கல்லூரி நண்பர்கள் நான்கு பேர். எப்போதும் லந்து, அரட்டை, அலம்பல்தான். அவர்கள் கண்ணில் மாட்டியவர்கள், வம்பில் மாட்டாமல் தப்பிப்பது அபூர்வம்.
அவர்கள் வழமையாகச் செல்லும் ஒரு உணவகத்தில் (Restaurant), உணவு கொண்டு வரும் ஒரு குறிப்பிட்ட பரிமாறுபவரிடம் (supplier) எப்போதும் தகராறு செய்வார்கள். அந்த பணியாளர் எந்த மேசையில் பரிமாறுகிறாரோ அங்கேயேதான் போவார்கள். அவர்களை வேறு இடத்துக்கு மாறச் சொன்னாலும் மாற மாட்டார்கள. அந்தப் பணியாளரையும் மாற விட மாட்டார்கள்.
உதாரணமாக: தோசை கொண்டுவரச் சொல்லி, அவர் கொண்டு வந்ததும், நாங்கள் சொன்னது பரோட்டாதான் என்று மாற்றச் சொல்லி அவரைத் தொந்தரவு செய்வார்கள். இவர்கள் வந்தாலே அவருக்குப் பிரச்னைகள் துவங்கி விடும். முதலாளியிடம் வசவுகளும் கிடைப்பதுண்டு. தொடர்ந்து இரண்டு வருடம், அவர்கள் வரும் போதெல்லாம், இந்த மாதிரி தொல்லை தருவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள்.
அவர்களது கல்லூரி வாழ்க்கை முடிந்து விடை பெறுகிற நேரம். கடைசியாக அந்தப் பணியாளரை சந்தித்து மன்னிப்பு கேட்க முடிவு செய்தார்கள். ஐந்து அல்லது ஆறாயிரம் பெறுமானமுள்ள நல்லதொரு அன்பளிப்பை வாங்கிச் சென்று, அவரிடம் கொடுத்து, 'நாங்கள் இதுநாள் வரை செய்ததை மன்னித்து, எங்கள் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மீது தவறே இல்லை. வேண்டுமென்றே, விளையாட்டுக்காக, நாங்கள்தான் அவ்வாறு நடந்து கொண்டோம்' என்று சொன்னார்கள்.
அன்பளிப்பை ஏற்றுக் கொண்ட அந்த நல்ல பணியாளர், 'ஓகோ அப்படியா! இதுநாள் வரை அது விளையாட்டுக்காகத்தான் எனப் புரியாமலிருந்து விட்டேன். இனிமேல் நீங்கள் எப்போது சாப்பிட வந்தாலும், உங்கள் உணவில் எச்சிலைத் துப்பித்துப்பிப் பரிமாறுவதை கண்டிப்பாக நிறுத்தி விடுவேன்' என்று சொன்னாராம்.
(இதைக் கேட்டதிலிருந்து அலுவலக உதவியாளரை கோபமாக எதுவும் பேசக்கூட யோசனையாயிருக்கிறது. அவரிடம் கோபமாக ஏதும் பேசியிருந்தால், அன்றைய தேநீரை நானே தயாரித்துக் கொள்வேன். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான்.....)