Sunday, 10 December 2006

வாலிபக்குறும்பு (தேன்கூடு போட்டிக்காக)

1983-85 சென்னை கல்லூரி வாழ்க்கை. பட்ட மேற்படிப்பு பகுதியிலுள்ள மாணவர்களைப் பார்த்தால் பட்டப்படிப்பு மாணவர்கள் மரியாதையுடன் (உண்மையாகவே) ஒதுங்கி வழிவிட்டு விடுவது பழக்கம். இப்போதெல்லாம் எப்படியோ?
'ஹாஸ்டல் லவுன்ச்'ல் இருக்கிற தொலைக்காட்சிப் பெட்டியில் மாணவர்கள் எல்லோரும் உட்கார்ந்து பார்ப்போம். நாங்கள் வந்தால் உட்கார இடம் கிடைக்கும். கொடுப்பார்கள்.

அந்தக் காலத்தில் ஹார்லிக்ஸ்க்கு ஒரு பெரிய விளம்பரம் வரும்.
1. மாறிவரும் காலங்களுக்கேற்ப மாறி வரும் ஹார்லிக்ஸ். டின்னிலிருந்து தொடங்கி அதுவரை வந்த விதவிதமான கண்ணாடி ஹார்லிக்ஸ் பாட்டில்களைக் காட்டுவார்கள்.
2. ஒரு சரித்திர நாடக நடிகர் முழு ஒப்பனையுடன் 'பளபளா உலகமெங்கும் சுற்றுவேன். பலத்துக்கு ஹார்லிக்ஸ் பருகுவேன்' என்பார்
3. ஒரு விளையாட்டு ஆசிரியர் வந்து 'அதுல பால் இருக்கு, கோதுமை இருக்கு, மால்ட் இருக்கு' என்று ஒவ்வொன்றாக சொல்லி அதனால் உடம்புக்கு நல்லதென்பார்

ஹார்லிக்ஸ்ல் இருந்து ஏதாவது வருமானமா? முழு விளம்பரத்தையும் சொல்றாரே என்று யாராவது யோசித்தால்..... மன்னிக்க! முழு விளம்பரமும் தெரிந்தால்தான் பின்னால் வரும் குறும்பு சுவைக்கும். சுவைக்கலாம்.

4. 'இந்த காலத்தில எதையுமே நம்ப முடியலே. ஆனால் நான் ஹார்லிக்ஸ நம்பறேன்' என்று ஒரு வக்கீல் சொல்வார்.
5. ஒரு வயதான பாட்டி 'எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் ஹார்லிக்ஸ்தான் சாப்டறேன். எங்க அம்மா கூட இதான் சாப்ட்டா' என்பார்.
6. 'தினமும் காலையிலும் மாலையிலும் ஹார்லிக்ஸ் சாப்டறேன். அப்கோர்ஸ் பிரிஸ்கிரைப் கூட பண்றேன்' என்று ஒரு டாக்டர் சொல்வார்.
7. கடைசியில் ஒரு சுட்டிப்பையன் (பாலிலே) ' கலக்க வேணாம். அப்படியே' (மாவாகவே சாப்பிடுவேன்) என்று சொல்வார்.

ஞாபக மறதி. சிலது வரிசை மாறியிருக்கும். விட்டுப் போயிருக்கும்.

இது போன்ற விளம்பரங்களைப் பார்த்து கல்லூரி நண்பர்கள் பயங்கரமாக கிண்டல் அடிப்பார்கள். அதிகமாக சிரிக்க வைக்கிற மாதிரி கிண்டல் செய்பவர்களுக்கு நண்பர்கள் கூடுதல். அது மாதிரி ஒரு நண்பர் என் மீது மிக மரியாதையும் அன்பும் வைத்திருந்தார்.

ஒரு தடவை அந்நண்பரது தோழிகள் ஒரு விழாவுக்காக அவரை அழைக்க அவரோ என்னையும் அழைக்க வைத்தார். மாணவிகள் நடத்தும் நிகழ்ச்சி. கூட நண்பர் இருக்கும் தைரியத்தில் நானும் கிளம்பினேன்.

மாணவிகள் மாணவர்களையே திணற வைக்கும் நிகழ்ச்சி நடத்தி அசத்தினார்கள். நானும் ஏதோ ப்ளேடு போட்டேன். நமது நண்பரும் பீலா விட்டார். அடுத்தது விளம்பரதாரர் நிகழ்ச்சி..

இரண்டு மூன்று பெண்கள் ஒரு ஜட்டியை குச்சியில் ஏந்தியவாறு
'காலங்கள் மாறினாலும் மாறாத ஒரே ஜட்டி' என்று கோரஸாக. கூத்தாடி விட்டுச் சென்றனர்.
2. அடுத்த பெண் நாடக ஒப்பனையுடன் கையில் குச்சிஇ ஜட்டியுடன் 'பளபளா உலகமெங்கும் சுற்றுவேன். ஆனால் இந்த ஒரே ஜட்டியைத்தான் பயன்படுத்துவேன்.' என்றார்
3. அடுத்த பெண் 'இதில லேஸ் கிழிஞ்சிருக்கு. இதில நூல் இருக்கு. எம்ராய்டரி இருக்கு. கலரே தெரியலே' ஏன்று ஒவ்வொன்றாக வர்ணித்த அழகைப் பார்த்து பெண்கள் விசில் சத்தம் வானைப் பிளந்தது.

எனக்கோ விட்டா போதும் ஓடிடலாம் என்று இருக்கிறது. நிமிர்நது பார்க்கவும் நாணம். அந்த கிழிந்த உள்ளாடையை தூக்கிப் போட்டு விட்டு வராமல் கொடி போல மாற்றி மாற்றி எடுத்து வருகிறார்களே!.

4. 'எனக்கு எந்த புது ஜட்டியிலும் நம்பிக்கையில்லை. ஆனால் இந்த ஜட்டியை நான் நம்பறேன்.' ஒரு வக்கீல் பெண்
5. அடுத்து வயதானவளாக வேடம் அணிந்த பெண் 'எனக்கு நினைவு தெரிந்த நாள்லேருந்து நான் இந்த ஜட்டியைத்தான் உபயோகிக்கிறேன். எங்கம்மா கூட இதைத்தான் யூஸ் பண்ணா' என்று அலம்பியது. சிரிப்பும் கைதட்டலும் அரங்கம் அதிருகிறது
6. அடுத்து வந்த டாக்டர் வேடப் பெண்மணி 'தினமும் காலையிலும் மாலையிலும் யூஸ் பண்றேன். அப்கோர்ஸ் யாராவது கேட்டால் பிரிஸ்கிரைப் கூட பண்ணுவேன்' எனறது.
7. கடைசியாக வந்த குமரி, (குழந்தை குரலில்) 'துவைக்க வேணாம். அப்படியே!' என்று சொல்லி விட்டு உள்ளே ஓடியது.

நடிகை சுகாசினி பெண்களைப் பற்றிய டிவி சீரியல் செய்ய தன் கணவர் மணிரத்னத்திடம் கருத்து கேட்ட போது. 'பெண்கள் சுதந்திரம் கொஞ்சம் கோடு தாண்டினால் அதிகப் பிரசங்கித்தனமாக இருக்கும்' என்று அறிவுரை சொன்னாராம். எனக்கு அந்த ஞாபகம் இப்போது வருகிறது.

அட மாணவர்கள்தான் 'லந்து' பண்ணுவார்கள். மாணவிகள் எல்லாம் 'இந்த பூனையும் பால் குடிக்குமா?' மாதிரி போகிறார்கள் என்று பார்த்தால் 'இந்த பூனைகள் சுடச்சுட பால் குடிப்பவை' என்று அவர்கள் கலாய்த்த போதுதான் தெரிந்தது.

நல்ல வேளை என் பகுதி முன்னமே முடிந்திருந்தது. இல்லாவிட்டால் எல்லாப் பெண்களின் முன்னிலையிலும் அம்பேல் ஆகி அசடு வழிந்திருப்பேன்.

