'டேய் கண்ணா என்னடா பண்றே'.
'கோபியை அவங்கப்பா அப்படித்தான் கூப்பிடறாங்க டாடி. நான் பெண்பிள்ளை. என்னையும் அப்படியே கூப்பிடறீங்களே. உங்களுக்கு கோபி மாதிரி பையன்தான் பிடிக்குமா?'
அப்பாவுக்கு ரொம்ப செல்லம் அபி.
'இல்லடா கண்ணு. நான்தான் மம்மிட்ட சண்டை போட்டு அபிராமி பெத்து தர சொன்னேன்'
'ஆனால் மம்மி சொல்றாங்க எனக்கு டாடி மூக்கு போல இருக்காமே!'
'டாடி மூக்கு மம்மிக்கு பிடிக்கும். அதனால் அவங்களுக்கு பிடிச்சது எல்லாம் உன் மேல தெரியுது'.
அப்பாவுக்கும் பெண்ணுக்கும் இப்ப பேச்சு முடியாது.
'அபி! இப்பத்தானே அப்பா வந்துருக்காங்க. கை கால் அலம்பிட்டு வரட்டுமே. அபிக்கு பால் ரெடி. அபி அப்பாவுக்கு காபி ரெடி'
அபிக்கு மற்ற குழந்தைகள் போல காய்ச்சல் சளி இருமல் வரும். வீட்டிலுள்ள முதலுதவி மாத்திரைகளில் சரியாகி விடும். கொஞ்சம் கூடுதலாயிருந்தால் டாக்டரிடம் போக வேண்டி இருக்கும். அன்றைக்கும் இலேசான காய்ச்சல். சாதாரணமாகத்தான் இருந்தது. அப்பாவை பார்த்ததும் அதுவும் இருப்பது போலவே தெரியவில்லை.
இரவில் கண் விழித்தவர் 'அபியைப் பார். காய்ச்சல் ரொம்பவாகத் தெரிகிறதே.'
'வழமைக்கு கூடுதலாகத்தான் தெரியுது. அனத்துராளே. என்னங்க செய்யட்டும்?'
'உடனே டென்ஷனாகாதே. சப்போசிட்டரி வை சரியாகிடும்' சொல்லிட்டு தூங்கிட்டார்.
என்ன மனுஷன் இவர். படக்கென்று விழிப்பு. படக்கென்று உறக்கம். விடியலில் ஐந்து மணிக்கு அவர் எழ வேண்டுமென்றாலும், அலாரம் அடிக்க இரண்டு நிமிடத்திற்கு முன் எழுந்து, எனக்கு சத்தம் வராமல் அலாரத்தை மூடி விட்டு தன் வேலைகளை செய்ய தொடங்கிடுவார்.
'அது எப்படி சுவிட்ச் போட்ட மாதிரி உறங்கி, சுவிட்ச் போட்ட மாதிரி உங்களால் எழ முடியுது' என்று கேட்டால் 'அதெல்லாம் வரம். எல்லா எண்ணங்களையும் மூட்டை கட்டி தலையணைக்கடியில் மறைத்து விட்டால், சுகமாக உறங்க வரும். தேவைப்படும்போது அது தலையணையிலிருந்து வெளியில் வந்து தட்டி எழுப்பும்' என்பார்.
குளிர் பதனப்பெட்டியில் இருந்த சப்போசிட்டரியை எடுத்து சிறிது நேரம் வெளியில் வைத்திருந்து அபிக்கு வைத்ததும் 'சே. போம்மா' என்று சொல்லிக் கொண்டே உறங்கியது. சரியான அப்பா பிள்ளை. எல்லாம் அப்பா மாதிரியே.
நமக்கெங்கே உறக்கம். அபியும் அவரும் ஒரே மாதிரி உறங்குவதை பார்த்துக் கொண்டே எனக்கு உறக்கம் போனது. ஒரு மணி நேரத்துக்குப் பின் அபியைத் தொட்டுப் பார்த்த போது காய்ச்சல் விட்ட மாதிரி இருந்தது. அப்புறம் எப்போது உறங்கினேன். எனக்கே தெரியாது.
'இந்தா காபி. முகம் கழுவிட்டு சாப்பிடு' என்று எழுப்பும் போதுதான் 'அடடே! ரொம்ப விடிஞ்சிருச்சே! எழுப்பலாம்ல. ஆபிஸ் போகும் அவசரத்துல நீங்க ஏன் சமையலறைக்கு?'
