செப்டம்பர் 2001ல் ஆகாய விமானங்கள் இரட்டைக் கோபுரத்தினுள் பறந்தன. அமெரிக்க வரலாற்றில் அது சந்திக்கவிருந்த பெரும் பொருளாதாரச் சரிவைத் தடுக்க அமெரிக்கா இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தத் துவங்கியது. (இச்சந்தர்ப்பத்தை அது தானாக உருவாக்கிக் கொண்டதென்று ஒரு சித்தாந்தம் அமெரிக்காவிலேயே உலவிக் கொண்டிருக்கிறது என்பதொரு தனி விடயம்) அமெரிக்க பெட்ரோ டாலரைக் காக்க போர் தயாரிப்புகள் துவங்கின. அதில் முதன் முதலில் பறிக்கப் பட்டது உண்மையுடைய உயிர்தான். மற்ற பெட்ரோல் உற்பத்தி நாடுகள் வேடிக்கைப் பார்த்தன.
ஈராக் 2000ம் ஆண்டில் பெட்ரோலை யூரோவில் விற்கத் துவங்கியது. 2002ல் ஈராக் தன் கருவூலத்திலிருந்த முழு பெட்ரோ டாலர்களையும் யூரோவுக்கு மாற்றி விட்டிருந்தது. அடுத்த சில மாதங்களுக்குள் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிக்க துவங்கியது.
முழு உலகமும் வேடிக்கைப் பார்த்தது. ஆனால் வெகு சிலருக்கே அது பெட்ரோ டாலருக்கான போர் எனப் புரிந்திருந்தது. ஈராக்கை மார்ச் 2003ல் ஆக்கிரமித்தவுடன், அமெரிக்கா முதலில் அங்குள்ள எண்ணெய் வளங்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது நினைவிருக்கட்டும். ஆகஸ்ட் மாதத்தில் முதல் விற்பனையை மீண்டும் டாலரில்தான் துவங்கியது. ஈராக்கிலிருந்த எல்லா அரச மாளிகைகளும் இலாக்காகளும் குண்டு மழை பொழிந்து தகர்க்கப்பட்டது. பாக்தாதில் தகர்க்கப்படாத ஒரே அரச மாளிகை பெட்ரோல் இலாகா. எத்தனை இலட்சங்களில் மனித உயிர்கள் மலினப் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது காவு கொடுக்கப்பட்டது என்பதெல்லாம் அமெரிக்காவுடைய கவலையில்லை. அமெரிக்கா பெட்ரோ டாலர்களை காப்பாற்ற பெட்ரோல் வர்த்தகம் டாலரில் நடக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்க பொருளாதாரம் மண்ணைக் கவ்வும் - அதன் பின் என்னென்னவோ நடந்து விடும்.
2003ன் தொடக்கத்தில் வெனிசுலா அதிபர் ஹியூகோ சவாஸ் அந்நாட்டின் பாதி பெட்ரோலை யூரோவில் விற்பதாக (முன்னமே பாதியை அமெரிக்கா டாலரில் வாங்கி விட்டது) வெளிப்படையாக அறிவித்தார். 2003 ஏப்ரல் 12ல் அமெரிக்க உதவியிலுள்ள சில வியாபாரத் தலைமைகளும், சில தளபதிகளும் சேர்ந்து சவாஸைக் கடத்தி, புரட்சி செய்து நாட்டைப் பிடிக்க முயன்றனர். மக்களே அதற்கெதிராக களமிறங்கவும் இராணுவமே அந்தப் புரட்சியை முறியடித்து தோல்வியடையச் செய்தது. உண்மையில் அமெரிக்காவின் முகத்தில் கரி படிந்தது.
நவம்பர் 2000ல் ஒரு யூரோவின் மதிப்பு 0.82 டாலர்தான். இதுதான் யூரோவின் ஆகக் குறைந்த மதிப்பு. மேலும் சரிவை நோக்கித்தான் இருந்தது.
ஆனால் ஈராக் யூரோவில் பெட்ரோல் விற்கத் தொடங்கியதும் அதன் சரிவு நின்றது.
ஏப்ரல் 2002ல் OPECன் மேல் மட்ட பிரதிநிதிகள் யூரோவில் பெட்ரோல் விற்கும் யோசனையைப் பற்றிப் பேசத் துவங்கியவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
ஜூன் 2003ல் ஈராக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் திரும்ப டாலருக்கு ஈராக்கிய பெட்ரோல் விற்பனையைப் பற்றி பேசத் துவங்கியதும் டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு குறைந்தது.
ஆகஸ்ட் 2003ல் ஈரான் சில ஐரோப்பிய நாடுகளுக்கு யூரோவில் பெட்ரோல் விற்ற போது யூரோவின் மதிப்பில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் உண்டானது.
