Monday, 25 January 2010

கடவுள் இல்லை மனிதன்தான்

1980வது வருடத்தில் ஒரு வெயில் நாள். ரோட்டோரம் எள் அடிப்பதற்காக போராக குவித்து வைக்கப்பட்டிருந்த செடிகளை பிரித்து, வெயிலில் அடுக்கி, உலர்த்தி, எள் வேறாக சக்கை வேறாக எடுப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. அம்மாவின் கடின உழைப்புக்கு முன், நான் அவ்வளவு உழைப்பாளி இல்லை. அந்த உழைப்பிலும், 'தம்பி! கை முகம் கழுவிட்டு நிழல்ல போய் சாப்பிடப்பா!' எனும் அம்மாவின் கருணைக்கு அளவே இல்லை. '
ஏம்மா. உனக்கு பசிக்காதா? நீயும் வாயேன்' என்றாலும்
'நீ போய்ட்டு சீக்கிரம் வாப்பா'
ஒரு தேநீர்தான் அவர் பசியடக்க அல்லது பசி மறக்க.
காடு, கழனி, மாடுகளின் உதவியோடு தனியாளாய் ஆறு குழந்தைகளை வளர்த்த அம்மா இன்னும் அதிசயம்தான் எனக்கு.

விடியலில் வந்ததால், விரைவில் வேலைகள் முடிந்து அம்மாவை ஈருருளியின் (bi-cycle) பின்புறம் அமர்த்திக் கொண்டு சென்னை திருச்சி NH45 நெடுஞ்சாலையில் வீடு நோக்கிய பயணம். மதியம் மூன்று மணி. சாலையில் அத்தனை வாகனங்களோ சன சந்தடியோ இல்லை.

எதிர்த்த சென்னை சாரியில் இருந்து வரும் ஒரு மகிழுந்து. ஆங்கிலப் படத்தில் வருவது போல ஒரு பயங்கர கிரீச். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மகிழுந்து சாலையிருந்து இருபதடி தூரம் பறந்து மல்லாந்து விழுகிறது.

'அல்லாஹூ! அல்லாஹூ!' அம்மா பார்த்துக் கொண்டே அலறுகிறார்கள். ஆள் நடமாட்டம் அற்ற பகுதி. எங்களிலிருந்து ஒரு நூற்றைம்பது அடிகள் தள்ளி சம்பவம்.
'எம்மா. பயமாயிருக்கம்மா. போலீஸ் கேஸ்ன்னு வந்தா யார் போய் நிக்கிறது. வாம்மா போயிடலாம்'
'ஏண்டா! பன்னண்டாவது படிக்கிற ஆம்புள புள்ள. ஒரு உதவி கூட செய்யாம ஓடுவாங்களா? வண்டியை நிறுத்துறா'
ஓடிப்போய் பார்த்தால் வண்டி நிறைய ஆணும் பெண்ணுமாய் அலறல் சத்தம்.

'பயப்படாதீங்க! பயப்படாதீங்கம்மா! ஒவ்வொரு ஆளா வெளியேறப் பாருங்க.'
உடைந்திருந்த திறந்த பக்க கதவின் வழியே ஒவ்வொருவராய் அம்மாவும் நானும் வெளியே இழுக்கிற முயற்சியில்.
'தம்பீ! ரோட்டுப் பக்கம் போய் சத்தம் போடு. அக்கம் பக்கம் வயலில் வேலை பார்க்கிற ஆளுங்க இருந்தா வருவாங்க. ஓடு.'
'ஓடியாங்க. ஓடியாங்க. ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு. ஆளுங்க மாட்டிக்கிட்டாங்க. ஓடியாங்க. ஓடியாங்க'
ஏழெட்டு முண்டாசுகாரர்கள் ஓடி வந்தனர். வழியில் போன சுமையுந்தும் நின்றது.
அதற்குள் அம்மா ஒரு ஆணையும் பெண்ணையும் மகிழுந்தில் இருந்து வெளியில் எடுத்திருந்தார்கள்.
மற்ற ஆட்கள் வந்து மீதமிருந்தவர்களையும் நல்ல அடி, உள் காயம், வெளிக் காயம், இரத்தத்துடன் மீட்டார்கள்.
நாங்கள் கையில் வைத்திருந்த நீரைக் கொண்டு அம்மா பெண்களை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்த போது, திடீரென்று 'ஐயோ! எங் கொளந்த!. வண்டியில!' வந்திருந்த பெண்ணில் ஒருவரது அலறல்

