Saturday 18 November 2006

படித்ததில் பிடித்தது

அப்போதெல்லாம் எந்த புத்தகம் படித்தாலும் அதிலே பிடித்த சில வரிகளை எழுதி வைத்துக் கொள்வது வழக்கமாயிருந்தது. 1985, 86களில் அதுபோல் எழுதி வைத்திருந்த ஒரு புத்தகம் கிடைத்தது. எதிலிருந்து எடுத்தது, யாருடைய வார்த்தைகள் என்று எழுத விட்டிருந்தேன். தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

நல்ல நல்ல கருத்துகள் என்று தோன்றியதால் இங்கே!. அப்படித்தானா, இல்லையா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்..

1. உலகில் நாம் ஒரு பட்டம். நம்மை கீழே இழுக்காவிட்டால் நாம் மேலே போக முடியாது. நாம் ஒரு பறவை. காற்று அடிக்காவிட்டால் சூனியத்தில் பறக்க முடியாது. நாம் ஒரு பந்து. பலமாக ஓங்கி கீழே அடிக்காவிட்டால் மேலே உயர முடியாது.

2. என்ன உடைமை, சொத்து, சுகமெல்லாம்?. ஏதை உண்டு களித்தோமோ அதுவே நமக்கு கிடைத்த பங்கு. எதை உடுத்திக் கிழித்தோமோ அதுவே நம் சொத்தில் கிடைத்த சுகம். ஏதை நம் மறுமை வாழ்விற்காக செலவிட்டுக் கொண்டோமோ அதுவே நமக்குக் கிடைத்த சிறப்பு. இவைகளை வேண்டுமானால் நம் உடைமை என்று துணிச்சலாய் சொல்லிக் கொள்ளலாம்.

3. நல்ல இலட்சியங்களுக்காக இலட்சத்தை செலவிடுபவர்கள் போற்றத்தகுந்தவர்கள். இலட்சங்களுக்காக தன் இலட்சியத்தையே இழக்கத் தயாராயிருப்பவர்கள்......?

4. துன்ப காலத்தில் நாம் இன்பமாக இருந்த நாட்களை நினைவு படுத்திப் பார்ப்பது போன்றதொரு பெரிய கவலை வேறெதுவுமில்லை

5. கடந்த கால தோல்விகளின் நினைவுகளிலேயே மனதை நிலைக்க விட்டுத் துன்பங்களை அதிகரித்துக் கொள்வது கூடாது. கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களோ, சூழ்நிலைகளோ மறுபடியும் வரப்போவதேயில்லை. ஆகையால் அவைகளை நினைத்து உருகுவதால் எந்த வகையான நன்மையும் ஏற்படப் போவதில்லை. கையை விட்டுப் போன செல்வத்தைப் பற்றியும் கடந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றியும் பிதற்றுவதால் இப்போது ஒன்றுமே வரப்போவதில்லை. பிறர் மேல் குற்றம் சுமத்துவதோ சூழ்நிலையைப் பற்றிக் குற்றம் சொல்வதோ கூடாது. நம்மில் நம்பிக்கை, நமது ஆற்றலில் நம்பிக்கை, நமது சக்திகளில் நம்பிக்கை இவைகளையே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

6. இந்த உலகத்தை குற்றம் சாட்டுவதை விட அதை புரிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனமானது.

7. குழந்தைகளும் அழகான பூக்களும் மனதை என்னமாய் தூய்மைப்படுத்தி குதூகலிக்கச் செய்கின்றன!. இவை மனிதனின் வாழ்வைப் பாதிக்காமல் மட்டும் இருந்திருந்தால் உலகம் எவ்வாறு களையிழந்து போயிருக்கும்? ஆம்! இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு ஆழமான உள்கருத்து இருக்கத்தான் செய்கிறது. புரியத்தான் நாளாகிறது.

8. ஒவ்வொருவர் பிரச்னையையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். வெளியே இருந்து அதன் அழகையும் அருவருப்பையும் சரிபார்க்கிறேன். பிரச்னைக்கு உள்ளிருந்து பார்ப்பதை விட வெளியிலிருந்து பார்ப்பதில் எத்தனை சவுகரியங்களும் பாடங்களும் இருக்கிறது.
உலகம் என்னவோ அதன் பாட்டையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டேதானிருக்கிறது. அதன் சுழற்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதும் கொள்ளாமல் இருப்பதும்தான் அவரவர் பிரச்னைக்குரிய விஷயங்கள்.

9. உண்மை ஒன்றுதான். அது எப்போதும் ஒன்றுதான். அது வேண்டாதவர்களுக்கு சுகமாய் இருப்பதில்லை. ஆனால் பொய் பல வடிவில் இருக்கும். சுகமாயும் இருக்கும்.

10. அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள் அன்பு செலுத்த வேண்டும். பதிலுக்கு அன்பு கிட்டாது. கிட்டினாலும் நெடுநாள் ஒட்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆனாலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். அன்பு செலுத்த முடியதவர்களைப் பற்றியும் அன்பையே மறந்தவர்களைப் பற்றியும் யோசிக்க வேண்டும். யாரும் நம்மிடம் அன்பாய் இல்லையே என்று வருத்தப்படக்கூடாது. அது முக்கியம் இல்லை. பாவம்! பல மனிதர்களுக்கு அன்பு செலுத்த தெரியவேயில்லை. நமக்குத் தெரிகிறது. எனவே அன்பு செலுத்த நம்மை அறிய வைத்திருக்கும் இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.(இதில் மட்டும் எழுத்தாளர் ஜெயகாந்தன் என எழுதிவைத்துள்ளேன்)

பிடித்திருந்தால் ஏது? ஏன? என்று சொல்லுங்களேன்.

