Wednesday, 19 March 2008

பெண்ணாக மாற எனக்கொரு வரம் கொடு



தான் தினமும் ஆலுவலகம் சென்று பணி செய்வதும், தன் மனைவி தினமும் வீட்டிலேயே இருப்பதையும் பார்த்த ஒரு கணவனுக்கு மிகவும் எரிச்சலாயிருந்தது.

தனக்கு நேர்வதை அவள் பார்க்க வெண்டுமென்பதற்காக
'கடவுளே! நான் தினமும் வேலைக்குச் சென்று எட்டு மணி நேரங்கள் படாத பாடுபடுகிறேன். என் மனைவியோ எப்போதும் வீட்டிலேயே இருக்கிறாள். எனக்கு நேர்வதை அவள் அறிய வேண்டுமாகையால், ஒரே ஒரு நாளைக்கு மட்டும் அவள் நானாகவும், நான் அவளாகவும் மாற வேண்டும்' எனப் பிரார்த்தித்தார்.
கடவுளும் தன் மாறாத கருணையால் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார்.

அடுத்த நாள் காலை அவர் ஒரு பெண்ணாக விழித்து எழுந்தார்.

எழுந்தவுடன் தன்னுடைய துணைக்காக காலை உணவு தயார் செய்தார். குழந்தைகளை எழுப்பினார். அவர்களுடைய பள்ளிச்சீருடைகளை சரி செய்தார். பிள்ளைகளுக்கு காலை உணவை ஊட்டி விட்டு விட்டு, மதிய உணவை பொதிந்து கொடுத்தார். அவர்களை தன் வண்டியில் அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தார்.

திரும்ப வீட்டுக்கு வந்து, உலர் சலவை செய்ய வேண்டிய துணிகளை சலவைக்காரனிடம் கொடுத்து வந்தார். திரும்பும் வழியில் வங்கியில் செலுத்த வேண்டிய பணத்தை செலுத்திவிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்கச் சென்றார். திரும்ப வீட்டுக்கு வந்து வாங்கிய மளிகைகளை அதனதன் சாடிகளில் கொட்டி சரியாக அடுக்கி வைத்தார்.

வாங்கிய பொருட்களும் கொடுத்த பணமும், வங்கியில் செலுத்தப்பட்ட தொகை, வங்கி நிலுவை, கையிருப்பு எல்லாம் சரி பார்த்து கணக்குகளை குறித்து வைத்தார்.

பின்னர் வீட்டில் வளரும் பூனை செய்து வைத்திருந்த கழிவுகளை அகற்றி, துடைத்து சுத்தம் செய்து வைத்து விட்டு, வீட்டு நாயை குளிப்பாட்டினார்.

அப்போதே மணி மதியம் ஒன்று ஆகி விட்டிருந்தது. உடனே அவசரம் அவசரமாக படுக்கைகளை புரட்டி, சுத்தம் செய்து, ஒழுங்கு படுத்தி விட்டு, துணிகளை துவைத்து காயப் போட்டார். பெருக்க வேண்டிய இடங்களை பெருக்கி, துடைக்க வேண்டியவைகளை துடைத்து, வேக்குவம் செய்ய வேண்டியவற்றை செய்து, சமையறை தரையை மோப் செய்து விட்டார்.

பிள்ளைகளின் பள்ளிக்கூடம் சென்று அவர்களை அழைத்துக் கொண்டு, வீடு வரும் வரை அவர்களிடம் விவாதம் செய்து கொண்டு வந்தார். வீட்டில் பிள்ளைகளுக்கு பாலும் பிஸ்கட்டுகளும் கொடுத்து, சீருடையிலிருந்து சாதாரண உடைகளுக்கு மாற்றி, அவர்கள் தங்கள் வீட்டுப் பாடங்களை சிரமமின்றிச் செய்ய வசதி ஏற்படுத்தி வைத்தார்.