அந்த நண்பரோடு பக்கத்து ஹோட்டலில் டீ சாப்பிட கூட அதற்கப்புறம் போனதில்லை. ஹாஸ்டலில் பேசிக் கொள்வதோடு சரி.

அப்போது ஆரம்பித்ததுதான். இப்போது குடும்ப நிகழ்ச்சிகளில் கூட கூட்டமாக பெண்களைக் கண்டால் எனக்கு அலர்ஜி கண்டு ஜுரம் வந்து விடும்.

(ப்ளேடு போடுதல், பீலா விடுதல், அலம்புதல், லந்து பண்ணுதல், கலாய்த்தல், அம்பேல் போன்ற கல்லூரிக் கால அருஞ்சொற்பொருட்கள் தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளவும்)

Post Comment

Tuesday, 28 November 2006

அமெரிக்க முஸ்லீம் காமெடி

செப்டம்பர் 11க்கு பிறகு அமெரிக்க முஸ்லீம்கள் மனதளவில் பாதிக்கப் பட்டிருந்தார்கள். தொலைக்காட்சி முதல் அனைத்து மீடியாக்களும் அவர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டின. அவர்களது இஸ்லாமிய அடையாளங்களால் மற்றவர்கள் தீவிரவாதியைப் போல் பார்த்ததால் குழந்தைகள் கூட வெளியில் செல்லத் தயங்கினர்.
முஸ்லீம்களில் பெரியவர்கள் மற்றும் பிள்ளைகளின் பயத்தை போக்க இது போன்ற குழுமங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Post Comment

ஆண்களே ஜாக்கிரதை - இதோ பெண்கள்!

இங்கே துபையில், சாதாரணமாக பெண்கள் ஓட்டும் கார்களின் பின்னாலும் டாக்ஸிகளின் பின்னாலும் கார் ஓட்டுவதை முடிந்தவரை தவிர்த்து விடுவேன். எல்லாம் அனுபவம் தந்த பாடம்தான்.

1. ஏதாவது டாக்ஸிக்கு பின்னால் போகும் போது வழியில் ஏதாவது பயணி நின்றால் பின்னால் வருபவரை கவனிக்காமல் படக்கென்று பிரேக் அடிப்பார்கள். தொழில் தர்மம் அப்படி.

2. ஆனால் பெண்கள் எதற்கென்றே தெரியாமல் அடிக்கடி வேகத்தை கூட்டுவார்கள் அல்லது குறைப்பார்கள். கார் ஓட்டும்போது முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதம் என நினைக்கிறேன்.

அ. சமீபத்தில் அபுதாபி சென்றிருக்கும்போது வேகமாக கார்கள் சென்று கொண்டிருக்கிறது. என் முன்னால் உள்ள அம்மணி சிக்னலைப் பார்த்ததோ (விளக்கு சிவப்பில் இல்லை) உடனே காரை அவசரமாக நிறுத்தி விட, பின்னாலிருந்து என் கார் அவர் காரை இடிக்க, என் பின்னால் வந்த கார் என் காரை இடித்து விட்டது. அரபி காவலர், அராபிய பெண் - எனக்கும் தண்டனை என் பின்னால் இடித்தவருக்கும் தண்டனை. உண்மையில் தப்பு செய்த அந்தம்மா தப்பித்துக் கொண்டது.

ஆ. இன்னொரு முறை துபையில் வேகமாகச் சாலையில் வந்து கொண்டிருக்கிறேன். சாலையின் பக்கத்தில் நின்றிருந்த கார் வேகமாகத் திரும்பி என் வண்டியில் இடித்தது. என் வண்டியின் ஓட்டுநர் பக்க கதவைத் திறக்க முடியாமல் எதிர்ப்புற கதவு வழி வெளியே வந்து பார்த்தால் இடித்த வண்டியின் பெண் ஓட்டநர் ஸ்டிரியரிங்கில் தலை சாய்த்து படுத்திருக்கிறது. எனக்கு பயமாகியதால் அந்த வண்டியின் கதவைத் திறந்து 'ஏதாவது உதவி தேவையா?' எனக் கேட்க 'ஒன்றுமில்லை. நான் என் சகோதரனுக்கு தொலை பேசுகிறேன். நீ காவலுக்கு தொலைபேசு' என்றது. காவல் வந்து நல்ல வேளை பெண்மணியின் மேல் தவறென்று பதிந்தது. ஆனால் (ஆம்புலன்ஸ்) அவசர உதவி ஊர்தி வந்தது. காவலிடம் என்ன ஆனது என்று பதட்டத்துடன் கேட்டால் 'கவலைப்படாதே! ஒன்றுமில்லை. நீ வெளியே வரத் தாமதமானதால் உனக்கென்னவோ என்று ஒன்றும் இரண்டும் வண்டியிலேயே ஆகிவிட்டதாக' சிரித்தார்.

ஆனால் கீழேயுள்ள பெண்ணைப் பாருங்கள். திறமையென்றால் இதுதான். என்ன சொல்றீங்க?

Who said women cant park the car

Post Comment

Monday, 27 November 2006

துபைக்கு வருக! வருக!

நண்பர் பொதக்குடியான் பதிவில் ஒரு அனானி பின்னூட்டமிட்டிருந்தார். குறிப்பாக அவரைப் போன்ற எண்ணமுள்ளவர்களுக்காகவே இந்தப்பதிவு.

இந்த நாடு அமெரிக்கா போல், கனடா போல், U.K.போல் அல்ல. இங்கே எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் நாம் இந்நாட்டின் குடிமகனாக முடியாது. இந்நாட்டு குடிமகன்கள் அனுபவிக்கின்ற எல்லாவற்றையும் பெறவும் முடியாது.

இங்கேயிருப்பவர்களில் முக்கால்வாசி இந்தியரும் பாகிஸ்தானியரும் பெங்காளிகளும் தங்கள் குடும்பத்தை தத்தமது நாடுகளில் விட்டு விட்டு இங்கே தனியாய் தவிப்பவர்கள்தாம். தொலைபேசிக் குடித்தனம்தான்.

நான் உள்பட எனக்குத் தெரிந்த பலரும் ஊரில் ஒரு தரமான அல்லது குடும்பத்தை கவுரவமாக கொண்டு செல்லத்தக்க ஒரு சுமாரான வேலை கிடைத்தால் கூடப் போதும், ஓடி விடலாம் என நினைப்பவர்கள்தாம். அந்த அனானி என்னவென்றால் இந்தியாவை வல்லரசாக்க...... எங்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறார்.

இனி சாம்பிளுக்கு துபை சாலை பற்றி 'துபைக்கு வருக! வருக!' என்ற தலைப்பில் எனது நண்பர் திரு மற்றும் திருமதி இரவிக்குமார் அவர்கள் அனுப்பிய மயிலை இங்கே பறக்க விடுகிறேன்.