'வண்டியில யாரும் இல்லயே!'
வண்டிக்கு அடுத்து ஒரு இருபதடி தள்ளி வயலில் இருந்து ஒரு கைக்குழந்தையை அம்மா எடுத்து வந்தார்கள்.
சாலையிலிருந்து மகிழுந்து இருபதடி தள்ளி, மகிழுந்திலிருந்து குழந்தை இருபதடி தள்ளி.
நாற்பதடி தூரத்தில் விழுந்த குழந்தை சிறு சிராய்ப்போ காயமோ ஏதுமின்றி அம்மாவின் கைகளில் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது ஆச்சரியம்தான்.

"நாங்க திருப்பதியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம். அந்த திருப்பதி ஏழுமலையானே நேரில் வந்தது போல் வந்து எங்களை காப்பாற்றினீங்க". அந்தம்மா என் அம்மாவின் காலில் விழப்போக
"கால்ல உளாதெ! நாங் கடவுளில்ல. மனுசங்கதான்"
அடுத்து குடும்பத் தலைவரும் காலில் விழப்போக
"கால்ல உளாதய்யா. நாங் கடவுளில்ல. மனுசங்கதான்"

அவ்வழி வந்த பேருந்தை நிறுத்தி மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவலனுப்பினேன்

'தம்பீ! இனி நிக்காதே. வா போயிரலாம்' - அம்மா
'நீ செய்த பெரிய காரியம். எல்லாம் வாழ்த்துராங்க பொறும்மா'
'நீ போடா!. இனி போலீஸ் பார்த்துக்கும்'.

[வெளியூரில், இரவு உணவு அருந்த, தூக்க மிகுதியில், கையை முட்டுக் கொடுத்து அயற்சியோடு அம்மா.
அதை அவர்களுக்குத் தெரியாமல் கிளிக்கி, என் மகளிடம் காண்பிக்க
என் மகள் 'எம்மா!. சூப்பர் போஸ் மா!' எனச் சொல்ல, படத்தை வாங்கிப் பார்த்து விட்டு 'வைகோல' என்றார்கள். (இப்படியெல்லாம் செய்வார்களா என்பதைக் குறிக்க உபயோகிக்கும் சொல்)
(சரியான பொருள் என்ன என்று பழமைபேசி இடம்தான் கேட்க வேண்டும்.)]

Post Comment

33 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தாய்

நல்லதாய் சொன்னார்கள்/செய்தார்கள்.

----------------

ராசுக்கோலு தேன் கேள்விபட்டு இருக்கேன்

வைக்கோலு ... யார்ன்னா சொல்வாங்க தெரிஞ்சிக்கலாம்.

கோவி.கண்ணன் said...

நல்ல நெகிழ்வான இடுகை.

அம்மா படமும் நன்றாக வந்திருக்கிறது.

ம் கடவுள் உதவி என்றாலும் அது மனிதர்கள் மூலமாகத்தானே நடக்கும், கடவுளுக்கு கை இல்லையே !
:)

சுல்தான் said...

நன்றி ஜமால்.
//வைக்கோலு ... யார்ன்னா சொல்வாங்க தெரிஞ்சிக்கலாம்//

அது வைக்கோல் இல்லை. 'vaigola' என்ற சொல்லாடலில் இருக்கும்.

சுல்தான் said...

நன்றி ஜிகே.
//ம் கடவுள் உதவி என்றாலும் அது மனிதர்கள் மூலமாகத்தானே நடக்கும்இ கடவுளுக்கு கை இல்லையே ! :)//
மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன் கடவுளுக்கு நன்றி செலுத்தியவன் ஆக மாட்டான். ஆனால்
கடவுளுக்கு செய்வது போன்ற நன்றியை மனிதர்களுக்கு செய்யக்கூடாது என்பதில் அவர்களுக்கு உறுதி. :)

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப நெகிழ்வான இடுகை. சரியான முடிவு சரியான நேரத்தில் எடுத்திருக்கிறார்கள்.