பின்னர் பிள்ளைகளுடன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே காய்ந்த துணிகளை இஸ்திரி செய்தார். அதற்குள் மணி நான்கரை ஆகி விட்டிருந்தது. உடனே உருளைக் கிழங்குகளை தோல் சீவி வைத்து, சலாடுக்கு வேண்டிய காய் கறிகளை நீர் விட்டு அலம்பி, கறித் துண்டுகளை நறுக்கி வைத்து விட்டு, இரவு உணவுக்காக புதிய பீன்ஸை உடைத்து நாரெடுத்து வைத்தார்.

இரவு உணவு தயாரித்து வைத்து, உண்டு முடித்த பின், பாத்திரங்களை கழுவி அடுக்கி விட்டு, சமையலறையை சுத்தம் செய்து விட்டு, இஸ்திரி செய்த துணிகளை அதனதன் இடத்தில் வைத்து விட்டு, பிள்ளைகளுக்கு மேல் கழுவி விட்டு அவர்களை படுக்கையில் உறங்கச் செய்தார். மணி இரவு ஒன்பதைத் தாண்டிய நிலையில் ஒரே அலுப்பாகவும்
உடம்பு அசதியாகவும் இருந்தது.

அன்றாட வேலைகள் முடிந்தும் முடியாத நிலையில் படுக்கைக்குச் சென்று, தன் துணைக்கு மன அமைதி ஏற்படும் வரையில், பள்ளியறைச்சுகம் அளித்துப் பெற்றார்.

அடுத்த நாள் காலை எழுந்து முதல் வேலையாக,
'என் இறைவனே! நான் என்ன மாதிரி நினைத்திருந்தேன்!. என் மனைவி வீட்டில் இருப்பதற்காக இப்படி பொறாமைப் பட்டு விட்டேனே!. தயவு செய்து எங்களை பழைய நிலைமையிலாக்கு!' எனப் பிரார்த்தித்தார்.

கடவுள் தன் அபரிமிதமான அறிவால் கூறினார்.
"மகனே!, நீ சரியான பாடம் படித்து விட்டாய். நான் பழைய மாதிரி உங்களை மாற்ற வேண்டும்தான். ஆனால் அதற்கு நீ இன்னும் ஒன்பது மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும். நேற்றிரவு நீ கர்ப்பமடைந்து விட்டாய்."

நன்றி:இரவி சர்மி

Post Comment

Wednesday, 12 March 2008

குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி

அமெரிக்காவில் செக்ஸ் கல்வி இருப்பதைப் போல் நம் நாட்டில் கொண்டு வந்தால்தான் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும். அதனால் செக்ஸ் குற்றங்கள் குறையும். ஒருவர் தொடும்போதே அந்த தொடுதலிலுள்ள வேற்றுமையை அறிய முடியும் என்றெல்லாம் சொல்கிறார்கள்.

இன்றைய பிபிசி உலகச் செய்திகளில் சொன்ன செய்தியைப் பாருங்கள்.

அமெரிக்காவில் 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுமிகளில் நான்கில் ஒருவருக்கு செக்ஸ் தொடர்பால் வரும் நோய் (STD – Sexually transmitted disease) உள்ளதாம். அதிலும் குறிப்பாக இதே வயதுள்ள ஆப்ரிக்க அமெரிக்க பெண் குழந்தைகளில் 40 சதவிகிதமானவர்களுக்கு இவ்வாறான நோய் உள்ளதாகவும் சொன்னார்கள்.

நம்மைப் போலவே, “இந்தச் செய்தி மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக” நியூயார்க் நகர மோண்டோஃப்யோர் மெடிக்கல் செண்டரின் (Adolescent Medicine Specialist) அடோலசென்ஸ் மெடிசின் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்.எலிஸபெத் அல்டர்மேன் கூறுகிறார்.

அமெரிக்காவின் நோய் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மையம் (US Centres for Disease Control & Prevention) சிகாகோ நகரில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி 838 பேரில் 26 சதவிகிதமெனில் அமெரிக்க முழுவதும் சுமார் முப்பது இலட்சம் சிறுமிகளுக்கு இங்ஙனம் நோய் உள்ளதாக தெரியப்படுத்துகிறார்கள்.