1. உங்களிடம் துபையின் சில வாரத்துக்கு முந்திய சாலை வரைபடம் வைத்திருந்தால், உடனே தூக்கி எறிந்து விட்டு புதிய ஒன்றை வாங்கவும்.
2. நீங்கள் ராசிதியா போன்ற இடங்களில் தங்கியிருந்து உங்களிடம் நேற்றைய வரைபடம் இருந்தால் அது வழக்கத்திலில்லாத வரைபடமாகும். இன்றைய வரைபடம் தேவை.
3. வேறெங்காவது படித்த சாலை விதிகளை மறந்து விடுங்கள். துபைக்கென தனியான விதிகளுண்டு அதாவது ' வண்டியை நிறுத்தி, (நிற்காமல் தொடர்ந்து செல்லவேண்டுமென) பிரார்த்தி'.
4. அந்த சந்திப்பை கடப்பதற்கு உங்களுக்கு முன்னுரிமையுள்ள இடம்தானே! அதையெல்லாம் மற, பொறு.
5. அதி வேகத்தில் ஆபத்தான முறையில் துரத்தும் கார்கள் என்றெல்லாம் துபையில் எதுவுமில்லை. எல்லோருமே அப்படித்தான் பயங்கரமாக பயணிப்பர்.
6. புதிய கார் வாங்க நினைத்தால் முதலில் அது மணிக்கு 80கிமீ முதல் 160கிமீ வேகம் சாதாரணமாகப் போகுமா என்று ஊர்ஜிதம் செய்யுங்கள். எமிரேட்ஸ் சாலை உபயோகிப்பாளராக இருந்தால் இது மிகவும் முக்கியம்.
7. எல்லா திசைகளும் ஷேக் ஜாயித் சாலையிலிருந்து தொடங்கும். அந்த சாலைக்கோ தொடக்கமுமில்லை முடிவுமில்லை. இனி வரும் காலங்களில் இந்த சாலையைக் கடக்க ஒரு நாளைக்கு குறைந்தது 4 திர்ஹம் முதல் அதிக பட்சமாக 29 திர்ஹம் சாலை வரி கட்ட வேண்டுமாம்.
8. சாலையின் நெருக்கம் மிகுந்த நேரம் காலை 5.00 மணிக்குத் தொடங்கும். பின்னர் மாலை 1.00 முதல் 10.00 மணி வரை. சில நாட்களில் இந்நேரங்கள் கூடலாம்.
9. புதன் கிழமைகளின் சாலை நெருக்கம் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து தொடங்கும்.
10. நீங்கள் மஞ்சள் விளக்கைப் பார்த்து வண்டியின் வேகத்தை குறைத்தீர்களானால் பின்னாலுள்ள வண்டியால் மோதப்பட்டு காவலரிடமிருந்து சீட்டு பெற ஏதுவாகி விடும்.
11. நீங்கள் சிக்னலில் முதல் ஆளாக நின்று, பச்சை விளக்கு எரியத் தொடங்கியவுடன், பின்னாலுள்ள வண்டிகள் என்னதான் கத்தினாலும் பொருட்படுத்தாமல், ஒன்றிலிருந்து ஐந்து வரை பொறுமையாக எண்ணி விட்டு வண்டியை எடுங்கள். இல்லாவிட்டால் எதிர்த்த சாரியில் சிவப்பு விளக்கை கடந்து வரும் வண்டியோடு மோத நேரிடும்.
12. எல்லா முக்கியச் சாலைகளிலும் கட்டுமானப் பணிகள் எப்போதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருப்பது இங்கே வாடிக்கை - வேடிக்கை. (உங்களின் வசதிக் குறைவுக்கு வருந்துகிறோம்! தொடர்ந்து...).
13. சில முக்கிய மில்லாத இடங்களில் 'ஓ நாம் இப்போது ஷார்ஜாவில் இருக்கிறோம்' என்ற வாசகம் கேட்கலாம்.
14. பெரிய பெரிய விளையாட்டு பையன்களுக்கு காரின் ஹார்ன் சத்தம்தான் விளையாட்டுச் சாதனம்.
15. யாராவது Land Cruiser, Tuned Patrol, Mercedes முதலிய பெரிய கார்களில் கண்ணாடியை வண்ணப் பேப்பரில் மறைத்துக் கொண்டு வந்தால் அவர்கள் போவதற்குத்தான் முதலிடம். அதுதான் இறுதி.
16. நீங்கள் ஏதாவது Corolla, Sunny அல்லது இது போன்ற சிறிய ஜப்பானிய கார்களில் வந்தால் வலது பக்க கடைசி வரிசையில் நின்று கொண்டேயிருங்கள். எதுவும் பேசாதே!.
17. சில சாலைகளில் நீங்கள் சிக்னலை தாண்டியபின் பார்த்தால் சாலையின் பெயரே மர்மமான முறையில் மாறியிருக்கும்..
18. திசையை கேட்டறிய வேண்டுமா? உருது தெரியுமா?
19. துபையில் குறுக்கே எங்கேயாவது ஒரு முறை போய் வர குறைந்தது 4 மணி நேரம் ஆகும். ஷேக் ஜாயித் சாலையில் மணிக்கு 140கிமீ வேகத்தில் போக முடியுமென்றாலும்.
20. மனதுக்கு அமைதி தரும் செய்தி - இந்நாட்டு அரபிகள் எப்படி ஓட்டுவது என்பதை பாகிஸ்தானியரிடம் கற்றார்களாம்.
21. பதினெட்டு (18) சக்கர வாகனங்கள் இந்நாட்டின் ஒரு முக்கிய அதிவேக வாகனமாகும். ஹத்தா to ஒமான் சாலையில் - வண்டி நிறைய பாரத்துடன் - மணிக்கு 120கிமீ வேகத்துக்கு மேல் இரத்தம் உறையும் பயங்கரமாய் பறக்கும்.
22. எமிரேட்ஸ் சாலையின் மணிக்கு 160கிமீ வேகத்தில் போவதெல்லாம் 'ஜூஜூபி;'. அதை விட குறைவான வேகத்தில் செல்வதெல்லாம் 'பப்பா'ஸ். வேகமாகச் செல்லும் வண்டி கேமராவை பார்த்ததும் திடீரென்று பூனையாய் 'பம்'மும் ஜாக்கிரதை.
23. துபை ஆட்டோட்ராம் (Dubai Autodrome) எமிரேட்ஸ் சாலையின் புதிய எக்ஸ்டென்ஷன் (extension).

வேலை தேடி துபைக்கு வருக வருக.
யாம் பெற்ற துன்பம் நீங்களும் அடைய விரும்பினால்.......

Post Comment

Saturday, 18 November 2006

படித்ததில் பிடித்தது

அப்போதெல்லாம் எந்த புத்தகம் படித்தாலும் அதிலே பிடித்த சில வரிகளை எழுதி வைத்துக் கொள்வது வழக்கமாயிருந்தது. 1985, 86களில் அதுபோல் எழுதி வைத்திருந்த ஒரு புத்தகம் கிடைத்தது. எதிலிருந்து எடுத்தது, யாருடைய வார்த்தைகள் என்று எழுத விட்டிருந்தேன். தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள்.

நல்ல நல்ல கருத்துகள் என்று தோன்றியதால் இங்கே!. அப்படித்தானா, இல்லையா? என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்..

1. உலகில் நாம் ஒரு பட்டம். நம்மை கீழே இழுக்காவிட்டால் நாம் மேலே போக முடியாது. நாம் ஒரு பறவை. காற்று அடிக்காவிட்டால் சூனியத்தில் பறக்க முடியாது. நாம் ஒரு பந்து. பலமாக ஓங்கி கீழே அடிக்காவிட்டால் மேலே உயர முடியாது.

2. என்ன உடைமை, சொத்து, சுகமெல்லாம்?. ஏதை உண்டு களித்தோமோ அதுவே நமக்கு கிடைத்த பங்கு. எதை உடுத்திக் கிழித்தோமோ அதுவே நம் சொத்தில் கிடைத்த சுகம். ஏதை நம் மறுமை வாழ்விற்காக செலவிட்டுக் கொண்டோமோ அதுவே நமக்குக் கிடைத்த சிறப்பு. இவைகளை வேண்டுமானால் நம் உடைமை என்று துணிச்சலாய் சொல்லிக் கொள்ளலாம்.

3. நல்ல இலட்சியங்களுக்காக இலட்சத்தை செலவிடுபவர்கள் போற்றத்தகுந்தவர்கள். இலட்சங்களுக்காக தன் இலட்சியத்தையே இழக்கத் தயாராயிருப்பவர்கள்......?

