சுஹைல் பள்ளி முடிந்து பள்ளிக்கூட வேனில் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறான். மிகக் குறுகிய சந்தில் உள்ள அவனுடைய வீட்டின் முன்னர் எப்போதும் போல பெரிய ஒலி எழுப்பி விட்டு வேன் நிற்கிறது. வேனிலிருந்து பிள்ளைகளை இறக்கிவிட ஒரு ஆயாவை பள்ளி நியமித்திருக்கிறது. ஆயா குழந்தையை இறங்கச் சொல்லி விட்டு, குழந்தை இறங்கி விட்டதா என சரியாக உறுதிப் படுத்தாமலேயே பக்கக் கதவை இழுத்து சாத்துகிறாள். பையனின் வலது கை விரல்கள் கதவில் மாட்டி நசுங்கிக் கொண்டிருக்கிறது. பையனுடைய அலறலைப் பொருட்படுத்தாமல் அல்லது கேட்காததால் ஆயா ஓட்டுநரைப் போகப் பணிக்கிறாள்.
கதவிடுக்கில் மாட்டிய கைகளோடு வண்டி நகர்கிறது. பையன் வண்டியில் தொங்கிக் கொண்டு. பையனின் கதியை தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்த எதிர்த்த வீட்டு அரபிப்பெண் தன் ஜன்னலைத் திறந்து கொண்டு கத்துகிறாள். அவள் கத்தலைக் கேட்ட ஆயா கதவைத் திறக்கிறாள். வலது கையின் மூன்று விரல்கள் சதை நகம் வரை துண்டித்து தொங்கிய படி, மல்லாந்த நிலையில், கதவுக்கு கீழே இரு சக்கரங்களுக்கு இடையில் விழுகிறது குழந்தை. வேன் நிறுத்தப் படாததால், வலது தோள் பட்டை வழியே முகவாயை இடித்த படி வேனின் பின்புறச் சக்கரம் குழந்தையின் மேல் ஏறி இறங்கி விடுகிறது.
அதற்குள் அந்த அரபிப் பெண்ணிண் மகன் ஓடி வந்து இருபதடிகள் தூரத்தில் வேனை நிறுத்தச் செய்கிறார். 'என்ன நடந்தது என்று தெரிகிறதா?' என்று ஓட்டுநரை கேட்கிறார். தெரியாதென்கிறான். அவனை வண்டியை விட்டு வெளியே இழுத்து அங்கேயே இரண்டு முறை அவனை கன்னத்தில் அறைகிறார்.
வண்டியின் பெரிய ஒலியைக் கேட்டதால், விரைந்து வந்த தாய் மகனைப் பார்க்கும் ஆவலில் கதவைத் திறக்கிறாள். கதவின் முன்னர் யாருமற்ற நிலையில் இரத்த வெள்ளத்தில் எவ்வித சலனமுமில்லாமல் தவமிருந்து பெற்ற மகன். அலறித் துடிக்கிறாள். அரற்றுகிறாள். தெருமுனைக் கடையில் பணியிலிருக்கும் குழந்தையின் மாமன் ஓடோடி வருகிறான். போலீஸ் வருகிறது. ஆம்புலன்ஸ் வருகிறது. நெருங்கிய உறவினர்களால் குழந்தையின் அப்போதைய நிலைமையை பார்க்க முடியாது என்பதால், தெரிந்த ஒருவர், பையனின் நெஞ்சில் விட்டு விட்டு அழுத்தி முதலுதவி செய்தவாறு ஆம்புலன்ஸில் செல்கிறார். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனைத் தகவல்கள்.
