Wednesday, 21 October 2009

டிரைவ் இன் ATMல் பணமெடுக்க வழிகாட்டுதல்கள்

நமது நிறுவனத்துக்கு ISO Certification வேண்டுமென்றால் இந்த ISOகாரர்கள் ஒன்றும் தெரியாமல் வந்து நம்மிடமே வழி முறைகளைக் கேட்டறிந்து கொள்வார்கள். பின்னர் என்னவோ இவர்களே கண்டு பிடித்ததுக் கொண்டது போல் வெட்கமில்லாமல் நம்மிடமே அளந்து கட்டுவார்கள்.

ஆனால் இங்கே ஒரு வங்கியில் புதிதாக வண்டியில் இருந்தபடியே பணமெடுக்க வசதியாக ஒரு ATMஐ நிறுவினார்கள். சில ஆட்களை நியமித்து மக்கள் அதை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என பல மாதங்களாக கணித்து கீழ்க்காணும் பயன்படுத்தும் வழிகாட்டுதல் முறைகளை உருவாக்கி விளம்பரத்தட்டி அமைத்துள்ளார்கள்.


வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு:
பல மாதங்கள் கவனமாக பரிசீலனை செய்த பின், நமது வங்கியில் புதிதாக நிறுவப் பட்டுள்ள, வண்டியில் இருந்தபடியே ATMல் பணமெடுக்க ஆண்கள், பெண்களுக்கான இந்த வழிகாட்டுதல் முறைகள் உருவாக்கப் பட்டுள்ளது. தங்கள் பாலினத்துக்கு தக்கவாறு சரியானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்திக் கொள்ளவும்.

ஆண்களுக்கு:


1. உங்கள் வாகனத்தை பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் நிறுத்தவும்
2. உங்கள் வாகனத்தின் பக்க கண்ணாடியை கீழிறக்கவும்
3. உங்கள் பண அட்டையை அதற்குரிய இடத்தில் திணித்து உங்கள் இரகசிய எண்களை அழுத்தவும்
4. உங்களுக்குத் தேவையான பணத்தைக் குறிப்பிட்டு பின் எடுத்துக் கொள்ளவும்
5. உங்கள் பண அட்டையையும் பணமெடுத்த ரசீதையும் எடுத்துக் கொள்ளவும்
6. உங்கள் வாகன கண்ணாடியை மேலேற்றவும்
7. வாகனத்தை ஓட்டிச் செல்லவும்

பெண்களுக்கு:


