'கௌவி! போன போகுது விட்டுரேன் பாவமில்ல!'
'நீ போ பாவா! என்ன பாவம்?. யாவாரத்துலே கேட்கிறதுதான். படிஞ்சா கொடுப்பா. இல்லேன்னா போயிடுவா! உனக்கென்ன போ பாவா!'
கௌவி - என் தந்தையின் தமக்கை. சிறு வயதில் குப்பிம்மா என்று கூப்பிடும்போது அளவிலா இன்பம். என் மேல் மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
தெருவிலே குழந்தைகள் சொல்லும் பேர் 'புடிக்கிரம்மா'. குழந்தைகள் மேல் மிகுந்த ஈடுபாடு. எந்த குழந்தை தெருவில் போனாலும் பிடித்து விளையாடுவார்கள். கொஞ்சம் பெரிய, முரட்டு உருவமாய் இருந்ததாலும், குரலிலும் முரட்டு சுபாவம் இருந்ததாலும் பிள்ளைகள் பயங்கொள்ளும். என் மனைவிக்கு கூட புடிக்கிரம்மாதான் - எங்கள் திருமணம் வரை.
குழந்தைகள், பெரியவர்கள் யாருக்கு சுளுக்கு பிடித்தாலும் அல்லது குடலேற்றம் ஏற்பட்டாலும், கால் பாதத்தின் மேற்புறத்தில் அல்லது கை மூட்டின் உள்பக்கத்தில் எண்ணெய் தடவி, கத்தினாலும், வலிக்க வலிக்க நீவி விட்டு, இரண்டு தடவைகளில் எல்லாம் சரியாகி விடும். நன்றி சொல்ல யாரும் திரும்ப வருவதுமில்லை. அதற்கான எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்ததுமில்லை.
தெருவில் மண் சட்டி மற்ற அக்காலத்திய வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பவர்களிடம் சாமான்களை வாங்கி, தன் வீட்டில் அடுக்கி வைத்து, ஊரில் தேவைப்படுவோருக்கு விற்பார்கள். தெருவில் அவ்வாறு விற்க வந்த ஒரு பெண் இவர்களைப் பற்றி தெரியுமாதலால் விலையை கடுமையாக ஏற்றிச் சொல்ல 'உன் புருசன் பேரு என்னாடி? இந்த விலை எப்படி சொல்லும் படியாச்சு. நீ பக்கத்தூருதானே. ஆத்தை தாண்டிப்போய் உன் புருசனை அழைச்சிட்டு வா. வந்து அவன் இந்த விலை சொன்னாலும் இதை விட கூடுதல் சொன்னாலும் கொடுப்பேன். தராதரம் தெரியாம விலை சொல்லும்படியாச்சா?'
'ஏம்மா நாந்தானே விக்க வந்தேன். அவரு எதுக்கு. நீ எப்பவும் குடுக்கிற விலையக்குடும்மா!' – அந்தப் பெண்.
'உனக்கு விலை தெரியல. அந்தாண்டை போய் நீ தப்பா கணக்கு சொல்வே. உம்புருசனை இல்ல யாராவது தெரிஞ்ச ஆள அளச்சிட்டு வா' – குப்பிம்மா கௌவி.
இப்போது - முதல் வரியிலுள்ளது – நான். எப்படியோ வியாபாரம் முடிந்தது.
உள்ளுக்குள் சில பழைய குடும்ப கசப்புகள் இருந்தாலும், என் தாயாருக்கும் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை. எங்கள் தெருவிலேயே அவர்கள் வீடும் இருந்ததால், பிள்ளைகளை பார்க்கும் ஆவலில், மாலை முதல் இரவு தூங்கப்போகும் வரை, மிகுதியான நாட்களில் எங்கள் வீடுதான் இருப்பு. இவ்வளவு நேரம் வீட்டில் இருந்து விட்டு சாப்பிடாமல் போனால் அம்மா சம்மதிக்க மாட்டார்கள். இரவுச் சாப்பாடும் இங்குதான்.
என்னுடைய குழந்தை பிராயத்தில், சிங்கப்பூரில் ஏதோ ஒரு பார்க்கில் நான் ஊஞ்சலில் ஆடும்போது, யாரோ தள்ளி விட, மேற்புற பற்களெல்லாம் விழுந்து, மேல்பற்கள் இருக்காது. அதனால் என்னை நாக்கால் மூக்கைத் தொடச் சொல்லி, நான் மூக்கைத் தொடுவதை ஆச்சரியமாய் (தினமும்) வேடிக்கை பார்க்கும். என்னைக் கூப்பிடுவது 'ஓலைப்பல்லு!'
