Monday, 16 October 2006

லெகிடுக்கார கிழம்

(யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் எந்தக் கவலையுமில்லாமல் நன்றாக உண்டுவிட்டு கண்ணில் படுபவர்களையெல்லாம் வீணாக வம்பிக்கிழுத்து கிண்டல் செய்து பொழுது போக்குபவர்களை லெகிடுக்காரன் என்று எங்களுரில் சொல்வார்கள். அது போன்ற லெகிடுக்கார கிழவரைப் பற்றிய கதையிது. அந்த மனிதரை நான் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அவரா இவர் என நினைக்கத் தோன்றும் மனிதர்.)

ஊரில் ஓரிரு மளிகைக் கடைகளே இருந்த அந்தக் காலம். சாப்பிட்டு விட்டு செட்டியார் கடைக்குப் போனால் கிழவரைப் பார்த்ததும் வம்பு வேண்டாமேயென்று செட்டியார் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலைப் பொட்டலம் கொடுத்து விடுவார். சும்மா வாங்கினாலும் செட்டியாரை என்னவோ கொடுக்கப் பணிக்கப்பட்டவர் போலத்தான் கிழம் பார்க்கும், பேசும்.

ஒரு தடவை கிழம் வந்ததை செட்டியார் கவனிக்காமல் வியாபாரத்தில் கவனமாயிருந்து விட்டார். கிழம் கனைத்துப் பார்த்தும் பெரிய கிராக்கி பொய் விடுமேயன்று செட்டியாரும் அலட்டிக் கொள்ளவில்லை. பல முறை கனைத்தும் பயனில்லாததால்
'செட்டியாரே! என்ன இன்னைக்கு மாமூல் மறந்திடுச்சா?' கிழத்தின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது.
'ஓசுல தானே! கொஞ்சம் பொறுமையாயிருந்தா குறைஞ்சீடுமா? அதிகாரம்ல பறக்குது. கைவேலையா இருக்கனெ தெரியலயா?' செட்டியாரும் பதிலுக்கு.
'அவ்ளதானே! ஒரு பொட்டலம் கொடுக்காமப் போனேன்னு நினைச்சுப் பாப்பையா நீ?'
'அதுக்கு வேற ஆளப்பாரு. குடுத்த வச்ச மாரில இருக்கு'

அவ்வளவுதான். கிழம் விசுக்கென்று போயே விட்டது.
செட்டியாருக்கும் தினம் இரண்டு பைசா சாமான் மிச்சமாகப் போகிற திருப்தி.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை கடை காலையில் லீவு. செட்டியாரு சாவகாசமாக வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டைவண்டி, நிறைய ஆட்களுடன் செட்டியார் வீட்டு முன் நிற்கிறது. கட்டைவண்டியை விட்டு இறங்கிய தடிமனான பெண் ஓங்கிக் குரலெடுத்து செட்டியாரைப் பார்த்ததும் முகம் அஷ்ட கோணலாகி சட்டென்று அமைதியாகிறது. வராமல் வந்திருக்கிற சொந்தக்காரர்களை பார்த்துதம் செட்டியார் எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துப் போகிறார். குசலம் விசாரிப்புகள்....... இத்யாதி... இத்யாதி.

பின்னாலேயே அடுத்த வண்டி, அதன் பின் அடுத்த வண்டி, அதன் பின் அடுத்த வண்டி, இப்படியாக பத்துப் பதினைந்து வண்டிகள். வண்டி நிறைய செட்டியாரின் சொந்தங்கள்.
வீட்டில் இடமில்லாத அளவுக்கு வீடு நிரம்ப சொந்த பந்தங்கள். குசலம் விசாரிப்புகள்.......குசு குசு பேச்சுக்கள்... இத்யாதி... இத்யாதி.

வீட்டுச் சட்டி போதாமல் பள்ளியில் தேக்ஸா (150 பேருக்கு உணவு தயாரிக்கும்படியான பெரிய சட்டி) எடுத்து வந்து திண்ணைப் பக்கமாக விருந்தினர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் சைக்கிளில் வேர்க்க விறுவிறுக்க கிழவர் வந்து கொண்டிருப்பதை பார்த்த செடடியாரிடம் பேசிக் கொண்டிருந்த சொந்த பந்தங்கள் கிழத்தை ஒரே அமுக்காக அமுக்கி செட்டியாரிடம் தூக்கிச் சென்று
'செட்டியாரே கோவிச்சுக்கப்படாது. இந்தக் கிழம் ஊர் ஊரா வந்து நீங்க செத்துட்டதா சொல்லி இங்க எங்களை வரவழைச்சிடுச்சு' கும்பலில் ஒரு பெரிசு குழைந்து கொண்டே சொன்னது.
'அதானே! நாங்கூட ஏதுடா சொல்லி வச்ச மாரி எல்லா சொந்தமும் ஒரே நேரத்திலே வந்திருக்கேண்ணு கொழம்பிட்டேன்' செட்டியார்
'உங்க முகத்துக்கு மின்னாடி எப்டி சொல்றதுண்டுதான் ஒன்னும் சொல்லல' இன்னொரு சொந்தம்.

