Sunday, 15 February 2009

அம்மாவுக்கு ஓர வஞ்சனையா?எங்க ஊர்க்காரர் துபையில் வந்து சில ஆண்டுகள் இருந்து விட்டு விடுமுறையில் ஊர் போகிறார். இங்கு பஜாரில் பச்சை டிரெஸ் வேலை. பொருட்களை வாங்கித் தந்தால் அதை கை வண்டியில் வைத்துத் தள்ளி வந்து கொடுத்தல், தலைச்சமை தூக்குதல் முதலிய கடுமையான உடலுழைப்பைத் தர வேண்டிய கூலிப்பணி. அயர்வை மறக்க இங்கிருந்த நாட்களில் நன்றாக குடிக்கக் கற்றுக் கொண்டு விட்டார். ஒரு நாளைக்கு ஒரு அவுண்ஸாவது உள்ளே தள்ளா விட்டால் உறக்கம் வராது என்ற நிலைமை.

அப்போதெல்லாம் நம் ஊரில் இப்போது போல் அரசாங்கக் கடைகள் திறக்கப் படவில்லை. சன்னாசிக் கோயில் மறைவில், புளிய மரத்தடியில், கரும்புக் காட்டுப் புதர்களில் ஊத்திக் கொண்டு ஓடி வர வேண்டும். போலீஸ் பிடித்து விட்டால், அங்கேயே கேட்கிற காசை கொடுத்து விட்டு தப்பித்தால், மானம் போகாமல் தப்பும். அதனாலேயே ஊருக்குப் போகாமல் தள்ளிப் போட்டு மூன்று வருடத்துக்குப்பின் பயணம்.

விமான நிலையத்தில் இருப்பதிலேயே பெரிய அளவு பாட்டில் ஒன்று வாங்கி சாமானோடு திணித்தாகி விட்டது. மனைவியை சமாளிச்சிடலாம். அம்மாதான் துருவித் துருவி கேட்பார்கள். செவிடர் மாமனாரைச் சந்திக்க சென்றபோது யோசித்தது போல் பதிலை யோசித்துக் கொண்டே ஊரும் வந்து விட்டது .

தாய், தங்கை, தாரம், தன் பிள்ளைகள், தங்கை பிள்ளைகள் என எல்லோர் முன்னிலையிலும் கொண்டு வந்திருந்த சாமான்களைப் அம்மா பிரித்துக் கொடுக்கிறார்கள். பார்க்க பகட்டாய் இருப்பதெல்லாம் மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகளுக்கு, சுமாரானதெல்லாம் மகன் வீட்டுப் பிள்ளைகளுக்கென்று பிரிக்கப் படுகிறது.

மனைவி அதையெல்லாம் கவனித்தாலும் கட்டியவனிடம் தனியாகத்தான் சொல்ல வேண்டும். இவருக்கோ எப்ப பாட்டிலை எடுத்து…… என்ன கேள்வி வருமோ….. அதை எப்படி சமாளிப்பதோ…….. அதே கவலை.


என்னப்பா இது?
டானிக் மருந்தம்மா.
நல்லாத்தானே இருக்கே. உனக்கேனப்பா மருந்து?
அங்கெல்லாம் வேலை கடுமை. உடம்பு தேறுவதற்கு டாக்டர் கொடுத்திருக்கார்.
அதுக்கு இவ்ளோ பெரிய பாட்டிலா?
இரண்டு மூன்று மாசத்துக்கு தொடர்நது சாப்பிட சொல்லி இருக்கார். துபை மருந்து இங்கே கெடைக்காதுல்ல. அதான் கொஞ்சம் பெருசா. அங்கெல்லாம் சின்ன பசங்க கூட சாப்டுவாங்கம்மா. உடம்புக்கு நல்லது.
அது சரி. சின்னப்பசங்க சாப்டாலும் உடம்பு தேறுமா?
பாட்டில் மூடியால ஒரு மூடி. ஒன்னும் ஆகாதும்மா.
இவ்ளோ இருக்குதே தம்பி!
மிச்சமிருந்தா ஊருக்கு போகும்போது எடுத்துட்டு போயிட வேண்டியதுதான்

அப்பாடி. அம்மாவிடம் எப்டியோ சமாளிச்சு, எலி பூனை உருட்டாத இடமாப் பார்த்து, பத்திரமா படுக்கையறைல வைத்த உடன்தான் நிம்மதி.

