>
>
>
>
>
சினிமா தியேட்டரில் இரண்டு குழுக்களுக்கிடையில் சண்டை. சம்சண்ணண் நடுவில் போய் விலக்கப்போக இரண்டு கூட்டத்தினரிடமிருந்தும் சரியாக வாங்கிக் கொண்டார்.
ஊரில் பஞ்சாயத்து.
தலைவர்: பாவம். விலக்கப் போனதற்கு நம்ம சம்சுக்குதான் சரியான அடி.
சம்சண்ணண்: என்னை அடிக்க முடியுமா? என்ன எவங்க அடிச்சான்?
தலைவர்: அப்ப பரவாயில்ல சம்சு.
சம்சண்ணண்: தொவச்சு பிழிஞ்சில்ல காயப்போட்டானுங்க
தலைவர்: அடி வாங்கினாலும் குசும்ப பார்.
>
>
>
>
>
ஒரு முறை பக்கத்து ஊரிலிருந்த தன் நிலத்துக்கு போயிருந்த எங்களுர் முக்கியஸ்தர் ஒருவர் அங்கேயே மரணமடைந்ததாக செய்தி வரவும், சம்சண்ணண் மகிழுந்து எடுத்துச் செல்ல, துணைக்கு தலைவர் போய் இருக்கிறார். மகிழுந்தில் பிணம் கொண்டு வர தடை இருப்பதால், பிணத்தை பின் இருக்கையில் அமர்ந்திருப்பது போல் இருக்கச் செய்து, வண்டியை எடுத்து வந்திருக்கிறார்கள். கூட இருந்த தலைவர் பிணத்தின் கூட வரும்போதே பயந்த மாதிரி பேசி இருக்கிறார். ஒரு திருப்பத்தில் பக்கவாட்டிலிருந்து ஒரு வண்டி வர, சம்சண்ணண் காருக்கு சடன்பிரேக் போட வேண்டியதாகி விட்டது. அப்போது பின்னாலிருந்த பிணத்தின் இரு கைகளும் முன்னால் இருந்த தலைவரின் இரு தோள்களிலும் பக்கத்துக்கு ஒன்றாக விழ, அலறியடித்து வண்டியை நிறுத்தி இறங்கிய தலைவரை சமாதானப்படுத்தி ஆசுவாசப்படுத்தி மீண்டும் காரிலேற்ற சம்சண்ணண் மிகுந்த பாடுபட வேண்டியதாகி விட்டதாம்.
>
>
>
>
>
மற்றொரு முறை சென்னை விமான நிலையத்தில் அன்று வர வேண்டியவர்கள் வரவில்லையாதலால், சம்சண்ணண் ஆளில்லாத வெற்று வண்டியை இரவில் எடுத்து வந்திருக்கிறார். சென்னையைத் தாண்டி வரும் வழியில் வெளிச்சம் குறைவான இடத்தில் நான்கைந்து பேர் வண்டியை மடக்கவும், வெலவெலத்துப் போய் வண்டியை நிறுத்தி இருக்கிறார். "தம்பி எங்கள் ஊர் வேன் விபத்துக்குள்ளாகி விட்டது. இப்போதுதான் நாங்கள் இருவர் ஊரிலிருந்து வந்தோம். ஐந்தாறு பேர் இறந்து விட்டார்கள். அடிபட்ட இவ்விருவரையும் மருத்துவமனைக் கொண்டு செல்ல வேண்டும். நீ ஒரு இரண்டு பிணத்தை உன் வண்டியில் கொண்டு போய் எங்களுர் சேர்த்து விடு" என்று கெஞ்சி இருக்கிறார்கள். ஏற்கனவே உள்ள அனுபவத்தாலும், கூட துணைக்கு வேறு ஆளில்லாததாலும் மறுத்திருக்கிறார்.
