Tuesday, 20 November 2007

இப்படியும் சில நல்லவர்கள்


துபையில் என் நெருங்கிய உறவினர் நடக்கும் போது தரை வழுக்கி, கால் தடுமாறிக் கீழே விழும் போது, தலையில் அடிபடாமல் இருக்க கைகளை ஊன்றியதில் கையிலும் கால் மூட்டிலும் பலத்த அடி. கைகள் வீங்கிப் போனதால் மருத்துவரிடம் காண்பித்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கை எலும்பில் சில்லு போய் பெரிய கட்டு. கால்களில் குறிப்பிடும்படியான எவ்வித பாதிப்புமில்லை. ஐந்து வார மருத்துவ விடுப்பு அனுமதி.

சரி. இங்கேயே இருந்தால் ஓய்வாக இருக்கும் நிலையில், பலவித நினைவுகள் மனதை அலைக்கழிக்கும். மேலும் எலும்பு, மூட்டு சிகிச்சைக்கு இந்தியா போய் விடுவதே சிறந்தது என எல்லோரும் சொல்கிறார்கள். அதனால் தாய் நாடு சென்று மனைவி, குழந்தைகளுடன் விடுப்பை கழிப்பதோடு, நாட்டிலேயே மருத்துவமும் பார்த்துக் கொண்டு வருவதென முடிவு செய்தோம்.

குறைந்த செலவில் செல்ல விமான பயணச் சீட்டு எடுத்து, பிள்ளைகளுக்காக சில பொருட்கள், திண் பண்டங்கள் வாங்கி பொதிந்து தயாராக்கினோம். கையோடு கொண்டு செல்ல ஏழு கிலோ. பொதியில் சரியாக முப்பது கிலோ.

விமான நிலைய வரிசையில் நிற்கும்போது, நமக்கு முன்னால் பயணி ஒருவர், அவசரமாகச் செல்பவரோ அடிக்கடி செல்பவரோ, கைப்பையைத் தவிர வேறெதுமில்லை. எனவே அவரிடம் சென்று, ”பாருங்கள் இவருக்கு கையில் அடிபட்டிருக்கிறது. கையில் பொருட்கள் எடுத்துச் செல்வது சிரமம். எனவே தங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இவருடைய கைப்பையை நீங்கள் விமானப் பொதிகளோடு சேர்த்து விடுங்கள். இவர் அதை அந்த விமான நிலையத்தில் எடுத்துக் கொள்வார்” என்றதும் ”அதனாலென்ன போட்டு விடுவோம்” என்றவர் நமது கைப்பையை விமானப் பொதிகளோடு சேர்த்து விட்டு அதற்குண்டான சான்றையும் நம் கையில் திணித்து விட்டு உள்ளே போய் விட்டார்.

அதற்கடுத்து எங்கள் பொதியை சேர்த்து விட்டு, கிளம்ப எத்தனித்த போதுதான் தெரிகிறது. அவர் இலங்கை செல்பவர். எனது உறவினரோ திருச்சி செல்பவர். அவருடைய பொதியாக போடப்பட்ட கைப்பை இலங்கையில் இறங்கி விடுமே! அடக் கடவுளே! இதென்ன கொடுமை!

என்ன செய்வதென்று திகைத்து, பின் அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டால், ”விமானப் பொதிகளோடு சேர்த்து விட்ட பொதியை மீண்டும் எடுக்க, அவர் பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டு, பின்னர் அந்தப்பொதி விமான வருகை (arrival) பகுதிக்கு அனுப்பப்படும். பின்னர் அங்கிருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே, ”எங்களைப் பொறுத்தவரை, முதலில் அது உங்கள் பொதியே இல்லை. அதற்குண்டான சான்றை நீர் வைத்திருப்பதே தவறு” என்று கூறி அதையும் பிடுங்கிக் கொண்டார். பின் பலமுறை கேட்டபின், ”அது உரியவரிடம் விமானத்தில் கொடுக்கப்படும்” என்றார்.

”இப்போது வேறு வழியில்லை. உள்ளே சென்று, அவரை சந்தித்து, நிலைமையை எடுத்துக் கூறி, தயவு செய்து அந்தப் பொதியை எடுத்து air cargo மூலம் திருச்சிக்கு அனுப்பச் சொல். அதற்குண்டான செலவுக்கான பணத்தையும் கொடுத்து விடு” என்று சொல்லி அனுப்பினேன்.

உள்ளே சென்று அவரைக் கண்டு பிடித்துக் கேட்டால், ”மன்னிக்கவும். முக்கியமான ஒரு உறவினர் இறப்புக்காக நான் அவசரமாகச் செல்கிறேன். நான் இறந்தவருக்கு மரியாதைச் செய்ய வேண்டும் என்பதற்காகாவே அன்னாரது இறுதிச் சடங்குகள் செய்யப்படாமல் காக்க வைக்கப்பட்டிருக்கிறது. எனக்காக பலர் விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நான் உங்கள் பெட்டி எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்க இயலாது” என்கிறார். அவர் சொல்வது மிகவும் நியாயமான காரணம்.