4. துன்ப காலத்தில் நாம் இன்பமாக இருந்த நாட்களை நினைவு படுத்திப் பார்ப்பது போன்றதொரு பெரிய கவலை வேறெதுவுமில்லை

5. கடந்த கால தோல்விகளின் நினைவுகளிலேயே மனதை நிலைக்க விட்டுத் துன்பங்களை அதிகரித்துக் கொள்வது கூடாது. கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களோ, சூழ்நிலைகளோ மறுபடியும் வரப்போவதேயில்லை. ஆகையால் அவைகளை நினைத்து உருகுவதால் எந்த வகையான நன்மையும் ஏற்படப் போவதில்லை. கையை விட்டுப் போன செல்வத்தைப் பற்றியும் கடந்த காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றியும் பிதற்றுவதால் இப்போது ஒன்றுமே வரப்போவதில்லை. பிறர் மேல் குற்றம் சுமத்துவதோ சூழ்நிலையைப் பற்றிக் குற்றம் சொல்வதோ கூடாது. நம்மில் நம்பிக்கை, நமது ஆற்றலில் நம்பிக்கை, நமது சக்திகளில் நம்பிக்கை இவைகளையே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

6. இந்த உலகத்தை குற்றம் சாட்டுவதை விட அதை புரிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனமானது.

7. குழந்தைகளும் அழகான பூக்களும் மனதை என்னமாய் தூய்மைப்படுத்தி குதூகலிக்கச் செய்கின்றன!. இவை மனிதனின் வாழ்வைப் பாதிக்காமல் மட்டும் இருந்திருந்தால் உலகம் எவ்வாறு களையிழந்து போயிருக்கும்? ஆம்! இறைவனின் ஒவ்வொரு படைப்பிலும் ஒரு ஆழமான உள்கருத்து இருக்கத்தான் செய்கிறது. புரியத்தான் நாளாகிறது.

8. ஒவ்வொருவர் பிரச்னையையும் பார்த்துக் கொண்டுதானிருக்கிறேன். வெளியே இருந்து அதன் அழகையும் அருவருப்பையும் சரிபார்க்கிறேன். பிரச்னைக்கு உள்ளிருந்து பார்ப்பதை விட வெளியிலிருந்து பார்ப்பதில் எத்தனை சவுகரியங்களும் பாடங்களும் இருக்கிறது.
உலகம் என்னவோ அதன் பாட்டையில் இடைவிடாமல் இயங்கிக் கொண்டேதானிருக்கிறது. அதன் சுழற்சியில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வதும் கொள்ளாமல் இருப்பதும்தான் அவரவர் பிரச்னைக்குரிய விஷயங்கள்.

9. உண்மை ஒன்றுதான். அது எப்போதும் ஒன்றுதான். அது வேண்டாதவர்களுக்கு சுகமாய் இருப்பதில்லை. ஆனால் பொய் பல வடிவில் இருக்கும். சுகமாயும் இருக்கும்.

10. அன்பு செலுத்தத் தெரிந்தவர்கள் அன்பு செலுத்த வேண்டும். பதிலுக்கு அன்பு கிட்டாது. கிட்டினாலும் நெடுநாள் ஒட்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஆனாலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். அன்பு செலுத்த முடியதவர்களைப் பற்றியும் அன்பையே மறந்தவர்களைப் பற்றியும் யோசிக்க வேண்டும். யாரும் நம்மிடம் அன்பாய் இல்லையே என்று வருத்தப்படக்கூடாது. அது முக்கியம் இல்லை. பாவம்! பல மனிதர்களுக்கு அன்பு செலுத்த தெரியவேயில்லை. நமக்குத் தெரிகிறது. எனவே அன்பு செலுத்த நம்மை அறிய வைத்திருக்கும் இறைவனுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.(இதில் மட்டும் எழுத்தாளர் ஜெயகாந்தன் என எழுதிவைத்துள்ளேன்)

பிடித்திருந்தால் ஏது? ஏன? என்று சொல்லுங்களேன்.

Post Comment

Thursday, 16 November 2006

வார்த்தை விளையாட்டு

நாங்கள் மேல்நிலை வகுப்பு (ப்ளஸ்டூ) படித்துக் கொண்டிருந்த போது தாத்தையங்கார்பேட்டையிலிருந்து வயதான ஆசிரியர் ஒருவர் வகுப்பாசிரியராக வந்திருந்தார். தமிழைத் தமிழாகவும் ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும் தான் எழுத பேச வேண்டுமென்று சொல்லிக் கொடுத்தார். நீங்கள் படிப்பது தமிழுமில்லாமல் ஆங்கிலமுமில்லாமல் 'தங்லீஸ்'; ஆக இருக்கிறதென்று ஒரு புது வார்த்தையையும் கற்றுக் கொடுத்தார்;.

ஒரு நாள் பிள்ளைகளுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு விருப்பமுள்ளவர்கள் போகலாம் என்று பள்ளியில் அனுமதியும் அளிக்கப்பட்டிருந்தது. அந்த வயது நம்மை பிள்ளைகள் என்று சொல்வதை விரும்பாத வயது. எனவே எங்கள் குழு போகவில்லை. வகுப்பிலேயே இருந்தோம்.

அப்போது எங்கள் வகுப்பாசிரியர் வகுப்புக்கு வந்து பையன்கள் மிகக்குறைவு என்பதால் பாடம் எடுக்காமல் சும்மா பேசிக்கொண்டிருந்தார். அப்போது பேச்சு வாக்கில் நான் நீங்கள் சினிமாவுக்கு போகவில்லையா என்பதை 'உங்களுக்குத்தான் இடமெல்லாம் ரிசர்வ் செய்திருப்பார்களே போயிருக்கலாமே சார்' என்று கேட்டேன். அதற்கு அவர் கிண்டலாக 'என்னப்பா நீ! என்னை அனுப்பிச்சிட்டுதான் விடுவே போலிருக்கே!' ஏன்று கையை வானை நோக்கி காட்டி சொல்லவும் வகுப்பறையே சிரிப்பில் ஆழ்ந்தது. இருந்தாலும் நான் 'சார் அப்டிலாம் இல்லை சார்' என்று சொல்லவும் 'சும்மா கிண்டலுக்கப்பா. உட்கார்' என்று சொல்லி விட்டார்

அடுத்து கொஞ்ச நாளுக்குப் பிறகு கார்த்திகை தீபத்துக்காக நிறைய வெளியூர் ஆசிரியர்கள் விடுப்பெடுத்திருந்தும் இவர் விடுப்பெடுக்கவில்லை. வகுப்பறையில் பாடமில்லாமல் பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது அவர் ஏன் விடுப்பு எடுக்கவில்லை என அறிவதற்காக 'சார் உங்களுக்கு தீபமாச்சே' என்று ஆரம்பிக்கவும் 'ஹைய் நீதானா? என்னை அனுப்பாம விட மாட்ட போலிருக்கே! உன்னை கவனிச்சுகறேன்' என்று அவர் கிண்டல் பேச வகுப்பறை சிரிப்பில் ஆழ்ந்தாலும் எனக்கு மிகவும் துக்கமாகி விட்டது. வயதானவரை இப்படி சொல்லிவிட்டோமே என்று அழுகை வந்து விட்டது. அவர்தான் சரிப்படுத்தினார்.

அடுத்து கொஞ்ச நாட்களில் இதே போல் இன்னொரு சமயம் வாய்த்தது. யாராவது பையன்கள் பாட்டு பாடுங்கப்பா என்று அவர் சொன்னார். அப்போது என் நண்பன் 'சார். இவன் நல்லா பாடுவான் சார்' என்று என்னைக் காட்டி சொல்லவும் அவர் 'நீதானா! வசமா மாட்டிக்கிட்டே!' 'தம்பீ! உன்னை பாடயிலே பாக்கணுமின்னு ரொம்ப நாளா ஆசை!' என்று சொல்லி எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார். (பேச்சு வழக்கில் 'பாடயிலே' என்பதை 'பாடும்போது' என்றும் 'பாடையில்' என்றும் இரு பொருள் கொள்ள இடமுண்டு)

சின்ன செய்திதான் என்றாலும் சிலேடை, இருபொருள் வசனம் என பேசும் போதெல்லாம் எனககு இந்த நினைப்பு வந்து விடும்.

