Monday, 3 March 2008

சாபம் பலிக்குமா? காகம் உட்கார பனம்பழமா?

வேலைக்காரர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட தன் மகனைப் பார்த்து அவர் தாயார், 'நான் சிறு வயதில் வீட்டில் வசதியின்மை காரணமாக (வசதியாக வாழ்ந்திருந்த ஒரு குடும்பத்தினரைக் காட்டி) அந்த வீட்டில் சம்பளத்துக்காக வீட்டு வேலைகள் பார்த்து வந்தேன். அந்த வீட்டுப்பெண் எனக்கு செய்த கொடுமைகள் சொல்லில் அடங்காது. அவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது. படுக்கையோடு பீயும் முத்திரமுமாய்க் கிடந்து அல்லல்பட்டுதான் அழிவாள். இது போல் உனக்கும் யாராவது சாபம் தரும் விதமாக நடந்து கொள்ளாதே. வசதி வரும்போது அதில் ஏழைகளுக்கும் பங்குண்டு என்பதை மறவாதே' என்று சொன்னார்.

சில ஆண்டுகளில் அந்தப் பெண் கூறியது போலவே அந்த பெண்மணியின் கணவர் இறந்த ஓரிரு மாதங்களில் மரணப் படுக்கையிலே வாரக்கணக்கில் கிடந்து உயிர் விட்டார்.
_____________________________________________________________________________________

எங்கள் வயலில் ஒரு மாமரம் இருந்தது. நாங்கள் குத்தகைக்கு விட்டிருந்தோம். எங்கள் குத்தகைகாரருக்கும் பக்கத்து வயல் காரருக்கும் வந்த தகராறில் எங்கள் மாமரத்தினடியில் ஆசிட் ஊற்றி அந்த மாமரத்தை பட்டுப் போகச் செய்து விட்டார். அப்போது எங்கள் குத்தகைகாரர் 'பால் மரத்தை இப்படி வீணாக்கியவனை விதி விடாது - மரம் அழிந்தது போலவே அவனும் விரைவில் அழிவான்' என்று சாபமிட்டார்.

சில ஆண்டுகளிலேயே அந்த இளம் வயதுக்காரர் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்து மடிந்து போனார்.
_____________________________________________________________________________________

என் மிக மதிப்பிற்குரிய பெண்மணி - கைம்பெண். அவர் வாழ்வில் மிகுந்த சிரமங்களைத் தாங்கி வாழ்ந்திருந்தார். பெருங்குடும்பத்தை தாங்க உழைப்பு. உழைப்பு. ஓயாத, சலியாத உழைப்பு. அத்துடன் அவர் மகளின் வாழ்வில் நடக்கும் புயல்களால் மன உளைச்சல். பெரும் பாரமான வாழ்க்கை. அப்போது சிறு வயது எனக்கு.

அவர் வயதையொத்த அடுத்த வீட்டுப் பெண்ணும் எதிர்த்த வீட்டுப் பெண்களும் கூட்டாய் சேர்ந்து காரணமில்லாமல் அவரை பழிப்பதும், ஏளனம் செய்வதும் வாடிக்கை. பொறுத்துப் பார்ப்பார். சில நேரம் தெருச்சண்டை நடக்கும். அவர் எதிரிகளின் கூட்டம் கூடுதல் என்பதால் வாங்கிக் கட்டிக் கொண்டு வீடு சேர்வார். “என்னுடைய வாழ்க்கை / குடும்ப கவலைகளுக்கே நான் இந்த மாதிரி உழைக்கும் போது, இவர்கள் தேவையின்றி என்னை வம்புக்கிழுக்கின்றனரே. என் இறைவனே! அவர்களை உன்னிடம் விடுகிறேன் நீயே பார்த்துக்கொள்” என்று என் காது கேட்க அழுகையினூடே பிரார்தித்தார்.

சில ஆண்டுகளில் அடுத்த வீட்டுப் பெண், தன்னுடைய திருமண வயது மகன் வெளிநாட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் மனதொடிந்து யாரோடும் பழையது போல் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.