முதன் முதலில் Gulf Daily News எனும் ஆங்கில தினசரியில் செய்தி வருகிறது. தாய் தன் வீட்டின் ஜன்னலருகே பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பையன் வண்டியின் முன்சக்கரத்தில் அடிபட்டு, இரத்த வெள்ளத்தில் தன் மகனைப் பறிகொடுத்ததாக, யாரோ ஒருவர் நேரில் பார்த்து சொல்லியதாக செய்தி சொல்கிறது. மற்ற பத்திரிக்கைகள் அதையே காப்பியடித்து அடுத்த நாள் செய்தியாக்குகின்றன
அந்தப் பத்திரிக்கைக்கு இந்த செய்தி கொடுத்தவர் கேரள நாட்டவர் - அவர்தான் அப்பத்திரிக்கையின் Chief Reporter.
மற்ற பத்திரிக்கைகள் இந்த செய்தி தவறென்று அறியத் தந்தவுடன் மறுப்பு செய்தியை வெளியிடுகின்றன. ஆனால் இந்தப்பத்திரிக்கை மட்டும் மறுப்பதாகச் சொன்னாலும் 'தாய் - தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்ததாக' மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறது.
ஏன்? ஜன்னலிலிருந்து பார்த்ததாகச் சொன்னால் தாயைப் பார்த்த மகிழ்ச்சியில் பிள்ளை ஓடினான் எனச் சொல்லலாம். அதனால்தான் வண்டியை எடுப்பதற்கு முன்னாலேயே முன்பக்கமாக ஓடி வண்டியின் முன்னால் அடிபட்டு இறந்ததாக சொல்லலாம். பள்ளி பிள்ளையை இறக்கி விட்டு விட்டது அதன் பின்னர் நடந்ததற்கு பள்ளி பொறுப்பேற்காது என்று சொல்லலாம். மக்கள் மத்தியில், பள்ளிக்கும் சம்பவத்துக்கும் பொறுப்பில்லை என்ற கருத்துருவாக்கலாம்.
ஏன்? சீப் ரிப்போர்ட்டர் பள்ளிக்கூடம் நடத்துபவர்களின் மதத்தைச் சார்ந்தவர். ஒரே இடத்தில் பிரார்த்திக்கும் உட்பிரிவைச் சேர்ந்தவர்களாம். பள்ளிக்கூட நிர்வாகத்தோடு பல வகைகளில் தொடர்புடையவராம்.
அந்த வீட்டுக்கு வெளிப்புற ஜன்னலே இல்லை. கிராதி இருக்கிறது ஆனால் வெளியில் இருந்து யாரும் அங்கு நிற்பதை பார்க்கவோ அனுமானிக்கவோ இயலாது என்பதைச் சுட்டிக்காட்டி, குழந்தையின் தாய் மாமன் கேட்டதற்கு 'குழந்தையோ இறந்து விட்டது இனி பள்ளியின் பெயரைக் கெடுப்பதால் என்ன நன்மை' என்றாராம். அடக் கொலைகாரப் பயல்களே! பத்திரிக்கை தர்மம், நேர்மை எல்லாம் மலம் தின்னவா நாய்களே!.
சம்பவத்தில் தொடர்புடைய வேன் பள்ளிக்கு சொந்தமானதில்லையாம். பிள்ளைகளை கொண்டு வந்து விட்டு பின் அழைத்துப் போக பள்ளி நிர்வாகம் வாடகைக்கு வைத்திருக்கிறதாம். ஓட்டுநரும் அந்தக் வாடகைக்கார் கம்பெனியில் அன்றுதான் வேலையிலமர்ந்த புதியவராம். வண்டியின் கதவு சரியாக மூட முடியாமல், பழுது சரி செய்யப் படாமல் இருந்ததாம்.
[பஹ்ரைனின் இந்திய நாட்டுத் தூதுவர் நேரடியாக வந்து விசாரித்ததோடு, பஹ்ரைனில் உள்ள எல்லா இந்தியப் பள்ளிகளையும் அழைத்து ஒழுங்கு முறைகளை சரிவர கடைபிடிக்க அறிவுறுத்திய தோடில்லாமல், இந்தியர்கள் நடத்தும் வாடகை வண்டிக் கம்பெனிகளை அழைத்து வண்டிகள் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டியும் அறிவுறுத்தியதோடு, பஹ்ரைன் போக்குவரத்து காவல்துறையிடம் சரியாக இல்லாத வண்டிகளுக்கு கடுமையான தண்டணைகளை தரச் சொல்லியும் கேட்டுக் கொண்டுள்ளாராம்.]