Post Comment

Sunday, 29 October 2006

மூளைக்கு வேலை (மனக்கணக்கு)

எனக்குத் தெரிந்த மிக அன்புள்ள தாத்தா ஒருவர் எப்போது பார்த்தாலும் 'சீயக்காய்குச்சி' என்று எழுதி அதை படிக்கச்சொல்வார். படித்தால் மகிழ்வார். அவர் மளிகைக்கடை வைத்திருந்த போது இவ்வாறுதான் எழுதி வைப்போம் என்று என்னென்னவோ கதை சொல்வார். கடைசி வரை அது என்ன பொருள் என்று மட்டும் எனக்கு விளக்காமலேயே இறந்தும் விட்டார். அவரது அன்புக்காக இறைவன் அவருக்கு நற்பதவி தரட்டும்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது எங்கேயாவது நம் தாத்தா வயதுள்ளவர்களோடு பேச நேர்ந்தால் நம்முடைய புத்திசாலித்தனத்தை எடைபோட அல்லது அவர்கள் திறமையைக் காட்ட மனக்கணக்கு சொல்லி பதில் சொல்லச் சொல்வார்கள். பல நேரங்களில் அது அறுவைக் கணக்காகவும் சில நேரங்களில் உண்மையிலேயே புத்திசாலித்தனமாகவும் இருக்கும். பல நேரங்களில் நான் சொல்லி விடுவதுண்டு.

அது போன்ற சில உண்மையான நேரான கேள்விகள். இங்கே இரண்டு கணக்குகளும் ஒரு சமயோசித புத்தி பற்றியதும் உள்ளது. முன்பொரு காலத்தில் ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்தது.

இந்தக் கேள்விகளை என் உறவினர்கள் நண்பர்களிடம் கேட்டபோது பொதுவாக நான் புத்திசாலிகளாக நினைத்த யாரும் சரியான பதில் சொல்லவில்லை.

எல்வோரும் முயற்சி செய்து பின்னூட்டமிடலாமே. சரியான பதில்கள் வராவிட்டால் கடைசியில் நான் பதில் தருகிறேன்.

1. இதை நிறைய முறை படித்திருப்பீர்கள்.
ஒரு குளத்தில் ஒரு வகைப்பூவை இட்டால் அது அடுத்த நாளில் இரட்டித்து விடும். அந்தக் குளத்தில் முதல் தேதியன்று அந்தப்பூவில் ஒன்று போடப்பட்டது. இரண்டாம் தேதி அந்தப்பூ இரண்டானது. மூன்றாம் தேதி நான்கானது. நான்காம் தேதி எட்டானது. இவ்வாறு இரட்டித்து இரட்டித்து முப்பத்தோறாம் தேதி பூக்களால் குளமே நிரம்பி விட்டது.
என்றால் பாதி குளம் நிரம்ப எத்தனை நாள் பிடித்திருக்கும்?

2. மூன்று நண்பர்கள் நடை பயணமாக வெகுதூரம் பயணித்தனர். அதில் முதலாமவர் தன்னுடன் ஐந்து அப்பங்களை கொண்டு வந்தார். இரண்டாமவர் மூன்று அப்பங்களை கொண்டு வந்தார். முன்றாமவர் உணவு ஏதும் கொண்டு வரவில்லை.
அவர்கள் நீண்ட தூரம் பயணித்த பின் பசியெடுக்கவே இருந்த எட்டு அப்பங்களையும் மூவரும் சரியாகப் பகிர்ந்து உண்டனர். மூன்றாமவர் உணவுக்காக எட்டு ரூபாய்களைக் கொடுத்து இருவரையும் பகிர்ந்து எடுத்துக் கொள்ள சொல்லி விட்டார்.
இருவரும் எவ்வாறு பகிர்ந்து கொண்டால் சரியானது?.

3. ஒருவருக்கு மன்னரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவர் அத்தண்டனையிலிருந்நத தப்ப மன்னராலேயே ஒரு வழியும் பரிந்துரைக்கப்பட்டது.
சிறையின் அறையிலிருந்து வெளியேற இரு பக்கம் பாதைகள் உண்டு. ஒரு பாதையில் சென்றால் பசியுடன் பல சிங்கங்கள் உலாவும் அறைக்கு சென்று அவற்றுக்கு இரையாகலாம். மற்றொரு வழி சென்றால் தப்பித்து விடலாம். ஒவ்வொரு பாதைக்கும் ஒரு காவலாளி நியமிக்கப்பட்டுள்ளார்.
காவலாளிகளில் ஒருவர் எப்போதும் பொய்யே சொல்வார். மற்றவர் எப்போதும் உண்மையே பேசுவார். இருவரில் பொய்யர் யார் மெய்யர் யார் என்று காவலாளிகளுக்குத்தான் தெரியும். சிறைப்பட்டவருக்கு அறிவிக்கப்படவில்லை. ஏதாவது ஒரு காவலாளிடம் ஏதாவது ஒரு கேள்வி கேட்டு பாதையறிந்து தப்பித்துக்கொள்ளலாம்.
சிறைப்பட்டவர் என்ன கேள்வி கேட்டு தப்பித்திருப்பார்?.

நீங்களும் விடை சொல்ல முயற்சி செய்து பாருங்களேன்

Post Comment

Wednesday, 25 October 2006

எழில், சுவனப்ரியன் மற்றும் இப்னு பஷீருக்கு

சுவனப்ரியனும் இப்னுபசீரும் இறைத்தூதர்கள் பற்றி சொல்ல அதை விதண்டாவாதங்களின் மூலம் மறுதலிக்கும் பேதமையை அல்லது பதில் கிடைத்த பின்னரும் வெறும் வெற்று விவாதங்களாக மென்மேலும் உருவாக்குகிறார் எழில்.

உண்மையை உணர முயற்சிப்பவர்களுக்கு விவாதம் பயன்தரும். ஆனால் வெறும் விவாதங்களையே நோக்கமாகக் கொண்டவர்களுக்கு மென்மேலும் விவாதத்திற்கான கேள்வியை உருவாக்குவது ஒன்றும் சிரமமான காரியமில்லை. பதிலையே கேள்விகளாக்;கும் குழந்தைகள் போல.

இறைத்தூதர்கள் என்போர் யார் என்பதை சுவனப்ரியன் விளக்கிய பின்னர்
குர்ஆனுக்கு முன்னர் நான்கு பேர் தன்னை இறைத்தூதர் என்று வாதிட்டால் நாம் சரியானவரை எப்படியறிவது என்பதுதான் எழிலுடைய கேள்வி.

ஓவ்வொரு காலத்திலும் மிகைத்த அறிவையும் அற்புதங்களையும் கொண்டு இறைத்தூதர்களை இறைவன் பலப்படுத்துவான். நம் அறிவைக் கொண்டு மனமுரண்டில்லாமல் அந்த உண்மையின் நம்பகத்தன்மையை அறிந்து தெளிந்து அவர்களைப் பின்பற்ற வேண்டும். யார் அவர்களைத் தேர்ந்தெடுத்தானோ அத்தகைய உயர்ந்த இறைவன் உண்மையிலிருந்து பொய்யை பிரித்தறிவிப்பான். தன்னுடைய காரியங்களில் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்ளப் போதுமானவன்.

உண்மையில் நடந்த ஒன்றில் இறைவன் எப்படி வேறுபடுத்தினான் என்று கேட்டால் .... இப்படி என்று விளக்க முடியும்.
கற்பனையில் கேட்கப்பட்ட ஒன்றிற்கு கற்பனைக்கு சொந்தக்காரர்தான் இன்னின்ன காரணங்களால் வேறுபடுத்த முடியாது என்று நிறுவ வேண்டும். வெறும் கேள்விகளும், கிடைக்கின்ற பதிலில் இன்னொரு கேள்வியையும் உருவாக்குவது சிறுபிள்ளைத்தனமானது.

