தஞ்சாவூரில் இது போன்ற ஒரு முக்கிய இடைத்தரகருக்கு ஒரு வீட்டில் உணவு எற்பாடு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தது. இத்தகையவர்கள் தங்களுக்கு வால் பிடிக்க ஒரு கும்பலை எப்போதும் கூடவே வைத்திருப்பார்கள். அந்த கும்பலுக்கு இவர் ஏதாவது சொல்லும்போது “ஆஹா!” “ஓஹோ!” என்று புகழ வேண்டும் என்பதுதான் வேலை. விருந்துக்கு வந்தவருடன் அந்தக் கும்பலும் வந்திருந்தது.
வீட்டின் உரிமையாளர் வந்தவரை அன்போடு அழைத்து அந்த வீட்டின் கூடத்தில் அமரச் செய்திருந்தார். அங்கே ஒரு கண்ணாடி அலமாரியில் அந்த வீட்டுக்கார அம்மா விலையுயர்ந்த பீங்கான் தட்டு, கண்ணாடிப் பொருட்கள் முதலியவற்றை அழகான கலை நயத்துடன் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனை வருடங்களாக எங்கெங்கு வாங்கி விருப்பமாக சேர்த்து வைத்தார்களோ.
வந்த இடைத்தரகருக்கு அதைப் பார்க்க ஏனோ பிடிக்காமல் போய் விட்டது போலிருக்கிறது. அங்கே மேசை மேல் வைக்கப்பட்டிருந்த பேப்பர் வெயிட்டை (Paperweight) எடுத்து, நேராக அந்த கண்ணாடி அலமாரியின் மீது விட்டெறிந்தார்.
அலமாரியும் அதனுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலையுயர் பொருட்களும் பொல பொலவென்று உடைந்து சிதறியது. இடைத்தரகரோ, 'அங்கே மக்காவில் ஒரு நாய் கஅபா பள்ளியின் மீது சிறுநீர் பெய்யப் போவதைக் கண்டேன். அதைத் துரத்த இங்கிருந்து கல் விட்டேன். கல்லடிபட்டு அந்த நாய் சிறுநீர் பெய்யாமல் ஓடி விட்டது' என்று சொன்னாராம். உடனே கூட வந்த வால்கள் 'ஆஹா!. இங்கிருந்து கொண்டே எத்தகைய அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார் நம் மகான்' என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
வீட்டுக்கார அம்மா ஓடி வந்து பார்த்து, கண்ணீர் விடாத குறைதான். அந்தம்மா உள்ளே போனதும் கணவரை அழைத்து 'எவ்வளவு பெரிய மகானை அழைத்திருக்கிறீர்கள். இவர்களுக்கு என் கையால் நான்தான் உணவு பரிமாறுவேன்' என்று சொல்லி விட்டார்.
முதலில் கூட வால் பிடிக்க வந்திருந்த அனைவருக்கும், தட்டில் பிரியாணியை வைத்து அதன் மேல் அருமையாய் செய்யப்பட்ட அரைக்கோழியும் வேக வைத்த முட்டையும் வைத்து கோழி பிரியாணி பரிமாறப்படுகிறது. முக்கியமான ஆளான தன்னை முதலில் கவனிக்காமல் கூட வந்த அன்னக்கைகள் கவனிக்கப் படுவதிலிருந்தே வீட்டுக்காரம்மாவின் கோபத்தை தரகர் புரிந்து கொண்டு விட்டார். என்றாலும் வெளிக்காட்டி விட்டால் சாப்பாட்டுக்கு அலைபவரைப்போல் ஆகிவிடும் என்று அடக்கமாய் அமர்ந்திருக்கிறார்.
வீட்டுக்காரம்மாவோ 'எல்லோருக்கும் சாப்பாடு வந்து விட்டதா. நன்றாக திருப்தியாக சாப்பிடுங்கள்' என்று சொல்லவும் 'இன்னும் மகானுக்கு சாப்பாடு தரப்படவில்லை' என்று சொல்லப்பட்டது.
வீட்டுக்காரம்மா வேண்டுமென்றே அவருக்கு உணவு கொண்டு வருவதில் தாமதம் செய்கிறார். அதன் பின்னர் ஒரு தட்டில் பிரியாணி வைத்து, பிரியாணி சாப்பாட்டின் மேலே எதுவும் வைக்காமல் எடுத்து வந்து (மகானுக்கு மட்டும் புரியும் வண்ணம், மரியாதைக் குறைவாய்) வைக்கிறார்.
மகானுக்கு கோபம் தலைக்கேறி விடுகிறது. “விருந்துக்கு அழைத்து கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் என்னுடைய சீடர்களுக்கெல்லாம் கொடுத்ததன் பின்னர் எனக்கு உணவளித்ததோடு அல்லாமல், என் சீடர்களுக்கு பிரியாணியும் கோழியும் முட்டையும் வைத்து உணவு பரிமாறி விட்டு, எனக்கோ கோழியும் முட்டையும் கூட வைக்காமல் வெறும் பிரியாணி சோறு மட்டும் வைத்தால்… இதை என்னவென்று சொல்வது” என்று வீட்டுக்காரரிடம் கேட்கிறார்.
வீட்டுக்கார அம்மா பெரிய தொடப்பத்தோடு ஓடி வந்து, “மக்காவில் நாய் ஒடுவதை இங்கிருந்தே பார்த்த உனக்கு, உனக்காக கொடுக்கப்பட்ட பிரியாணிக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட கோழியும் முட்டையும் தெரியாமல் போனது எப்படி? திருட்டு நாய்களே!” என்று திட்டிக் கொண்டே மகானை தொடப்பத்தால் துவம்சம் செய்கிறார்.
(நுனிப்புல் இராமச்சந்தின்உஷா அவர்களின் இடுகை உய்யடா மானிடா! உய்! படித்தேன். அதைப் படித்த பின்னர் தஞ்சாவூர் பகுதியில் நடந்ததாக சொல்லக் கேட்ட ஒன்றை இடுகிறேன்.)