1. உங்கள் வாகனத்தை பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் நிறுத்தவும்
2. உங்கள் வாகனம் இயந்திரத்திலிருந்து சரியான தூரத்தில் இருக்குமாறு உங்கள் வாகனத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தி சரி செய்யவும்
3. வாகனத்தின் Parking Breakஐ போட்டு விட்டு வாகனத்தின் பக்க கண்ணாடியை கீழிறக்கவும்
4. உங்கள் கைப்பையைத் தேடி எடுத்து, அதிலுள்ள சாதனங்களை பக்க இருக்கையில் ஒவ்வொன்றாக வைத்தவாறு, உங்கள் பண அட்டையை சரியாகத் தேடி எடுக்கவும்.
5. உங்கள் கைப்பேசியில் பேசிக் கொண்டிருப்பவர்களிடம், பிறகு பேசுவதாகக் கூறி, கைப்பேசியை நிறுத்தவும்
6. உங்கள் பண அட்டையை இயந்திரத்தில் அதற்குரிய இடத்தில் திணிக்க முயற்சிக்கவும்
7. உங்கள் வாகனத்துக்கும் இயந்திரத்துக்குமான தூரம் அதிகம் இருப்பதால், சுலபமாக உங்கள் பண அட்டையை அதற்குரிய இடத்தில் திணிக்க வசதியாக, வாகனத்தின் பக்க கதவுகளைத் திறந்து கொள்ளவும்.
8. உங்கள் பண அட்டையைத் திணிக்கவும்
9. உங்கள் பண அட்டையை திருப்பி இட்டிருப்பீர்கள். எனவே பண அட்டையை வெளியில் எடுத்து இப்போது சரியான முறையில் திணிக்கவும்
10. உங்கள் கைப்பையின் பின்புற ரகசிய பையிலுள்ள, தங்கள் ரகசிய எண் குறிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத்தை எடுக்க மீண்டும் கைப்பையைத் துழாவவும்
11. உங்கள் இரகசிய எண்களை அழுத்தவும
12. அந்த எண்களை நீக்கி விட்டு, இப்போது சரியான எண்களை அழுத்தவும்
13. உங்களுக்குத் தேவையான பணத்தைக் குறிப்பிடவும்
14. வாகனத்திலுள்ள (Rear View Mirror) பின்னால் பார்க்கும் கண்ணாடியில் தங்கள் முகப் பூச்சு, உதட்டுச் சாயம், தனித்து விழும் முடிக் கற்றைகள் முதலியவற்றை சரி செய்யவும்
15. உங்கள் பணத்தையும் அதற்கான ரசீதையும் எடுத்துக் கொள்ளவும்
16. உங்கள் கைப்பையை தலை கீழாக பக்க இருக்கையில் கவிழ்த்து, தங்களின் பணப்பையைத் தேடி எடுத்து, பணத்தை வைக்கவும்
17. உங்கள் செக் புத்தகத்தின் பின்னாலுள்ள கட்டங்களில் இப்போது எடுத்த பணத்தையும் இருப்பையும் குறித்து விட்டு பணமெடுத்த ரசீதையும் அதில் மடக்கி வைக்கவும்
18. மீண்டும் தங்கள் முகப் பூச்சு, உதட்டுச் சாயம், தனித்து விழும் முடிக் கற்றைகள் முதலியவை சரியாக இருக்கிறதா என சோதித்துக் கொள்ளவும்
19. உங்கள் வாகனத்தை இரண்டு அல்லது மூன்று அடிகள் முன்னால் நகர்த்தவும்
20. இப்போது வாகனத்தை பின்னால் கொண்டு வந்து பணமெடுக்கும் இயந்திரத்தின் முன் மீண்டும் நிறுத்தவும்
21. உங்கள் பண அட்டையை எடுத்துக் கொள்ளவும்
22. உங்கள் கைப்பையை தலை கீழாக பக்க இருக்கையில் கவிழ்த்து, அட்டைகள் வைக்கும் பையை எடுத்து, அதில் பண அட்டையை சரியான இடத்தில் செருகவும்.
23. உங்கள் பின்னால் பொறுமையிழந்து நிற்கும் ஆண் காரோட்டியை படுகேவலமாக ஒரு பார்வை பார்க்கவும்
24. ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வாகனத்தை, மீண்டும் ஸ்டார்ட் செய்து, கிளம்பிப் போகவும்
25. உங்கள் கைப்பேசியில் ஏற்கனவே பேசிக் கொண்டிருந்தவரை திரும்ப அழைக்கவும்
26. உங்கள் வாகனத்தை குறைந்தது மூன்று அல்லது நான்கு கிலோ மீட்டர்கள் ஓட்டிச் செல்லவும்
27. உங்கள் வாகனத்தின் Parking Breakஐ எடுத்து விடவும்.

இவை அத்தனையும் நகைச்சுவையான உண்மைகள் என்பதை பரிசோதித்து அறியலாம். ஆனால் நீங்கள் கண்காணிக்கும் போது யாரும் ATM கொள்ளையர்கள் என சந்தேகித்து காவலர்களுக்கு தகவல் தந்து வம்பாகி விடப் போகிறது. கவனம்.

Post Comment

Wednesday, 14 October 2009

எலி பிடித்துத் தின்னும் தாவரம்

சமீபத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் குடுவை போன்றதொரு புலால் உண்ணும் தாவரம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளனர். இது பூச்சிகள் மட்டுமல்லாது எலிகளையும் பிடித்து உண்பதாக அறிவித்துள்ளனர்.


ஆங்கிலேய நாட்டுத் தாவரவியல் நிபுணர்களான ஸடீவர்ட் மெக்ஃபெர்ஸன், அலைஸ்டர் இராபின்ஸன் (Stewart McPherson and Alastair Robinson) ஆகிய இருவரும் பிலிப்பைன்ஸ் நாட்டின் விக்டோரியா மலைகளில் இதைக் கண்டு பிடித்து இதற்கு வன உயிரிகளைப் பற்றிய பரப்புரையாளர் சர். டேவிட் அட்டன்பரோ அவர்களது பெயரைக் கொண்டு நெபன்த்தெஸ் அட்டன்பரோயீ (Nepenthes attenboroughii) எனப் பெயரிட்டுள்ளனர். மேலேயுள்ள அத்தாவரத்தின் படம் ஸடீவர்ட் மெக்ஃபெர்ஸன் அவர்களால் பிடிக்கப்பட்டது.

புலால் உண்ணும் (Pitcher Plant) குடுவை வடிவ தாவரங்களில் இதுவே பெரியது என்றும் இதிலிருந்து வெளிவரும் அமிலம் போன்றதொரு வேதிப்பொருள் எலிகளையும் செரித்து விடுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு கிறிஸ்துவ மிஷனரிகள் விக்டோரிய மலையில் 2000ம் ஆண்டில் ஏறிய போது இது போன்றதொரு தாவரத்தைக் கண்டதாக எழுந்த பேச்சுதான் அவர்கள் இத்தாவரத்தைத் தேடத் தூண்டுகோலாக அமைந்ததாம்.

