Wednesday, 26 November 2008

தமிழர்கள் கணக்கில் புலிகள்?

பொதுவாக தமிழர்கள் கணக்கு வழக்குகள் பார்ப்பதில் கைதேர்நதவர்கள் என்ற எண்ணமுள்ளது. இங்குள்ள பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் வணிக் நிறுவனங்களில் தமிழர்களையே கணக்கெழுத வைத்திருக்கின்றனர். மலையாளி வேண்டாம் மதராஸிதான் வேண்டும் என்ற தெளிவோடும் இருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பெருமைதானே. எண்களில் தேர்ந்தவர்களாயும் நேர்மையாளர்களாகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும் இருப்பதுதான் மதராஸிகளை விரும்பச் செய்கிறது என அவர்கள் சொல்கின்றனர்.

எங்கள் நிறுவனத்தில் வங்கிக்கு ஒரு காசோலை 340000க்கு அனுப்பினோம். வங்கியோ எங்கள் கணக்கில் 390000 வரவு வைத்திருந்தார்கள். எங்கள் நிறுவன முதன்மை கணக்காளர் பாகிஸ்தானி. “எமது வங்கியில் கணக்கர்கள் அனைவரும் மதராஸிகள் அதுதான் தப்பாய் செய்து விட்டார்கள். நான் சொல்லப் போவதில்லை” என இருந்தது மட்டுமில்லாமல், என்னிடம் கிண்டல் வேறு. ஒரு நான்கு மாதம் கழிந்து காசோலை கொடுத்த நிறுவனம் என்னை அழைத்து தொகை கூடுதலாக பெறப்பட்டுள்ளது என அறிவித்ததுடன், தங்களது வங்கியிலும் புகார் கொடுக்க, அப்போதுதான் தெரிந்தது. தவறு ஏற்பட்ட இடம் ஹபீப் பேஙக். கணக்கர்கள் அனைவரும் பாகிஸ்தானிகள். எங்கள் முதன்மை கணக்காளர் முகம், பார்க்க வேண்டுமே.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சகோதரர் இங்குள்ள நகராட்சியில் அடிமட்ட தொழிலாளியாகச் சேர்ந்தார். அவர் எண்களைக் கையாளுவதைப் பார்த்து அரபி, ஒரு பகுதி அலுவலகத்தின் முழுப் பொறுப்பையுமே அளித்தார். படித்த மற்ற நாட்டவர்களுக்கே கடினமாயிருந்த அப்பணியை பத்தாவது வரை மட்டுமே படித்த அவர் சிரமமில்லாது செய்தார் என்பதுதான் ஆசசர்யம். நமது படிப்பு முறை அடிப்படையிலேயே அவ்வாறு அமைந்துள்ளதென சொல்வது சரியானதுதானா?


மற்றொரு சகோதரர் தங்க நகைகள் மொத்த வியாபார நிறுவனத்தில் ஓட்டுனராகச் சேர்ந்தார். தொலைபேசியில் வியாபாரம், நகைகளைப் பெற்றுக் கொள்ள தனியிடம் என்று இருந்தது. உரிமையாளர்களாகிய தந்தையும் இரு மகன்களும் இருக்கும் நிறுவனத்தில் அவர் இருக்க வேண்டும். தொலைபேசி பேரங்களில் புதிதாக கற்றுக் கொள்ள ஏதுமில்லை என்பதால் அவர் வரும்போதே பொழுது போக்குக்காக கதைப் புத்தகங்களையோ சஞ்சிகைகளையோ எடுத்து வந்து படித்துக் கொண்டிருப்பாராம். அதைப் பார்த்த உரிமையாளர் தந்தை, தன் மகனைப் பார்த்து "அந்த மதராஸி வெறும் ஓட்டுனர் 1500 சம்பளம் பெறுகிறான். தினமும் குளித்து அழகாக உடையுடுத்தி வருகிறான். நீங்கள் சரிவர தினமும் குளிப்பது கூட இல்லை. சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் புத்தகத்தில் மூழ்கி விடுகிறான். அனதால்தான் மதராஸிகள் நல்ல அறிவாளிகளாய் இருக்கின்றனர்" என்றாராம். சொல்லிச் சிரித்தார் சகோதரர்.
நல்ல கதைகள் வாழ்க்கைப் பாடங்களாகின்றன. சஞ்சிகைகள் அரசியலையும் கலையையும் கலந்து தருகின்றன என்பதை அந்த பாகிஸ்தானி அறிந்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