“நாட்டில் செக்ஸ் கல்வியின் மோசமான நிலைமையை இது பிரதிபலிப்பதாக” சொல்லும் செக்ஸ் கல்வி நிபுணர் நோரா கெல்பெரின் (sex education expert Nora Gelperin) “இந்த எண்ணிக்கைகள் மிகவும் ஆபத்தான நிலைமையை அறிவிப்பதாக”வும் சொல்கிறார்.

இதைவிட மேலாக,
அமெரிக்க ப்ளாண்ட் பேரண்ட்ஹூட் பெடரேஷன் (Planned Parenthood Federation) தலைவர் சிசிலி ரிச்சர்ட்ஸ் வருடத்துக்கு ஒன்றரை பில்லியன் டாலர்கள் “தவறான உறவுத்தடுப்பு தேசியக் கொள்கை”யெனும் பேரில் செலவிட்டும், நாம் தோல்வியையே சந்தித்திருக்கிறோம். அதற்கான விலையை இச்சிறுமிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இந்த அறிக்கை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் கூடுதலாக அறிய http://news.yahoo.com/s/ap/20080311/ap_on_he_me/teen_stds
போய் பார்க்கலாம்.

இன்னின்ன வழிகளைக் கையாண்ட பின், தவறான முறையில் உறவு கொண்டாலும் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொடுத்து தவறான உறவுகளை ஊக்குவிக்கவே செக்ஸ் கல்வி வாய்ப்பாக ஆகும்.

"குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி புகட்டும் அமெரிக்காவில் என்ன வாழ்ந்து விட்டது. அதை இங்கேயும் கொண்டு வந்து புரட்சி செய்ய" என்று யோசிக்க வேண்டிய நேரமிது. விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டுமே.

குழந்தைகளுடன் தவறான முறையில் நடப்பவர்களுக்கு கடுமையான தண்டணை கொடுப்பதன் மூலமே இத்தகைய குற்றங்களை களைய முடியும். வீணாக குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியைப் புகுத்தி அவர்களை பிஞ்சிலேயே பழுக்க வைக்காதிருப்பதே நலமாக இருக்கும்.

Post Comment

அடி! தொடப்பத்தால!!

சந்நியாசம், இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் இடைத்தரகர் போன்றவை இல்லை, தேவையில்லை என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் முஸ்லீம்கள் மத்தியிலும் இடைத்தரகர்களுக்குப் பஞ்சமில்லை.

தஞ்சாவூரில் இது போன்ற ஒரு முக்கிய இடைத்தரகருக்கு ஒரு வீட்டில் உணவு எற்பாடு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தது. இத்தகையவர்கள் தங்களுக்கு வால் பிடிக்க ஒரு கும்பலை எப்போதும் கூடவே வைத்திருப்பார்கள். அந்த கும்பலுக்கு இவர் ஏதாவது சொல்லும்போது “ஆஹா!” “ஓஹோ!” என்று புகழ வேண்டும் என்பதுதான் வேலை. விருந்துக்கு வந்தவருடன் அந்தக் கும்பலும் வந்திருந்தது.

வீட்டின் உரிமையாளர் வந்தவரை அன்போடு அழைத்து அந்த வீட்டின் கூடத்தில் அமரச் செய்திருந்தார். அங்கே ஒரு கண்ணாடி அலமாரியில் அந்த வீட்டுக்கார அம்மா விலையுயர்ந்த பீங்கான் தட்டு, கண்ணாடிப் பொருட்கள் முதலியவற்றை அழகான கலை நயத்துடன் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எத்தனை வருடங்களாக எங்கெங்கு வாங்கி விருப்பமாக சேர்த்து வைத்தார்களோ.

வந்த இடைத்தரகருக்கு அதைப் பார்க்க ஏனோ பிடிக்காமல் போய் விட்டது போலிருக்கிறது. அங்கே மேசை மேல் வைக்கப்பட்டிருந்த பேப்பர் வெயிட்டை (Paperweight) எடுத்து, நேராக அந்த கண்ணாடி அலமாரியின் மீது விட்டெறிந்தார்.