Virutcham said...

தெய்வம் மனுஷ்ய ரூபேண

படகு said...

நல்லதாய் சொன்னார்கள்/செய்தார்கள்
அம்மா படமும் நன்றாக வந்திருக்கிறது.
ரொம்ப நெகிழ்வான இடுகை

சுல்தான் said...

நன்றி S.A. நவாஸுதீன்
நன்றி விருட்சம்

சுல்தான் said...

நன்றி படகு.
Prem/paramu உங்கள் கருத்துரை வேறொன்றோடு போய் விட்டது. தயவுசெய்து திரும்ப இடுங்களேன்.

ஹுஸைனம்மா said...

அந்தக் கால மனுஷிகளிடம் இருக்கும் உரம் (உறுதி) இன்றைய (என்னைப் போன்ற) இளமங்கையரிடம் அரிது.

பழமைபேசி said...

பகிர்வுக்கு நன்றிங்க ஐயா!

வைகோல-- இனிதான் தெரிஞ்சிக்கணும்!

சுல்தான் said...

//அந்தக் கால மனுஷிகளிடம் இருக்கும் உரம் (உறுதி) இன்றைய (என்னைப் போன்ற) இளமங்கையரிடம் அரிது//

சரிதான். அந்த நெஞ்சுரம் இப்போதைய பெண்களிடம் மட்டுமல்ல ஆண்களிடமும் அப்படியே குறைந்து விட்டது ஹுஸைனம்மா.

ஆனால் தற்போதைய குழந்தைகள் எல்லா விடயங்களிலும் தெளிவாக இருப்பதாகத் தோன்றுகிறது. நாளை நன்றாக விடியும் ஹுஸைனம்மா.

சுல்தான் said...

வருகைக்கு நன்றி பழமைபேசி.

//வைகோல-- இனிதான் தெரிஞ்சிக்கணும்!//
சாதாரணமாக எங்கள் ஊரிலும் பக்கத்து கிராமங்களிலும் உபயோகித்திருந்த வார்த்தைதான். சில சமயம் 'வைகோல கூத்து' என்றும் சொல்வதுண்டு.

ஜீவன்பென்னி said...

இப்போல்லாம் உயிருக்கு போராடுறத வேடிக்கை பாக்குற காலம்.

சுல்தான் said...

//இப்போல்லாம் உயிருக்கு போராடுறத வேடிக்கை பாக்குற காலம்//

நன்றி ஜீவன்பென்னி. சமீபத்தில் ஒரு காவலதிகாரி சாலையிலேயே கொல்லப்பட்ட விடயத்தை சொல்கிறீர்களோ.

சோழன் said...

வைகொலை என்றால் ,சகிக்கலை ,தாங்கமுடியலை என்று பொருள்படும்

சுல்தான் said...

வருகைக்கு நன்றி சோழன்.
ஏன் இவ்வளவு கோபம்?

நான்தான் எந்த நேரத்தில் சொல்வார்கள் என்று சொல்லி விட்டேனே!

உண்மையான பொருள்தானென்றால் மேலதிக விளக்கம் தாருங்களேன்.

Anonymous said...

"இந்த மாதிரி ஜுஜுபி உதவிக்கேல்லாம் அவன் வர தேவையில்லை , அவனுடைய படைப்புக்களே போதும்"

சுல்தான் said...

நன்றி அனானி. என்ன ஜுஜுபின்னிட்டீங்க. 5பேர் வரும் வண்டியில் ஏழெட்டு பேர். ஆளரவமற்ற இடத்தில் யாரும் வராமல் விட்டிருந்தால் யாராவது நெரிசலில் மூச்சுத் திணறி இறந்திருக்கக் கூட வாய்ப்புண்டு.

குழந்தை தனியாக இருந்ததால் பாதிக்கப் பட்டிருக்கலாம்.

