Wednesday, 20 August 2008

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-1)

ஈரான் செய்துள்ளது உண்மையில் அணுவாயுதத்தையும் விட கொடியதாகி விட்டது. எப்படி?

தி வாய்ஸ்( வெளியீடு 264)ல் ஒரு கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. ஈரான் கடைசியில் அதைச் செய்தே விட்டது. அது பாரசீக வளைகுடாவில் தன் முதல் அணு ஆயுதம் எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அதை விடக் கொடுமையான ஒன்றை உலகில் ஏவப் போகின்றனர். அதற்கடுத்த வாரம் ஈரான் எண்ணெய் விற்கும் சந்தையை (Iran Bourse) நிறுவியது. அதன் வரவு செலவுகள் யூரோவில்தான், அமெரிக்க டாலரில் நடைபெறாது. ஒரு முக்கியத்துவமற்ற நிகழ்ச்சியாக நமக்குத் தோன்றும் இது, அமெரிக்க மக்களுக்கு பேரபாயத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சியாகும். உண்மையில் அது நம் கற்பனைக்கு எட்டாத விளைவை உள்ளடக்கியது.

தற்போதைய நிலையில் எண்ணெய் வரவு செலவுகள் அனைத்தும் நியூயார்க், லண்டன் நகரங்களிலுள்ள இரு எக்ஸ்சேன்ஜ் வாயிலாகத்தான் நடைபெறுகின்றன. அவ்விரண்டு எக்ஸ்சேன்ஜ்களும் அமெரிக்காவுக்கு சொந்தமானவை என்பது தற்செயலானதல்ல என்பதை நீங்கள் யூகித்திருக்கலாம்.

உலகமெங்கும் ஏற்பட்ட வியாபார மந்த நிலையினாலும், இரண்டாம் உலகப் போரின் விளைவாலும் 1929ம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் பெரும் சரிவையடைந்தது. அந்தப் போரின் போது தம் கூட்டுப் படைகளுக்குத் தேவையான பொருட்களையும் தளவாடங்களையும் அமெரிக்கா வழங்கி, அதற்கு ஈடாக பணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து, தங்கமாகத் தர வற்புறுத்திப் பெற்றுக் கொண்டது.

1945ம் ஆண்டில் உலகத் தங்கத்தின் 80 சதவிகிதம் அமெரிக்கப் பெட்டகத்தில் அடைபட்டது. அதன் விளைவாக எந்த மாற்றுமில்லாமல் டாலர் தாள்களே உலக சேமிப்புக்கான பணமானது. உலகம் முழுதும் தங்கத்தை விட டாலர் கட்டுகளே பாதுகாப்பானது என ஆனது. ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் உருவானது.

அதற்கடுத்து வந்த சில பத்தாண்டுகளில் இனி மற்றொரு நாள் வராது என்ற வேகத்தில் அமெரிக்கா தன் டாலர் தாள்களை அடித்துக் கொண்டே இருந்தது. அமெரிக்கா, அந்த மலையளவு காகிதங்களை, வெளிநாட்டுச் சரக்குகளை பெருமளவில் வாங்கிக் குவிக்கவும், பணக்காரர்களுக்கு வரி விலக்கு அளிக்கவும், அப்போது உலகில் நடந்த போர்களுக்காகவும், வெளி நாட்டிலுள்ள தம் கூலிப்படைகளுக்காகவும், வெளி நாடுகளுக்கு அனுப்பியுள்ள தம் மத போதகர்களுக்கும், அரசியல் வாதிகளுக்குமென வெளிநாடுகளில் வீசி இறைத்து ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி உள்நாட்டு பணவீக்கத்தை அதிகப் படுத்தவில்லை. ஏனெனில் வெறும் தாள்களை அச்சிட்டுக் கொடுத்து எல்லாவற்றையும் அமெரிக்கா வெளியிலிருந்து இலவசமாகவே பெற்றது. அதற்காக அமெரிக்காவின் இழப்பு தாள் உற்பத்திக்காக ஓரிரண்டு காடுகள்தான்!.

