Wednesday, 30 July 2008

'ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்' தவறானது


மக்கள் தொலைக்காட்சி நடத்தும் தமிழ்ப் பண்ணையில் பங்கு பெறும் பெரும் தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் தமிழ்ப்பற்று சொல்லில் அடங்காது. நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. துபையிலேயே இரவு பன்னிரண்டு மணி அளவில் தெரிவதை நாட்டில் விடியற்காலை நேரத்தில் யாராவது விழித்திருந்து பார்ப்பார்களா என நான் எண்ணி வியப்பதுண்டு.

அக்காலத்தில் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்றொரு புலவர் இருந்ததாகவும், சாத்தனார் என்ற பெயருள்ள அவர், மற்றவர்கள் தவறாக ஆளும் தமிழைக் கண்டு மனம் வெதும்பி தம் எழுத்தாணியால் தம் தலையிலேயே குத்திக் கொண்டதால் தலை சீழாகி சீத்தலைச்சாத்தனாராய் ஆனார் என்றும் சொல்வர். அதை உண்மைதான் என நம்பச் செய்பவர்தான் இந்தத் தமிழறிஞர். தமிழ் எழுத்துக்களை அல்லது எழுதுவோர்களை நெறிப்படுத்த அவர் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்.

பேச்சு வழக்கில் எழுதுவது சரியில்லை என்கிறார் அவர். பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் மாறும். எனவே பேச்சு வழக்கை எழுத்து வழக்குக்கு கொண்டு வராதீர்கள். வழுக்களை தமிழாக நிலைப் படுத்தாதீர்கள். சட்ட மீறலையே சட்டமாக்காதீர்கள் என்கிறார். இன்னும் கணிணித் தமிழருகில் வரவில்லை. வந்தால் நம் மொக்கைகளையெல்லாம் படித்த பின் நம்மை நேரில் பார்த்தால் கொன்றே போடுவார். குறிப்பாக சாத்தான் குளத்தாரே மாட்டிக் கொள்ளாதீரய்யா.

தமிழில் பிறமொழிச் சொல்லாடல்களையும் இயன்றவரை தவிர்க்கச் சொல்கிறார். நவீனத்துவம், பின் நவீனத்துவம் என்று எழுதுகிற, சொல்கிற, சொல்லித் தருகிற அனைவரையுமே தமிழைக் கெடுத்த குற்றவாளிகளாக்குகிறார். நம்ம அய்யனார், இப்போது சென்ஷி ஆகியோர் பார்த்துக் கொள்ளுங்கள்.

எல்லோரும் நல்ல தமிழில் எழுத வேண்டும் என ஆர்வமூட்ட யார் யாரோ எழுதியதை அவர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அதிலுள்ள தவறுகளை மட்டும் விமரிசிக்கின்றார்.

ஒருவர் ''வீனஸின் பூமத்திய ரேகைக்கு அருகில்'' என்று எழுதியுள்ளதை படித்து அவருக்கு கோபம் பீரிடுகிறது. அந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரன்தான் படித்தவன். அவனுக்கு தமிழை விட வடமொழி விருப்பு அதிகம். அதனால் அறிவியலை தமிழ்ப்படுத்த அவற்றை வடமொழியிலேயே ஆக்கினான். அதனால்தான் பிராணவாயு, பூமத்திய ரேகை என வந்தது. பூமத்திய ரேகை பூமிக்கு நடுவில் இடப்பட்டுள்ள கற்பனைக் கோடு. அது வீனஸில் எப்படி ஐயா வரும். வீனஸ் மத்திய ரேகையாக அல்லவா வர வேண்டும். புடிப்பவனுக்கு குழப்பம் ஏற்படாதா? இப்போது நில நடுக்கோடு என்று பழகியிருந்தால், வீனஸின் நில நடுக்கோடு என்று எழுதினால் குழப்பமில்லையே என்கிற மாதிரி சொன்னார். எனக்குப் பிடித்தது. புரிந்தது. உங்களுக்கு?