”இப்போதென்ன செய்வது” என்று எனக்கு தொலைபேசுகிறார். நான் ”ஒன்றும் கவலையடையாதே. நடப்பது நடக்கட்டும். அது நமக்குச் சேர வேண்டிய பொருளென்றால் கண்டிப்பாக இறைவன் கிடைக்கச் செய்வான். இல்லெயென்றாலும் இறைவனின் விதிப்படி நடக்கட்டும். அவருடைய தொலைபேசி எண்ணை எனக்குக் கொடு. நான் முயற்சி செய்கிறேன். நீ விமான நிலையத்தில் duty free கடைகளில் குழந்தைகளுக்கான பொருட்களில் உன்னால் தூக்க முடியுமளவுக்கு 3 அல்லது 4 கிலோ வாங்கிக்கொள். விலையைப் பற்றி ஏதும் யோசிக்காதே” என்று சொல்லி விட்டு, SMS மூலமாக அவருக்கு முதலில் இறந்தவருக்கான அனுதாபங்களை தெரிவித்து விட்டு, கைப்பெட்டியில் எழுதியிருந்த விபரங்களையும், திருச்சிக்கு air cargo அனுப்பவதானால் எந்த முகவரிக்கு அனுப்புவது என்பதையும் குறிப்பிட்டு, இயன்றால் செய்யவும் என்றும் எழுதி அனுப்பினேன்.

அந்நண்பர் விமானத்தினுள் என் உறவினரைச் சந்தித்த போது ”இயன்றால் என் உறவினர்களிடம் சொல்லி, அதை எடுத்து வைத்து, திரும்ப இரண்டாம் நாள் நான் துபைக்கு வரும்போது திரும்பத் தருகிறேன். கண்டிப்பாக ஏர் கார்கோ அனுப்பவதென்பது இந்த நிலைமையில் இயலவே இயலாது” என்று கூறினாராம்.

இலங்கையிலிருந்து திருச்சிக்கு காலை ஏழு மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் தாமதமாகி மதியம் மூன்று மணிக்குத்தான் கிளம்பி இருக்கிறது. திருச்சிக்கு போய் சேர்ந்த என் உறவினர் பெட்டிகள் வரும் கன்வேயரில் (conveyor belt) முதன் முதலில் கண்டது அவர் ஏழு கிலோ கைப்பையைத்தானம். அதன் பின்னர்தான் முப்பது கிலோ பொதி வந்திருக்கிறது. இரண்டையும் எடுத்துக் கொண்டு கூடவே duty freeல் வாங்கிய பைகளையும் சுமந்து, மகிழ்ச்சியோடு, அவருக்கும் மனதார வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டே, இறைவனுக்கும் நன்றி சொல்லி ஊர் போய்ச் சேர்ந்தாராம்.

இப்படியும் சில நல்ல மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். தன்னுடைய துன்பமான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென அவர்களால் சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறது.

நீவிர் நீடூழி வாழ்க நண்பரே!.

Post Comment

8 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா!
யாவும் நல்லபடி நடந்ததை நினைக்க சந்தோசமாகவும்; அந்த ஈழ நண்பர்; அனைத்து ஈழநண்பர்களுக்கும்
பெருமை சேர்த்துள்ளார்; இந்த இக்கட்டான சூழலிலும்...நன்றி...
அத்துடன் இதை எழுது உங்கள் பெருந்தன்மையையும் காட்டியுள்ளீர்கள்...
மனித நேயம் மலர...வளர உதவுவோம்.

Unknown said...

நன்றி யோகன்.
ஆம். மனித நேயம் மலரவும் வளரவும் நாமும் பங்களிப்போம்.

லொடுக்கு said...

:)

கேள்வியின் நாயகன் said...

பாராட்டுக்குரிய செயல். ஆனால், அந்த பொதி சிரிலங்காவிலிருந்து திருச்சி வருவதற்கு எப்படி சாத்தியமாகியது?

Unknown said...

நன்றி லொடுக்கு.

//அந்த பொதி சிரிலங்காவிலிருந்து திருச்சி வருவதற்கு எப்படி சாத்தியமாகியது?//
வருகைக்கு நன்றி கேள்வியின் நாயகன்.
இலங்கை விமான நிலையத்தில், அவருக்குத் தெரிந்த விமான நிலைய ஊழியர் முலம் திருச்சி செல்லும் விமானத்துக்கு பொதியை மாற்றி அனுப்ப ஏற்பாடு செய்தாராம். சாதாரணமாகச் சொல்லி விட்டேன். அதற்காக எத்தனை சிரமங்களை மேற்கொள்ள நேர்நததோ?

கண்மணி/kanmani said...

இப்படி சில நேரம் அரிதான நல்ல மனிதர்களைப் பற்றி அறியும் போது மனித நேயம் மிச்சமிருக்கிறது[அவசர யுகத்திலும்]எனத் தெரிகிறது.

enRenRum-anbudan.BALA said...

//இப்படி சில நேரம் அரிதான நல்ல மனிதர்களைப் பற்றி அறியும் போது மனித நேயம் மிச்சமிருக்கிறது[அவசர யுகத்திலும்]எனத் தெரிகிறது.
//

Repeat :)

Unknown said...

//இப்படி சில நேரம் அரிதான நல்ல மனிதர்களைப் பற்றி அறியும் போது மனித நேயம் மிச்சமிருக்கிறது[அவசர யுகத்திலும்]எனத் தெரிகிறது.//
வருகைக்கு நன்றி டீச்சர்.
இவர்களைப் போன்றவர்கள்தான் பிறருக்கு நன்மை செய்வதில் மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கிறார்கள்.

நன்றி பாலா.