ஒரு சில வருடங்களில் எதிர்த்த வீட்டுப்பெண்ணில் ஒருவர் கைம்பெண்ணாணார். அடுத்தடுத்த வருடங்களில் அவரது மகனுக்கு திருமணம் நடந்து மருமகள் தீக்குளித்து இறக்க, ஊராரின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாகி வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, சொந்த குடும்பத்தினரின் மதிப்பையும் இழந்து அந்நிலையிலேயே உயிர் துறந்தார்.

அதற்கடுத்த சில ஆண்டுகளில் மற்றொரு எதிர்த்த வீட்டுப் பெண்ணுடைய மகள் குடும்ப வாழ்க்கை தறிகெட்டு, மிகுந்த மன உளைச்சல். அடுத்தது மற்ற மகளது வாழ்விலும் அதைவிட கூடுதலான பிரச்னைகள். அடுத்தடுத்து கணவனது இறப்பு. அடுத்து திருமண வயது மகன் குடித்துக் குடித்து குடல் கருகி இறப்பு. சமீபத்தில் கடைசி மகனும் வெளிநாட்டிலேயே துர்மரணம். ஒன்றுக்கு மேல் ஒன்றாய் தொடர்ந்து பேரிடிகள்.

இந்த பெண் இப்போது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு நன்றாக இருக்கிறார். சமீபத்தில் தன் மகனோடு வெளி நாடு போய் வந்தார். மகிழ்ச்சியான வாழ்வு. மகள் வாழ்விலும் சிறிது வெளிச்சம்.
_____________________________________________________________________________________

இவ்வாறு நடப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

உண்மையான சாபங்கள் பலிக்குமா அல்லது காகம் உட்கார பனம் பழம் விழுந்த கதை போலத்தானா?

அல்லது நடக்காத எத்தனையோ உண்டு, நடப்பவை மட்டும்தான் நம் கண்ணுக்குத் தெரிகிறதா?.

Post Comment

6 comments:

வாசகன் said...

சுல்தான் பாய்,

பேசினால் நல்லதையே பேசுங்கள். இல்லையேல் வாய்மூடி மவுனமாக இருங்கள் - என்பது நபிமொழி.

அதுபோல 'அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கும், இறைவனுக்குமிடையே திரைகள் இல்லை' என்ற நபிமொழியும் உண்டு.

நம்மையறியாமல் பேசுகிற சில வார்த்தைகள் பலித்துவிடுவதுண்டு. இதற்கு ஃபஅல் (فعل) என்பார்கள்.
நம்மூரில் கலாசாரசிதைவில் இது திரிந்து போலிகளிடத்தில் 'பால்கிதாப்' என்னும் மோசடியானது.

Unknown said...

வருகைக்கும் விளக்கங்களுக்கும் நன்றி வாசகன்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா !
இது காகமிருக்கப் பனம் பழம் போல் தான்; ஏனெனில் பல திருமணங்களில் நீடூழி வாழுங்கள் என வரிசையில் வந்து வாழ்த்திவிட்டுச் செல்வார்கள். அந்தக் குடும்பம் வானோடு விபத்தில் மரணம் எனப் படித்துள்ளேன்.
அத்துடன் சாபமென்பது பெற்றவரின் மனப்பயத்தால் சில எதிர் விளைவுகளைத் தரலாம்.
அத்துடன் அடுத்தவர் சாபமிடும் படி வாழ்ந்து விட்டேனே எனும் வேதனை கூட சில எதிர் விளைவை ஏற்படுத்தலாம்.
எது எப்படி இருப்பினும் நாம் அனைவரும் இயன்றவரை இனியோராக; கனி இருப்பக் காய் கவராதோராக வாழ்வோம்.

Unknown said...

நல்ல கருத்துகள் - நன்றி யோகன் பாரிஸ்

நானானி said...

சகோதரரே!
ஒருவர் சாபமிடுவதால் மட்டும் மற்றவர்க்கு கெடுதல் வருவதில்லை.
நல்லதும் கெட்டதும் பிறர் தர வாரா என்பார்கள்.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா தானே வரும்.
சாபமிடுவது கூட ஒரு வகை இன்னாதான்.
ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் கீதை, பைபிள்,திருக்குரான் மூன்றிலும் உள்ள ஒற்றுமைகளைப் பற்றி அழகாக உரையாற்றுவார். கேட்க சுவையாயிருக்கும்.

Unknown said...

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தானே வரும்.

நன்றி நானானி.