அவனது தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஆறு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் வாழ்க்கையின் துயரங்களை தனியாளாய் எதிர்கொண்ட நெஞ்சுரம் மிகுந்த அவனது தாயார் பற்பல இன்னல்களுக்கிடையே அவர்களை ஆளாக்கினார். அவன் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் பெறும் அதிக பரிசுகளைக் கண்டு மிகுந்த ஆனந்தமடைவார். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். அவர் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சிதான் அவரது வாழ்வின் ஆனந்தமே என்றிருந்தார்.
அப்போது அவன் சிறிய பையன். எட்டாவது தேர்வுக்குப் பின் கோடை விடுமுறையில் வீட்டிலிருந்தான். 'இப்போது கடவுள் உங்கள் முன் தோன்றி ஒரு வரம் மட்டும் கேட்கலாம் என்ற வாய்ப்பளித்தால் என்ன வரம் கேட்பீர்கள்' என்று வானொலி அல்லது ஏதோ கதைப் புத்தகத்தின் தொடர்ச்சியாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்..
அவன் தாய், தமையன், தமக்கை ஆளுக்கொன்று சொன்னார்கள். 'உனக்கென்னடா வேணும்' என்று அம்மா கேட்டார்கள்.
அவன்
'எனது கொள்ளுப்பேரன், தங்கத்தட்டில் தயிர் சாதம் சாப்பிடும் அழகை, நானும் என் தாயாரும், என் வீட்டு பதினைந்தாவது மாடியிலிருந்து, வெறும் கண்ணால் கண்டு இன்புற வேண்டும்' என்றான்.
'என்னடாது பைத்தியம் மாதிரி உளர்றே' அவனது தமையன்
'ஏதாச்சும் இப்படித்தான் சொல்வான்' தமக்கை
1. எனது பேரனுக்கு பேரன் பிறக்கும் வரை நானும் தாயாரும் இருக்க - மிக நீண்ட ஆயுள் வேண்டும்
2. தங்கத்தட்டில் சாப்பிடுமளவுக்கு வசதி நிறைந்திருக்க வேண்டும். (தங்கத் தட்டில் சாப்பிடக்கூடாதென்பதெல்லாம் அவனுக்கு அப்போது தெரியாது)
3. தயிர்சாதம் சாப்பிட பால் வளங்களில் குறைவிருக்கக்கூடாது. (அப்போதெல்லாம் விற்றுத் தீராமல், வீட்டில், தேவையை விட கூடுதலாக பால் இருந்தால்தான் அம்மா தயிர் செய்வார்கள். தயிராகவே கடையில் விற்கும் காலம் வருமென்றெல்லாம் தெரியாது.)
4. என் வீட்டுப் பதினைந்தாவுது மாடியிலிருந்து வெறும் கண்ணால் கண்டு இன்புற -
(அ) 15 மாடிகளுள்ள வீடு சொந்தமாக இருக்குமளவுக்கு செல்வ வளம் நிறைந்திருக்க வேண்டும். (பல மாடிக் கட்டிடத்தில் 15வது மாடியில் ஒரு ப்ளாட் மட்டும் விற்கும் காலம் வருமென்றெல்லாம் தெரியாது)
(ஆ) 15வது மாடி வரை ஏறி இறங்குமளவுக்கு எங்களிருவருக்கும் உடல் பலம் இருக்க வேண்டும். (கிராமத்தில் இருந்ததால் லிப்ட் என்ற சாதனத்தைப்பற்றிய அறிவெல்லாம் 1976களில் இல்லை)
(இ) வெறும் கண்ணால் பார்த்தாலே தெரியுமளவுக்கு கண் பார்வை கூர்மையாயிருக்க வேண்டும்.
(ஈ) குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கக்கூடாது. இருந்தால் இன்புற முடியாதே
என்று அவன் விளக்கினான்.
அவன் தந்தை மறைவின் நான்கு நீண்ட ஆண்டுகளுக்குப்பின் அன்றுதான் அவன் தாயாரின் முகத்தில் அத்தகையதொரு மகிழ்ச்சிப் பொலிவைப் பார்த்தான். வாழ்வுச் சுமைகளின் அழுத்தத்தில் சோர்ந்து, ஏமாற்றத்தின் வலிகள் மட்டுமே வரிகளாய் ஓடிய அம்மாவின் முகத்தில், நன்னம்பிக்கையின் ஒளிக்கீற்று படர்வதைப் பார்த்து பரவசம் அடைந்தான் அவன்.
அவன் தலையை வருடியவாறே தாய் சொன்னாள் 'உனக்கு ஆசையே இல்லடா தம்பி!'
இப்போது அவன் மகள் அதைச் செய்தியாக கேட்டபோது சொன்னது
'டாடீ! உங்களுக்கு ஆசையே இல்லை டாடீ!'.
Post Comment