நபி மூஸாவுடைய காலத்தில் மந்திர தந்திரங்களில் மக்கள் உச்சத்திலிருந்தனர். அப்போது நபி மூஸாவை அந்த மந்திரவாதிகள் எல்லோரையும் மிகைக்க கூடிய மந்திர சக்தியைக் கொண்டு இறைவன் பலப்படுத்தினான். நபி மூஸாவுடைய சக்தி இறைவனிடமிருந்து வந்ததுதான் என்பதை அந்த மந்திரவாதிகள் அனைவரையும் உணரச்செய்து 'மாறுகால் மாறுகை வெட்டப்பட்டாலும்' அதுதான் உண்மை என்பதை கொடுங்கோலனான ஃபிர்அவ்ன் முன்பிலேயே அந்த மந்திரவாதிகளைக் கொண்டு கூறச்செய்தான். எழிலைப் போலவே ஃபிர்அவ்னும் உண்மையை உணர முடியாதவனாகினான்.

நபி ஈஸாவுடைய காலத்து மக்கள் தாங்கள் மருத்துவத்துறையில் உச்சத்திலிருப்பதாக நம்பினர். அப்போது இறந்தவர்களை இறைவனின் நாட்டத்தால் உயிர்ப்பித்ததன் மூலமும், இன்னபிற சான்றுகளின் மூலமும், அந்த நம்பிக்கையிலிருந்தவர்களை நபி ஈஸாவுடைய சக்தி இறைவனிடமிருந்து வந்ததுதான் என உணர வைக்க முடிந்தது. அப்போதும் எழிலைப்போல கேள்வி கேட்டு எள்ளியவர்கள் இல்லாமலில்லை.

இறுதி நபி முஹம்மதுவின் காலகட்டத்தில் இலக்கிய ஈடுபாடும் கவிதையுணர்வும் மேலோங்கி தம்மை மிகைப்பவரில்லை என்ற எண்ணம் அரபியர்களிடையே வேரூன்றியிருந்தது. இறுதி நபி முஹம்மதுக்கு கவிதையிலும் உரைநடையிலும் இலக்கிய நயத்திலும் ஒப்புவமையில்லாத குர்ஆன் எனும் அற்புத வேதத்தைக் கொடுத்து 'நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால் இது போன்ற ஒரிரு வசனங்களையாவது கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என சவால் விடச்செய்து' தம் வல்லமையைக் கொண்டு இறைவன் பலப்படுத்தினான். குர்ஆனைப் படித்தும் கேட்டும் அறிந்த அம்மக்கள் இது இறைவனிடமிருந்து வந்ததுதான் என உணர்ந்து அவர் தூதுத்துவத்தை ஏற்றனர். அப்போதும் எழிலைப்போன்ற முன் முடிவுகளோடு இருந்தவர்களுக்கு குதர்க்கமான வேறு கேள்விகள் தோன்றாமலில்லை.

எனவே எத்தனை பேர் தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக்கொண்டாலும் இறைவன் தான் தேர்ந்தெடுத்த உண்மையான தூதரை தம்மிடமிருந்து மறுக்கவியலாத அத்தாட்சிகளைக் கொண்டு பலப்படுத்துவான். காமாலைக் கண்ணர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது புரியவும் செய்யும். காமாலைக் கண்ணர்களுக்குப் புரிந்தாலும் புரியாத மாதிரி நடந்து கொள்வர். புரிய மறுப்பவர்களுக்குத்தான் மறுமையில் பேரிடரும் அழியமுடியாத் துன்பமும் என்று அவனே பிரகடனப்படுத்துகிறானே.

இன்னும் கேள்விகள் எழுந்தால் அது உணரமுடியாதவர்களின் குற்றமேயன்றி வேறென்னவாயிருக்கும்?. இவருக்காக நேரம் ஒதுக்கி சிறந்த பதிவுகள் இடும் சுவனப்ரியனும் இப்னுபசீரும் காலத்தை வீணடிக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகொள்.

ஒரு உதாரணத்தின் மூலம் இதை மேலும் விளக்குவோம்.
எழில் 'என் தந்தையார் எனக்கு சிறந்த அறிவுரைகள் கூறியிருக்கிறார். அவற்றை பின்பற்றுவதன் மூலம் வாழ்வில் என்னால் உயர முடிந்தது. இந்த நல்ல அறிவுரைகளை மற்றவர்களும் பின்பற்றுவதன் மூலம் அவர்களும் சிறந்தவராகலாம்' எனக்கூறுவதாகக் கொள்வோம்.

இப்போது திரு.எழிலிடம் 'நீங்கள் குறிப்பிடும் நபரை உங்கள் தந்தையென்று சொல்லாதீர்கள். உங்கள் தாய், உம்முடைய தந்தையாக உமக்கு அறிமுகப்படுத்திய நபர்' என்று சொல்லுங்கள் என்று சொன்னால் எழிலுக்கு கோபம் வரும். மரபணு சோதனை மூலம் அவரை என் தந்தையென்று நிரூபிக்க முடியும் என்று அவர் சொல்வார். அப்போது

'முற்காலத்தில் நான்கு நபர்கள் ஒருவரின் தந்தையென்று வாதிட்டனர். மரபணு சோதனைகளை அறியாத காலம். அப்போது தந்தையென்று எப்படி நிருவுவீர்கள். எனக்கு எந்த காழ்ப்புணர்வுமில்லை உண்மையறியும் ஆர்வம்தான்' என விதண்டாவாத கேள்விகள் கொண்டு வாதிட்டால் என்ன செய்வது.

இறைத்தூதர் குர்ஆனைக் கொண்டு சொல்பவற்றை விளக்கும்போது அவரை இறைத்தூதர் என்று சொல்லாதீர்கள் என்பதும், குர்ஆனின் அத்தாட்சிகளைக் கொண்டு அதை நிறுவ முற்படும்போது, (குர்ஆனின் சான்றுகளை எதனால் ஏற்க முடியாது என்ற காரணங்களைக் கூறுவதை விடுத்து) அதிலே மேற்கொண்டு விதண்டாவாதங்கள் புரிவதும் மேற்கூறப்பெற்ற நிலைதான்.

எனவே இனியும் இவ்விஷயத்தில் பதில் சொல்ல வேண்டாம். ஏனெனில் விதண்டாவாதங்களுக்கு பதில் சொல்லிப் பலனேதுமில்லை என நான் நம்புகிறேன்.
(நபி என்பதற்கு இறைத்தூதர் என்பது பொருளாகும்).

Post Comment

Sunday, 22 October 2006

என் கவலைதான் மிகப்பெரியது

சில விஷயங்கள் உங்களைப் பாதிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதா??


படித்துப் படித்து நீங்கள் சலிப்படைந்து விடுகிறீர்களா?


இவர்களுக்கு படிப்பது சலிப்பைத் தரவில்லை!


உங்களுக்கு பச்சைக் கீரைகளும் காய்கறிகளும் பிடிப்பதில்லை...?


இவர்களுக்கோ வேறு வழியில்லை!


நீங்கள் எப்போதும் உணவுக் கட்டுப்பாட்டை கையாள்கிறீர்கள்...?


அவர்கள் உண்ண விரும்புகிறார்கள்....


உங்கள் பெற்றோரின் மிகக் கூடுதலான கவனிப்பு உங்களை வருத்துகிறது.....?


அவர்களுக்கோ... பெற்றோர்களே இல்லை!


ஒரே மாதிரியான விளையாட்டு உங்களுக்குப் போரடிக்கிறது....?


அவர்களுக்கு வேறு போக்கிடம் இல்லை!!!


வீட்டில் 'அடிடாஸ்' வாங்கி தருகிறார்கள்... உங்களுக்கு 'நைக்'தான் பிடிக்கிறது...?


அவர்களுடைய 'பிராண்டு' இது மட்டும்தான்...!!!


உங்களைப் படுக்கைக்கு போகச் சொல்லி தொல்லை படுத்துகிறார்களா...?