'பரவாயில்லப்பா. ரொம்ப பயந்துட்டியா? பிள்ளைகள்னா காய்ச்சல் சளி எல்லாம் வருவது தானேப்பா! இரவெல்லாம் தூங்கி இருக்க மாட்டியே. எதுக்கு எழுப்பணும்னுதான்.
சரி. அபிக்கு இன்னும் காய்ச்சல் சரியாகல்ல. காய்ச்சல் ரொம்பவாக தெரிந்தா டாக்டர்ட காண்பிச்சிரு என்ன? மதியம் சாப்பாட்டுக்கு இரண்டு இரண்டரைக்கு வீட்டுக்கு வந்திட்டு போரேன். பொறுமையா சமையல் செய். அபிய பார்த்துக்க. டயர்டா தெரியிறயே. மதியத்துக்கு எதுன்னா வாங்கி வந்திரட்டா?'
'அதெல்லாம் வேணாம். நான் தயார் செஞ்சிடுவேன். நீங்க பார்த்து போயிட்டு வாங்க. மதியத்துக்குப் பின் போகனுமா?'
'ஆமாம்பா. கொஞ்சம் வேலயிருக்கு. ரிஸஸன் டைம். டார்கெட்டே சிரமமாகுது.'
எங்கள் தந்தைக்கு மூன்று பெண் குழந்தைகள் ஒரே பையன்தான். ஆனாலும் அப்பாவுக்கு பெண் குழந்தைகள் மேல்தான் பாசம் அதிகம். அது போல்தான் அபி அப்பாவுக்கும். அபி மேலுள்ள பாசம் சொல்லி மாளாது. அது ஏன்தான் இந்த அப்பாகளுக்கு பெண் பிள்ளைகளின் மேல் இத்தனை பாசமோ?
அபிக்கு லேசா உடம்ப சுடுதே. ஈரத்துணியால் கொஞ்ச நேரம் உடம்பைத் துடைத்து விட்டேன். நல்லாத்தான் இருக்கா. சாப்பாட்டை செய்யத் துவங்கி, திரும்பிப் பார்த்தால் அடே பிள்ளை துவண்டு போறாளே.
ஐயோ உடம்பு கொதிக்கிறதே. 39.8 டிகிரி காட்டுகிறதே. இறைவனே!
உடம்பின் சூட்டை முதலில் குறைக்க எண்ணி, பக்கெட்டில் குளிர்ந்த தண்ணீர் எடுத்து....
ஐயோ. என் மகள் உடம்பு இப்படி நடுங்குகிறதே. ஐயையோ சொடுக்க ஆரம்பித்து விட்டாளே.
நான் என்ன செய்வேன்? என் இறைவனே!
ஐயைய்யோ! கண்கள் மேலே சொருகி வாயில் நுரை வர ஆரம்பித்து விட்டதே.
நான் கூச்சலிட்டு கத்தினேன். என் மகள் அசைவற்று கிடக்கிறாள். நாடியும் இல்லையே!
திடீரென பக்கத்து ப்ளாட்டில் நர்சம்மா இருப்பதாக நினைவுக்கு வர, அபியைத் தூக்கிக் கொண்டு ஓடினேன். நல்ல வேளையாக என் அலறல் கேட்டு நர்ஸ் விழித்திருந்தார்கள்.
மிகுதியை நர்ஸ் ஆலியம்மா மேத்யூ சொல்கிறார்:பக்கத்து ப்ளாட்டில் ஏன் இப்படி அலறுகிறார்கள். போய் பார்ப்போமா என யோசித்தவாறே கண் விழித்தேன். மருத்துவமனைக்கு போகும் நேரமும் நெருங்கி விட்டது. என் பையன் கம்ப்யூட்டர் கேமில் மும்முரமாய். உலகமே இடிந்தாலும் அவனுக்கு காதில் விழாது.
கதவை யார் இப்படி இடிக்கிறார்கள்? நான் வெறும் நைட்டியில் இருக்கிறேனே. கதவு லென்ஸ் வழியே பார்த்தால் பக்கத்து ப்ளாட் அம்மா கையில் குழந்தையுடன். ஐயோ! குழந்தைக்கு என்ன ஆனது?.