குழந்தைகளை பள்ளிக்கனுப்பும் பெற்றோர்களே!. உங்கள் குழந்தையின் பள்ளி சொந்தமாக வண்டி வைத்திருக்கிறதா? நிர்வாகம் பொறுப்பானதா? ஏனோ தானோ நிர்வாகமா? சிறு பிள்ளைகளை ஆயாக்கள் ஒழுங்காக வீடு வரை வந்து விட்டுப் போகிறார்களா போன்றவற்றை இனியாவது கவனியுங்கள்.
14 comments:
:(
சென்னையில் ஆஷ்ரம் பள்ளியில் கூட இதுபோல் நடந்ததாக படித்திருக்கிறேன்.
குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்து கொடுமையானவை.
:(
சோமன் பேபி என்று பெயர். மலையாளி. அவங்க நாட்டு ஆள் என்றால் ஒன்ன நூறா எழுதுவான். நானும் பக்ரைன்ல் வசிக்கிறேன். செய்திகேட்ட மதியமே தினமலர்க்கு செய்தி அனுப்பினேன். போடவே இல்லை. என்னத்தை சொல்ல. ஏதேனும் காம்பென்ஷேசன் தந்தார்களா அல்லது ஒரே ஒரு ஜெபக்கூட்ட வழிபாடு தானா?
என்னய்யா இது? பதிவின் முதல் பகுதி செய்தி நெஞ்சை பிழிந்துவிட்டது. பிற்பாதியில் நீங்கள் என்னென்னவோ சொல்கிறீர்!
இறந்தது குழந்தை. அதைப்பற்றி மட்டுமே கொஞ்சம் சிந்திப்போம். கணக்குகள் சரிபார்ப்பதற்கு இது நேரமல்ல!
பிஞ்சுக்குழந்தையை பரிதாபகர சூழலில் இழந்து வாடும் பெற்றவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
:-!
நெஞ்சம் பதறுது. கவனக் குறைவுக்கும் ஒரு அளவு உண்டு. அந்த ஆயாவும், டிரைவரும் கண்டிப்பாக பெரும் தண்டனை பெற்று, மற்றவருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
அந்த பெற்றோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
வருகைக்கு நன்றி ராம்.
நன்றி ஜிகே. வரும் முன் காப்பதற்காகவென்று நம் குழந்தைகள் விடயத்தில் கூட நாம் இருப்பதில்லை. என் குழந்தைகள் விடயத்திலும், பள்ளிக்கூட பேருந்து கவிழ்ந்து பிள்ளைகளுக்கு அடிபட்ட பின்னர்தான் பள்ளிக்கூடமும் பெற்றோர்களும் விழித்தோம்.
நன்றி தஞ்சாவூர்காரன். 12 வருட தவத்துக்குப் பின் கிடைத்த வரத்தை இழந்து நிற்கும் தாய்க்கு யார் என்ன காம்பென்சேஷன் தர முடியும். அக்குழந்தையின் தந்தை மற்றும் மாமன்கள் மத்தியில் இது பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது, அந்தத் தாயின் 'ஹும்' (என்ன செய்து இனி என்ன), என்ற ஒரு பெருமூச்சு நம் மனதைப் புரட்டிப் பிழிகிறது.
//பிற்பாதியில் நீங்கள் என்னென்னவோ சொல்கிறீர்!//
//கணக்குகள் சரிபார்ப்பதற்கு இது நேரமல்ல!//
வருகைக்கு நன்றி மாசிலா.