Post Comment

Wednesday, 19 November 2008

இனி துபை வாழ்வு கடினம்தான்-ஆறு காரணங்கள்

துபைதான் நாம் வாழ்வதற்கான சிறந்த இடம் என்று இது நாள் வரை நினைக்கத் தோன்றியது. ஊருக்குப் போனால் கூட வீட்டுக்கு வெளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் துபை மாதிரி வருமா என்று மனது நினைக்கும். ஆனால் துபையில் முளைக்கும் புதிய புதிய சட்டங்கள் இனி இங்கு வாழ்வது கடினமே என்ற மனநிலையையே பலருக்கும் தந்திருக்கிறது என்பது மிகையில்லை.

இங்கு வாழ்வது ஏன் சிரமமாகி விட்டது என்பதற்கு குறிப்பான ஆறு காரணங்கள்.

1. சாலிக் (SALIK)

துபையின் மின்னனு சுங்க வரி வசூலிப்புத் திட்டம். 'திறந்து விடப்பட்ட' அல்லது 'இடைஞ்சலற்ற' என்ற பொருள் தரக்கூடிய 'சாலிக்' என்ற பெயரில் அழைக்கப்படும் இம்முறை 2007ம் ஆண்டு நகரில் உள்ள சாலைப் போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அறிமுகமானது. ஆனால் மனித, வாகன விகிதத்தில் உலகத்திலேயே அதிக வாகனங்களைக் கொண்ட இந்நாட்டில் இது பெயருக்குரிய பயனைத் தரவே இல்லை.

நகரின் நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இம்மின்னனு முறையில் ஒரு தடவை ஒரு இடத்தைக் கடக்க நான்கு திர்ஹம் (இன்றைய மதிப்பில் சுமார் ரூ50)எடுத்துக் கொள்ளும். ஒரே சாலையிலுள்ள இரு சாதனங்களை ஒரு மணி நேரத்துக்குள் கடந்தால் ஒரு முறை மட்டுமே எடுக்கும்.

இதற்காக முன்பணம் செலுத்திப் பெற்ற அட்டையை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டி வைக்க வேண்டும். அட்டையை ஒட்டாது இப்பகுதியைக் கடந்த வாகனங்களுக்கு முதல் நாள் 100திர்ஹம் தண்டணை, அடுத்த நாளுக்கு 200திர்ஹம், மூன்றாம் நாளுக்கு 400திர்ஹம் தண்டனை. ஒட்டிய அட்டையில் அம்மின்னனு சாதனம் எடுக்க தொகை இல்லையென்றால் ஒவ்வொரு முறை வாகனம் கடந்ததற்கும் 50திர்ஹம் தண்டனை.

ஒரு நாள் வேலைக்குச் சென்று வர இம்முறைக்கு நான் குறைந்தது 16திர்ஹம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் கூடுதலாக 80கிமீ பயணம் செய்ய வேண்டும்.

2.வாகனம் நிறுத்த வரி

சாலிக் கொடுத்த பின்பும் எப்போதும் குறையாத வாகன நெரிசலில் வந்தாலும், ஒரு நிறுவனத்தின் முன்போ, ஒரு கடைக்கு முன்போ, ஒரு நண்பரின் வீட்டின் முன்போ சிறிது நேரம் வாகனத்தை நிறுத்த பணம் செலுத்த வேண்டும். வாகனம் நிறுத்த காசு போட வேண்டிய இயந்திரங்கள் நகரின் எல்லா பகுதியிலும் நிறுவப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு திர்ஹம்கள். இரண்டு மணி நேரமென்றால் ஐந்து திர்ஹம்கள். எவ்வளவு நேரம் வாகனம் நிறுத்த நேரிடும் என்பதைக் கணித்து முன்பணமாக செலுத்த வேண்டும். பணம் செலுத்திய குறிப்பிட்ட கால அளவை விட ஐந்து நிமிடம் தாமதித்தாலும் 100திர்ஹம் தண்டனை.