"பணம் பிரச்னையில்லை தம்பி. ஒரு பிணம் கொண்டு போக ஐயாயிரம் (அப்போதைய சென்னை சவாரிக்கு கிடைப்பது போல இரு மடங்கு) முன் பணமாகத் தந்து விடுகிறோம்" என்று சொல்லவும், வேறு வழியின்றி கார் டிக்கியில் ஒரு பிணத்தை வைத்து விட்டு, முன்பு போலவே பின் இருக்கையில் இரண்டு பிணங்களை அமர்ந்த நிலையில் வைத்து, விழாதிருக்க துணிகளால் கட்டி விட்டு, பதினைந்தாயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளம்பி இருக்கிறார். இருந்தாலும் போலீஸ் பயத்தோடு பிணங்களோடு பயணம் செய்கிற பதைபதைப்பு மனதில். ஆசுவாசத்துக்காக அடுத்ததாக வழியிலுள்ள தேநீர் கடையில் தேநீர் பருகிக் கொண்டிருந்த போது
ஒரு ஆள்: அண்ணே! உளுந்தூர் பேட்டை வரை வரலாமா?
சம்சண்ணண்:உளுந்தூர் பேட்டை தாண்டி பக்கத்தூர்தான் போறேன். முதலாளி வண்டியிலே இருக்காங்க. இருங்க கேட்டுட்டு வரேன்.
(வண்டியின் உள் விளக்கை போட்டு, கட்டு அவிழ்ந்திடாமல் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு வந்து)
சம்சண்ணண்: முதலாளி சரின்னுட்டார். எவ்ள காசு தருவீங்க.
ஆள்: பஸ்க்கு 15 ரூவாதான். நிறுத்த மாட்டேங்கிறான். 30 ரூவா தாரேன்.
சம்சண்ணண்: பரவாயில்ல. முதலாளிட்ட சொல்ல கூடாது. இப்பவே கொடுத்திடனும். முன் சீட் தான். தூங்கக் கூடாது.
[அபிஅப்பா, குசும்பன் பதிவு மாதிரி, சம்சண்ணண் வாயத் தொறந்தா நாம் சிரித்து சிரித்தே வயிறு புண்ணாகிடும். பயங்கர அரட்டை. பேசிக் கொண்டே போய் இருக்கிறார்கள்.]
ஆள்: நாம இவ்வளவு பேசி சிரிக்கிறோம். பின்னால இருக்குறவங்க பேச மாட்டேங்கறாங்களே.
சம்சண்ணண்: அவுங்க செத்துட்டாங்கய்யா
ஆள்: (குசுகுசுப்பாக) முதலாளி முளிச்சிரப் போறாங்க. காதில விழுந்தா என்னாறது.
சம்சண்ணண்: அட போய்யா. அவுங்க செத்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா?
ஆள்: என்னய்யா சொல்ற?
சம்சண்ணண்: இவ்ள நேரம் பேசி பிரண்ட் ஆயிட்டோம். ஒண்ட்ட சொல்றதுக்கு என்னா. மெட்ராஸ்ல வர்ற வழில விபத்துல செத்தவங்க பொணம்யா. வேப்பூர் பக்கத்துல சேக்கனும்.
ஆள்: லைட்ட போடுய்யா
சம்சண்ணண்: கொஞ்சம் கூட வாயேன். திரும்ப உளுந்தூர் பேட்டை வந்து விட்டுடறேன்.
ஆள்: யோவ் லைட்ட போடுறியா என்னா?
சம்சண்ணண்: சந்தேகமா இருந்தா நீயே போட்டுப் பாரு
(வந்த ஆள் விளக்கைப் போட்டுப் பார்த்து விட்டு அலறுகிறார்.)
ஆள்: வண்டியை நிறுத்துய்யா. வண்டியை நிறுத்துய்யா.
சம்சண்ணண்: உளுந்தூர் பேட்டை இன்னும் பத்து கிலோ மீட்டர் இருக்கு
ஆள்: வண்டியை நிறுத்துய்யா. நிறுத்தறியா என்னா?
சம்சண்ணண் வண்டியை நிறுத்துகிறார்.
வந்த ஆள் வண்டியை விட்டுக் குதித்து சென்னையை நோக்கி "ஐயையோ" என்று கத்திக் கொண்டே திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.
சம்சண்ணண்: யோவ். இந்தப் பக்கம் ஓடினாலும் உளுந்தூர் பேட்டை வரும்.
வந்த ஆள் ஓடிக் கொண்டே இருக்கிறார்.