1. சொல்லி விட்ட சொற்கள்
2. எறிந்த கல்லால் ஏற்பட்ட அலை
3. தவற விட்ட வசந்தம்
4. இழந்து விட்ட நேரம்
ஒரு ஹைடெக் இளம்பெண் விமானத்தில் பயணிப்பதற்காக ஒரு பெரிய விமான நிலையத்தின் பயணிகள் அறையில் தங்க நேர்ந்தது.
பல மணி நேர தாமதம் ஏற்படலாமென அறிந்த அவள், நேரப்போக்குக்காக ஒரு புத்தகத்தையும் ஒரு பிஸ்கட் பேக்கையும் வாங்கிக் கொண்டு, அமைதியாக படிப்பதற்காக மிக முக்கியமானவர்கள் தங்கும் நிலைய பயண அறையில் ஒரு கைநாற்காலியில் அமர்ந்தாள்.
அவள் இருந்த இருக்கையின் அருகே பிஸ்கட் பாக்கெட் வைக்கப்பட்டிருந்த கைநாற்காலிக்கு அடுத்ததில் ஒருவர் அமர்ந்து தான் கையுடன் கொண்டு வந்திருந்த பத்திரிக்கையை பிரித்து படிக்க ஆரம்பித்தார்.
அவள் பிஸ்கட் பாக்கைப் பிரித்து ஒன்றை எடுத்தவுடன் அடுத்து அமர்ந்திருந்தவனும் அதிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டான். பயங்கரமாக கோபம் வந்தாலும் ஒன்றும் பேசாமலே இருந்தாள். ஆனால் அவள் மனதில் 'எவ்வளவு கொழுப்பு இவனுக்கு!. இதே வேறு நேரமாயிருந்தால், இவனுடைய இந்தத் திமிருக்கு அவன் மூஞ்சியிலே ஒரு குத்து விட்டிருப்பேன்' என நினைத்தாள்.
அவள் ஒவ்வொரு முறை பிஸ்கட் எடுத்த போதும் அவனும் ஒன்றை எடுத்து சாப்பிட்டான். அது அவளை பயங்கரமாக எரிச்சலடைய வைத்தாலும் அந்த அசிங்கம் எல்லோருக்கும் தெரிய வேண்டாமே என சகித்துக் கொண்டாள்.
இப்போது ஒரு பிஸ்கட்தான் மீதம் இருந்தது. 'இந்த வீணாய்ப் போனவன் இப்போது என்ன செய்ய முடியும்?' என நினைத்தாள். அவனோ அந்த பிஸ்கட்டை எடுத்து, இரண்டாய் உடைத்து, அவன் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, அவளிடம் ஒரு பகுதியைக் கொடுத்தான்.
சே! என்ன கொடுமை இது. அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. விசுக்கென்று அவ்விடத்திலிருந்து எழுந்து, அவள் புத்தகம் மற்ற பொருட்களை எடுத்துக் கொண்டு, விமானமேறும் பயணிகளின் வரிசையில் நின்று கொண்டாள்.
விமானத்தினுள் சென்று தனது இருக்கையில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தான் போட்டிருந்த கண்ணாடியைக் கழற்றி வைக்க கைப்பையை திறந்தால் ஆச்சர்யம். உளளே அவளுடைய பிஸ்கட் பாக்கெட். திறக்கப் படாமல் - அப்படியே. தன் கைப்பையில் தான் வைத்த பிஸ்கெட். அவள் தன்னையே நொந்து தன் தவறுக்காக அவமானமாய் உணர்ந்தாள்.
அந்த மனிதன் எந்தக் கோபமும் கசப்புமின்றி அவனுடைய பிஸ்கெட்டை இவளுடன் பகிர்ந்து உண்டிருக்கிறான். ஆனால் இவளோ இவளுடையதை அவன் பகிர்ந்து கொண்டதாக நினைத்து கோபம் மற்றும் வெறுப்பின் உச்சத்திலிருந்தாள்.
அவன் எந்த விமானத்தில் எங்கு செல்பவனோ?. அவனிடம் நடந்ததை விளக்கவோ மன்னிப்புக் கோரவோ கூட இயலாத நிலை.
அவசர குணம் வேண்டாமே.
----------------------------------------------------------------------
கோவையில் ஒரு வயதான மனிதர் தன் நிலத்தை கொத்தி காய்கனிச் செடிகளாவது வைக்கலாமே என்று தம் தோட்டத்திற்குச் சென்றார். நிலம் இறுகிக் கடினமாக இருந்ததில் அவரால் தோண்ட இயலவில்லை. அவருடன் எப்போதும் இப்பணியில் கூட வரும் ஒரே மகன் நிஜாம் இப்போது ஜெயிலில். தெருவில் போய்க் கொண்டிருந்த போது எவ்வித காரணமுமின்றி போலீஸ் பிடித்த தீவிரவாதி(?) அவன்.
அவர் தன் மகனுக்கு தன் நிலைமை குறித்து தபால் எழுதினார்.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு மகன் நிஜாமுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
இவ்வருடம் நம் தோட்டத்தில் எதுவும் பயிரிட முடியாதென்று கவலையுடன் உள்ளேன். தோட்டத்தில் தோண்டி, பண்படுத்தி, செடிகள் நட இயலாத அளவுக்கு மூப்படைந்து விட்டேன். நீ என்னுடன் இருந்திருந்தால், நீயே அவ்வேலைகளைச் செய்து கொடுத்திருப்பாய். எனக்கு இந்தக் கவலை ஏற்பட்டிருக்காது. இறைவன் நலமருள
பிரார்த்தனையுடன் உன் தந்தை.
சின்னாட்கள் கழித்து மகனிடமிருந்து தந்தைக்கு கடிதம் வந்திருந்தது.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு வாப்பாவுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
தற்போது தோட்டத்தை எங்கும் தோண்டி விடாதீர்கள். அங்குதான் பிணங்களை புதைத்து வைத்துள்ளேன்.
நன்மைக்கான பிரார்த்தனைகளுடன்
உங்கள் அன்பு மகன் நிஜாம்
அடுத்த நாள் விடியற்காலை 4மணி. உளவுத்துறை வட்டாரங்களுடன் பெரிய போலீஸ் படை அந்தத் தோட்டமெங்கும் தோண்டித் தோண்டிப் பார்த்தும் ஒரு பிணத்தையும் கண்டெடுக்க முடியாமல், முதியவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தோட்டத்தை விட்டு அகன்றது. அதே நாள் மகனிடமிருந்து முதியவருக்கு இன்னொரு கடிதம் கிடைத்தது.
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே.
அன்பு வாப்பாவுக்கு,
எங்கும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.
இப்போது தோட்டத்தில் உங்கள் விருப்பம் போல் பயிரிட்டுக் கொள்ளுங்கள்.
என் இந்த நிலைமையில் என்னால் இவ்வளவுதான் உதவ முடிந்தது.
நன்மைக்கான பிரார்த்தனைகளுடன்
உங்கள் அன்பு மகன் நிஜாம்
தழுவல்: நன்றி-ஷர்மி இரவி