2003-04 OPEC நாடுகளின் தலைவர்களும் ரஷிய தலைமையும்; எண்ணெயையும் எரிவாயுவையும் யூரோவில் விற்பதைப் பற்றி உளப்பூர்வமாக பேசத் துவங்கியதும் யூரோவின் மதிப்பு உயர்ந்தது.
2004ன் OPEC மாநாட்டில் எண்ணெய் விற்பனையை யூரோவில் மாற்றுவதைப் பற்றி எந்த முடிவுமெடுக்காமல் கலைந்தது - ஆம் அப்போதும் யூரோவின் மதிப்பு தாழ்ந்தது.
இலண்டனிலும் நியூயார்க்கிலும் உள்ளதைப் போன்ற எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Bourse) தனது நாட்டிலும் நிறுவப் போவதாக ஜூன் 2004ல் ஈரான் அறிவித்தவுடன் யூரோவின் மதிப்பு உயரத் துவங்கியது.
கடைசியில் யூரோவின் மதிப்பு 1.27 அமெரிக்க டாலர்களில் உயர்ந்து நிற்கிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பை வெகு தூரம் தாழ்த்த, கடந்த மாதங்களில் இந்நிகழ்வுகள் வெகு தூரம் வந்து விட்டது. மே 5ம் நாள் ஈரான் தன் நாட்டில் சொந்த எண்ணெய் விற்பனை சந்தையை (Iran Oil Bourse) பதிவு செய்து விட்டது. இலண்டனையும் நியூயார்க்கையும் விட்டு விட்டு வேறொரு நாட்டில் எண்ணெய் விற்பனையைச் செய்வதோடல்லாமல் உண்மையில் உலக நாடுகள் விற்கவும் வாங்கவுமான ஒரு எண்ணெய் விற்பனை சந்தையை அமைத்து விட்டது.
சவாஸின் சமீபத்திய இலண்டன் வருகையில் அவர் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையை ஆதரிக்கப் போவதாகவும் யூரோவில் எண்ணெய் விற்கப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார். வெனிசுலாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள ஆயுத தடையைப் பற்றி இலண்டனில் கேட்கப் பட்ட போது சவாஸ், 'அமெரிக்கா வெறும் காகிதப்புலிதான்' என முன்னறிவிப்பாக பதிலிறுத்தார்.
தற்போதைய உலக எண்ணெய் வளத்தின் பெரும்பகுதி NYMEX (New York Mercantile Exchange) அல்லது IPE (International Peroleum Exchange at London)ஆகிய இரு இடங்களிலிருந்துதான் விற்கப் படுகிறது. இவையிரண்டும் அமெரிக்கர்களின் நிறுவனங்கள். அவை எண்ணெயை டாலரில்தான் வாங்கவோ விற்கவோ செய்கிறது. ஈரானிய எண்ணெய் விற்பனையின் வெற்றி ஈரானிய எண்ணெயின் 70 விழுக்காட்டை வாங்கும் ஐரோப்பியர்களை உணர்வு பெறச் செய்துள்ளது. தமது எண்ணெய் உற்பத்தியின் 66 விழுக்காட்டை ஐரோப்பாவுக்கு விற்கும் ரஷ்யாவையும் அது உணர்வு பெறச் செய்துள்ளது. அமெரிக்காவுக்கு மேலும் பாதகமாக இந்தியாவும் சீனாவும் ஈரானிய எண்ணெய் விற்பனை சந்தையிலிருந்து எண்ணெய் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இப்போதும் அதே Weapons of Mass Destruction என்றோ அல்லது அணுகுண்டு தயாரிப்பு என்றோ சொல்லிக் கொண்டு ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த எண்ணெய் சந்தை அழிக்கப்படாது என்று யாராவது ஒருவர் நம்புவீர்களா?
மேலும் புஷ்ஷூக்கு வீழ்ச்சி. உணர்வு பெற்ற ஐரோப்பா, சீனா, இந்தியா, ஜப்பான் முதலிய நாடுகளும் மேற்குறிப்பிடப்பட்ட மற்ற நாடுகளும் எண்ணெயை வாங்கவும் விற்கவும் யூரோவைப் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்நாடுகள் யூரோவை சேமிக்கத் துவங்கும். தம்மிடம் இருக்கும் அமெரிக்க டாலர்களை விற்கத் துவங்கும். கடனில் வீழ்ந்துள்ள டாலரை விட யூரோ நிலையாகவே உள்ளது. உலக வங்கியும் (IMF) அமெரிக்கா பொருளாதார பிரச்னைகளையும் வர்த்தகப் பற்றாக்குறையையும் பற்றி சமீபத்தில் அறிவித்து விட்டதால் கழுத்து நெறிபடும் அமெரிக்காவுக்கு வேறு போக்கிடமில்லை.
தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள மிகப்பெரிய கவலை, 'அமெரிக்க டாலர் கடுமையாக வீழ்ச்சி அடைவதற்குள் தம் கருவூலத்திலுள்ள டாலர்களை எப்படி மாற்றுவது?' என்பதுதான். ஆண்டாண்டு காலமாக எத்தனையோ உலக நாடுகளை டாலரில் திணித்து வைத்துள்ள அமெரிக்காவிடமே அதைத் திருப்பித் தர வாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கின்றன பல நாடுகள். ஆனால் உலகிலுள்ள டாலர்களில் வெறும் 5 விழுக்காட்டைக் கூட அமெரிக்காவால் ஏற்க முடியாது. அமெரிக்கா தன் பொருளாதாரத்தை நாசப்படுத்திக் கொள்வதோடு உலக நாடுகளில் பலவற்றின் பொருளாதாரத்தையும் கூடவே நாசப்படுத்தி விடும். அதிலும் குறிப்பாக பிரிட்டன் கடுமையாக நாசமாகும்.
Scottish Socialist Voice என்ற ஏட்டின் ஒரு கட்டுரை குறிப்படுவது போல, அமெரிக்கா பிழைக்க வேண்டுமானால், அந்நாடு வர்த்தகத்தில் ஒரு பெரும் புரட்சி செய்து, அதிக வர்த்தக நிலைமைக்கு (trade surplus) வர வேண்டும். அந்நாட்டினரால் இது முடியவே முடியாது. ஏனெனில் அதைச் செய்ய அமெரிக்கர்களை அந்நாடு அடிமைகளைப் போல வேலை வாங்க வேண்டும். அவ்வேலைக்கு சீனர்களையும் இந்தியர்களையும் விட குறைவாக சம்பளம் தர வேண்டும். நாமனைவரும் அறிந்ததைப் போலவே, இது அங்கு நடப்பதற்கு சாத்தியமே இல்லை.
இப்போது அமெரிக்காவில் என்னவாகும்? கண்டிப்பாக பெரும் குழப்பங்கள்தான் உண்டாகும். ஒரு வேளை ஏதும் தொழிலாளர் புரட்சி, தற்போதைய நிலைமையில் 1929க்குப்பின் ஜெர்மனியில் நடந்தது திரும்பலாம். தீவிர வலது சாரிச் சிந்தனைகள் தோன்றலாம்... ...
இந்த அமெரிக்காவுடனான மற்ற நாடுகளின் பொருளாதார நாசத்தை ஐரோப்பிய, சீன, ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தால் ஓரளவு தடுத்து நிறுத்த இயலுமா? இந்நாடுகளின் கருவூலங்களும் கழுத்து வரை அமெரிக்க டாலரால்தான் நிரம்பியுள்ளது.
1945 முதல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களால் செய்து வந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு பகரமாக ஏதாவதொரு வழியைக் கண்டு பிடித்தேயாக வேண்டும். ஒவ்வொரு நாட்டுக் கருவூலத்திலும் குவித்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு டாலர் தாள்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஈரானில் அமெரிக்கா குண்டு போட்டால் அது பயங்கரமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். ஈராக்கிலுள்ள ஷியா மக்களின் பக்க பலத்தோடு ஈரான் வெளிப்படையாக ஈராக்கோடு போர் தொடுக்கும். ஈராக்கில் தற்போது மிகச் சிலரால் உண்டாகும் உள்நாட்டு கிளர்ச்சியையே தடுத்து நிறுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அமெரிக்கா இந்த சுன்னி ஷியா மக்களுக்கிடையே பெரும் வெறுப்பை உண்டாக்கி, அதை ஊதி விட்டு மத்திய கிழக்கு நாடுகள் முழுதும் உள் நாட்டுப் போரை உருவாக்கி விடக் கூடும்.
ஆனால் இது உலக எண்ணெய் வர்த்தகத்தில் மிக ஆபத்தான பின்னடைவை ஏற்படுத்தி விடும். இந்த ஈரானிய சந்தை சிறிது காலமே தனித்து இயங்கும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். அதன் பின் யூரோவில் எண்ணெய் விற்க சந்தைகள் வேறிடங்களிலும் (குறிப்பாக புரூஸ்ஸல்) துவக்கப்பட்டு விடும்.