அதற்கடுத்த பத்தாண்டுகளில் உலக நாடுகளின் பெட்டகங்களில் பல அமெரிக்க டாலர்களால் நிரம்பி வழிந்தது. அமெரிக்க டாலர்களுக்காக உலக நாடுகளில் புதுப்புது பெட்டகங்களும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும், அமெரிக்கா தன் டாலர் தாள்களை உள் நாட்டை விடவும் கூடுதலாக வெளி நாடுகளிலேயே செலவிட்டது. அமெரிக்காவைத் தவிர மற்ற நாடுகளில் சேமிப்புகளாக வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் பணத்தின் மதிப்பில் 66 சதவிகிதம் எனும் பெரும் பகுதி வெறும் டாலர் தாள்களாகவே சேமிக்கப் பட்டிருந்தது என்பதை அநேகமாக எல்லா வல்லுநர்களும் ஒப்புக் கொள்கின்றனர்.

1971ம் ஆண்டில் பல நாடுகள் தம் சேமிப்பிலிருந்த டாலர் தாள்களின் சிறு பகுதியை விற்று தங்கமாக மாற்ற விரும்பியது. ஓஹியோ பல்கலை கழகத்திலிருந்து வணிகவியலில் டாக்டர் பட்டம் பெற்ற க்ராஸ்ஸிமிர் பெட்ரோவ் (Dr. Krassimir Petrov) சமீபத்தில் இதைப் பற்றி எழுதும் போது, 'அமெரிக்க அரசு ஆகஸ்ட் 15, 1971ல், டாலருக்கும் தங்கத்துக்குமான இணைப்பை துண்டிப்பதாகச் சொல்லி தன் நாட்டுக் காகிதங்களை திரும்பப் பெற மறுத்தது. உண்மையில் தன் டாலர் காகிதங்களைப் பெற்று தங்கத்தை தர மறுத்த செயல் அமெரிக்க அரசின் திவாலான நிலைமையை அப்பட்டமாக்கியது' எனக் குறிப்பிடுகிறார். 1945ல் உருவாக்கப்பட்ட ப்ரெட்டன் உட்ஸ் (Bretton Woods) ஒப்பந்தம் தன்னிச்சையாக குப்பைக்கு எறியப்பட்டது.

டாலரும் அமெரிக்க பொருளாதாரமும் ஒரு வகையில் 1929ன் ஜெர்மனியை ஒத்ததாக இருக்கிறது. மற்ற உலக நாடுகள் டாலர் தாள்களை நம்பவும் அதிலே உறுதி கொள்ளவும் அமெரிக்கா வேறு வழிகளைத் தேடும் நிர்ப்பந்தத்திற்கு இப்போது தள்ளப் பட்டது. அதற்கான விடைதான் எண்ணெய் அதாவது பெட்ரோ டாலர். அமெரிக்கா, பெட்ரோலை டாலரில் மட்டும் விற்க, விஷமத் தனமாக முதலில் சவூதி அரேபியாவையும் பின்னர் OPEC எனப்படும் பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பையும் இணங்க வைத்தது. அது டாலரின் மதிப்பைக் காப்பாற்ற உதவியது. இப்போது அத்தியாவசியத் தேவையான பெட்ரோலைப் பெற மற்ற நாடுகள் டாலர் தாள்களை திரும்பவும் இருப்பில் வைத்தன. ஆனால் அந்த அவசியமான பெட்ரோலை அமெரிக்காவோ இலவசமாகப் பெறுகிறது. டாலர் தாள்களை மூழ்காமல் காக்க தங்கத்துக்குப் பதில் இப்போது பெட்ரோல்.

1971லிருந்து வெளிநாடுகளில் விநியோகிக்கவும் செலவழிக்கவும் அமெரிக்கா மென்மேலும் டாலர் தாள்களை மலை மலைகளாக உற்பத்தி செய்யத் துவங்கியது. அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையும் (trade deficit) மளமளவென வளர்ந்தது. வெறும் டாலர் தாள்களை அச்சடித்துக் கொடுத்து உலகின் எல்லாப் பொருட்களையும் அமெரிக்கா விழுங்கியது. மேலும் பல பெட்டகங்களும் உருவாகின.