கதவைத் திறக்கவும் கதவை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த அம்மா
'நர்ஸம்மா! என் குழந்தை! என் குழந்தை!! அபீ....' கண்களில் பயம். வாய் அரற்றுகிறது
சலனமேதுமற்ற பெண் குழந்தை. குழந்தை முக்காலும் இறந்து விட்டது போலுள்ளதே. 'நீ உடனடியாக ஏதும் செய்தால் நல்லது நடக்கலாம்' சடாரென்று மனதில் மின்னல் வெட்டியது. என் கைகளை வானை நோக்கி உயர்த்தி 'ஆண்டவரே என்னை வழி நடத்துங்கள்'.
பிள்ளையை என் கையில் வாங்கிக் கொண்டு செயற்கை சுவாச முயற்சியோடு நான் பணிபுரியும் அல்காஸிமி மருத்துவமனை நோக்கிய ஓட்டம். நான் நைட்டியில் இருப்பதை பார்த்த என் மகன் தனது ஜெர்கினை என் மீது போர்த்தி லிப்டைத் திறந்து விட்டான். தொடர்ந்து வாயிலிருந்து வாய்க்கு செயற்கை சுவாச முதலுதவி முயற்சியுடன். அந்த அம்மா என் பின்னாலேயே ஓடி வருகிறார்கள்.
ஒரு டாக்ஸி உடனே கிடைக்க வேண்டுமென்ற பரிதவிப்பில் அஜ்மான் மெயின் ரோட்டில் குழந்தையுடன் நாங்களிருவரும் ஓட்டமாய் ஓடும் போதே.... ஆஹா!. குழந்தை மூச்சு விடத் துவங்கி விட்டது. எனக்குத்தான் பதட்டத்தில் இலேசான நெஞ்சு வலி. 'கவலைப்படாதீங்கம்மா! இனி பயப்பட ஏதுமில்லை' அந்த அம்மாவுக்கு ஆறுதல் சொன்னேன்.
அபிராமியை ஆஸ்பத்திரியில் சேர்த்து அரைநாள் ஆஸ்பிட்டலில் இருந்தாள். குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, வீட்டுக்கு சென்று சீருடை அணிந்து பணிக்கு வந்தேன். அதற்குள் என் மகன் என் வீட்டுக்காரருக்கு போன் செய்து விபரம் சொல்ல, அவர் அபிராமி அப்பாவை தொடர்பு கொண்டாராம்.
எனக்கே ஒரு சர்ஜரி முடிந்து கழுத்து சதைப் பிடிப்புக்காக பிஸியோ போய்க்கொண்டு இருக்கிறேன். கூடவே CPR ரெப்ரஸ்ஸர் கோர்ஸில் பத்து நாளாக கலந்தது இப்போது எவ்வளவு உதவியாகி விட்டது. அந்த அம்மாவின் கண்களில் வழியும் நன்றிப் பெருக்கும், ஒரு குழந்தையைக் காப்பாற்ற முடிந்ததும் மனதுக்கு எவ்வளவு நிறைவாய், இதமாய் இருக்கிறது.
குறிப்பு: கடந்த ஜனவரி மாதம் இங்கு அஜ்மான் என்ற இடத்தில் நெர்மைன், சாலிஹ் என்ற எகிப்திய தம்பதிகளின் திமா என்ற குழந்தையை கேரளாவைச் சேர்ந்த ஆலியம்மா மேத்யூ என்ற நர்ஸ் காப்பாற்றியது செய்தியானது. நெர்மைன் "அந்த இந்திய நர்ஸ் ஒரு தேவதை. என் குடும்பம் அவர்களுக்கு கடன் பட்டிருக்கிறது" என்று நன்றியோடு சொன்னார். அந்த நிகழ்வுக்கு கொஞ்சம் முலாம் பூசி, சிறுகதை வடிவில் என் முதல் முயற்சி.
CPR ... Cardio Pulmonary Resuscitation எனப்படும் Mouth to mouth Respiration மற்றும் Chest Compressions குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். இது போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் காக்க உதவும் அது.(நன்றி அர்னோல்டு எட்வின்)
முற்றுப்புள்ளியா, காற்புள்ளியா என நான் முடிவெடுக்க, தயங்காமல் உங்கள் கருத்துக்களை அள்ளி வீசுங்கள்.
Post Comment