Saturday, 26 January 2008

வியக்க வைக்கும் பாடல்கள்

தமிழில் ஒரு பொருளுக்கு இத்தனை சொற்கள் இருக்கின்றதென்பதை இப்பாடல் விளக்கும் திறன் வியக்கச் செய்கிறது. எழுதியது யார் என்பது மறந்து விட்டது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபமென்றேன்
பூசுமென்றாள்
மாதங்கமென்றேன்
யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்பு சீர் வேழமென்றேன்
தின்னுமென்றாள்
கம்பமா என்றேன்
நற்களியாமென்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே பாணீ

அடுத்த நாட்டு அரசனைப் பாடிவிட்டு வந்த புலவரைப் பார்த்து, 'என்ன பரிசு பெற்று வந்தாய்?' என அவர் மனவி கேட்கிறாள்.

புலவர் 'களபம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அது கேட்ட அவர் மனைவி, சந்தனம் என புரிந்து, சாப்பாட்டுக்கே வழியில்லை சந்தனமா என மனதில் நினைந்தவளாக, சரி பூசிக்கொள்ளுங்கள் என்கிறாள்

புலவரோ, என்ன இவள்? தவறாக புரிந்து கொண்டு விட்டாளே என நினைத்துக் கொண்டு, 'மாதங்கம்' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

அவர் மனைவியோ, 'மா தங்கம்' அதாவது அதிகமான பொன் எனப் புரிந்து கொண்டு, அதைக் கொண்டு நாம் நல வாழ்வு வாழலாம் என்கிறார்.

இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என உணர்ந்த புலவர், 'வேழம்' கொண்டு வந்திருக்கிறேன் என்றாராம்.

அவர் மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, சரி சாப்பிடுங்கள் என்கிறார்.

புலவர், இப்போதும் தவறாகத்தான் புரிந்திருக்கிறாள் என அறிந்து, 'கம்பமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.

மனைவி 'கம்பமா' என்பதை கம்பு மாவு எனப் புரிந்து கொண்டு, நல்ல களி செய்து சாப்பிடலாம் என்கிறாள்.

இதற்கு மேலும் சரி வராது என அறிந்த புலவர், 'கைமா' கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்

அப்போதுதான் நீண்ட தும்பிக்கையை உடைய யானை என அறிந்த அவர் மனைவி, நம் இரண்டு வயிறுக்கே உணவில்லாத வறிய நிலையில், உடம்பெங்கும் வயிறாய் உள்ள யானைக்கு தீனிக்கு என்ன செய்வது என்று கலங்கினாளாம்.

யானை என்பதை எத்தனை வகையாக தமிழில் சொல்லலாம் என்று பாருங்கள்.

பாணர்கள் எக்காலத்திலும் பொருளுள்ளவராய் வாழ்ந்ததில்லையாம். கிடைக்கும் பெரும் பரிசில்களை எல்லோருக்கும் ஈந்து விட்டு அடுத்த வேளை உணவுக்கு எதிரபார்ப்பவராய் இருப்பர் என்ற குறிப்பையும் முதலிரு வரிகளுக்கிடையே தருவது தெரிகிறதல்லவா?
_______________________________________________________________________________

அடுத்து,
சிலேடை என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கவி.காளமேகப் புலவர். அவருடைய பாடல்களை படிக்குந்தோறும் வியத்தகு முறையில் இரு பொருட்களை இணைக்கும் திறம் கண்டு மனம் மகிழும். அவருடைய பாடல்களில் பல தமிழிணையத்தில் வந்துள்ளது.
இணையத்தில் வராத ஒரு சிலேடைப் பாடல்

வெங்காயஞ் சுக்கானால் வெந்தயத்தா லாவதென்ன
இங்கார் சுமந்திருப்பா ரிச்சரக்கை
மங்காத சீரகத்தைத் தந்தீரேல் தேடேன்
பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே.

இதை இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.
1. மளிகைக்கடைக்காரர்; பெரு வியாபாரியிடம்: வெங்காயம் சுக்காக காய்ந்து விட்ட பின் வெறும் வெந்தயத்தை வைத்துக்கொண்டு எவ்வாறு வியாபாரம் செய்வது. வீணாகாத நல்ல சீரகம் கொடுத்தீர்களானால் பெருங்காயம் இல்லாவிட்டாலும் எப்படியாவது கடையை கொண்டு செலுத்தி விடலாம்.

2. கடவுளின்; முன் அடியான்: வெம்மையான இவ்வுடம்பு வற்றிக் காய்ந்து விட்ட பின் இவ்வுலகில் இவ்வுடம்பைச் சுமந்து வாழ்ந்திருப்பதால் என்ன பயன். சீர் பொருந்திய இடமாகிய உன் திருவடிகளை எனக்குக் கொடுத்து விடுவீரேயானால் இவ்வுடம்மைப் பற்றி யோசிக்கவே மாட்டேன்

எவ்வளவு அழகாக பொருந்திப் போகிறதென்று பாருங்கள்.

பொருள் சொன்னதில் பிழை இருந்தால் சுட்டுங்கள். திருத்தி விடுவோம்.

Post Comment

4 comments:

Anonymous said...

அன்புள்ள சுல்தான்
காளமேகப் புலவரின் அருமையான பாடல்களில் ஒன்றைக் கையாண்டிருக்கிறீர்கள்.
நான் சிறுவயதாக இருந்தபோது அதை மனப்பாடம் செய்ததில்

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன்
பெருங்காயம் ஏரகத்துச் செட்டியாரே

என்று படித்ததாக நினைவு.

அதேபோல் இரண்டாவது பொருளின்கீழ் வெந்தயத்தால் ஆவதென்ன என்பதற்கு இந்த உடல் மடிந்தபின் அயபஷ்பம் சாப்பிட்டு என்ன பயன் என்பதுபோல் மனனம் செய்திருந்தேன்.
மங்காத சீரகம் என்பதற்கு தூய்மையான உள்ளம் என்றும் பொருள் கொள்ளலாம்.
நன்றி.
அன்புடன்
ச.வீரமணி

Unknown said...

வருகைக்கு நன்றி திரு.வீரமணி.

Anonymous said...

பகடு என்றேன்
உழும் என்றாள்

விட்டுப்போய் விட்டது என நினைக்கிறேன் சுல்தான் சாஹேப்

Unknown said...

இவ்வாறு படித்ததாக சிறிதும் நினைவில் வரவில்லை ஐயா.
இருப்பினும் நன்றிகள் அனானி.