Monday, 5 May 2008

துபை வாழ்வும் அன்றாட செலவுகளும்

அறிவிப்பு:
[ஏதோ கோல்மால் நடந்திருக்கு. கிறிஸ்துநேசன் மாதிரி அவதூறு ஆட்களை சில சமயங்களில் படிப்பதோடு சரி. அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்க நினைப்பவன். எதிர் வினை ஆற்றினாலும் மற்ற மதங்களை குறை சொல்வதை விடுத்து என் மார்க்கத்திலுள்ள நன்மைகளைச் சொல்வதையே விரும்புபவன். இரண்டு இடுகையையும் நேற்று படித்தேன்.ஆனால் எப்படி என் பதிவில் வந்ததென அறியவில்லை. அறிந்த உடனே கிறித்துவ நம்பிக்கை பற்றி என் பதிவில் வந்த தவறான இடுகையை அழித்து விட்டேன். நாய் கடித்தால் நாயைத் திரும்பவும் கடிப்பது நல்ல மனிதப் பண்பாகாது என்று நம்புபவன் நான். - நலம் விரும்பிகளும் நண்பர்களும் பொறுத்தருள்க - என் பதிவில் வந்த தவறான இடுகைக்கு வருந்துகிறேன்..என் பாஸ்வேர்ட் மாற்றி விட்டேன்.]



குசும்பன் குசும்பில்லாமல் எழுதிய UAE வருமுன் கவனிக்க வேண்டியவைக்கு பிற்சேர்க்கையாக இதை சேர்க்கலாம். அல்லது தற்போதைய நிலைக்கு ஒரு அப்டேட் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அஹ்லன் மின் துபை!... துபைக்கு வருக! வருக!!
நிறைய இந்தியர்கள் தங்கள் கனவு நனவாக துபை போகும் அடுத்த விமான நம்பிக்கையில்....
இங்கு வந்த பின் வாழ்க்கை அதிர்ச்சியாக மாற வாய்ப்பிருக்கிறது என்பதை அறிவிக்கவே இவ்விடுகை.

பொதுவாக நம் இளைஞர்கள் குறைந்த கால அளவுக்குள் நிறைய பொருள் தேடி விட விரும்புகின்றனர். பெயர் பெற்ற அல்லது அதல்லாத எந்த ஒரு நாட்டிலிருந்து வேலைக்கு அழைப்பு வந்தாலும் அதன் நன்மை தீமை பற்றி யோசிக்காமலேயே இந்தியாவை விட்டும் வெளியேறத் துணிகின்றனர். UAE வர விரும்புபவர்களே!. நீங்கள் கொஞ்சம் நிதானித்து, வருவதற்காக முடிவெடுக்கும் முன்னரே, இங்கே குறிப்பிடப்படுவனவற்றை சீர் தூக்கிப் பாரப்பது நல்லது.

முதன் முதலாக - உங்கள் துபை சம்பளத்தை உடனே 11ஆல் பெருக்கி இந்தியப் பணமாக கணக்கிடும் தவறை முதலில் நிறுத்துங்கள். பணமாற்றம் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதிலிருந்து கணக்கிடப்பட வேண்டும்.மொத்த வருமானத்திலிருந்தல்ல.

நீங்கள் திருமணமானவராயிருந்தால் அமீரகத்தில் குறிப்பாக துபையில் உங்கள் குடும்பம் தங்க எவ்வளவு செலவாகும் எனப் பாருங்கள்.

துபை நகரத்தில் எங்காவது ஒரு அறை, சிறு கூடம் (சிறு ஹால்), சமையலறை உள்ள ஒரு சாதாரண 1BHK வீட்டுக்கு வாடகை குறைந்தது 5000 திர்ஹம் ஒரு மாதத்துக்கு (ஒரு வருடத்துக்கல்ல) அவசியம். இந்த வாடகை வருடத்துக்கு குறைந்தது 15 முதல் 25 சதவீதம் வரை உயரும். உங்கள் சம்பள உயர்வு இதில் பாதி சதவீதம் கூட உயராதென்பதை அறியவும்.

நீங்கள் கொஞ்சம் விபரமான ஆளென்ற நினைப்பில் துபைக்கு வெளியில் (சார்ஜா, அஜ்மான், உம்மல் குவைன் ஆகிய அமீரகங்களில்) தங்கினால் மாதம் 500 முதல் 750 திர்ஹம் வரை சேமிக்க முடியும். ஆனால் அதற்காக அலுவலகம் சென்று வர பயணத்துக்காக நீங்கள் தினமும் மூன்று முதல் நான்கு மணி நேரங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும். சார்ஜாவிலிருந்து துபை வரை - பொதக்குடியானைப் பாருங்கள் (இலட்சக்கணக்கில் குடியேற்றங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகிரிப்பதால் வாகன நெரிசல் இன்னும் கூடுமே ஒழிய குறையாது). அதாவது வேலை நேரமாகிய 10 மணி நேரமானது 14 முதல் 15 மணி நேரமாகும். துபையில் குடும்பமிருந்தால் குதுர்கலம் என்ற நினைப்பிருக்கும்.