மாலை 9மணி முதல் காலை 8மணி வரை வரியில்லை. ஆனால் அந்நேரத்தில் வாகனம் நிறுத்த ஒரு இடம் கிடைக்க நீங்கள் நான்கு மணி நேரம் சுற்ற நேரிடும். இடம் கிடைக்காமலும் போகலாம்.

3. வாடகை மகிழுந்துகள் (TAXI)
காலையிலோ மாலையிலோ அலுவலக நேரத்தில் ஒன்று கிடைக்குமென்பது சற்றேறக்குறைய இயலாததுதான். இங்கு 3200 வாடகை மகிழுந்துகள் ஓடினாலும் இந்நேரங்களில் காணக் கிடைக்கும் ஒன்று பயணியுடன் இருக்கும் அல்லது காணவே முடியாது.

வாடகை மகிழுந்து ஓட்டுனர்கள் பயணிகளுக்கு நிறுத்த மறுத்தால் அபராதம் செலுத்த நேரும். எனினும் ஆளற்ற வாடகை மகிழுந்து ஒன்றைக் கண்டு, நீங்கள் கையை ஆட்டி வந்து நின்றாலும் உங்கள் போகுமிடத்தை சொன்ன பின் தலையை ஆட்டி விட்டு போய் விடுவர்.

தாறுமாறாக ஓட்டுபவர்களும், போகும் வழியறியாத ஓட்டுனர்களும் உண்டு.

4. VAT மதிப்புக் கூடுதல் வரி
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அமீரகத்தில் இதை அமல் படுத்த வழிமுறைகள் யோசிக்கப்பட்டு பல கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. சரியான நாள் குறிக்கப்படவில்லையாயினும் மற்ற வளைகுடா நாடுகளோடு இங்கும் தொடங்கப்படும்.

வளைகுடா நாடுகளில் முதலில் ஐந்து சதவீத மதிப்புக் கூடுதல் வரி அறிமுகப் படுத்தப்பட உள்ளது. இது நேரடி வரி விதிப்பு இல்லையென்றாலும் அதன் சுமை கடைசியில் வாங்குவோர் தலையில்தான்.

துபையின் முக்கிய கவர்ச்சியே வரி அற்ற நாடு tax-free என்பதுதான். எனவே எத்தகைய மறைமுக வரியும் மக்களின் பணத்தையும் மகிழ்ச்சியையும் அழிக்கும்.

5. தங்குமிடம்
தொடர்ந்து உயரும் வாடகை துபைகாரனின் மாறாத குற்றச்சாட்டு. அமீரகத்தில் இதைப் பற்றி பேசாதவர்களே இல்லை. வாடகை உயர்வு 7 சதவீதம்தான் இருக்கலாம் என்ற கட்டுப்பாடு இருந்தாலும் புதிய கட்டிடங்கள் மிக கூடுதலாக வாடகையை அறிவிக்கின்றன.

வீட்டு உரிமையாளருக்கு வாடகை உயர்த்தக் கட்டுப்பாடு அதனால் இனி வீட்டிலுள்ள வாகன நிறுத்துமிடங்களுக்கு (for Free Parking) ஆண்டு வாடகை 7500 திர்ஹம்கள்.

ஒரு வீட்டுக்கு ஒரு குடும்பம் என்ற புதிய முறை பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகப் போவதில்லை. குடும்பமின்றி தனித்து வாழ்பவர்பாடோ (Bachelors) அதை விட திண்டாட்டமாகும்.

6. கலாச்சார மாற்றமும் அமீரகப்படுத்தலும்

பெருகி வரும் அனாச்சார அசிங்கங்களும் குற்றங்களும், அருகி வரும் நல்லொழுக்கமும் பண்புகளும் நம் நாடு தேவலாம் அதனால் இங்கிருந்து போய் விடுவதே நல்லதென நினைக்கச் செய்கிறது.