அவர்கள் எழும்பவே விரும்பவில்லை

குறை சொல்வதை தவிருங்கள்.....


ஒரு வேளை, எல்லாம் தெரிந்திருந்த பின்னும்,
உங்கள் கவலை போகவில்லையென்றால்


உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பாருங்கள்....
இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்
இந்த குறைந்த ஆயுளில்
உங்களை இத்துணை வசதியுடன்
வாழ வைத்ததற்காய்


• மிகுந்த பணிவோடு சொல்லுங்கள்

• என் இறைவனே! என்னில் இத்துனை கருணை பொழிந்ததற்காகவும், என் உடல் நலம்,
என் குடும்பம், என் குழந்தைகள், என் வேலை, என் நண்பர்கள் மற்றும் அனைத்து
அருள் வளங்களுக்காகவும் உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

• உன்னை மறந்தவர்களும், உன்னை அறியாதவர்களும் உன்னையும், நீ செய்துள்ள
அளப்பறிய கருணையையும், உன் அன்பையும் அறிவுறுத்த எனக்கும்
ஒரு வாய்ப்பைக் கொடு.

குறைவாகக் கேட்பதையும்
கூடுதலாக நன்றி செலுத்துவதையும்
எப்போதும் உங்கள் நினைவிலிருத்துங்கள்.

Post Comment

Thursday, 19 October 2006

பதிவர்களுக்கு அழைப்பு-2

முந்தைய பதிவைப் பார்த்து விட்டீர்களா?
இடமெல்லாம் பிடித்திருக்கிறதா?
மீதத்தையும் பார்த்து விட்டு confirm பண்ணலாமே

விருந்தினர் அறையின் பலகணியிலிருந்தபடியே
மீன்கள் நீந்துவதை வேடிக்கைப் பார்க்கலாம்


இல்லையெனில் அறையின் கண்ணாடித்தரை மூலமும் பார்க்கலாம்.
ஞாபகம். மீன்களுக்கு உணவெதுவும் இடவேண்டாம்.
நீங்கள் கழிப்பறையில் விடும் கழிவுகளே அவை விரும்பியுண்னும் உணவு.


உங்களுக்கு வரவிருப்பமென்றால் உடனே தெரியப்படுத்துங்கள்.
அப்போதுதான் நான் பாக்கி காரியங்களையும் செய்து முடிக்க
வசதியாய் இருக்கும்.

வாகன வசதிக்கென்று ஏதும் கவலைப்பட வேண்டாம்.
ஒரு ஐந்து நட்சத்திர வசதிகள் கொண்ட cruise ship மூலம்
உங்களை sea portலிருந்து ஏற்றிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.


உங்களுக்கு seaport வந்து சேர வழி தெரியாதுதானே. கவலையேயில்லை. நானும் அதைப்பற்றி யோசித்தேன். அதற்குத்தான் எல்லா வசதிகளோடும் உள்ள ஒரு லக்ஸரி பஸ் வாடகைக்கு எடுத்துள்ளேன்.

பஸ் எப்படி? 12 சக்கரமுள்ளது. மிகவும் பாதுகாப்பானது

பேருந்தின் உள்புற வசதிகளையும் சொகுசையும் அனுபவிக்கலாம்..

பேருந்தின் உட்புறத்தின் வேறொரு தோற்றம்.
பேருந்தின் lounge மற்றும் பழச்சாறு அருந்துமிடம்.

அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டே உங்களுக்குப் பிடித்த வீடியோ போட்டுப் பார்க்கலாம்

ஓ..... சுத்தமாக மறந்தே போய் விட்டது.
இது நேற்று நான் பார்த்த கனவில் கண்ட காட்சிகள்.
ஏதாவது பின்னூட்டமிட்டு விட்டு, பதிவை மூடி விட்டு,
உங்கள் வேலையைத் தொடரலாமே!.

நன்றி: ரவி ஷர்மியின் மெயிலுக்கு.

Post Comment

பதிவர்களுக்கு அழைப்பு-1

என்னுடைய புதிய வீட்டில் கடற்கரை barbecue விருந்துக்கு
பதிவர்களுக்கும் வலைமேய்ந்து பின்னூட்டபிடுபவர்களுக்கும்
என் தனிப்பட்ட அழைப்பு.
(வருவதற்கான வழிக்கு வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது)


படத்தில் அம்புக்குறியிட்ட இடம் விருந்துக்கு சிறப்பாக இருக்கும்.
(ஏனெனில் முழுத்தீவுமே நம் வசமிருப்பதால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொல்லை என்ற பேச்சே இருக்காது.)


கீழே உள்ளதுதான் என்னுடைய சிறிய கூரை வேயப்பட்ட வீடு


விருந்தினர் அறையின் பலகணி.
நல்ல கடல் காற்றோட்டம்.
பார்வைக்கும் விருந்து
உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.


கீழேயுள்ள படம் விருந்தினர் அறை


மாலை நேரத்திற்கான பழமும் பழரசமும் தயார்


தொலைக்காட்சிப் பெட்டியில் தகராறென்றால் கவலையில்லை
TV satelite control சிஸ்டம், bath tub பின்னால்தான் உள்ளது.


இதுதான் படுக்கை. வசதி குறைவென்று நினைத்தால்...
தீவின் பல இடங்களில் 'net'டும் இருக்கிறது


விருந்து முடிந்த பின் massage செய்யவும் ஓய்வு எடுக்கவும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்


வெளிச்சம் கொஞ்சம் சரி பண்ணியாகி விட்டது. இருந்தாலும் refine செய்ய வேண்டியதிருக்கிறது.


வீட்டிற்கு வருவதற்கான பாதை


அழைப்பு நீண்டதாகத் தெரிகிறது.
எனவே மிகுதியைத் அடுத்த தொடரில் தொடர்ந்து பார்த்து விட்டு
அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் அழைக்கிறேன்.

அடுத்த பதிவும் வந்து விட்டதே! அதையும் பார்த்து விட்டு வரலாமே?

Post Comment

Monday, 16 October 2006

லெகிடுக்கார கிழம்

(யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் எந்தக் கவலையுமில்லாமல் நன்றாக உண்டுவிட்டு கண்ணில் படுபவர்களையெல்லாம் வீணாக வம்பிக்கிழுத்து கிண்டல் செய்து பொழுது போக்குபவர்களை லெகிடுக்காரன் என்று எங்களுரில் சொல்வார்கள். அது போன்ற லெகிடுக்கார கிழவரைப் பற்றிய கதையிது. அந்த மனிதரை நான் பார்த்திருக்கிறேன். அவரைப்பற்றி நிறைய கதைகள் கேட்டிருக்கிறேன். அவரா இவர் என நினைக்கத் தோன்றும் மனிதர்.)

ஊரில் ஓரிரு மளிகைக் கடைகளே இருந்த அந்தக் காலம். சாப்பிட்டு விட்டு செட்டியார் கடைக்குப் போனால் கிழவரைப் பார்த்ததும் வம்பு வேண்டாமேயென்று செட்டியார் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு, புகையிலைப் பொட்டலம் கொடுத்து விடுவார். சும்மா வாங்கினாலும் செட்டியாரை என்னவோ கொடுக்கப் பணிக்கப்பட்டவர் போலத்தான் கிழம் பார்க்கும், பேசும்.