ஸ்டீவர்ட் மெக்ஃபெர்ஸன் இதைப்பற்றிக் கூறும்போது "இத்தாவரம் கண்ணைக் கவரும் வகையிலான பொறிகளை அமைத்து பூச்சிகளை மட்டுமில்லாது எலிகளையும் பிடித்து விடுகின்றன. இந்த அதிசயத் தாவரம் 21ம் நூற்றாண்டு வரை கண்டு பிடிக்கப்படாமல் இருந்ததுதான் ஆச்சரியமளிக்கிறது" என்கின்றார்.


இயற்கை உலகின் வனப்பையும் அதன் பரந்துபட்ட தன்மையையும் நன்முறையில் அறிந்து கொள்ள பற்பல தலைமுறையினருக்குத் தூண்டுகோலாய் அமைந்துள்ள சர்.டேவிட் அவர்களுடைய பணிகளுக்கு மரியாதை தரும் விதத்தில் எங்கள் குழுவும் நானும் இத்தாவரத்துக்கு அவர் பெயரைச் சூட்டியுள்ளோம் என்கிறார் ஸ்டீவர்ட் மெக்ஃபெர்ஸன்.
இந்தக் கண்டு பிடிப்புக்கு தன் பெயரை இட அனுமதி கேட்ட போதே, அதற்காக தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் சர்.டேவிட் (வயது 83, படம்)

இந்தக் குழு, 2007ல் தம் இரண்டு மாத முயற்சியில் கண்டறிந்த இத்தாவரத்தைப் பற்றியும், இது போன்ற புலால் உண்ணும் குடுவை வடிவ தாவரங்களின் 120 வகைகளைப் பற்றியும் மூன்று ஆண்டுகள் ஆய்வுகள் செய்த பின், இந்த வருட தொடக்கத்தில் Botanical Journal of Linnean Societyல் வெளியிட்டுள்ளது.

இதை இந்தியாவுக்குக் கொண்டு வந்து, நம் விவசாயிகளின் விளைநிலங்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டை வளர்த்து வந்தால், எலிகளால் நம் விவசாயத் தொழிலுக்கும் நம் நாட்டுக்கும் ஏற்படும் மிகப்பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். நம் தாவரவியல் விஞ்ஞானிகளின் கண்களில் பட வேண்டும். மிக எளிய வழியாகத் தெரிகிறது.

Post Comment

Monday, 12 October 2009

மன அழுத்தமும் தீர்வும்

சமீபத்தில்தான் இதைப் படிக்க நேர்ந்தது. இவ்வளவு எளிய தீர்வா! எப்படி சாத்தியம்?

கீழே ஒரு படம் இருக்கிறது. இப்போது பார்க்காதீர்கள். மீதமுள்ளதையும் படித்து விட்டுப் பார்த்தால்தான் சரியாகப் புரியும். புகழ் பெற்ற மாரி மருத்துவமனையில் மனஅழுத்தத்தை அளக்க இந்தப் படம்தான் பயன்படுகிறதாம்.

ஒத்த தோற்றமுடைய இரண்டு டால்பின்கள் தண்ணீரில் தாவிக் குதிப்பது போல படத்தில் காட்டப் பட்டுள்ளது. கவனமாக பரிசீலிக்கப்பட்ட அறிவியல் ஆய்வுகளின் படி ஒத்த தோற்றமுடைய இந்த டால்பின்கள் மன அழுத்தம் உள்ளவர்களின் அழுத்த அளவுக்கேற்ப மாறித் தோன்றுமாம். எவ்வளவு மாறித் தெரிகிறதோ அதற்குத் தகுந்தாற் போல் மன அழுத்தம் கூடுதலாக இருக்கிறதாம்.

இப்போது மடத்தைப் (சே!.. படத்தைப்) பாருங்கள். கூடுதல் வித்தியாசம் தெரிந்தால் உடனே விடுப்பு எடுத்து ஊர் போய் நன்றாக ஓய்வெடுத்து விட்டு வாருங்கள். மாற்றம் அவசியம்.



நான் பார்த்த போது இரண்டில் ஒரு டால்பின், மாடு போலத் தெரிந்தது. அதனால் பெருநாளோடு சேர்தது ஒரு பத்து நாள் விடுமுறை எடுத்து ஊர் போய் விட்டு வந்தேன்.

வந்து திரும்பவும் பார்த்தால் இப்போது பசு மாதிரி தெரிகிறது. அதனால் அடுத்த பெருநாளிலும் சுமார் பத்து நாள் விடுப்புக்கு இப்போதே சொல்லி விட்டேன்.

அடுத்தடுத்து ஊர் போய் வருகின்றவர்களுக்கு இரண்டும் ஒத்த தோற்றமுடைய டால்பின்களாகத்தான் தெரியும். அவ்வாறு தெரிந்தால் அடுத்துள்ள நல்ல கண் மருத்துவரை உடனே பார்க்கவும்.

Post Comment