Post Comment

19 comments:

ஆவி அண்ணாச்சி said...

ஆஹா! எல்லாமே அருமையான கருத்துக்கள்!

ஆனால் யார் சொல்லியவை என்று தெரியவில்லை!

Unknown said...

முதல் வருகைக்கு நன்றி ஆவி அண்ணாச்சி. கருத்துக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு எழுத்தாளர்களுடையதாக இருக்குமென நினைக்கிறேன்

Boston Bala said...

எல்லாமே அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

Unknown said...

வருகைக்கு நன்றி போஸ்டன் பாலா.

நிறையப் படிப்பவர்களுக்கு அந்த எழுத்து நடையைக் கொண்டு எழுத்தாளர்களைக் கண்டு கொள்ள முடியும் என்று கேட்டிருக்கிறேன். யாருக்கு முடியுமோ அவர்கள் முயற்சியுங்கள்.

ஜயராமன் said...

சுல்தான் ஐயா,

அருமையான வாழ்க்கை த்த்துவங்கள். படித்தவுடன் மனதில் தைக்கின்றன.

பதித்த உங்களுக்கு நன்றி.

இதன் எழுத்தாளர் யாரென்று தெரியாவிட்டால் என்ன? கருத்துக்கள் அதன் சத்தியத்தால் மணம் வீசுகின்றன.

அன்பு செலுத்த பழகு என்பது மிகவும் அழகு.

நன்றி

Unknown said...

வருகைக்கு நன்றி திரு. ஜெயராமன் அவர்களே.

எழுத்தாளர் யாரென்று தெரிந்தால், பிடித்த கருத்துள்ள எழுத்தாளரை கூடுதலாக படிக்கலாமென்றுதான்.

அட்றா சக்கை said...

சகோதரர் சுல்தான்,

இரண்டாவது மேற்கோள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியது என நினைவில் இல்லையா?

Unknown said...

வருகைக்கு நன்றி அட்றாசக்கை. ஹதீஸ் என்பது தெரியும். ஆனால் அதை அழகுத் தமிழில் செய்த எழுத்தாளரை தெரியவில்லை.

வருகைக்கு நன்றி காண்டீபன்.

Anonymous said...

ஒரு தொலைக்காட்சி இஸ்லாமிய (கேள்வி பதில்) நிகழ்ச்சியில்
"உண்டுக்கழித்ததும் உடுத்திக்கிழித்ததும் கொடுத்துக்களித்ததும்
அல்லாமல்
வேறுஉடமைகள்
மனிதனுக்கில்லை"
என்ற பொருளில் (உங்களின் இரண்டாவது மேற்கோள்) ஒரு நபிமொழி இருப்பதாக ஒரு அறிஞர் குறிப்பிட்டதை, சுட்ட விரும்புகிறேன். நன்றி.
Babu

Unknown said...

வருகைக்கு நன்றி பாபு.
அட்றாசக்கையின் பின்னூட்டமும் அதற்கு என் பதிலும் நோக்குக.

லொடுக்கு said...

//3. நல்ல இலட்சியங்களுக்காக இலட்சத்தை செலவிடுபவர்கள் போற்றத்தகுந்தவர்கள். இலட்சங்களுக்காக தன் இலட்சியத்தையே இழக்கத் தயாராயிருப்பவர்கள்......?
//
மான்புமிகு அரசியல்வாதிகள்.

Unknown said...

அவர்கள் மட்டும்தானா லொடுக்கு?

Anonymous said...

Ivaiyellam islamiya soofi karuthukkal ena ninaikiren..

Anonymous said...

உங்களுடைய பழக்கம் போற்றத்தக்கது...
நல்ல சிந்தனைகள்....
நல்ல பதிவு வாழ்த்துக்கள்,,,,

Unknown said...

//Ivaiyellam islamiya soofi karuthukkal ena ninaikiren..//
இல்லை அனானி. எனக்கு சூபி இலக்கியங்களில் எப்போதும் அவ்வளவாய் ஈடுபாடு இருந்ததில்லை.

ers said...

நெல்லைத்தமிழ் டாட் காம் சார்பில் புதிய திரட்டி...
சோதனை ஓட்டத்திற்கு பின்வரும் முகவரியை சொடுக்குங்கள்.

http://india.nellaitamil.com/

N.Ganeshan said...

எழுதியவர் யாரென்று சொல்லத் தெரியா விட்டாலும் அனைத்துமே அருமை. நன்றி

Unknown said...

//நல்ல பதிவு வாழ்த்துக்கள்,,,,//
நன்றி Hisham

//அனைத்துமே அருமை. நன்றி//
வருகைக்கு நன்றி என்.கணேசன்.
உங்கள் பதிவிலுள்ள ஆக்கங்கள் வெற்றியடைய விரும்புவோருக்கு ஊக்கம் அளிப்பதாய் உள்ளது. மீண்டும் நன்றி என்.கணேசன்.

Unknown said...

//நெல்லைத்தமிழ் டாட் காம் சார்பில் புதிய திரட்டி...//
நன்றி tamil cinema. Tamilish மாதிரியே இருக்கிறதே.