ஒரு தீர்வு என்னவென்றால், டாலரை அழித்து விட்டு அமெரிக்காவின் புழக்கத்துக்காக புதுப் பணத்தை அது அறிமுகப் படுத்தலாம். இதன் மூலம் மற்ற நாடுகளிலுள்ள 66 விழுக்காட்டு டாலர் தாள்களை ஒரேயடியாக பயனற்றதாக்கலாம். என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்?. இது போன்ற அடாவடியான, ஆபத்தை பொருட்படுத்தாத சிந்தனைகள்தாம் வெள்ளை மாளிகை, வால் ஸ்ட்ரீட், பென்டகனிலுள்ள சிலரது தலைகளில் தற்போது நீந்துவதாகத் தெரிகிறது.
அல்லது 1938ல் போலந்து நாட்டுக்குள் நுழைய ஜெர்மனி செய்ததைப் போல எதையாவது செய்ய வேண்டும். அதாவது போலந்து நாட்டினர் ஜெர்மனிக்குள் படை நடத்தி வந்து விட்டதாக ஒரு மாயத் தோற்றத்தை படம் பிடித்து நாஜிகள் மக்களிடம் காட்டி உள்நாட்டிலுள்ள மக்களின் எண்ணங்களையும் இதயங்களையும் வென்றெடுத்தனர். எனினும் அமெரிக்கா இந்த முறையில் வெற்றி பெறுவதென்பது தற்போதைய நிலையில் மிகக் கடினமானதே. ஆக, அமெரிக்கா எப்படித்தான் தப்பும்? உலக அரங்கில் அமெரிக்காவின் உயர்வு அதன் ஆயுத பலம்தான். என்னென்ன கொடுமைகளை இன்னும் உலகம் சந்திக்கவிருக்கின்றதோ யார் கண்டது?. ஒரு புது உலகப் போர் மூலம் அமெரிக்கா தன் சார்பு நாடுகளை ஒழுங்கு படுத்தி அதன் கருவூலங்களில் டாலர்களை வைத்திருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்தப் போகிறதோ என்னவோ?
இனி வரப் போகிற ஆபத்து முதலாளித் துவத்துக்கும் (டாலர்) ஏகாதிபத்தியத்துக்கும்தான். கலாச்சார மாற்றங்களோ, இஸ்லாமோ, axis of evil நாடுகளோ, அமெரிக்கா சொல்லும் பேரழிவு ஆயுதங்களோ ஆபத்தானவைகளல்ல. அமெரிக்கா இதுவரை கடை பிடித்து வந்த அந்நாட்டின் கொள்கைகளும் செயல்முறைகளும்தான் அடிப்படையில் தவறானவை, ஆபத்தானவை.
ஈரான், பாரசீக வளைகுடாவிலுள்ள கிஷ் தீவின் free trade zoneல் தனது புதிய எண்ணெய் விற்பனை சந்தையை (Iranian Oil Bourse) அமைத்துள்ளது. கணிணியும் மென்பொருட்களும் நிறுவப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கடந்த மார்ச் மாதமே IOB தனது பணியைத் துவங்கி இருக்க வேண்டும் ஆனால் சில அழுத்தங்கள் காரணமாக தள்ளிப் போடப்பட்டது. எங்கிருந்து அழுத்தம் வந்திருக்கும் என்பது சொல்லித்தான் அறிய முடியுமா என்ன?. மே 5ந்தேதி IOB பதிவு செய்யப்பட்டு விட்டது. சந்தை துவங்கும் நாள் குறிக்கப்படாததற்கு எண்ணெய் மாபியா கும்பல்களின் ஊடுருவலும் உலக நாடுகளின் அழுத்தமும் ... ... காரணம் என சிலரால் சொல்லப் படுகிறது,
2007ல் எண்ணெய் 60 டாலர்களுக்கு கொள்வரவு செய்யப்பட்டது. டாலரின் மதிப்பு ஒவ்வொரு நாளும் வீழ்ச்சி அடைவதை அனைவரும் அறிவோம். தனது NYMEX, IPE மூலம் வெறும் யூகங்களை (speculation) முன்னிறுத்தி எண்ணெயின் விலையை ஏற்றிக் கொண்டிருக்கிறது. 60 டாலர்களுக்கு விற்ற எண்ணெயை 140 டாலருக்கு விற்றால் டாலரின் தேவை 230விழுக்காடுகள் அதிகரிக்கும்.
OPEC கூட சமீபத்தில் எண்ணெய் விலையேற்றத்திற்கு 60சத காரணம் வெறும் யூகங்களைக் கொண்டு செய்யும் முன் வியாபாரம்தான் (Future Trade) எனக் கூறியுள்ளது.
முடிவாகச் சொல்வதென்றால் அமெரிக்கா தனது டாலரை அழிவிலிருந்து காக்க, உலகில் டாலருடைய ஏகாதிபத்தியத்தை நிலை நிறுத்திக் கொள்ள எந்த நாட்டையும் அழிக்கத் தயங்காது.