அந்தக் குழந்தையின் அம்மா கூட தண்ணீர் முகத்தில் தெளித்து நினைவு திரும்பியதும் கேட்ட கேள்விதான் குழந்தையைப் பற்றியது.

கிளியனூர் இஸ்மத் said...

தாய்தான் ஒரு மனிதனுக்கு முதல் குரு....நெகிழ்வான இடுக்கை வாழ்த்துக்கள்.

தருமி said...

நல்ல பதிவு

சுல்தான் said...

வருகைக்கு நன்றி இஸ்மத்பாய்.

நன்றி தருமி ஐயா.

அபுஅஃப்ஸர் said...

உங்கத்தாய் சற்றே வித்தியாசமா இருந்திருக்காங்க, மற்றவர்கள் இது மாதிரி செய்திருப்பாங்களா என்பது சந்தேகம்தான்

நெகிழ்வான இடுக்கை

சுல்தான் said...

நன்றி அபுஅஃப்ஸர்

வெ.இராதாகிருஷ்ணன் said...

அருமையான இடுகை, தங்கள் தாய் போற்றப்பட வேண்டியவர். சக மனிதர்களுக்கு, ஜீவராசிகளுக்குச் செய்யும் உதவி இறைவனின் மனதை குளிரச் செய்கிறது.

வைகோல என்பது புது வார்த்தையே.

அப்துல் சலாம் said...

அல்லாஹூ அல்லாஹூ -திருப்பதி -கார்-குழந்தை- தாய்

ஏனோ தெரியவில்லை பதித்து முடித்ததும் மனசு நிரம்பியது போன்ற உணர்வு

நானா அழுகிறேனா ச்சே ச்சே கண்களில் தூசி.......

சுல்தான் said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி வெ.இராதாகிருஷ்ணன்.

நன்றி அப்துஸ்ஸலாம். நிறைய சென்டிமெண்ட். மனம் குளிர்ந்தது.

குடுகுடுப்பை said...

நல்ல இடுகை.

கிராமத்து ஈகை. உங்களின் தாயின் ஈகைக்கு வணக்கம்.

கபீரன்பன் said...

//'ஏண்டா! பன்னண்டாவது படிக்கிற ஆம்புள புள்ள. ஒரு உதவி கூட செய்யாம ஓடுவாங்களா? வண்டியை நிறுத்துறா'//

வெள்ளை உள்ளம் கொண்டவர்களால்தான் இப்படி துணிச்சலோடு நடந்து கொள்ள முடியும். நல்ல முன்னுதாரணமான அன்னையின் ஆற்றலை நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு.
அவருக்கு என் வந்தனங்கள்.

சுல்தான் said...

//நல்ல இடுகை. கிராமத்து ஈகை. உங்களின் தாயின் ஈகைக்கு வணக்கம்//
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி குடுகுடுப்பை

//வெள்ளை உள்ளம் கொண்டவர்களால்தான் இப்படி துணிச்சலோடு நடந்து கொள்ள முடியும். நல்ல முன்னுதாரணமான அன்னையின் ஆற்றலை நினைவு கூர்ந்திருப்பது சிறப்பு.
அவருக்கு என் வந்தனங்கள்//
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி கபீரன்பன்

அன்புடன் அருணா said...

மனிதன் இல்லை கடவுள்தான்!

சுல்தான் said...

//அன்புடன் அருணா said...
மனிதன் இல்லை கடவுள்தான்!//

வருகைக்கு நன்றி அன்புடன் அருணா.

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி அன்பு செலுத்துவது கடவுளின் செயல் என்றுதான் மனிதன் செயல்படுத்தாமல் விட்டு விடுகிறானோ.

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி அன்பு செலுத்துவதுதையும் உதவி புரிவதையும் மனிதத்திலும் சேர்த்து வைப்போம் சகோதரி.

செவத்தப்பா said...

தங்களுடைய தாயாரும், தாங்களும் சேர்ந்து செய்த அவசர உதவி என்னை நெகிழ வைத்தது. பிறருக்கும் உதத்தூண்டும் விதத்தில் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சகோதரரே!