இரவு படிக்க அமர்ந்தால், கிட்டேயே உட்கார்ந்து கொண்டு, என் சிறு கையைப் பிடித்து வளைத்து வேண்டாமென்று சொல்லச் சொல்ல, சொடக்கு போடுவதும், வலி தாங்காமல் அல்லது வீம்பாக நான் கத்துவதும்
'ஏங்க்கா! அவந்தான் வேணாங்கிறான்ல உட்டுட்டாத்தான் என்ன?' என்று என் அம்மா சொன்னாலும்
'ஓல வாயா! ஓல வாயா! சோளமெப்படி விக்குது?
ஓலயால நாலு வெள்ளம் பாடி பாடி விக்குது!'
என்று என்னை கிண்டல் செய்து பாடி கையில் சொடக்கு போடாமல் விடாது.
'அவுங்க ஆசையாதானேடா போடுறாங்க. அதுக்கேண்டா கத்தறே' – என்று அம்மா என்னைத் திட்டுவார்கள்.
'அவன்டையே எதுக்கு வம்பு பண்றே. வேற புள்ளைங்களோட விளையாடேங்க்கா!' என்று அம்மா சொன்னாலும் கௌவி கேட்காது. நான்தான் வேண்டும்.
எப்பவும் குப்பிம்மா என்று சொல்வதுதான் வழக்கம். நான் ப்ளஸ்2 படிக்கும் போதும், கையைப் பிடித்து சொடக்கு போட எத்தனித்த அவர்களை, 'நீ கௌவி. எனக்கு இப்போல்லாம் வலிக்காது' என்று நான் சொல்ல 'என்னடா கௌவி என்று மரியாதை யில்லாமல்' என்று என் அம்மா திட்டினாலும் பின்னாளில் அதுவே பழகி விட்டது.
அதற்கும் கொஞ்ச காலத்துக்குப் பின்,
கௌவி வீட்டில் ஏதோ பணம் (50 ரூபாய்க்குள் இருக்குமென நினைக்கிறேன்) காணவில்லையென்று, நடுத் தெருவில் என்னைப் பிடித்து, 'நீதான் வூட்டுக்கு வந்தே. ஒன்னத் தவிர பணம் போகல. பணத்தைக் கொடுத்துட்டுப் போ!' என்று கௌவி கேட்கவும்,
மீசை முளைத்த பருவம். பார்ப்பவர்கள் கொஞ்சம் மரியாதையாய் அவர், இவர், வாங்க, போங்க என்று அழைத்தது வித்தியாசமாகவும் சுகமாயும் இருந்த பருவம். நடுத்தெருவில், அவமானத்தில், எனக்கு அழுகை அழுகையாய் வருகிறது.
கௌவி கையை உதறி விட்டு, விட்டுக்கு ஓடி வந்து, என் அம்மாவிடம் சொல்லி அழுதேன். 'ஏங்க்கா பணம் காணலைன்னா வீட்ல வச்சு கேட்க வேண்டியதானே. வயசுப் புள்ளைட்ட இப்படித்தான் செய்வாங்களா? இந்தா எவ்வளவு பணம் வாங்கிக்க' என்று அம்மா பணம் எடுக்கப் போகவும்,
அதற்குள் அவர்கள் வீட்டிலிருந்து அவர் மகள் ஓடி வந்து, 'ஏம்மா வயசான காலத்துல! அந்தப் பணத்தை நேத்து ராத்திரி அரங்கூரான்ட்டே குடுத்தியமா?' என்று சொல்லவும் சரியாயிருந்தது.
அதிலிருந்து அவர்களைத் தவிர்த்தேன். கௌவி வீட்டில் இருந்தால் நான் வெளியே போய் விடுவேன். என் கிட்ட வந்தாலே நான் தூரமாய் ஒதுங்கி விடுவேன்.
'ஏன்டா! நம்ம குப்பிமாதாண்டா! அவங்க ஒன்ன சொன்னாத்தான் என்ன? ஒன்ன தூக்கி வளத்தவங்கள்ளே! அவ்ளோ பெரிய மனுசி! மாப்பு (மன்னிப்பு) கேட்குது. அப்டிப் போரியடா?' என் அம்மா எவ்வளவு சொல்லியும் நான் மசியவில்லை. காது கேளாத மாதிரி இருந்து விடுவேன்.
கொஞ்ச நாளில் கௌவியின் கணவர் இறந்து விடவும், தன் வீட்டை விற்று விட்டு, மகளோடு பக்கத்தூருக்கு போய் விட்டது. நானும் துபை வந்து விட்டேன்.
வீட்டை விற்ற போது கூட 'நீ கேள். ஒனக்குத்தான் விற்கும்' அம்மா சொல்லியும் எனக்குத் தேவையாக இருந்தும், நான் கேட்க மறுத்து விட்டேன்.