அலமாரியும் அதனுள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலையுயர் பொருட்களும் பொல பொலவென்று உடைந்து சிதறியது. இடைத்தரகரோ, 'அங்கே மக்காவில் ஒரு நாய் கஅபா பள்ளியின் மீது சிறுநீர் பெய்யப் போவதைக் கண்டேன். அதைத் துரத்த இங்கிருந்து கல் விட்டேன். கல்லடிபட்டு அந்த நாய் சிறுநீர் பெய்யாமல் ஓடி விட்டது' என்று சொன்னாராம். உடனே கூட வந்த வால்கள் 'ஆஹா!. இங்கிருந்து கொண்டே எத்தகைய அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார் நம் மகான்' என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

வீட்டுக்கார அம்மா ஓடி வந்து பார்த்து, கண்ணீர் விடாத குறைதான். அந்தம்மா உள்ளே போனதும் கணவரை அழைத்து 'எவ்வளவு பெரிய மகானை அழைத்திருக்கிறீர்கள். இவர்களுக்கு என் கையால் நான்தான் உணவு பரிமாறுவேன்' என்று சொல்லி விட்டார்.

முதலில் கூட வால் பிடிக்க வந்திருந்த அனைவருக்கும், தட்டில் பிரியாணியை வைத்து அதன் மேல் அருமையாய் செய்யப்பட்ட அரைக்கோழியும் வேக வைத்த முட்டையும் வைத்து கோழி பிரியாணி பரிமாறப்படுகிறது. முக்கியமான ஆளான தன்னை முதலில் கவனிக்காமல் கூட வந்த அன்னக்கைகள் கவனிக்கப் படுவதிலிருந்தே வீட்டுக்காரம்மாவின் கோபத்தை தரகர் புரிந்து கொண்டு விட்டார். என்றாலும் வெளிக்காட்டி விட்டால் சாப்பாட்டுக்கு அலைபவரைப்போல் ஆகிவிடும் என்று அடக்கமாய் அமர்ந்திருக்கிறார்.

வீட்டுக்காரம்மாவோ 'எல்லோருக்கும் சாப்பாடு வந்து விட்டதா. நன்றாக திருப்தியாக சாப்பிடுங்கள்' என்று சொல்லவும் 'இன்னும் மகானுக்கு சாப்பாடு தரப்படவில்லை' என்று சொல்லப்பட்டது.

வீட்டுக்காரம்மா வேண்டுமென்றே அவருக்கு உணவு கொண்டு வருவதில் தாமதம் செய்கிறார். அதன் பின்னர் ஒரு தட்டில் பிரியாணி வைத்து, பிரியாணி சாப்பாட்டின் மேலே எதுவும் வைக்காமல் எடுத்து வந்து (மகானுக்கு மட்டும் புரியும் வண்ணம், மரியாதைக் குறைவாய்) வைக்கிறார்.

மகானுக்கு கோபம் தலைக்கேறி விடுகிறது. “விருந்துக்கு அழைத்து கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் என்னுடைய சீடர்களுக்கெல்லாம் கொடுத்ததன் பின்னர் எனக்கு உணவளித்ததோடு அல்லாமல், என் சீடர்களுக்கு பிரியாணியும் கோழியும் முட்டையும் வைத்து உணவு பரிமாறி விட்டு, எனக்கோ கோழியும் முட்டையும் கூட வைக்காமல் வெறும் பிரியாணி சோறு மட்டும் வைத்தால்… இதை என்னவென்று சொல்வது” என்று வீட்டுக்காரரிடம் கேட்கிறார்.

வீட்டுக்கார அம்மா பெரிய தொடப்பத்தோடு ஓடி வந்து, “மக்காவில் நாய் ஒடுவதை இங்கிருந்தே பார்த்த உனக்கு, உனக்காக கொடுக்கப்பட்ட பிரியாணிக்குள்ளே மறைத்து வைக்கப்பட்ட கோழியும் முட்டையும் தெரியாமல் போனது எப்படி? திருட்டு நாய்களே!” என்று திட்டிக் கொண்டே மகானை தொடப்பத்தால் துவம்சம் செய்கிறார்.