'ரெண்டு பைசாவுக்கெல்லாம் பார்த்தா.... வருஷஞ்செலவும் மொத்தமா வச்சுட்டேண்ல' கிழம் சொல்லிட்டு சிட்டாய்ப் பறந்து விட்டது.

அதற்குப்பின் பொட்டலம் கிழம் வருவதற்கு முன்னமே ரெடியாக இருந்தது என்று சொன்னால் நம்பும் படியாகவா இருக்கிறது. ஆனால் இது உண்மைதானென்று சத்தியம் செய்ய எங்களூரில் ஆளிருக்கிறது.

(முதியவர்களை கிழம் என்று சொல்வது தப்பு. லெகிடு பண்ற முதியவரை கெழம் ன்னாதான் கதை ஜோரா போகும்னு. என்றாலும் மன்னிக்கவும்.. நண்பர்களே!)

Post Comment

11 comments:

லொடுக்கு said...

//முதியவர்களை கிழம் என்று சொல்வது தப்பு.//

உண்மை கசக்கும் என்பது உண்மையோ??

இறையடியான் said...

நல்லா கமடியா இருந்துது

அட்றா சக்கை said...

வலைப்பூ உலகுக்கு நல்வரவு திரு. சுல்தான்.

இந்தப் பதிவில் ஏதும் உள்குத்து இருக்கா? :)

Unknown said...

வரவுக்கு நன்றி லொடுக்கு, நானே ஒத்துகிட்டேனே.

நன்றி இறையடியான். சீரியஸான பதிவுகளுக்கு உங்கள் ஒத்துழைப்பும் அவசியம் தேவை. உதவுவீர்களென நம்புகிறேன். எப்படித் தொடர்பு கொள்வது?

வரவுக்கு நன்றி அட்றா சக்கை. ஐயையோ! உள் குத்து, வெளி குத்து எதுவுமில்லை. படித்தவுடன் சிரிப்பு வந்தால் சிரிச்சுட்டு போயிட வேண்டியதுதான்

கோவி.கண்ணன் [GK] said...

சுல்தான் ஐயா !

அருமையாக எழுதுகிறீர்கள். இந்த கதையும் கருத்து செறிவோடு இருக்கிறது.

உங்களின் எழுத்து நடை சரளமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் !

பாராட்டுக்கள் !

Unknown said...

கருத்துச் செறிவுள்ள கதைன்னு சொல்லி ஏதாவது லெகிடு பண்ணலையே.

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ஜிகே.

கதிர் said...

வயசான பெரியவங்க எல்லாரையும் லெகிடுன்னு சொல்றது ரொம்ப ரொம்ப தப்பு.

ஆனா

இந்த கதையில பண்ண மாதிரி லந்து பண்ற பெருசுங்கள லெகிடுன்னு கூப்பிட்டா தப்பே இல்ல.

வெங்கட்ராமன் said...

நன்றாக ரசித்தேன்.

தமிழ் மனம்
அண்மையில் இணைக்கப்பட்ட பதிவுகள
பகுதியில் வெரும் கோடு தான் தெரிகிறது.

சரி செய்ய இயலுமா என்று பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்.

Unknown said...

வரவுக்கு நன்றி தம்பி.

நான் பதிவுக்கு புதுசு. அதனால் சரி செய்வது எப்படி என்பதெல்லாம் தெரியாது. தங்கள் வரவுக்கும் ரசிப்புக்கும் நன்றி வெங்கட்ராமன். ஆம் சந்திப்போம்.

VSK said...

பட்டுக்கோட்டையாரின்,

"இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்
ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி"

என்ற பாடல் நினைவுக்கு வந்தது.

செட்டியாருக்கு விருந்தொம்பல் செய்ய ஒரு சந்தர்ப்பம் கொடுத்த அந்த லெகிடு வாழ்க!

:))

Unknown said...

வருகைக்கு நன்றி எஸ்கே.

ஆமாம். இது மாதிரியான ஆட்களை பட்டுக்கோட்டையிலும் பார்த்திருப்பாரோ என்னவோ? பாடலுக்கும் நன்றி

விருந்தோம்பலை, விரும்பியில்லாமல் வருந்தி கொடுக்க வைத்த கட்டாயம்தான் செட்டியாருக்கு. பாவம்.