந்தரத்தை அனுபவிக்க நினைக்கின்ற, சிறு சிறு ஆசைகளை
நிறைவேற்றிக்கொண்டு இன்புற்றிருக்க நினைக்கின்ற சாதாரண பெண்களைப் பற்றியதாலும் நான் ஒரு சமரசத்திற்கு வந்துவிடுகிறேன்.
பெண்ணுரிமைவாதிகள் கூட வேண்டாம். பெண் பதிவர்கள் எவரேனும் (குறைந்தது ஐவர்)
உங்கள் கருத்தை (உடை விசயத்தில் அடுத்தவரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்குவது தொடர்பாக...)
ஏற்று பின்னூட்டம் இட்டாலோ அல்லது இதுபோன்றதொரு கருத்துடன் வேறெங்கும்
பதிவிட்டிருந்தலோ என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன். சுட்டி கொடுத்துதவுங்கள்.!//
ஆபாசமாக ஒட்டப்பட்ட பெண்களின் போஸ்டர்களை தார் பூசி அழிக்கும் போராட்டங்களை அடிக்கடி பெண் இயக்கங்கள் நடத்துகின்றன். இதில் பெண்கள் தொப்புளைக் காட்டியவாறு ஒட்டப்படடிருந்த போஸ்டர்களுக்குத்தான் அவர்கள் தார் பூசினார்கள். அவ்வாறெனில் தொப்புள் என்பது ஆண்களின் காட்சிப்பொருளாக ஆக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்பதுதானே அர்த்தம். எனவே தொப்புளை வெளிப்படுத்தி ஆடை அணிவது மட்டும் எப்படி நியாயமாகும்.? அது அவரவர் உரிமை என விட்டிருக்கலாமே! எவ்வளவுதான் மனிதன் கூப்பாடு போட்டாலும் உள்மனது உறுத்தும்.
சமரசத்திற்கு வந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
//அப்படியென்றால் கட்டுப்பாடு அவசியமில்லை என்றுதானே பொருள்?//
நன்மையான வாழ்விற்கு சில கட்டுப்பாடுக்ள அவசியம் என்பது பொருள்.
//உடை சுதந்தரம் கண்டிப்பாக கோரப்படுகிறதுதானே?//
தவறான உடை சுதந்திரம் கோரப்படக்கூடாது என்பதுதான் இதன் நோக்கமே.
நன்றி மோகன் கந்தசாமி.
அன்புடன்
சுல்தான்.
//கட்டுப்பாடு அவசியமில்லை என்று பொருளல்ல..பொதுக் கட்டுப்பாடுகள் தனி நபரால் மதிக்கப்படுவதில்லை...நபருக்கு நபர் உணவுக்கான சுவை மாறுவது போல் இதுவும்...
இந்த உணவு நல்லதில்லை என்று கூறலாம்..கட்டுப்பாடு விதிக்க முடியுமா?
அவரவர் தேர்ந்தெடுக்கும் பாதைக்கு..அதன் விளைவுகளுக்கு அவரவர் பொறுப்பு..//
அழகான விளக்கம். மிக்க நன்றி பாசமலர்
அஸ்ஸலாமு அலைக்கும்..
மிக அற்புதமான ஒரு பதிவு.. நானே இதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. அவசியமிருகாது போல. பெண்ணியம், பெண்ணியம் என்று பிதற்றிக்கொண்டு கேவலமான செயல்களை செய்யும் ஆண்களுடன் போட்டி போடுவதே இப்பெண்களுக்கு வேலையாகிவிட்டது.
எல்லாம் வல்ல இறைவன், ஆண்களுக்கு உடலில் பலத்தை கொடுத்திருக்கிறான். அதே போல பெண்களுக்கும் தாய்மை போன்ற தனித்தன்மைகளை அருளி இருக்கிறான். இருவருக்குமே அறிவு என்பதை பொதுவாகத்தான் கொடுத்திருக்கிறான். ஆண்களிடம் போட்டி போடும் போது, பொதுவான ஒன்றான அறிவாற்றலில் போட்டி போடாமல் ஏன் மது அருந்துவதிளிம், இரவில் கண்ட கண்ட நேரத்தில் ஊரு சுற்றுவதிலும், ஆடை குறிப்பிலும் (எனக்கு தெரிந்து ஆண்களை விட பெண்களே குறைவான ஆடைகளை அணிகின்றனர்-உபயம் சினிமா) போட்டி போடுவது ஏன்?
ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, மாற்ற ஆண்கள் என்னை ஒரு சகோதரியகவோ, மகளாகவோ தான் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன் என் அறிவு திறமையை கண்டு மற்றவர்கள் என்னை பாராட்ட வேண்டும் என்று தான் ஆசைபடுகிறேன் . சாலையில் நான் தலை குனிந்து நடந்து செல்லும்போது மற்றவர்கள் என்னை மதித்து வழி விட்டு செல்வதை பெருமை என கருதுகிறேன்..
அலைக்கும் வஸ்ஸலாம் வ ரஹ்மதுல்லாஹ். நன்றி சகோதரி.
//ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, மாற்ற ஆண்கள் என்னை ஒரு சகோதரியகவோ, மகளாகவோ தான் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். என் அறிவு திறமையை கண்டு மற்றவர்கள் என்னை பாராட்ட வேண்டும் என்று தான் ஆசைபடுகிறேன்.//
பெண்கள் அறிவில்தான் போட்டி போட்டு முன்னேற வேண்டும் - முன்னேறுகிறார்கள். மற்றவர்களின் அயோக்யத்தனத்தை எதிர்க்க வேண்டும், அயோக்யத் தனத்தில் போட்டியிட்டுச் செய்தல் தவறாகும். அறிவிற் சிறந்த பெண்கள் இதையே விரும்புவர். தன் உடம்பை உரிமையற்றவர்களுக்கு காட்டுபவர்கள் சிறுமைதான் அடைய முடியும்.
Post a Comment