(நுனிப்புல் இராமச்சந்தின்உஷா அவர்களின் இடுகை உய்யடா மானிடா! உய்! படித்தேன். அதைப் படித்த பின்னர் தஞ்சாவூர் பகுதியில் நடந்ததாக சொல்லக் கேட்ட ஒன்றை இடுகிறேன்.)

Post Comment

Tuesday, 4 March 2008

உறவுகள்

எனக்கு நான்
மட்டுமே உறவு.
உனக்கும் நீ
மட்டுமே உறவு.

நாமெல்லாம் அன்பாய்
ஒன்றுகூடும் போது,
நாமனைவருமே
உறவுகள்தான்.
அந்நேரத்தில் உலகமே
நமது உறவுகள்.

தேவையுள்ள உறவுகளுக்கு
இயன்றவரை
எதிர்பார்ப்புகள்
ஏதுமின்றி உதவுவோம்.

எதிர்க்கும் உறவுகளிடமும்
நியாயமாய் நடந்து
நீதி புலர்த்துவொம்.

அன்பில்லாத உறவுகளிடம்
அன்பை கொடுப்போம்.
நம்மில் அன்பு கொண்டோரிடம்
பரிவோடும் கனிவோடும்
அன்பு செலுத்துவோம்.

இக்கணமே நிகழ்த்துவோம்
ஏனெனில்

நம்மில் புயலும் பகையும்
தோன்றும்போது
யாரும் யாருக்கும்
சொந்தமில்லை

உலகமே நமது
பகைவரால்
நிறைந்து விடும்.

மனதில் வெறுமை
பரவும் அந்நேரம்

எனக்கே நான்
உறவில்லை
உனக்கு நீயும்
உறவில்லை.

Post Comment

Monday, 3 March 2008

சாபம் பலிக்குமா? காகம் உட்கார பனம்பழமா?

வேலைக்காரர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட தன் மகனைப் பார்த்து அவர் தாயார், 'நான் சிறு வயதில் வீட்டில் வசதியின்மை காரணமாக (வசதியாக வாழ்ந்திருந்த ஒரு குடும்பத்தினரைக் காட்டி) அந்த வீட்டில் சம்பளத்துக்காக வீட்டு வேலைகள் பார்த்து வந்தேன். அந்த வீட்டுப்பெண் எனக்கு செய்த கொடுமைகள் சொல்லில் அடங்காது. அவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது. படுக்கையோடு பீயும் முத்திரமுமாய்க் கிடந்து அல்லல்பட்டுதான் அழிவாள். இது போல் உனக்கும் யாராவது சாபம் தரும் விதமாக நடந்து கொள்ளாதே. வசதி வரும்போது அதில் ஏழைகளுக்கும் பங்குண்டு என்பதை மறவாதே' என்று சொன்னார்.

சில ஆண்டுகளில் அந்தப் பெண் கூறியது போலவே அந்த பெண்மணியின் கணவர் இறந்த ஓரிரு மாதங்களில் மரணப் படுக்கையிலே வாரக்கணக்கில் கிடந்து உயிர் விட்டார்.
_____________________________________________________________________________________

எங்கள் வயலில் ஒரு மாமரம் இருந்தது. நாங்கள் குத்தகைக்கு விட்டிருந்தோம். எங்கள் குத்தகைகாரருக்கும் பக்கத்து வயல் காரருக்கும் வந்த தகராறில் எங்கள் மாமரத்தினடியில் ஆசிட் ஊற்றி அந்த மாமரத்தை பட்டுப் போகச் செய்து விட்டார். அப்போது எங்கள் குத்தகைகாரர் 'பால் மரத்தை இப்படி வீணாக்கியவனை விதி விடாது - மரம் அழிந்தது போலவே அவனும் விரைவில் அழிவான்' என்று சாபமிட்டார்.