தனியார் துறையிலும் அமீரகக் குடிமக்களுக்கு இட ஒதுக்கீடு என்ற திட்டம் முலம் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளும் மிகவும் குறைந்து விட்டது.
----------------------------------------------------

அது சரி. இன்று நவம்பர் 19 'உலக கழிவறை தினமாமே' உண்மையாகவா?



வலது புறமுள்ள இக்கட்டிடம் சிங்கப்பூரிலுள்ள உலக கழிவறைக் கல்லூரியாம் (WTC-World Toilet College)

Post Comment

Thursday, 6 November 2008

ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும் (2)

(ஏற்கனவே போட்ட பதிவு ஏதோ சினிமாவில் வந்தது என ஜிகே சொன்னதால் கொசுவர்த்தி சுழல விட்டு இன்னொரு பதிவு)
சென்னை. முது நிலை பட்டப்படிப்பில் தனிம வேதியியல் ஆய்வுக்கூடத் தேர்வு.(M.Sc Chemistry Inorganic Practical Exam - இதைத்தான் அப்படித் தமிழாக்கி ஒப்பபேத்தி இருக்கிறேன்) ஒரே நிறத்திலுள்ள மூன்று தாது உப்புக்களைக் ஒன்றாகக் கலந்து கொடுத்து விடுவார்கள். அது என்ன என்ன என்று படிப்படியான ஆய்வு முறைகளின் மூலம் கண்டு பிடிக்க வேண்டும்.

என்னத்தை கலந்தார்களோ சரியான முடிவகள் வராமல் எல்லோரும் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறோம். எனக்கு முன்னால் ஒரு ஈரானிய மாணவன் அலி. குள்ளமானவன். பிப்பெட்டோ, பியூரெட்டோ (தமிழில் தெரியவில்லை) எடுக்கக் குனிந்தவன், நிமிர்நதால்.... அவன் ஆய்வு செய்து கொண்டிருந்த குடுவை கீழே விழுந்து உடைந்து, கொடுத்திருந்த(sample) தாது உப்புகளோடு கரைந்து போனது.
திரும்பக் கேட்டாலும் பெரிய இழுவைக்குப்பின் தருவார்கள். கெஞ்சிக் கொஞ்சி பணிவோடு நிற்க வேண்டும்.

மீதமிருந்த ஒரு மணி நேரத்தில் கால்மணி நேரத்துக்கு மேல் வாய்மொழி(viva voce)த் தேர்வு நடக்கும். மீதி நேத்தில் குட்டிக்கரணம் போட்டாலும் பெரிதாக சாதிக்க முடியாது. கடுப்பாகி, இதுவரை செய்த ஆய்வுகளில் எடுத்து வைத்திருந்த குறிப்புகளைக் கொண்டு முடிவைத் தயார் செய்து கொண்டிருந்தான்.

அப்போது 'வைவா'க்கு அவனுக்கு அழைப்பு. சுல்தான் என்ன செய்ய? என்பது போலப் பார்த்தான். ஆதரவாக ஒரு சிரிப்பு 'ஜமாய் ராஜா' ன்னு கை காண்பித்தேன். வைவா அறைக்குப் பக்கத்தில்தான் நான் நின்று கொண்டிருக்கிறேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு குழப்பத்தில் தவறான பதில்களையே சொல்ல.

சரி கடைசிக் கேள்வி: மின்மினிப்பூச்சிகள் எவ்வாறு மின்னுகின்றன.
அலி: இறைவன் படைக்கும் போதே அதன் புட்டத்தில் சீரியல் லைட் வைத்து படைத்து விட்டதால்.... போங்கப்பா..