"பாத்தீங்களா. நல்ல சாமானெல்லாம் மக வீட்டு பிள்ளைகளுக்கு. அவுங்க ஒதுக்கியது மட்டும் நம்ம பிள்ளைகளுக்கு" என்ற மனைவியிடம் "சரி சரி ஆரம்பிச்சிராதே. எல்லா பொருளும் நல்லதுதான். அவுங்களுக்கென்ன தெரியும் நல்லதும் கெட்டதும். விடு" என்று சொன்னதும் சரின்னுட்டாள்.

கொட்டாப்புளி தம்பு கிட்ட வாங்கி, குந்த வச்சு அடிச்சி, போலீஸ்ல மாட்டி மானம் போகாமல், வெளியே தெரியாமல் ஒரு நாளைக்கு ஒரு மூடி. பெரிய ஆசுவாசம்தான். நல்ல படியாய்தான் போய்க் கொண்டிருந்தது.

ஒரு நாள் கடைத்தெருவில் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு ஆள் "சீக்கிரம் வீட்டுக்கு போங்க. எதையோ சாப்பிட்டுட்டு வீட்டில பிள்ளைங்களுக்கு எல்லாம் விஷம் பாய்ந்து, பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார்கள். நம்மூர் பெரிய டாக்டரை அழைக்க பெரியவன் போய் இருக்கிறார்" என்று சொல்லவும்.

பரக்கப் பரக்க, அடித்துப் பிடித்து போய் பார்த்தால், மக்களெல்லாம் வீட்டு வாசலில் பெருங்கும்பலாய்.
சைக்கிளை தெருவிலே தள்ளி விட்டு வீட்டுக்குள்.
பிள்ளைகள் பாயில் கிடத்தப்பட்டு டாக்டர் பரிசோதித்து கொண்டிருக்கிறார்.


ஐயையோ. பிள்ளைங்களுக்கு என்ன ஆச்சு?
டாக்டர்: ஏன்ய்யா கத்துறீர். செக் பண்ணிக்கிட்டுதானே இருக்கேன். தள்ளி நில்லய்யா. பெரியவரே இவரை தூரமா இருக்கச் சொல்லுங்க.
"தம்பீ" வீட்டுக்குள்ளிருந்து அம்மாவுடைய சத்தம் பெரிதாய் வரவும்
ஒரே தாவலில் அம்மாவின் முன்னில்

"என்னாச்சும்மா? தங்கையை காணோம். இவளையும் காணோம். பிள்ளைங்க மட்டும் கிடக்குது!"
"தம்பீ. நீ கொண்ணாந்த துபை மருந்தை பிள்ளைகளுக்கு கொடுத்தாலும் உடம்புக்கு நல்லதுன்னு சொன்னியே. அதான் கொடுத்தேன். இப்டி ஆயிடுச்சே." -பயம் கலந்த கலக்கத்தோடு அம்மா.
"ஐயையோ. அதையாக் கொடுத்தே. சப்தம் போடாம இரு. நல்லாயிடும் நான் பாத்துக்கரேன்".

பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரை தனியே அழைத்து பக்குவமாய் எடுத்துச் சொல்லி, அவர் வருகைக்கான தொகையை கையிலே திணித்து வழியனுப்பி விட்டு,
தெரு மக்களை கலைந்து போகச் சொல்லி விட்டு பார்த்தால்...
தெருவிலே மனைவியும் பிள்ளைகளும் வீட்டை நோக்கி ஓடி வருகிறார்கள்.

"டேய் பசங்களா? உள்ளெ படுத்திருப்பது நீங்க இல்லையா?"
"இல்லையே. காலையிலேயே அப்பம்மா எங்களை அம்மம்மா வீட்டுக்கு போகச் சொல்லிடுச்சு"

நேராக வீட்டுக்குள் வந்து,
"ஏம்மா! நான் வாங்கி வந்ததை எம் பிள்ளைகளுக்கு கொடுக்காமல், எம் பிள்ளைகளை அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பிட்டு, மகள் வீட்டு பிள்ளைங்கள மட்டும் தனியாக வரவழைத்து வச்சு கொடுத்திருக்கியே இது உனக்கே நல்லாருக்காம்மா?"
"நான் சொன்னேன் நீங்க எங்க கேட்டீங்க?" - இது மனைவி

(குறிப்பு: எல்லா அம்மாவுக்கும் மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகள் மீது மகனுடைய பிள்ளைகளை விடவும் பாசம் சிறிது மிகையாய் இருக்கிறதென்பது உண்மைதானா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்?)

Post Comment

18 comments:

malar said...

அம்மாவுக்கு ஓரவஞ்சனை மட்டும் தான் படித்தேன் .அம்மா என்று இருக்கவும் நான் அந்த அம்மா என்று நினைத்தேன் .