துபையில் தொடர்ந்து ஐந்து வருடம் இருந்து விட்டு, ஊர் சென்ற பத்து நாட்களில்
'தம்பி! குப்பிம்மா வருச கணக்கா படுத்த படுக்கையா கிடக்குது. பால்தான் எறங்குது. ஏதோ உன்னுடைய ஆசைல இருந்தாலும் இருக்கும். போய் பாத்துட்டு வந்துடு பாவா'
என்று சொல்லவும் 'போம்மா! வேற வேலயில்ல! நான் போகல' என்று சொன்னேன்.
'உனக்கு தனியாய் போக ஒரு மாதிரியிருந்தால் நானும் துணைக்கு வரேன்' என்று என் அக்காவும் சொல்லவும், துபையில் வந்து, வாழ்க்கையின் சுகத்தை விட துக்கங்களை கூடுதலாய் சுமந்த அனுபவத்தில், 'சரிதான் போய் வருவோமே' என்று தோன்றியது.
என் அக்காவும் நானும் அவர்கள் வீட்டு வாசலில். கௌவியின் மகள்தான் அவர்களைப் படுக்க வைத்திருந்த அறைக்கு அழைத்துப் போய் 'எம்மா!. யார் வந்திருக்கான்னு பாரு!
(என் பெயரைச் சொல்லி) வந்திருக்குமா!' என்று சொல்லவும்
கௌவி வாயிலிருந்து 'பே' என்று பெரிய சத்தமாய்தான் எனக்குக் கேட்டது. கௌவியின் மகளோ, ''அஞ்சு வருசமா பேசல. உன்னைப் பார்த்ததும் 'வா பாவா'ங்குது'' என்று மொழி பெயர்த்து ஆச்சரியமாய் சொன்னார்கள்.
'என் தம்பி மகன் குழியில வக்காம, என் கட்டை குழியில இறங்கிடுமா? என் குழியில என் தம்பி மகனை நம்ம ஊரில உள்ளது போல்; பச்சை மூங்கிலும் பச்சை மட்டையும் போட்டு மூடச் சொல்லு' என்றெல்லாம் சொல்லியதாம். அவர் மகள்தான் சொன்னார்கள்.
அவர்கள் வீட்டை விட்டு திரும்ப பேருந்து நிலையத்துக்கு வரும்போது, என் அக்காவிடம், 'ஏதோ ஏப்பம் விட்ட மாதிரி சத்தம் கேட்டது. வா பாவா ன்னு கௌவி சொல்லுச்சாம். இன்னும் சும்மா என்னவெல்லாம் சொல்கிறார்கள் பார் அக்கா' என்று சொல்லிக் கொண்டே பேருந்தில் ஏறுகிறேன்.
கௌவி வீட்டிலிருந்து ஆள் ஓடி வந்து, 'குப்பியம்மரி மௌத்தாகி (இறந்து) விட்டது. உன்னை ஊருக்குப் போக வேண்டாமென்று சொல்லச் சொன்னார்கள்'.
எனக்குள் இடி இறங்கிய மாதிரி இருந்தது. அக்கா இறங்கிக் கொண்டார்கள். மனதுக்குள் அழுது கொண்டே ஊர் வந்து சேர்ந்தேன்.
பின்னர் அம்மா மற்றும் குடும்பத்தாருடன் அடுத்த பேருந்து பிடித்து, அந்த ஊருக்கு வந்து, 'கௌவிதான் போயிடுச்சே. இனிமே வந்தா பாக்க போகுது. ஊர் வழமை பிரகாரம் காய்ந்த மட்டை போடுவோம்' என்றவர்களிடம் அடம் பிடித்து, அவர்கள் சொல்லி இருந்தது போலவே பச்சை மூங்கிலும் பச்சை மட்டையும் போட்டு குழியை மூடினோம்.
(கௌவி = கிழவி,
குப்பிம்மா = தந்தையுடைய தமக்கையை, அத்தையை, குப்பியம்மா என்று எங்கள் ஊரில் அழைப்பது வழக்கம்
போ பாவா, வா பாவா = குழந்தைகளை போ அப்பா, வா அப்பா என்று வாஞ்சையுடன் அழைப்பது போன்றது.
புடிக்கிரம்மா = பிடித்து விளையாடுவதால் பிடிக்கிற அம்மா- பின்னாளில் அதுவே பிள்ளை
பிடிக்கிற அம்மா மாதிரி பிள்ளைகள் பயங்கொண்டது.)
1 comment:
என்னுடைய சில பதிவுகளே என் இடுகைக்குள் தெரியவில்லை.
testing
நல்ல மருத்துவர் வேண்டும்
Post a Comment