சில்லின் நுனான் (Cillinn Nunan) என்ற நிபுணர் 2003ல் எழுதியதாவது, 'உண்மையில் டாலர்தான் உலகின் சேமிப்புப் பணமாக உள்ளது. உலகின் அதிகார பூர்வ சேமிப்பு மாற்றுகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு அமெரிக்க பணக் கணக்குதான் உபயோகிக்கப் படுகிறது. வெளி நாட்டுப் பண மாற்றத்தில் ஐந்தில் நான்கு பங்கும், உலக ஏற்றுமதிகளில் பாதியும் டாலர்களில்தான் செய்யப் படுகிறது. அது மட்டுமின்றி உலக வங்கியின் கடன்களும் (IMF Loans) டாலர்களில்தான் தரப் படுகிறது.

புலன்ட் கூகே (Dr. Bulent Gukay of Keele University) சமீபத்தில், 'எண்ணெய் வர்த்தகத்தில் உலக இருப்பின் டாலர்கள் செலவழிக்கப் படுவதால் செயற்கையாக டாலரின் தேவை அதிகமாக்கப் பட்டுள்ளது. இதனால்தான் ஏறக்குறைய ஒரு செலவுமேயில்லாமல் அமெரிக்கா வெறும் டாலர் தாள்களை அச்சிட்டு அதிகப் படியான இராணுவத் தேவைகளுக்கு உபயோகிக்கவும், நுகர்வோர் பொருட்கள் இறக்குமதியில் செலவழிக்கவும் முடிகிறது. எவ்வளவு டாலர் தாள்கள்தான் அச்சிடலாமென்பதற்கு எந்த அளவீடுகளோ கட்டுப்பாடுகளோ அமெரிக்காவுக்கு இல்லை. அமெரிக்காவுக்குச் சமமான போட்டியாளர்கள் யாரும் இல்லாத நிலையில், மற்ற நாடுகள் டாலரின் மேல் நம்பிக்கை கொண்டிருக்கும் வரையில் எந்த செலவுமின்றி வெறும் டாலர் தாள்களை அமெரிக்கா அச்சிட்டே வாழ்ந்து கொண்டிருக்கும்' என எழுதியுள்ளார்.

சமீப காலம் வரை அமெரிக்க டாலர் பாதுகாப்பானதாகத்தான் இருந்தது. எனினும் 1990 முதல் மேற்கு ஐரோப்பிய நாடுகள் வளரத் தொடங்கி மத்திய ஐரோப்பாவையும் கிழக்கு ஐரோப்பாவையும் விழுங்கத் துவங்கியுள்ளது.

அமெரிக்கா ஒரு செலவுமில்லாமல் உலகப் பொருள்களையும் மக்களையும் வாங்கும் பலத்தை பார்த்து, பிரான்சு மற்றும் ஜெர்மானியத் தலைவர்கள் பொறாமைப் படத் துவங்கி விட்டனர். இலவசமாக் கிடைக்கும் அதில் தாமும் ஒரு பகுதியைப் பெற விரும்புகின்றனர்.

அவர்கள் 1999ன் இறுதியில் யூரோ எனும் பண பலத்தை, அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட பலத்த எதிர்ப்புகளுக்கிpடையே, குறிப்பாக அமெரிக்க டாலர் பெற்று பிரிட்டன் உண்டாக்கிய எதிர்ப்புக்கிடையிலும் உருவாக்கி விட்டனர். யூரோ இப்போது வெற்றி நடை போடுகிறது.

யூரோ வெளியிடப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள் சதாம் உசேன், OPEC எனும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்க டாலருக்கு மட்டுமே விற்று வந்த பெட்ரோல் இனி யூரோவில் மட்டுமே ஈராக்கில் விற்கப்படும் என அறிவித்தார். ஈரான், ரஷ்யா, வெனிசுலா, லிபியா முதலிய நாடுகள் தாங்களும் அவ்வாறே மாற நினைப்பதாக வெளிப்படையாக அறிவிக்கத் துவங்கின – வெள்ளம் அமெரிக்காவின் தலையில் ஓடத் தலைப்பட்டது.

இரண்டாம் பகுதியில் தொடரும்........

Post Comment

13 comments:

manjoorraja said...

நல்லதொரு பயனுள்ள கட்டுரை.
தொடரட்டும்.

manjoorraja said...

இந்த பதிவை முத்தமிழ் கூகிள் குழுமத்தில் மீள்பதிவு செய்துள்ளேன் நன்றி

http://groups.google.com/group/muththamiz

Anonymous said...

எக்ஸலண்ட் !!! அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்...!!!!

ராஜ நடராஜன் said...