Gnaniyar @ நிலவு நண்பன் said...

மகளுக்கும் மருமகளுக்கும் உள்ள வித்தியாசம்தான் காரணம்.

வடுவூர் குமார் said...

காரணமா?
உளவியல் துறையில் இருப்பவர்கள் தான் சொல்லனும். :-)

சுல்தான் said...

//அம்மாவுக்கு ஓரவஞ்சனை மட்டும் தான் படித்தேன். அம்மா என்று இருக்கவும் நான் அந்த அம்மா என்று நினைத்தேன்//
வாருங்கள் மலர்.
ஃபுல்லா படிச்சிட்டு பின்னூட்டுங்கள்.
'ஃபுல்லா' என்றால் முழுவதுமாக.
நீங்கள் ஏதாவது தவறாக நினைத்து விடப் போகின்றீர்கள்.:))

பழமைபேசி said...

வணக்கம் ஐயா! பதிவு நல்லா இருக்கு, ஆனா என்னோட அனுபவம் தலைகீழ்.
பக்கத்து தட்டுல, முறுவல் தோசை விழும். ஆனா எனக்கு, ஆறிப்போன இட்லி. அவனுக்கு மட்டும், தயிர்; எனக்கு மோர்! அவனுக்கு நிலக்கடலை கலக்கின பொரி; எனக்கு போனாப் போகுதுன்னு பொரி மட்டும்!!! இப்படி நிறைய ஓரவஞ்சனை.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

சுல்தான் said...

//மகளுக்கும் மருமகளுக்கும் உள்ள வித்தியாசம்தான் காரணம்//
நீண்ட நாட்களுக்குப் பின் வருகிறீர்கள். வருகைக்கு நன்றி ஞானியார். மகளுடைய பிள்ளை, மகனுடைய பிள்ளை என்றுதானே பார்க்க வேண்டும். மருமகளுடைய பிள்ளை மகனுடையதுதானே?

குசும்பன் said...

//எல்லா அம்மாவுக்கும் மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகள் மீது மகனுடைய பிள்ளைகளை விடவும் பாசம் சிறிது மிகையாய் இருக்கிறதென்பது உண்மைதானா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்?//

என்ன சுல்தான் பாய் எங்க பக்கம் எல்லாம் மகனுடைய பிள்ளைகள் மீதுதான் பாசம்! உங்க பக்கம் உல்டாவா இருக்கே!!!

வல்லிசிம்ஹன் said...

அதென்ன காரணமா இருக்கும். மகன் ,மகளிடையே!!!

இறைவா நான் எந்த வித்தியாசமும் பார்க்கக் கூடாதூ.

குப்பன்_யாஹூ said...

தாயின் ஓரவஞ்சனை என்று தலைப்பை மாற்றலாம்.

நான் கூட அம்மா ஜெயலலிதாவின் ஓரவஞ்சனை என்றுதான் ஓடி வந்தேன்.

குமுதம் ஒரு பக்க கதை போல நன்றாக உள்ளது பதிவு.

குப்பன்_யாஹூ

பாபு said...

//எல்லா அம்மாவுக்கும் மகள் வீட்டுப் பேரப்பிள்ளைகள் மீது மகனுடைய பிள்ளைகளை விடவும் பாசம் சிறிது மிகையாய் இருக்கிறதென்பது உண்மைதானா? அதற்கு என்ன காரணமாக இருக்கும்?)//

சுல்தான் பாய்,

சிலர் இப்படியும் அப்படியுமா இருக்கலாம். பொதுமைப்படுத்த முடியாதென்றே நினைக்கிறேன்.

சம்பவம் படித்து Ignorance is bliss என்று சொல்ல முடியவில்லை:)

சுவனப்பிரியன் said...

திரு சுல்தான்!

நானும் பல வீடுகளில் மகளுடைய பிள்ளைகளை உயர்வாக பார்ப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒருக்கால் வயதான காலத்தில் மருமகளை விட மகள் தான் நம்மை காப்பாற்றுவாள் என்ற முன்னேற்பாட இருக்குமோ!

சுல்தான் said...

//உளவியல் துறையில் இருப்பவர்கள் தான் சொல்லனும். :-)//
நன்றி வடுவூர் குமார்.
உங்கள் ஊரிலும் அப்படித்தானா? கலவையான கருத்துரைகள், சாதாரணமாக ஒரு குழந்தை மேல் தோன்றும் ஈர்ப்பு என்பது போல காடடினாலும், எங்கள் ஊரில் பொதுவாக இதுதான் நிலைமை.

சுல்தான் said...

