தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள், இங்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்த வாழ்வியல் இங்கில்லை என்பதறிந்ததும் முதன் முதலாய் மனதொடிகிறார்கள். நிலம் நகை போன்றவற்றை அடகு வைத்து நிறைய பணம் கொடுத்து வந்தவர்கள், அந்தக் கடனை அடைக்கும் வரையிலாவது இங்கு இருந்துதான் ஆக வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். இங்கு தன் செலவும், ஊரில் குடும்பத்தார் செலவும் போக எஞ்சிய குறைந்த பணத்தில் கடனை அடைக்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.
அவர் வீட்டிற்கு அனுப்பும் பணம் ஊரில் கொடுத்ததை விடவும் அதிகம். ஆனால் அதற்காக அவர் இழந்தது எவ்வளவு என்பது ஊரில் இருப்பவர்களுக்கு தெரிவதில்லை. அவர்கள் மனது வருந்தக்கூடாதென்று இவர்களும் சொல்வதில்லை. அவர் முதலீடு செய்த பெருந் தொகையையும் ஊரில் பணத்தைப் பெறுபவர்கள் தற்காலிகமாக மறந்து விடுகிறார்கள். மகன் அல்லது கணவன் துபையில். இனி நம் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடும் என்பதான அவர்களின் கற்பனை, ஏற்கனவே இருந்த வாழ்க்கை முறையிலிருந்து சிறிது சொகுசான வாழ்க்கை முறைக்கு அவர்களை மாற்றுகிறது. அதற்காக கூடுதல் பணம் தேவையாகிறது. அவர் மேலும் அதிர்கிறார். பழைய கடன் பாரம் முழுவதையும் இரவும் பகலுமாய் இவரே சுமக்கிறார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.
அதற்குள் வந்து சிறிது நாளாகி விடுகிறது. நண்பர்கள் அதிகமாகின்றனர். குழுவாக இருக்கும் போதும், செல்லுமிடத்தும் புகை மற்றும் குடியைத் துவங்குகிறார். முதலில் மன ஆறுதலுக்கென்று இருந்தது, படிப்படியாக விடுமுறை என்றால் அதில்லாமலா என்ற நிலைக்கு தள்ளப் படுகிறார். இதிலே நண்பர்களின் முன் வீராப்புக்காக அல்லது முகஸ்துதிக்காக கூடுதல் செலவழிக்கிறார். சம்பள பற்றாக்குறை. மீண்டும் மன உளைச்சல்.
கார்டு தந்து கடனாளியாக்குகின்ற கிரெடிட் கலாச்சாரம் அவர் அறிந்தும் அறியாமலும் அவரை மேலும் கடனில் தள்ளுகிறது. வெளியேற முடியாமல் தத்தளிக்கிறார்.
இதல்லாமல் சிலருக்கு ஊரில் குடும்பத்தினரில் ஏற்படுகிற சிற்சில குழப்பங்களும் அவர் மனதை வாட்டிப் பிழிகிறது.
இவற்றிலிருந்து தப்பிக்க வழியறியாமல் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். சாதாரணமாக இவைதான் இங்கு நடப்பதாக சொல்கிறார்கள். அவைதான் தற்கொலைகளாய் முடிகின்றதாக சொல்கிறார்கள். உண்மையா?
அதனால் இங்கு வர நினைப்பவர்கள் முதலில் நன்றாகவும் சரியாகவும் திட்டமிடுங்கள். வந்த பின் கவனமாய் இருங்கள். உங்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்பவற்றை குறிப்பாய் தவிர்த்து விடுங்கள். உணர்ச்சி வசப்படாமல் சிந்தியுங்கள். வாழ நினைத்தால் புவியில் நல்ல வழிகளா இல்லை. உங்களை நீங்களே சீர்திருத்தம் செய்து சிறப்பான வாழ்வை நோக்கி பயணமாகுங்கள்.
அது சரி. படித்தவர்கள் அதிகமுள்ளதாய் சொல்லப் படுகிற மலையாளிகளில் இது போன்ற தற்கொலைகள் அதிகமுள்ளதே. படிப்பு மனிதனை அதிகக் கோழைகளாக்குமோ!