ஏனுங்க வயிற்றில பதிவக் கரைக்கிறீங்க:(

Unknown said...

வருகைக்கும் மீள்பதிவுக்கும் நன்றி மஞ்சூர் ராஜா.

//அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.//
நன்றி செந்தழல் ரவி. நாளையே பதிவிடுகிறேன்.

வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்

ALIF AHAMED said...

ம் குட்டி குட்டி நாடெல்லாம் அமெரிக்காவை ஆட்டி பாக்குது

வருங்கால வல்லரசுக்கு பேர கேட்டாலே அதுருதுல்ல

:)

Anonymous said...

Superb

Hariharan # 03985177737685368452 said...

கட்டுரைகளில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் பெட் ரோலிய கொள்கைத் தவறுகள் சுட்டப்பட்டிருப்பதில் பெரும்பகுதியை ஏற்றுக்கொள்ளலாம்.

டாலர் நோட்டு அச்சடிப்பு, உலகளாவிய டாலர் வர்த்தகம் என்பது கட்டுரை எளிமையாக்கியது போல் வெறும் காகித அச்சடிப்பு பொருளாதாரமே அமெரிக்காவுடையது என்பது அமெரிக்காவின் பொருளாதாரம் உலகளாவிய (போர்ஆயுதம் தவிர்த்த) டெக்னாலஜி தேவையை உலக அளவில் நூற்றாண்டுகளாக நிறைவேற்றியதால் வந்த உண்மையை இந்தக் கட்டுரையில் காண இயலவில்லை.

எண்ணை உற்பத்தி நாடுகள் தனித்த கச்சா எண்ணை சந்தையை ஈரானின் கிஷ் தீவிலோ ஐரோப்பிய புருஸ்ஸல்லிலோ நிறுவினாலும் அங்கு பயன்படுத்தப்படும் கணிணி முதல் பெரும்பான்மை ஆயில் ரீபைனிங், ஷிப்பிங் டெக்னாலஜி என அனைத்திலும் அமெரிக்க டெக்னாலஜியின் நேரடி மறைமுகப்பயன்பாடு மறுக்கமுடியாததாக இருக்கும்.

எல்லாம் சரி. அமெரிக்காவை குற்றமற்ற நாடு என்று சொல்லிவிட முடியாதுதான்.ஏற்கிறேன்.

மத்தியகிழக்கு எண்ணை உற்பத்தி தேசங்கள் எண்ணை உற்பத்தியை தேசவுடமை ஆக்கியும் உருப்படியாக உலகளாவிய எண்ணை வர்த்தகத்தை ஒற்றுமையாகச் செய்ய முடியாததன் அப்பட்டமான காரணம் மத்திய கிழக்கில் நிலவும் பெரும்பான்மை மக்கள் தொகையின் கல்வியின்மையும்,மத்திய கிழக்கு அரச குடும்ப ஆட்சியாளர்களின் அடிமைத்தன சிந்தனையும் பிரதான காரணங்கள்.

மத்திய கிழக்கு அரச குடும்ப ஆட்சியாளர்களின் பிற்போக்குத்தனமான ஆட்சியால் ஏற்படுத்தி இருக்கும் கல்வி, ஆராய்ச்சி, டெக்னாலஜி சார்ந்த சிந்தனை இல்லாத வெற்றிடத்தோடு ஒப்ப்பிடும்போது அமெரிக்க டாலர்களில் மத்திய கிழக்கு எண்ணை வர்த்தகம் என்பது பிரதானகாரணமே அல்ல!

அமெரிக்க தொழில்நுட்பங்களோ தொழில்நுட்பவியலாளர்களோ மத்தியகிழக்கின் எண்ணை சார் தொழிலில் ஈடுபடக்கூடாது என்று பகிரங்க அறிவிப்பை மிகுந்த அப்பாவிகளான யோக்கியம் நிறைந்த மத்திய கிழக்கு எண்ணை தேசங்களின் அரச குடும்ப ஆட்சியாளர்கள் தன்மானத்துடன் அறிவிப்பு செய்ய விழையுமா??