உங்கள் கம்பெனி ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் இல்லாததாக இருந்தால் (நிறைய கம்பெனிகள் இது போல் இருக்கிறது) சாதாரண மெடிக்கல் செக்கப்புக்கு 100 திர்ஹம் அழ வேண்டும். உடல் நலக்கேடு வராமலிருந்தால் நல்லது. வந்து விட்டால் அதற்காக மாதாமாதம் ஒரு பெருந்தொகையை இழக்க நீங்கள் தயாராக வேண்டி வரும்.

இந்தியாவின் வடநாட்டில் உள்ளது போன்ற வெப்பத்தை அறியாதவராக, பழக்கப்படாதவராக இருந்தால்.... அறிந்து கொள்ளுங்கள். கோடை நாட்களில் மதிய வெப்பம் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் - கோடையில் இங்கு இது சாதாரணம். சொல்லாமல் விடக்கூடாத முக்கியம் (Humidity)ஈரப்பதம் 95 சதவீதம்!.

குழந்தையில்லாதவராக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டக்காரர். 2 அல்லது 3 பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், ஒரு குழந்தைக்காக வருடத்துக்கு 12000 திர்ஹம் செலவுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

இங்கு பெட்ரோல் விலை குறைவு அதனால் கார் வாடகையும் குறைவாக வரும் என நினைத்திருப்பீர்கள். விமான தளத்தில் இருந்து உங்கள் ஹோட்டலுக்கு செல்ல ஒரு வாடகை வண்டி எடுத்து அதில் அமர்ந்து உங்களை நீங்கள் சரிப்படுத்திக் கொள்வதற்குள் வாடகை முள் 75 முதல் 100 திர்ஹத்தைத் தொட்டு விடும்.

உலகத்தின் விலையுயர்நத கார்கள் எல்லாம் இங்கு கிடைக்கும். ஆனால் அதை பார்க்கிங் செய்ய தினம் ஒரு இடத்தை பிடிப்பதற்குள் கார் வாங்கும் எண்ணமே பறந்து விடும். கார் பார்க்கிங் செய்ய ஒரு மணி நேரம் சுற்றிச்சுற்றி வந்தால் இடம் கிடைக்கலாம் ஆனால் ஒரு மணி நேரத்துக்கு 2 திர்ஹம் இரண்டு மணி நேரத்துக்கு 5 திர்ஹம் கொடுத்து டிக்கட் எடுக்கவும். காரில் டிக்கட் வைக்காமல் விடுபட்டு விட்டால் தண்டம் அழ வேண்டும். 100 திர்ஹம் என்று எழுதி 110 திர்ஹம் வாங்குவார்கள். அத்துடன் முக்கிய வீதிகளுக்கு சுங்கத்தீர்வை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்பெறும்.

கடைசியாக (இப்போதைக்கு)
ஊரில் உள்ள உங்கள் சொந்தங்களுக்கு தொலைபேச மூன்று மடங்கு பணம் செலவாகும். அமீரகத்திலிருந்து இந்தியாவுக்குப் பேச ஒரு நிமிடத்துக்கு சுமார் 30 இந்திய ரூபாய்கள் தேவை. ஆனால் இந்தியாவிலிருந்து அமீரகத்துக்குப் பேச 8 ரூபாய்கள்தான். இது துபையில் உங்களுக்கு என்னென்ன காத்திருக்கிறது என்பதற்கு சிறு விளக்கமாக இருக்கும். Skype உபயோகிக்கலாம் என நினைக்காதீர்கள். அது தடை செய்யப்பட்டுள்ளது. மீறி உபயோகிப்பது சட்ட விரோதமானது. ஆர்குட் கூட இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

புதிது புதிதாக உருவாக்கப்படும் ஷாப்பிங் மால்கள், மாறிக் கொண்டே வரும் வானுயர கட்டிடங்கள், துபையை பற்றி ஆங்காங்கே கேட்கும் வார்த்தைகள், விளம்பரங்கள், ஒவ்வொரு வியாழன் இரவிலும் படையெடுக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள், அழகழகான கார்கள், அணிவகுக்கும் காபிக்கடைகள், புர்ஜ் துபை, புர்ஜ் அல் அரப், துபை மரீனா போன்றவை உங்களை வசீகரித்திருக்கிறதென்றால்....... கொஞ்சம் யோசியுங்கள். (உங்களின் வாழ்க்கையை இங்கே துபையில் தொலைத்து விட்டு நீங்கள் ஊருக்குப் போகும்போது என்ன கொண்டு போகப் போகிறீர்கள் என்பதை யோசியுங்கள்.) நீங்கள் எத்தனை வருடங்கள் இந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் வெளிநாட்டான்தான், அமீரக பாஸ்போர்ட் கிடைக்காது. ஒரு வீடு கூட இங்கு சொந்தமாக இருக்காது.