ஒரு தடவை கிழம் வந்ததை செட்டியார் கவனிக்காமல் வியாபாரத்தில் கவனமாயிருந்து விட்டார். கிழம் கனைத்துப் பார்த்தும் பெரிய கிராக்கி பொய் விடுமேயன்று செட்டியாரும் அலட்டிக் கொள்ளவில்லை. பல முறை கனைத்தும் பயனில்லாததால்
'செட்டியாரே! என்ன இன்னைக்கு மாமூல் மறந்திடுச்சா?' கிழத்தின் அதிகாரம் கொடி கட்டிப் பறந்தது.
'ஓசுல தானே! கொஞ்சம் பொறுமையாயிருந்தா குறைஞ்சீடுமா? அதிகாரம்ல பறக்குது. கைவேலையா இருக்கனெ தெரியலயா?' செட்டியாரும் பதிலுக்கு.
'அவ்ளதானே! ஒரு பொட்டலம் கொடுக்காமப் போனேன்னு நினைச்சுப் பாப்பையா நீ?'
'அதுக்கு வேற ஆளப்பாரு. குடுத்த வச்ச மாரில இருக்கு'

அவ்வளவுதான். கிழம் விசுக்கென்று போயே விட்டது.
செட்டியாருக்கும் தினம் இரண்டு பைசா சாமான் மிச்சமாகப் போகிற திருப்தி.

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை கடை காலையில் லீவு. செட்டியாரு சாவகாசமாக வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்.

ஒரு கட்டைவண்டி, நிறைய ஆட்களுடன் செட்டியார் வீட்டு முன் நிற்கிறது. கட்டைவண்டியை விட்டு இறங்கிய தடிமனான பெண் ஓங்கிக் குரலெடுத்து செட்டியாரைப் பார்த்ததும் முகம் அஷ்ட கோணலாகி சட்டென்று அமைதியாகிறது. வராமல் வந்திருக்கிற சொந்தக்காரர்களை பார்த்துதம் செட்டியார் எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துப் போகிறார். குசலம் விசாரிப்புகள்....... இத்யாதி... இத்யாதி.

பின்னாலேயே அடுத்த வண்டி, அதன் பின் அடுத்த வண்டி, அதன் பின் அடுத்த வண்டி, இப்படியாக பத்துப் பதினைந்து வண்டிகள். வண்டி நிறைய செட்டியாரின் சொந்தங்கள்.
வீட்டில் இடமில்லாத அளவுக்கு வீடு நிரம்ப சொந்த பந்தங்கள். குசலம் விசாரிப்புகள்.......குசு குசு பேச்சுக்கள்... இத்யாதி... இத்யாதி.

வீட்டுச் சட்டி போதாமல் பள்ளியில் தேக்ஸா (150 பேருக்கு உணவு தயாரிக்கும்படியான பெரிய சட்டி) எடுத்து வந்து திண்ணைப் பக்கமாக விருந்தினர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் சைக்கிளில் வேர்க்க விறுவிறுக்க கிழவர் வந்து கொண்டிருப்பதை பார்த்த செடடியாரிடம் பேசிக் கொண்டிருந்த சொந்த பந்தங்கள் கிழத்தை ஒரே அமுக்காக அமுக்கி செட்டியாரிடம் தூக்கிச் சென்று
'செட்டியாரே கோவிச்சுக்கப்படாது. இந்தக் கிழம் ஊர் ஊரா வந்து நீங்க செத்துட்டதா சொல்லி இங்க எங்களை வரவழைச்சிடுச்சு' கும்பலில் ஒரு பெரிசு குழைந்து கொண்டே சொன்னது.
'அதானே! நாங்கூட ஏதுடா சொல்லி வச்ச மாரி எல்லா சொந்தமும் ஒரே நேரத்திலே வந்திருக்கேண்ணு கொழம்பிட்டேன்' செட்டியார்
'உங்க முகத்துக்கு மின்னாடி எப்டி சொல்றதுண்டுதான் ஒன்னும் சொல்லல' இன்னொரு சொந்தம்.

'ரெண்டு பைசாவுக்கெல்லாம் பார்த்தா.... வருஷஞ்செலவும் மொத்தமா வச்சுட்டேண்ல' கிழம் சொல்லிட்டு சிட்டாய்ப் பறந்து விட்டது.

அதற்குப்பின் பொட்டலம் கிழம் வருவதற்கு முன்னமே ரெடியாக இருந்தது என்று சொன்னால் நம்பும் படியாகவா இருக்கிறது. ஆனால் இது உண்மைதானென்று சத்தியம் செய்ய எங்களூரில் ஆளிருக்கிறது.

(முதியவர்களை கிழம் என்று சொல்வது தப்பு. லெகிடு பண்ற முதியவரை கெழம் ன்னாதான் கதை ஜோரா போகும்னு. என்றாலும் மன்னிக்கவும்.. நண்பர்களே!)

Post Comment

குட்டையான மரம்


(இந்தக் கவிதை சரியாய் இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆகஸ்ட் மாதத்தில் எழுதியது)

பட்டுப் போன்ற அந்த மரம்
வானளாவிய உயரம்!
நான் பார்த்துப் பார்த்து பிரமித்த
மிகப்பெரும் உயரம்!.

இடையில் சின்னாட்கள்
ஏனோ என் விழியில்
அதன் உயரம் சுருங்கிச் சுருங்கிச்
சின்னதாய்
மிகவும் சிறுத்துப் போனது.

உயர்ந்த மரம் குறைந்ததற்காய் வருந்தினேன்.
வருந்தி வருந்தி என்னை வருத்தினேன்.
அந்த மரம் இவ்வளவு குட்டையாகிப் போனதே!!

சூழ்நிலை சத்தம் போட்டு என்னை விழிப்பித்தது.
அந்த மரம் தானாகவா குட்டையானது?
ஹூம்....
இதயமெல்லாம் பாழாய்ப் போன - அந்தப்
பூச்சிகளல்லா அதை சுருக்கியது.

தான் குட்டையாகிப் போவதை மரம் விரும்பவில்லை.
ஆனால் அது மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டதால்.....
தொடர்ந்து தாக்கப்படுவதால்......
குருகித் தீர வேண்டிய அபாயம்!
வேறு வழியில்லையதற்கு!!!

இப்போதும் வருந்துகிறேன்
அந்த மரம் குட்டையாகி விட்டதே!
பாவம்! அந்தப் பூச்சிகள்!
மரத்தைத் தாக்கச் சொன்னது யாராம்?
இந்தச் சூழ்நிலைதான்....

பூச்சியின் எண்ணம் போலவே
சாட்சிகள் அதன் பார்வைக்கு
சாதகமாகி விட்டதால் - அவை
திசையறியாமல் மீண்டும் மீண்டும்
மரத்தைத் தாக்குகிறது.

உயரத்தில் குறைந்தாலும்
இப்போது என் மரம்
உயரமாய்......
முன்னை விட கம்பீரமாய்.....
அழகாய்.......
என் கண்களுக்கு காட்சி தருகிறது!.

Post Comment

Friday, 1 September 2006

துவக்கம்

அளவிலா அருளாளனும் இணையிலா அன்பாளமானுகிய இறையைப் போற்றி....

இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து தமிழ் வலைப்பூக்கள் அறிமுகம் ஆனது. யாரோ நண்பர் ஈ-மெயிலில் அறிமுகப்படுத்தியிருந்தார். யார் என்று நினைவில் இல்லை. அதன்பின் வலைப்பூக்களை பார்வையிடுவது தினப்படி வழக்கமானது. ஊர் (தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இலப்பைக்குடிக்காடு) போயிருந்த ஒரு மாதத்தைத் தவிர.

எழுதிப் பழக்கமில்லை. பிடித்த மற்றும் பிடிக்காத பதிவுகளுக்கு பின்னூட்டம் மட்டும் இட்டுக் கொண்டிருக்கிறேன். இனி நானும் பதியலாம் என்றிருக்கிறேன். எனக்குப் பிடித்ததும், பிடிக்காததும், படித்ததும், படிக்க விரும்புவதும் இன்னும் என்னவெல்லாமோ.

இயன்றால் சீரியஸான(!!!!) பதிவுகளும் போடுவேன். ஆனால் பதிவு போடுவதைப் பற்றி தெளிவான விபரம் இல்லை. இவ்வுலகில் மற்றவர்களால் செய்ய முடிந்த ஒன்றை முயன்றால் நம்மால் முடியாது போகுமா என்ன? இல்லையென்றால் சீனியர் பதிவர்களை துணைக்கழைப்பதுதான்.

Post Comment