அமெரிக்கா டாலர் காகிதங்களை அச்சடித்து உலகம் எல்லாம் தந்ததில் 50% டாலர் காகிதங்கள் இருப்பது இந்த மத்திய கிழக்கு எண்ணை தேசங்களின் அரச குடும்ப ஆட்சியாளர்கள் அரண்மனைகளில்தான் என்பதையும் கட்டுரையில் சுட்டியிருக்க வேண்டும்.

தோன்றி 375 ஆண்டுகளே ஆன அமெரிக்கா ஒரே நாளில் இன்றிருக்கும் சூப்பர்பவர் ஆகவில்லை!
அமெரிக்காவை சூப்ப்பர் பவர் தாதா ஆக்கியதில் மத்தியகிழக்கு நாடுகளின் அரசர்களுக்கு 50% பங்கு இருக்கிறது!

சதாம் உசேன் பொருளாதாரமேதையாக இருந்து எண்ணை வர்த்தகத்தை எதிர்கொள்ளவில்லை!

2003ஆம் ஆண்டில் இருந்து சதாமின் வீழ்ச்சிக்குப்பின் ஈராக்கின் எண்ணை வர்த்தகத்தை அமெரிக்கா தனக்கு ஆதரவாக்கிக்கொண்டிருந்தாலும் ஈராக்கின் மக்களுக்கு எண்ணைய் விற்ற பணம் பாதியாவது கிடைக்கும்.

2003ஆம் ஆண்டு சதாம் ஈராக்கில் வீழும்வரை ஈராக்கின் 100% எண்ணைய்ப் பணம் சதாம் குடும்பத்திற்கே என்ற நிலையைக் கட்டுரை தொடவே இல்லை!

நூறு சதவீத ஆயில் எகானமி என்பதன் உண்மை, அமெரிக்கா சர்வாதிகார சூப்பர்பவராக செயல்படுகிறது என்பதில் மட்டுமே இருப்பதாகச் சொன்னால் அது மெய் அல்ல.

மத்திய கிழக்கு எண்ணை உலகப்போரை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயத்தை தன்னகத்தே வைத்திருக்கிறது! ஆனால் இந்தப்போருக்கு அமெரிக்காவோடு சேர்ந்து எண்ணைய் உற்பத்தி மத்திய கிழக்குநாடுகளின் அரச குடும்பங்களும் சரிசமமாக பொறுப்பேற்பதுதான் முறையானது.

Unknown said...

நன்றி அனானி

நன்றி மின்னுது மின்னல். அடுத்த பகுதி பாருங்கள். வெனிசுலா பற்றியும் எழுதி இருக்கிறேன்.

நன்றி ஹரிஹரன் ஐயா
//டெக்னாலஜி தேவையை உலக அளவில் நூற்றாண்டுகளாக நிறைவேற்றியதால்//
அந்த காகிதத்தைக் காட்டி ஆள் பொறுக்கியதால் வந்த டெக்னாலஜி என்றும் சொல்லலாம்.

இயன்றவரை எல்லாவற்றிலும் அமெரிக்காவை குறிப்பாகத் தவிர்க்கிறது ஈரான்.

மத்திய கிழக்கு அரச குடும்ப ஆட்சியாளர்களின் அடிமைத்தன சிந்தனையை பிரதான காரணங்களhக நீங்கள் குறிப்பிடும் பலவற்றில் நான் உடன்படுகிறேன்.

//சதாம் உசேன் பொருளாதார மேதையாக இருந்து எண்ணை வர்த்தகத்தை எதிர்கொள்ளவில்லை!//
அமெரிக்காவின் தவறான பொருளாதார கொள்கைக்கு எதிராக கோடு போட்டார் என்பதை ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