நம்புங்கள் - என் இல்லமே எனது மகிழ்ச்சி.

இதுதான் வளைகுடா
. லோக்கல் தொலைபேசி இணைப்பு இலவசம்
. பெட்ரோலை விட தண்ணீருக்கு விலை அதிகம். கழிவு நீருக்காகவும் காசு தர வேண்டும்.
. ஒவ்வொரு கட்டிடமும் மூன்று மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும்.
. தகுதியில்லாதவர்கள் தகுதி படைத்தவரை விடவும் அதிகம் சம்பாதிப்பார்கள்.
. உண்மையை விடவும் படம் காட்டுவதற்கே மதிப்பு.
. அடிமட்டத் தொழிலாளர்களுக்கு நமது நாட்டில் கிடைப்பதை விட குறைந்த ஊதியமே கிடைக்கிறது.
. நிர்வாகம் எந்த ஒரு காரணமுமின்றி தன்னிடம் வேலை பார்ப்பவரை வெளியேற்றலாம்.
. பணத்தை விட வாஸ்தா (எனப்படும் பரிந்துரை) அதிக பலம் வாய்ந்தது.
. அலுவலர்களை விடவும் துடைப்பவர்களுக்கு அதிக பரிந்துரைக்கும் பலமுண்டு
. கட்டிட முதலாளியை விட கூடுதல் உரிமையுடையவர் வாட்ச்மேன்.
. முதலாளியிடம் மேலதிகாரியை விடவும் அதிக செல்வாக்குள்ளவர்கள் ஆபீஸ் பாயும் டிரைவரும்தான்.
. வளைகுடாவில் ஒரு மணி நேரத்துக்கள் மழை, புழுதிப்புயல், கடும் வெப்பம், கடுங்குளிர், வியர்ப்பு (உருக்கம்) போன்ற காலநிலை மாற்றங்கள் அதி வேகமாக மாறும்.
. வளைகுடா பாலைவனத்தில்தான் இருக்கிறது இருப்பினும் எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று தாவரங்கள் காட்சி தரும்.
. வளைகுடாவில் சம்பாதிக்கத் தெரியாதவன் உலகில் எங்கு போனாலும் சம்பாதிக்க முடியாது.
. வளைகுடாவில் நேரம் பறக்கும். ஒரு வெள்ளிக்கிழமை போய் அடுத்த வெள்ளி வந்ததே தெரியாது.
. இங்குள்ள ஒவ்வொரு இந்திய இளைஞனுக்கும் ஊரில் ஒரு வீடு கட்டுவதும் திருமணம் செய்வதும்தான் முக்கிய கனவு.
. நீங்கள் ஊரில் கூட இருக்கும்போது இருந்ததை விட 100 மடங்கு கூடுதலாக உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மீது அன்பு செலுத்துவீர்கள்.
. பணியில் இருப்பதை விடவும் வீட்டில் இருப்பதுதான் அதிக வலியைத் தரும்.
. இந்தியர்கள் உண்மையிலுள்ளதை விடவும் கூடுதல் பக்தியுள்ளவர்களாயும், கடவுள் பயமுள்ளவராகவும் இருப்பதாக காட்டிக் கொள்வர்
. சல்மான் கான் அல்லது ஷாரூக் கான் படங்கள் திரையிடப்பட்டால் திரையரங்குகள் அரபியர்கள் கூட்டத்தால் நிரம்பும்.
. அரபிப் பெண்கள் ஹிந்திப்பாட்டு பாடுவர் ஆனால் பாடலின் பொருள் தெரியாது.
. டான்ஸ் பார்களும் 'பப்' களும் பெங்களுருவை விட அதிகம்
. ஒவ்வொரு ஐந்து மீட்டருக்கு ஒரு பெண்கள் சலூன் உண்டு
. உணவும் மளிகையும் உங்கள் வாகனத்தில் கொண்டு வந்து தரப்படும்
. 10 மீட்டருக்கு ஒரு ஸ்டார்பக்ஸ்
. ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்குள் ஒரு ஷாப்பிங் மால் உண்டு
. விபச்சாரிகளும் உண்டு ஆனால் பிச்சைக்காரர்களை விடவும் மட்டமாக
. நெடுஞ்சாலைகளில் மெதுவாக அல்லது வேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கென்று வரிசை வித்தியாமிருக்கும்.
. ஓட்டுநர் உரிமம் பெறுவது கார் வாங்குவதை விட மிகக் கடினமானது
. பூச்சிகளை விடவும் நொருங்கிய கார்கள் கூடுதலாக காணக் கிடைக்கும்
. வரிசையில் வரவேண்டுமென்பது பெண்களுக்கு விதி கிடையாது.