தலைப்புக்கு வருவோம்.
ஓய்வு எடுத்துக் கொள்ளுதல் என்று எழுதுவதே தவறானது என்கிறார். இது ஆங்கிலத்தில் சிந்தித்து எழுதுபவரின் பழக்கம். நீங்களெல்லாம் வெள்ளைக்காரன் நாட்டுக்குப் போய் கண்களை பூனைக் கண்களாக்கிக் கொண்டு ஏதாவது செய்து தொலையுங்கள். தமிழைக் கெடுக்காதீர்கள் என்கிறார். ஓய்வு என்ன கீழே கிடக்கிறதா பொறுக்கி எடுத்துக் கொள்ள? Take Rest என உள்ளதை அப்படியே தமிழ்ப் படுத்தியதால் வந்த வினைதான் இது. ஓய்வு கொள்ளுங்கள் அல்லது ஓய்வாக இருங்கள் என்று சொல்லலாம். காத்தாட இருக்கலாமே. அமைதியாக சாயுங்களேன் என நாட்டுப் புறத்தில்தான் இன்னும் நல்ல தமிழ் வாழ்கிறது. போய்ப் பாருங்கள் என்கிறார்.

நல்ல தமிழறிய நீங்களும் இயன்றால் பாருங்கள். அவர் வார்த்தையிலேயே சொல்வதானால் தமிழ்ப்பண்ணையில் பண்ணையாராகுங்கள்.

குறிப்பு: ஒரு தமிழ்ப்பண்ணை விழாவிலே (ஒரு நாள் நிகழ்ச்சியில்) கூலவாணிபம் என்பது அப்புலவரின் தொழிலென்றும் சீத்தலை என்பது ஊராக இருக்கலாமென்றும் சாத்தனார் என்பது பெயரென்றும் மா. நன்னன் அவர்களே கூறியுள்ளார்.

Post Comment

7 comments:

Anonymous said...

'வழக்கு மொழிகள் தவிர்க்கப்பட வேண்டியதென்றுதான் நானும் வாசித்திருக்கிறேன் :-( ஆனாலும் தவிர்க்க முடியவில்லை

சரி.. நாளைக்கு பதிவர் கூட்டத்துக்கு வருவீங்கதானே? 050 6550245 கூப்பிடுங்க

சுல்தான் said...

வருகைக்கு நன்றி ஆசிப் மீரான்.
உங்கள் எழுத்துக்களை அந்த வட்டார மொழியில் படிப்பதே ஆனந்தமாயிருக்கிறது.

நாளை இன்ஷh அல்லாஹ் தவறாது கலந்து கொள்வோம்.

வடுவூர் குமார் said...

ஹூம்! உங்களுக்கு 12மணிக்காவது வருது,இங்கு அதுவும் இல்லை.
இருங்க இருங்க, இதில் ஏதாவது தவறு இருக்கா என்று பார்த்துக்கொள்கிறேன். :-)

சுல்தான் said...

//ஹூம்! உங்களுக்கு 12மணிக்காவது வருது, இங்கு அதுவும் இல்லை.//
வருகைக்கு நன்றி வடுவூர் குமார்.

//இருங்க இருங்க, இதில் ஏதாவது தவறு இருக்கா என்று பார்த்துக்கொள்கிறேன்//
இதிலே எத்தனை பிழைகள் என்று அய்யாவிடம் விட்டால்... அவ்வளவுதான்.

வல்லிசிம்ஹன் said...

சுல்தான், நன்னன் எத்தனை நாளாகப் போதித்து வருகிறார்.
மகிழ்ச்சியான சமயங்களோடு ஒத்துப் போவது அவரது தொலைக் காட்சி நிகழ்ச்சி.,
அந்த நாள் தொலைக்காட்சியில் வரும்போது உண்மையாவே நாங்கள் அனைவரும் ரசித்துப் பார்ப்போம்.
அதற்காக என் பதிவை அவரிடம் படிக்கச் சொல்லி எல்லாம் கொடுக்க
'தில்' கிடையாது:)

சுல்தான் said...

வாங்கம்மா. வருகைக்கு நன்றி. இப்போதெல்லாம் எதையாவது எழுதும்போது அவ்வப்போது அவர் சொன்னாரே என்று சில விடயங்கள் மனதில் தோன்றுகிறது.

என் பதிவை அவரிடம் காண்பித்தால் இப்போது திட்டுபவர் இனி சாத்தனாராய் மாறி என் தலையைத் தேடுவார்.

Kaps said...

This blogger is copying from you. He has copied from me as well. I have sent a note to his email ID but he is not responding. I plan to take some action. Let's join hands.

http://sultangulam.blogspot.com/2008/07/blog-post_30.html
http://arunmit.blogspot.com/2009/03/u-r-trying-to-say-v-r-trying-to-do.html
All his posts seem to be copied.