//2003ஆம் ஆண்டில் இருந்து சதாமின் வீழ்ச்சிக்குப்பின் ஈராக்கின் எண்ணை வர்த்தகத்தை அமெரிக்கா தனக்கு ஆதரவாக்கிக்கொண்டிருந்தாலும் ஈராக்கின் மக்களுக்கு எண்ணைய் விற்ற பணம் பாதியாவது கிடைக்கும்.
2003ஆம் ஆண்டு சதாம் ஈராக்கில் வீழும்வரை ஈராக்கின் 100% எண்ணைய்ப் பணம் சதாம் குடும்பத்திற்கே என்ற நிலையைக் கட்டுரை தொடவே இல்லை!//
பத்து வருடத்துக்கும் மேலாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டிருந்த போதும் ஈராக்கின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் போதுமான கோதுமை மாவும், அரிசியும், சர்க்கரையும் வீடு தேடிச் சென்று வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது என்பது நான் நேரில் கேட்டறிந்த உண்மை. இவை 100 விழுக்காடு சதாம் எடுத்துக் கொண்டதாக நீங்கள் சொல்லும் நேரத்தில் நடந்தவை.
மக்கள் தொகையில் பாதியை கொன்று குவித்தாகி விட்டது. நீங்கள் சொல்வது போல் வருமானத்தில் பாதி மக்களுக்கு போகிறதென்றால், இப்போது ஈராக் மக்கள் ஏன் உணவில்லாமல் நடுத்தெருவில்?.
கட்டுரை ஈரானுடன் அமெரிக்கா என்ன செய்யும் என்பதைப் பற்றியது.
அமெரிக்கா இந்த காரணங்களுக்காகத்தான் ஈராக்கோடு போர் புரிந்ததா?

//அமெரிக்காவோடு சேர்ந்து எண்ணைய் உற்பத்தி மத்திய கிழக்குநாடுகளின் அரச குடும்பங்களும் சரிசமமாக பொறுப்பேற்பதுதான் முறையானது.//
ஒரு வகையில் சரிதான். முதுகெலும்பில்லாதவர்கள்.
பகுதி 2ல் - பெட்ரோல் நாடுகள் வேடிக்கை பார்த்தன என்று குறித்திருக்கிறேன்.

Hariharan # 03985177737685368452 said...

சுல்தான் ஐயா,

ஈராக்கின் சதாமால் ஆக்கிரமிக்கப்பட்ட, போர்த் தாக்குதலுக்குள்ளான குவைத்தில் இருக்கும் எனக்கு ஈராக் பற்றிக்கிடைக்கும் தகவல்கள் குவைத்அரசு சார் செய்திகள்/தகவல்கள் பக்கச்சார்பு உடையதாகவும், பொதுவிலே குவைத் நாட்டு மக்கள் அல்லாத அராபியர்களின் சதாமின் ஈராக் குறித்த பார்வைகள் நல்லதும், கெட்டதும், மிகக்கொடூரமானதுமாக என கலந்துகட்டி பல்வேறுவிதமாக இருப்பதாலும், கட்டுரை ஈரானைப் பற்றியது என்பதாலும் ஈராக், சதாம் பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

Kalaiyarasan said...

சர்வதேச வர்த்தகங்கள் யாவும் இன்று வரை அமெரிக்க டாலரிலேயே நடந்து வருகின்றது. உதாரணத்திற்கு ஒரு பெரிய நாடான இந்திய கூட, வெளிநாட்டில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால், ( அது போர் விமானாமாக அல்லது சிறிய குண்ட்டோசியாக இருந்தாலும்) அமெரிக்க டாலரை கொடுத்தே வாங்க வேண்டும். வெளிநாடுகளில் தொழில்புரியும் இந்தியர்களின் அனுப்பும் பணம், அன்னியசெலாவணி என்ற டாலர்களாக இதற்கு பயன்படுகின்றது. ஆகவே பெட்ரோலிய விற்பனையும் டாலரில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. அண்மைக்காலமாக டாலரின் மதிப்பு சரிந்து வருவதால் வருமான இழப்பை எதிர்கொள்ளும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் யூரோவில் வர்த்தகம் செய்ய நினைப்பதும் வியப்பல்ல. ஒபெக் மகாநாட்டில் அமெரிக்காவுடன் நல்லுறவற்ற வெனிசுவேலா, ஈரான் போன்ற நாடுகள், அரசியல் பொருளாதார காரணங்களுக்காக, யூரோவில் பெட்ரோல் விற்கும் திட்டத்தை கொண்டு வந்தன. ஆனால் மறைமுக அமெரிக்க தூண்டுதலால், சவூதி அரேபியாவும், பிற வளைகுடா நாடுகளும் தொடர்ந்தும் டாலரிலேயே வியாபாரம் செய்ய முடிவு செய்தன. இவ்வாறு அமெரிக்காவின் "மானம்" காப்பாற்றப்பட்டது.

-கலையரசன் -

Unknown said...

வருகைக்கு நன்றி கலையரசன்

மங்களூர் சிவா said...

அட்டெண்டன்ஸ்