Post Comment

7 comments:

அபி அப்பா said...

அன்புள்ள சுல்தான் பாய்! என்னா ஆச்சு! உங்க இந்த பதிவு சூப்பர், இல்லை என்று யார் சொல்ல முடியும். தவிர உங்களை தனிப்பட்ட முறையில் அறிந்த நான் சொல்கிறேன் நீங்கள் எதிர் பதிவு போடுபவரும் அல்ல யாரையும் எதிரியாக நினைப்பவரும் இல்லை! உங்கள் குணமும் மனது நாங்கள் அறிந்ததே, எதற்காகவும் கொஞ்சமும் கவலை இல்லாமல் ஜோரா வண்டியா ஓட்டுங்க நாங்க இருக்கோம் பின்னாடி உக்காந்து வருவதற்க்கு!!

அன்புடன்

உங்கள்
அபிஅப்பா

வடுவூர் குமார் said...

எனக்குஇப்போது மிக தேவையானது சுல்தான் பாய்.

மிக்க நன்றி.

Unknown said...

//எதற்காகவும் கொஞ்சமும் கவலை இல்லாமல் ஜோரா வண்டியா ஓட்டுங்க நாங்க இருக்கோம் பின்னாடி உக்காந்து வருவதற்க்கு!!//
மிகுந்த நன்றி அபி அப்பா.

//எனக்கு இப்போது மிக தேவையானது சுல்தான் பாய். மிக்க நன்றி.//
நன்றி வடுவூர் குமார்.
இவ்விடயத்தில் இயன்றவரை எல்லாவற்றையும் அலசிப் பார்த்து முடிவெடுப்பதே எப்போதும் நல்லது.

M.Rishan Shareef said...

அன்பின் சுல்தான்,

நன்றாக விபரமாக எழுதியிருக்கிறீர்கள்.
இங்கு கத்தாரிலும் அதே நிலைமைதான்.

இங்குள்ள வாழ்க்கை பற்றிக் கேட்கும் நண்பர்களுக்கு என்னால் இனி உங்கள் பதிவை தைரியமாகக் காட்டலாம் நண்பரே !

நன்றி :)

கிரி said...

இவ்வவளவு சிரமம் இருப்பது தெரிந்தும் என் எல்லோரும் போக பிரிய படுகிறார்கள். அதன் காரணம் என்ன? துபாய் தெரியுமா துபையீ ரோடு ல சாப்பாட குழைச்சு அடிக்கலாம்டா என்ற வடிவேல் வாசகம் போல் காரணமா? பணமும் கஷ்டம் என்று கூறி விட்டீர்கள், பின்ன எதுக்கு தான் போறாங்க? மாடு மாதிரி வேலை செய்து குறைந்த கூலி வாங்குறாங்க..எனக்கு நினைத்தால் பாவமாக தான் இருக்கிறது. உங்கள் கருத்துக்கள் பலருக்கு உதவியாக இருந்து இருக்கும் என்பது என் எண்ணம்.

Unknown said...

வருக வருக நண்பரே.

//நன்றாக விபரமாக எழுதியிருக்கிறீர்கள். இங்கு கத்தாரிலும் அதே நிலைமைதான். இங்குள்ள வாழ்க்கை பற்றிக் கேட்கும் நண்பர்களுக்கு என்னால் இனி உங்கள் பதிவை தைரியமாகக் காட்டலாம் நண்பரே!?//

பொதுவாக வளைகுடா வாழ்க்கை இப்படித்தான் என நினைக்கின்றேன். நன்றி ரிஷான் ஷெரீப்.


வருக வருக கிரி.
//துபாய் தெரியுமா துபையீ ரோடுல சாப்பாட குழைச்சு அடிக்கலாம்டா என்ற வடிவேல் வாசகம் போல் காரணமா//
எப்போதும் சாலையில் வாகனங்கள், துப்புறவுக்கான கண்டிப்பான சட்டம் போன்றவற்றால் சிங்கை மாதிரி இங்கேயும் ரோடு சுத்தம்தான்.
//மாடு மாதிரி வேலை செய்து குறைந்த கூலி வாங்குறாங்க..எனக்கு நினைத்தால் பாவமாக தான் இருக்கிறது//
அடிமட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த ஊதியந்தான். மிகக் கடினமான வாழ்க்கைதான். உண்மையிலேயே பாவம் நண்பரே.

மங்களூர் சிவா said...

துபய் பற்றி நல்ல தகவல்கள்.