அந்தப் பேராசிரியை அடுத்து வந்த என்னை.... சொல்லனுமா?
ஏனய்யா அலீ. ஆங்கிலத்தில்தானே பதில் சொல்லி வந்தாய். கடைசிக் கேள்விக்கு மட்டும் இவ்வளவு சிரமப்பட்டு தெரியாத தமிழில் ஏனய்யா சொல்ல வேண்டும். அவ்வ்வ்வ்வ்வ்:(((((

(டிஸ்கி: இயற்கையில் அதன் பின்புறம் படிந்துள்ள பாஸ்பரஸ் எனும் தனிமத்தின் ஒளிரும் தன்மையால் - The fluorescent effect of Natural Phosphorous available on its back என்பது சரியான பதில் என நினைக்கிறேன்.)

Post Comment

Wednesday, 5 November 2008

ஒரு நேர்முகத் தேர்வும், நண்பரும்

(சிறிது மஞ்சள். பிடிக்காதவர்கள் விலகவும்.)
ஒரு பெரிய பணிக்கான நேர்முகத் தேர்வு நடந்தது.
வந்தவரிடம் அதிகாரி : இந்தியா எப்போது விடுதலையடைந்தது?
பதில்: வெகு நீண்ட நாட்களாக அதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் 1947ல் தான் பலன் கிடைத்தது.

அதிகாரி: அந்த விடுதலை யாரால் கிடைத்தது?
பதில்: அதற்காக பல பேர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றனர். அதில் யாராவது ஒருவர் பெயரைச் சொல்வது மற்றவர்களை அவமதிப்பதாக ஆகும்.

அதிகாரி : இந்தியா இன்னும் சிறந்த முறையில் முன்னேறாததற்கு நாட்டில் உலவும் இலஞ்ச இலாவண்யங்களே காரணம் எனற கருத்து சரியானதா?
பதில்: இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே சரியாகச் சொல்ல இயலும்.

அதிகாரி: உங்கள் பதில்கள் நிறைவளிக்கின்றன. நாங்கள் பின்னர் உங்களுக்கு விவரம் தெரிவிப்போம். எனினும் இதே கேள்வியையே மற்றவர்களிடம் நாங்கள் கேட்க நினைப்பதால் இந்தக் கேள்விகளை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம்.

தேர்வுக்கு வந்திருந்த மற்றவர்கள், வெளியில் வந்தவரிடம் கேட்டபோது ‘சுலபமான கேள்விகள்தான். எல்லோரும் பதில் சொல்ல முடியும்’ என்று சொல்லி நழுவி விட்டார்.

நம் நண்பர் அவரை வெளியில் சென்று பிடித்து கேள்விகளைப் பற்றி கேட்டபோது ‘நான் அவர்களிடம் கேள்விகளை யாருக்கும் சொல்ல மாட்டேன் என் வாக்குக் கொடுத்திருக்கிறேன்’ என்று சொன்னார்.

'அதனாலென்ன. நீங்கள் சொன்ன பதில்களை மட்டும் சொல்லுங்கள்' என நம் நண்பர் நச்சரிக்கவும் வேறு வழியில்லாமல் தான் சொன்ன பதில்களை மட்டும் சொல்லி விட்டுப் போனார்.

நம் நண்பரின் முறை வந்தது.
நண்பரிடம் அதிகாரி: ஒரு பெரிய பணிக்கு அனுப்பியுள்ள உங்கள் விபரங்களை தெளிவற்ற கையெழுத்துகளால் எழுதி இருக்கின்றீர்களே. நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?
நண்பர்: வெகு நீண்ட நாட்களாக அதற்கான போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் 1947ல் தான் பலன் கிடைத்தது.

அதிகாரி: என்ன உளறுகிறீர்கள். இதிலே வேறு வருடம் குறிக்கப் பட்டிருக்கிறதே. உங்கள் தந்தையார் பெயரென்ன?
நண்பர்: அதற்காக பல பேர் இரவு பகல் பாராது உழைத்திருக்கின்றனர். அதில் யாராவது ஒருவர் பெயரைச் சொல்வது மற்றவர்களை அவமதிப்பதாக ஆகும்.

அதிகாரி: உங்களுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?
நண்பர்: இது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகளுக்குப் பிறகே சரியாகச் சொல்ல இயலும்.

Post Comment