சில ஆண்டுகளிலேயே அந்த இளம் வயதுக்காரர் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாய் கிடந்து மடிந்து போனார்.
_____________________________________________________________________________________

என் மிக மதிப்பிற்குரிய பெண்மணி - கைம்பெண். அவர் வாழ்வில் மிகுந்த சிரமங்களைத் தாங்கி வாழ்ந்திருந்தார். பெருங்குடும்பத்தை தாங்க உழைப்பு. உழைப்பு. ஓயாத, சலியாத உழைப்பு. அத்துடன் அவர் மகளின் வாழ்வில் நடக்கும் புயல்களால் மன உளைச்சல். பெரும் பாரமான வாழ்க்கை. அப்போது சிறு வயது எனக்கு.

அவர் வயதையொத்த அடுத்த வீட்டுப் பெண்ணும் எதிர்த்த வீட்டுப் பெண்களும் கூட்டாய் சேர்ந்து காரணமில்லாமல் அவரை பழிப்பதும், ஏளனம் செய்வதும் வாடிக்கை. பொறுத்துப் பார்ப்பார். சில நேரம் தெருச்சண்டை நடக்கும். அவர் எதிரிகளின் கூட்டம் கூடுதல் என்பதால் வாங்கிக் கட்டிக் கொண்டு வீடு சேர்வார். “என்னுடைய வாழ்க்கை / குடும்ப கவலைகளுக்கே நான் இந்த மாதிரி உழைக்கும் போது, இவர்கள் தேவையின்றி என்னை வம்புக்கிழுக்கின்றனரே. என் இறைவனே! அவர்களை உன்னிடம் விடுகிறேன் நீயே பார்த்துக்கொள்” என்று என் காது கேட்க அழுகையினூடே பிரார்தித்தார்.

சில ஆண்டுகளில் அடுத்த வீட்டுப் பெண், தன்னுடைய திருமண வயது மகன் வெளிநாட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் மனதொடிந்து யாரோடும் பழையது போல் பேசுவதையே நிறுத்திக் கொண்டார்.

ஒரு சில வருடங்களில் எதிர்த்த வீட்டுப்பெண்ணில் ஒருவர் கைம்பெண்ணாணார். அடுத்தடுத்த வருடங்களில் அவரது மகனுக்கு திருமணம் நடந்து மருமகள் தீக்குளித்து இறக்க, ஊராரின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாகி வீட்டிலேயே முடங்கிக் கிடந்து, சொந்த குடும்பத்தினரின் மதிப்பையும் இழந்து அந்நிலையிலேயே உயிர் துறந்தார்.

அதற்கடுத்த சில ஆண்டுகளில் மற்றொரு எதிர்த்த வீட்டுப் பெண்ணுடைய மகள் குடும்ப வாழ்க்கை தறிகெட்டு, மிகுந்த மன உளைச்சல். அடுத்தது மற்ற மகளது வாழ்விலும் அதைவிட கூடுதலான பிரச்னைகள். அடுத்தடுத்து கணவனது இறப்பு. அடுத்து திருமண வயது மகன் குடித்துக் குடித்து குடல் கருகி இறப்பு. சமீபத்தில் கடைசி மகனும் வெளிநாட்டிலேயே துர்மரணம். ஒன்றுக்கு மேல் ஒன்றாய் தொடர்ந்து பேரிடிகள்.

இந்த பெண் இப்போது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளோடு நன்றாக இருக்கிறார். சமீபத்தில் தன் மகனோடு வெளி நாடு போய் வந்தார். மகிழ்ச்சியான வாழ்வு. மகள் வாழ்விலும் சிறிது வெளிச்சம்.
_____________________________________________________________________________________

இவ்வாறு நடப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

உண்மையான சாபங்கள் பலிக்குமா அல்லது காகம் உட்கார பனம் பழம் விழுந்த கதை போலத்தானா?

அல்லது நடக்காத எத்தனையோ உண்டு, நடப்பவை மட்டும்தான் நம் கண்ணுக்குத் தெரிகிறதா?.

Post Comment