//பதிவு நல்லா இருக்கு, ஆனா என்னோட அனுபவம் தலைகீழ்.//

//எங்க பக்கம் எல்லாம் மகனுடைய பிள்ளைகள் மீதுதான் பாசம்! உங்க பக்கம் உல்டாவா இருக்கே!!!//

மிக்க நன்றி பழமைபேசி, குசும்பன்.

இவர்கள்தான் நம்முடன் கடைசி வரை இருப்பவர்கள், காப்பாற்ற போகிறவர்கள் போன்ற எண்ணத்தினால், மகனுடைய பிள்ளைகள் மேல்தான் சாதாரணமாக கூடுதல் அன்பு வர நியாயம் இருந்தாலும், பிள்ளைகளுக்கிடையில் பாரபட்சம் காட்டுவது குழந்தைகள் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதுதான் சரி.

ஆனால் எங்க ஊர் பக்கமெல்லாம் மகள் வீட்டுப் பிள்ளைகள் மேல்தான் அம்மாக்களுக்கு தனிப்பாசம்.

சுல்தான் said...

//இறைவா நான் எந்த வித்தியாசமும் பார்க்கக் கூடாதூ.//

வாருங்கள் அம்மா.

நியூக்ளியர் குடும்பத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பே இருக்காது. அடிக்கடி கூடுவதென்பதே நிகழாத போது வித்தியாசம் பார்ப்பதெங்கே.

அம்மா என்பதே அனபின் மறுவடிவம்தானே. எல்லா அம்மாக்களும் இப்படி இருப்பதில்லை. சில பேர்தான் இப்படி வித்தியாசம் பார்ப்பார்களென நினைக்கின்றேன்.

குழந்தைகள் உள்ளத்தில் அது ஏற்படுத்தும் பாதிப்பை அறிந்து பெற்றோர்கள் பெரியவர்கள் மேல் தவறான எண்ணம் உருவாகமல் தடுக்க வேண்டும்.

படகு said...

எங்கள் வீட்டில் அப்படி இல்லை இரண்டு பக்கமும் சமம்தான். :))))))

மிஸஸ்.டவுட் said...

சில இடங்களில் சுல்தான் பாய் சொல்வது போல நிகழ்வது வழக்கம் தான், சில இடங்களில் பழமைபேசி அண்ணன் சொல்வது போலவும் நிகழத்தான் செய்கிறது,இதற்கான காரணங்கள் கண்டிப்பாக இடத்திற்கு இடம் மாறுபடும் .வேறென்னவாக இருக்கக் கூடும்? மனம் தான் காரணம் .அது போடும் லாப நஷ்டக் கணக்கில் சிக்கி உறவுகள் சீரழியாமல் இருந்தால் சரி தான்

சுல்தான் said...

//குமுதம் ஒரு பக்க கதை போல நன்றாக உள்ளது பதிவு//
நன்றி குப்பன்_யாஹூ

//சிலர் இப்படியும் அப்படியுமா இருக்கலாம். பொதுமைப்படுத்த முடியாதென்றே நினைக்கிறேன்.//
வருகைக்கு நன்றி பாபு. பொதுமைப்படுத்தக் கூடாதுதான்.

//சம்பவம் படித்து Ignorance is bliss என்று சொல்ல முடியவில்லை:)//
Ignorance, blissஆக இருந்தால் எதையும் கற்றுக் கொள்ள அவசியமில்லாமல் போகும்.

சுல்தான் said...

//மருமகளை விட மகள் தான் நம்மை காப்பாற்றுவாள் என்ற முன்னேற்பாட இருக்குமோ!//
வருகைக்கு நன்றி சுவனப்பரியன். அது எப்படி சரியாகும்?.
மருமகனை விட மகன்தான் காப்பாற்ற உரிமையுள்ளவன்

//எங்கள் வீட்டில் அப்படி இல்லை இரண்டு பக்கமும் சமம்தான்//
நன்றி படகு.
அதை உங்கள் சகோதரன் அல்லது சகோதரியிடம் கேட்டுத்தான் உறுதிப்படுத்த முடியும்.


//இதற்கான காரணங்கள் கண்டிப்பாக இடத்திற்கு இடம் மாறுபடும். வேறென்னவாக இருக்கக் கூடும்? மனம் தான் காரணம். அது போடும் லாப நஷ்டக் கணக்கில் சிக்கி உறவுகள் சீரழியாமல் இருந்தால் சரி தான்//
வருகைக்கு நன்றி மிஸஸ்.டவுட்.
லாப நஷ்டக் கணக்கில் உறவுகள் சீரழியாமல் இருந்தால்.....
சரிதான்.