சென்ற மாதம் அக்டோபர் 25ல் நடந்த சம்பவம். பஹ்ரைன் முழுதுமுள்ள தமிழர்கள், தமிழ்ச் சங்கங்கள், மலையாள மற்றும் இந்தியச் சங்கங்கள் சார்பில் எனது நண்பரை (குழந்தையின் பெற்றோரை) நேரில் சந்தித்து வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இன்னும் மனிதாபிமானம் உயிரோடுதான் இருக்கின்றது என்பதை 'பஹ்ரைனில் இத்தனை சங்கங்கள் இருக்கின்றதென்பதே எனக்கு இப்போதுதான் தெரிந்தது' என்ற எனது நண்பரின் கூற்று உறுதிப்படுத்தியது.
ஆனால் இது போன்ற நேரத்திலும், பொய் செய்தி பரப்பி, தன் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கும் கயவர்களை என்னவென்று சொல்வது!.
வருகைக்கு நன்றி புபட்டியன்.
இது போன்ற குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்புள்ளவர்களுக்கு குறைந்த பட்ச பயிற்சியாவது கொடுக்கப்பட வேண்டியதின் அவசியத்தை பள்ளிக்கூடங்களும் பெற்றோர்களும் உணர வேண்டும்.
படிக்கும் போதே நெஞ்சு பட படக்கிறதே ...நேரில் பார்த்தவர்கள் தூக்கம் இழந்து பல இரவுகள் துக்கத்தோடு இருந்திருப்பார்களே.பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதபங்கள்.
என் பதிவில் தங்களின் முதல் வருகைக்கு நன்றி goma. உங்களைப் போன்ற பெண்களுக்குத்தான் அந்த வலியை சரியாக உணர முடிகிறது.
அந்த குழந்தை அடிபட்டு கிடந்ததை நேரில் பார்த்த ஒருவர், இந்தக் கொடுமையான நிகழ்வின் நினைவைத் தவிர்ப்பதற்காக, தாம் பள்ளிக்குத் தொழச் செல்லும்போது கூட, அந்தத் தெருவைத் தவிர்த்து, வேறு வழியில் செல்கிறாராம்.
'குழந்தையோ இறந்து விட்டது இனி பள்ளியின் பெயரைக் கெடுப்பதால் என்ன நன்மை' என்றாராம். அடக் கொலைகாரப் பயல்களே! பத்திரிக்கை தர்மம், நேர்மை எல்லாம் மலம் தின்னவா நாய்களே!.///
அது எல்லாம் செத்து போய் அந்த இடத்தில் ஆலமரமே வளர்ந்து விட்டது சுல்தான் பாய், மிகவும் கஷ்டமாக இருந்தது படிக்கும் பொழுது.
//அது எல்லாம் செத்து போய் அந்த இடத்தில் ஆலமரமே வளர்ந்து விட்டது//
நம் நாட்டில்தான் அப்படி என்றால் இந்த நாட்டிலும் நம்ம ஆள்தான் கெடுக்கிறான். அதுதான் குசும்பு மிக வருத்தம்.
//சீப் ரிப்போர்ட்டர் பள்ளிக்கூடம் நடத்துபவர்களின் மதத்தைச் சார்ந்தவர்.//
சுல்தான்,
மனிதங்களை மதங்கள் தின்னும் காலத்தில் வாழ்ந்து கொ்ண்டிருக்கிறோம் என்பதே வேதனையான உண்மை.
நன்றி தருமி ஐயா.
மதங்கள் மற்றவர்களுக்கு கெடுதல் செய்ய போதிக்காத போதும், சில மதம் பிடித்த மனிதர்கள் கெடுதல் செய்கின்றனர்.
அவருக்கு மதம். மற்ற சிலருக்கு, ஏதோ ஒரு வகையில் அவரைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணம், அவர்கள் தவறு செய்திருந்தாலும் காப்பற்றப் பட வேண்டுமென்று
விரும்பச் செய்கிறது.
மனித நேயம், நேர்மை முதலிய நற்பண்புகள் குறைவாகிப்போய் மனிதன் materialistic ஆகி ஜடமாகிப்போனதே காரணம்.
Post a Comment